அத்தியாயம் 12 – 2

எழும்பி வெளியே போயிரு! யாரிட கண்ணிலும் படாமல் ஒரேயடியா எங்கயாவது  போய்த்  துலஞ்சு போ!’ என்றலறிய  மனத்தின் ஆங்காரக் கூச்சலை  வென்றிடும் சக்தி, சுற்றி நின்ற  என் அம்மாவுக்கும் உடன் பிறப்புகளுக்கும் இருந்ததே!   

  குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த என் உணர்வுகளில் கலந்திருந்தவளுக்கு, எப்பேர்ப்பட்ட துரோகம் இழைக்கிறேன் என்று தெரிந்தே தாலியைக் கையில் ஏந்தி நின்றேன்.

   கல்யாணியை மனதுள் ஆராதித்தபடியே உதயாவை மனைவியாக்குவேனாம்?  ‘என்ன ஒரு அசிங்கமும்  கேவலமுமான நினைப்பு!’ என்னை எண்ணி  மிகையாகவே வெட்கிப் போனேன் நான்

   அப்போதுதான்  என்னுள்ளிருந்து விடுபட்டு  காற்றில் கலந்து செல்ல முயன்றாள் என் கல்யாணி!  

  வலிக்க வலிக்கத்  துகள் துகளாகத் தன்னைப் பிய்த்தெடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கினாள். அவளாகவே வெளியேறினாளா? இல்லையே!  

  ‘நீ இருக்க வேண்டிய இடத்தில இதோ ஒருத்தி இருக்கச் சம்மதிச்சிட்டனே! உன்ர  காதலனில நீ வச்ச  காதலுக்கு அவன்  மிகப்பெரிய துரோகம் செய்திட்டான்டி கல்யாணி

  இருந்தும் அந்தக் காதலைத்  துச்சமென அவமதிக்கவும் அவன் தயாராக இல்லை

  உன்னை, எனக்கே எனக்கெண்டு மனசில பொத்தி வச்சபடி  இன்னொருத்திக்குத்  தாலி கட்டினால், நம்மட நேசத்தில நானே நாற்றம் அடிக்கின்ற சேறிறைச்சது போல இருக்காதாடி

  இன்னொருத்திக்கு என்  அருகில் இருக்க, வாழ்க்கையில கூடவே வர இடம் கொடுத்திட்ட என்னால, இனி உன்னப் பழைய மாதிரியே ஆராதிச்சு அவமானப்படுத்த முடியுமா சொல்?’ என்று, அவள் உறைந்திருந்த உள்ளத்தில் கேட்ட என் அலறலில், அடிப்பிடித்துக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளத் தயாராகி விட்டாள் அவள்

   சரியான ரோசக்காரி

   விலகிச் செல்பவளை, ‘என்னை விட்டுப் போகாதே! நின்று விடடி!’ என்று சொல்லும் அதிகாரம் இழந்து நின்றேன் நான்

  அவள் செல்ல முயல்வதை மனத்தில் உதிரம் கொட்டக் கொட்டப்  பார்த்தபடியேதான் உதயா கழுத்தில் தாலியை அணிவித்தேன். அதன் பிறகு என்னால் தொடர்ந்து அங்கு அமர்ந்திருக்கவே முடியவில்லை. அடைத்துக்கொண்டு வந்த நெஞ்சு வெடித்துச் சிதறிடுமோ என்று அலங்க மலங்க அந்தரித்தே எழுந்து வெளியே செல்ல முயன்றேன்.  

  அதிலும் அம்மா கண்டிப்போடு குறுக்கிட்டு விட்டார்

  என் கல்யாணிக்கு நான் இழைத்த துரோகம், உதயாவின் புருசனாகிய பின்னும் கல்யாணியை எண்ணியெண்ணி அவள் மீது நான் வைத்த நேசத்தை அவமதிக்கும் எண்ணமில்லாது போனது எனஎல்லாம் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கியதில்தான் வீடு சென்றதும் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டேன்

 ‘இங்கொருத்தன் கொழுந்துவிட்டெரியும் சுவாலையில் கருகிக் கொண்டிருக்க, ஆராத்தி எடுப்பதுதான் முக்கியமோ!’ என்று, நான் உள்ளே சென்றதும், தொடர்ந்து நடந்ததும்

  “பச்!”

  நினைவுகளின் கனம் சுமக்கவே முடியாதளவில் இருந்தது

  திருமணம் முடித்து வீடு வந்த பின்னர் நடந்த களேபரத்தில், உதயாவின் துன்பத்தில் சுகம் காண நினைத்த பெரியக்கா தவிர, மிகுதி எல்லோரது ஆட்காட்டி விரல்களும் குற்றம் சுமத்தியபடி தீக்கங்குகளாக என்னை நோக்கியல்லவா நீண்டிருந்தது?

   நான் தூக்கி வளர்த்த குஞ்சுகள் கவியும் தீபியும்! சின்னப்பிள்ளைகள் வேறு! அவர்களின் கரங்கள் தந்த ஒவ்வொரு அடியும், அந்த வார்த்தைகளும், விழிகள் கொப்பளித்த வெறுப்பும் என் நெஞ்சை அறுத்துப் போட்டனவே! உயிர் உள்ளவரை மறக்கவியலுமா அதை

  போதாததுக்கு,  “இப்ப மட்டும் உன்ர அப்பா இருந்திருக்க இதெல்லாம் நடந்திருக்குமாடி?” 

  நர்மதா மீண்டும் மீண்டும் சொல்ல, என் பெரியத்தாரும் அங்கு நின்றவர்களோடு அருவமாக நின்று குற்றம் சுமத்தியபடி நோக்குவது போலிருந்தது எனக்கு

   என் பல இக்கட்டுகளில் ஒரு தந்தையாய்த் தோள் கொடுத்த மனிதர் அவர். அவரை எப்படி அறவே மறந்தேன்?  

  “உனக்கு எவ்வளவு செய்திருப்பன்? சுத்தமாக மறந்து போனாய்ப் போல?”  அவர் நெருங்கி வந்து கேட்பது போலிருந்தது. என்னுடல் தகித்தது.   

  “உன்ர அக்காட மகள்களை விட இவள் என்ன விதத்தில  குறைஞ்சு போனாள் எண்டு இப்பிடி ஒரு பாதகம் செய்யத் துணிஞ்சனி? உன்ர  அக்காக்குத்தான் எண்டைக்குமே புத்தி நேரா வேல செய்யாது; உனக்குமா? உன்னட்ட இதை நான் எதிர்பார்க்கேல்ல சூர்யா.” 

   அசரீரியாக ஒலித்த பெரியத்தானின் குரல், சுடு சொற்களாகச்    சுளீரென்று நெஞ்சில்  குத்தின

   இந்நிலையில், “வாடி போகலாம்என்ற நர்மதாவோடு சேர்ந்து நடந்தவளைப் பார்க்கும் திறனற்றுப் போயிருந்தேன் நான்

  “குஞ்சுவேணாம் ராசாத்தி!” அம்மா  தான் எழுந்து போனார். அதற்கு முதல் நின்று, தன்  தங்கைகளைப் பார்த்தாள்  போலும்

  “அக்கா! எங்களப் பற்றிக் கவலைப்பட வேணாம்; நீங்க நர்மதாக்காவோட கொழும்புக்கே  போயிருங்கக்கா!”  

  அழுகையோடு ஓடிச் சென்று தமக்கையை அணைத்து விசும்பினார்கள் இருவரும்

 அப்போது, என்னையும் அறியாதுதான் அவளைப் பார்த்தேன். அதேநேரம் அவளும் பார்த்தாள். என்ன மாதிரியான ஒரு பார்வை அதுஒரு அற்பப் பதரைப் பார்ப்பது போலிருந்தது அந்தப் பார்வை.

   உள்ளத்துள் கொதித்துப் போனேன்!

  நானேஇனி எல்லாம் அவளே என்று என்னுள்ளத்தில் அதுவரை நாளும் உறைந்திருந்தவளைத் துறந்து விடுவதாய் எடுத்துவிட்ட முடிவில்  மூச்சுத் திணறிக்கொண்டிருக்கையில், அவளை அவமரியாதை செய்வதுபோல், அதுவும் இறந்து போய்விட்டவளின் படங்களைப் போட்டுடைத்தால்  வெறி வருமா இல்லையா?

  ‘உனக்குப் பிடிக்கேல்ல எண்டால் சொல்லீட்டு விலகு  எண்ட பின்னும் கலியாணம் செய்ய முன்வந்த நீ, உனக்காக நான் அவளையே அடிச்சுத் திறத்திக்(துரத்திக் ) கொண்டிருக்கேக்க  அவள்ட   படத்தை உடைச்சது  எந்த விதத்தில நியாயமடி?’ 

   வெறி கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது எனக்கு

   அதற்கு இடமளிக்கவில்லை அம்மா. விறுவிவிறுவென்று என்னை நோக்கி வந்தவர் தன் தளர்ந்த வயோதிபக் கையால் … 

  ஒற்றைக் கரத்தால் மோட்டாரைப் பற்றியபடி என்னையுமறியாது  வலக்கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்

  இன்னுமே சுள்ளென்று  வலிப்பது போலிருந்தது

  அடுத்தடுத்து எத்தனை அறைகள்? கை ஓயுமட்டும் அடித்து ஓய்ந்த அம்மாவுக்கோ அத்தனை வெறி

  “விசர் பிடிச்சவனே! அநியாயமாப் போறவனே! இந்தப் படங்கள எல்லாம் போட்டுடைச்சது உதயா இல்ல, உன்ர அக்காண்ட பிள்ளைகள்; அப்படியிருக்க அவளில எப்படி நீ கை வைப்ப? தாலி  கட்டினோன்ன உரிமை எடுக்கிற போல! தூ! உன்னைப் போய்ப் பெத்தெடுத்தனே!”  

   அழுகையோடு அம்மா சொல்லச் சொல்ல  நிலைகுலைந்து நின்றேன் நான்.  

  “நீ கொழும்புக்கே போக்கா! இங்க நிக்காத! போ! போ!” கவி.  

  “பிறகென்ன? உன்ர தங்கச்சிமாரே சொல்லியாச்சு. என்னதான் எண்டாலும் அவேக்கு அம்மா இருக்கிறா; தன்ர பிள்ளைகளைச்  சரி ஒழுங்காப்  பார்ப்பா தானே? நீ ஒண்டையும் யோசியாம எங்களோட வா!” என்றவாறே, உதயாவின் பதிலையெல்லாம் எதிர்பாராது இழுத்துச் செல்லசென்று மறைந்திருந்தாள்  உதயா

error: Alert: Content selection is disabled!!