“ப்ளீஸ் மா…குட்டி!”
“இங்க பாருங்க, இப்ப நீங்க ஏன் எனக்குப் ப்ளீஸ் போடுறீங்க? நீங்க உங்களுக்கு எது சரி எண்டு படுதோ அதைத் தாராளாமாச் செய்யுங்க. உதயா இங்க வரவே வேணாம். அவள் சரி நல்லா இருக்கட்டும். அதைப் போலவே என்ர வாழ்க்கையப் பற்றியும் நீங்க ஒரு வார்த்த கதைக்கத் தேவையில்லை.”
சீறலாகச் சொன்ன வேகத்தில் வெளியேறிவிட்டாள்.
‘நீ உன்ர பிடியில் நின்றால் நானும் என்ர பிடியில நிற்பன்’ சொல்லாமல் சொல்லிச் செல்பவளை என்ன செய்வதாம்?
மீண்டும் கனத்த தலையைத் தாங்கியபடி அமர்ந்துவிட்டேன்.
சற்றுநேரம் எதையுமே நினைக்க மறுத்த சிந்தை வெறுமையாகவிருந்தது. அந்த வெறுமையை விரட்டி விடும் நோக்கில் எட்டிப் பார்த்தாள் கல்யாணி.
சடக்கென்று நிமிர்ந்த என் பார்வை வழமைபோல் சுவர்களைத் துளாவி ஏமாற்றத்தோடு அங்கிருந்த அலுமாரிக்குள் சென்றுவிட்ட அவளின் புகைப்படத்தை நாடியது.
எதிரே தடையாக நிற்கும் அந்தத் தேக்குமரக் கதவைத் துளைத்துவிட்டு உள்ளே சென்றுவிடும் வேகம், பார்வைக்கும் அதை இயக்கும் மனதுக்கும்.
நானோ தொய்ந்து கிடந்தேன். எனக்கு ஏனிந்த வேதனை? வெறுப்பாக இருந்தது.
போதையில் மயங்கிக் கிடவாத புத்திக்கு ஒன்று மட்டும் துல்லியமாக உறைத்தது.
எனக்கும் என் கல்யாணிக்கும் இடையில் பாரிய திரையொன்று நிரந்திரமாய் விழுந்துவிட்டதை உணர முடிந்த என்னால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
“இனி இதுகள் இங்க இருக்க வேணாம்.” என்று, தங்கை என் கல்யாணியின் புகைப்படங்களை எடுக்கையில் தாமதியாது தடுத்தேன் தான்.
“இல்லை. அது இந்த அறையிலயே இருக்கட்டும்.” என்ற போது, ‘பைத்தியமா உனக்கு?’ என்ற பார்வை பார்த்தாள் அவள்.
“அலுமாரியில வைக்கிறன்.” தீர்மானமாகச் சொல்லி வைத்த போது விருப்பம் இல்லாவிட்டாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் விட்டுவிட்டுப் போனாள். சந்தர்ப்பம் கிடைத்தால் மொத்தமாக அகற்றிவிடுவாள் அவள்.
புகைப்படத்தை யாரும் அகற்றலாம்; மனத்தில் பதிந்த அவள் உருவையும் உணர்வுகளில் கலந்து விட்ட அவளின் நினைவுகளையும்?
இது அவ்வளவு சுலபமே இல்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தும் அதையும் செய்யத் துணிந்தேன் தானே? ‘யாருக்காக? நடந்த கலியாணம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உதற நினைப்பவளுக்காக!’ என்று எண்ணிவிட்ட இதயம், குற்றவுணர்வில் பரிதாபமாக மாட்டப்பட்டுச் சிந்தனைக்கே தண்டனை கொடுக்கத் துணிந்தது.
‘பச்! செய்வது எல்லாவற்றையும் நீயே செய்துவிட்டு உன்ர பக்கம் தவறே இல்ல எண்ட கணக்கில சிந்தனை செல்கின்றதே! அந்தளவு இறங்கிப் போனீயா சூர்யா?’ மனச்சாட்சி தான், சாட்டையைச் சுழற்றி வீசியது, சுளீரென்று!
‘கலியாணப் பெண்ணாக முதல் முதல் இந்த வீட்டுக்கு வந்தவள அண்டைக்கு அவ்வளவுக்கு அவமரியாதை செய்த பிறகும், காலம, ‘இனி அவ்வளவுதான்; நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிட்டு!’ எண்டு, வெட்டொண்டு துண்டு ரெண்டு எண்ட கணக்கில என்ர முகத்துக்கு நேர சொல்லிப்போட்டுப் போனவள், அம்மா போய்க் கேட்டதும் கட்டாயத்திலோ என்னவோ உடனே வரச் சம்மதிச்சிருக்கிறாளே.’ உண்மை ஆழமாகச் சூடு இழுத்தது.
‘அப்பிடித் திரும்பவும் இந்த வீட்டுக்க வரப்போறவளுக்குக் குடுக்க வேண்டிய மரியாதையைக் குடுக்கிறது இந்த வீட்டின்ட கடமைதான்?’ முக்கி முனகி முணுமுணுத்தது உள்ளம்.
அக்கணம் பெரியத்தாரின் உருவம் தான் மனக்கண்ணில் வந்து வந்து போனது.
‘என் மகளுக்கு இந்த வீட்டில எந்த இடம்?’ கேளாமல் கேட்டுச் செல்வதாய் ஓர் உணர்வு! ஆடிப் போனேன் நான் .
அந்தக் கேள்விக்கு உடன் பதில் சொல்ல முடியவில்லை என்னால். ஆனால், “இனிமேல் பட்டு உங்கட மகளுக்கு இந்த வீட்டில சின்னதாகவேனும் துன்பம் வர நான் விட மாட்டன் அத்தார்!” என்னையும் மீறி என் உதடுகள் நடுக்கத்தோடு முணுமுணுத்தன.
என் மனம் அதற்கு மாறாக எதையும் எண்ணவும் இல்லை.
‘நான், என்ர குடும்பம், என்ர உணர்வுகள் என, என் சார்ந்தவை எல்லாம் எவ்வளவு முக்கியமோ, அதையெல்லாம் விட, உதயா, அவள் எண்ணங்கள், உணர்வுகள் முக்கியம். இந்த விசயத்தில இனியொரு தவறு நடந்திரக் கூடாது ‘ என எண்ணிய எனக்கு, அவள் இந்தப் பத்து நாட்களில் எது எதுக்கெல்லாம் முகம் கொடுக்க வேண்டிவந்திருக்கும் என்றது புரியாதும் இல்லை.
இனிச்சரி அவள் வாழ்வில் இப்படியான அசௌகர்யங்கள் வேண்டாமே!
கணத்தில் சில முடிவுகளை எடுப்போமில்லையா? அப்படித்தான் என் மனமும், உதயா என்பவளை இனி எதுக்குமே கலங்கவிடக் கூடாதென்று எண்ணியது.
சிறுவயதிலிருந்து கண்களின் முன்னால் வளர்ந்தவள், தந்தை தாயில்லாதவள், என் பெரிய சகோதரியின் சிடுசிடுப்புக்கு எல்லாம் ஈடுகொடுத்து நடமாடுபவள் என, எப்போதும் அவளில் உள்ள பரிவும் பாசமும் விழித்துக் கொண்டதில் இப்படி எண்ணியும் இருக்கலாம்.
இன்று உயிரோடு இல்லை என்றாலும் என் பெரியத்தாருக்கு நான் எந்த விதத்திலும் ஊறு விளைவிக்கக் கூடாது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
“குட்டி!” தங்கையை அழைத்தபடி நான் அறையை விட்டு வெளியேறவும், வீட்டு வாயிலில் ஆட்டோ ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது.