அவர்கள் எல்லோரும் உள்ளே சென்று மறைந்த பின்னரே மெல்ல நடந்து சென்று வீட்டு வாயிலில் ஓரமாக அமர்ந்து கொண்ட என்னால் அவர்களோடு ஒன்றாக நடக்கவே முடியவில்லை. நான் மட்டும் தனியனாகிவிட்டதாகவே உணர்ந்தேன்.
“உதயாவுக்கு அறையைக் காட்டு பிள்ள. அண்டைக்கே அந்த அறையைத்தான் உனக்கெண்டு ஆயத்தம் செய்து வச்சிருந்தம் உதயா. போதாத காலம், இவளவே சொல்லச் சொல்லக் கேட்காமல் போய் அவன்ட அறையைத் திறந்து…” என அங்கலாய்ப்பாகச் சொல்லிக் கொண்டு வந்துவிட்டுப் பட்டென்று நிறுத்திவிட்டார் அம்மா.
ஒரு சத்தமும் கேட்கவில்லை . எல்லோருக்குமே அன்று வீட்டில் நடந்த களேபரங்கள் தானே நினைவில் வந்திருக்கும்.
“ஐயோ!” என்னையும் அறியாது தலையில் அடித்துக் கொண்டேன்.
“பழசுகளை இப்ப ஏனம்மா கதைக்கிறியல்?”
குட்டியின் எரிச்சல் குரல் இடையிட்டது.
“நீ நட உதயா!” என்று செல்வதும் கேட்டது.
“கவி, தீபியோட போய் உன்ர சாமான்களை எடுத்து வச்சி ஒழுங்குபடுத்தம்மா!” அம்மாதான். சுதாகரித்துவிட்டார் என்பது குரலில் தெரிந்தது.
“குட்டி நீ வா பிள்ள, இரவுச் சாப்பாட்டைச் செய்யத் தொடங்குவம்.” அம்மாவின் குரல் சமையலறைப் பக்கமாகத் தேய்ந்து மறைந்தது.
“பத்து நிமிசத்தில வாறன்” என்றுவிட்டு, உதயாவோடு சென்ற தங்கையும் அவர்களும் கலகலப்பாகக் கதைக்கும் குரல்களும் காதுகளை உரசிச் சென்றன.
சூர்யா என்றொருவன் அந்தப்பகுதியிலேயே இல்லை போலவேதான் அவர்கள் நடந்துகொண்டார்கள். குட்டி கூட அதன் பிறகு என்னைப் பற்றி நினைக்கவில்லை.
‘அது தேவையும் இல்லை தான்; நான் யாரைப் பற்றியாவது நினைக்கின்றேனா என்ன?’
மனம் வெறுமையோடு நினைத்துக் கொண்டதோ!
இருந்தாலும், அம்மாவில் மாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது. ஒரேநாளில் பத்து வயது இளமையானவர் போன்ற சுறுசுறுப்பும் சந்தோசமுமாக இருந்தார் அவர்.
அதுவே போதும். இந்தப் பதினோரு நாட்களாக அவர் அனுபவித்த வேதனைக்கு இன்று ஓரளவேனும் மருந்திட்டுக்கொண்டார். அப்படியும் சொல்ல முடியாதல்லவா? வா என்றதும் வந்து மருந்திட்டுள்ளாள் உதயா. காலையில் நாங்கள் சென்று அழைத்தபோது சற்றும் இளக்கமின்றி எப்படி உறுதியாக மறுத்தாள்!
இப்போ இங்கு வந்துள்ளது நிச்சயம் அம்மாவுக்கு அவள் கொடுத்த மரியாதைதான்.
‘எப்பவுமே அவள் அப்பிடித்தான்…’ இப்படி எண்ணாதிருக்க முடியவில்லை.
தங்கையை அழைத்தேன்.
“அய்யோ அண்ணா! நீங்க என்ன இதில இருக்கிறீங்க? உள்ள வாங்கவன் .” என்றபடி வந்தாள்.
“எனக்குக் கராஜில கொஞ்ச வேலைகள் இருக்கு; நான் போயிட்டு வாறன்.” என்றுவிட்டு, அவள் பதிலுக்குக் காத்திராது எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தேன்,
“இங்க பார் பிள்ள, அவன நிக்கச் சொல்லு; கவி வீட்ட போக வேணும், சாப்பிட்ட பிறகு கொண்டு போய் விடச் சொல்லு!”
அம்மாவின் குரல் தான் வந்திச்சு. சட்டென்று நின்று குட்டியைப் பார்த்தேன்.
“உள்ள வாங்கண்ணா…” என்றாள் அவள். குரலில் கெஞ்சல்.
உள்ளே செல்லும் எண்ணம் வராதுதான் நானும் நின்றேன். அதற்குள், “அம்மம்மா! கண்டவையும் எனக்காக மினக்கடத் தேவையில்லை; எனக்கு வந்த மாதிரியே போகவும் தெரியும்.” வெடுக்கென்று கேட்டது கவியின் குரல்.
“பார்த்தியா இவளின்ட கதையை? வர வர இவளவைகளுக்குக் கூடுது!” என்னைமீறிப் பொங்கிவிட்டேன்.
கோபத்தோடு உள்ளே போக முயன்ற என்னை விடாது தடுத்தாள் தங்கை.
“விடுங்கண்ணா, அவளவையத் தெரியாதா? சின்னப்பிள்ளைகள் தானே? பொறுமையாச் சொன்னால் விளங்கும். நீங்க வேலை என்றீங்களே…போயிட்டுச் சாப்பிட வாங்க. நான் ஆட்டோ பிடிச்சு அவளை அனுப்பி விடுறன்.” என்றவாறே, மீண்டும் பிடித்து வெளியில் திருப்பி விட்டாள்.
அப்பவும், “கவி, உனக்கு வர வர வாய் கூடுது; எல்லா நேரமும் ஒரே மாதிரி இராது; கொஞ்சம் கவனமாக இரு!”
உறுமிவிட்டே மோட்டார் சைக்கிளை எடுத்தேன். மனதுள் மண்டிவிட்ட எரிச்சலில் மோட்டார் சைக்கிள் சீறிப் பாய்ந்தது.