மிகுதிப் பாத்திரங்களையும் அலம்பாது அறைக்குள் வந்துவிட்டேன்.
இருந்தாலும், அன்றிலிருந்து, காலைத் தேநீர் மற்றும் இரவுணவு வேளைகளில் சூர்யாவைத் தவிர்க்க முடியவிலை.
முதல் தரம் நானாக முனைந்து செய்ய முயன்றது அதன் பின்னர் ஒருவிதக் கட்டாயம் போலானதும் மூச்சு முட்டிப் போனேன். அதிலும் ‘உன் புருசனாச்சு நீயாச்சு!’ என்று, அம்மம்மா சொல்லாமல் சொல்லி ஒதுங்குவதை இன்னும் சகிக்க முடியவில்லை.
சரி அம்மம்மாவைத் தான் விடுங்க. எப்படியும் தன் மகன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே யோசிப்பார். அந்த எண்ணத்தில் தான், சின்னதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் எங்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து விலகத் தொடங்கியிருந்தார்.
அது பார்த்தால், குட்டி அக்காவும் வேண்டுமென்றேதான் கொழும்பில் சென்று தங்கிக்கொண்டாரோ என்ற ஐயமும் என்னுள் எழுந்தது.
“அங்க கவி தனிய பாவம், நீ இனி வீட்ட போயிறன்.” என்று, சாடை மாடையாகத் தீபியிடம் சொன்னதையும் கேட்டிருக்கிறேன்.
“ஆங்! அதை நீங்க சொல்லக் கூடாது அம்மம்மா, நானாகப் போக வேணும்.” தீபி ஒரேயடியாகச் சொல்லிவிட்டாள்.
இதையெல்லாம் விட்டாலும் சூர்யாவின் போக்கு மிகுந்த எரிச்சல் தந்தது.
‘நான் ஒரு பேச்சி விசரியோ!’ சினக்க வைத்தார்.
‘உண்மையாகவே இந்தாள் மனசில நம்மைப் பற்றி அப்படித்தான் நினைச்சிருக்கிறார் போல! இல்லாட்டி இப்படி, நான் என்னவோ இவரை விரும்பிச் செய்த பொம்பிள போலவும், அவர் என்னைச் சுத்திச் சுத்தி விரும்பிச் செய்த மாதிரியும் கதைச்சுக்கொண்டு வருவாரோ!’ என்று நான் முணுமுணுத்தபடி திரியும் அளவுக்கு என்னோடு இயல்பாகக் கதைக்க முயன்றார்.
ஆரம்பத்தில் தயங்கி ஒதுங்கிப் போன நான் பிறகு பிறகு மனதுள் எழுந்த ஆத்திரத்தை முறைப்பிலும் சிடுசிசிடுப்பிலும் காட்டத் தொடங்கிவிட்டேன். அதுவும் என்னையும் அறியாதுதான். அதைப்பார்த்து அவர் முகம் சுருங்கிப் போகும் போக்கில் என் மனம் இதமாவதையும் தடுக்க முடியவில்லை.
எத்தனை நாட்களுக்கு இந்த ஆட்டமாம் என்று கூட அலுப்போடு நினைப்பு வரும். ஆனாலும், ஏதாவது கேட்டால் கூட நான் கண்டும் காணாதது போலவே சென்று விடுவேன்.
“தீபி இதில இருந்து சாப்பிடு இல்லையோ நீ வீட்டயே போயிரு!” சில தினங்களிலேயே நல்ல அதட்டல் போட்டு அவளையும் எங்களோடு உணவுண்ண வைத்தும் விட்டேன்.
அதன் பிறகு, சூர்யா தான் முழிக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வந்து போயிற்று. அதற்குரிய முழுப்பொறுப்பையும் தீபி எடுத்துக் கொண்டாள். அவள் கதைக்கையில் சிலசமயங்களில் நான் குறுக்கிட்டுக் கண்டித்தாலும், பலவேளைகளில், ‘கடந்த காலத்தை முற்றாக மறந்துவிட்டவர் போல நடிக்கிறார் தானே? நல்லாப் படட்டும்‘ என்ற எண்ணத்தில் வாய்மூடி இருந்துவிடுவேன்.
இப்படி நகர்ந்த நாட்களில் ஒருநாள் மாலை, பாண்டியன்தாழ்வில் ஒரு பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுவிட்டு, முடிந்ததும் அடுத்து ஆஸ்பத்திரி வீதியிலும் அது முடியத் தின்னவேலியிலும் வகுப்புகள் இருக்கவே விரைந்து வந்துகொண்டிருந்த நான், சுண்டிக்குளி மகளிர் பாடசாலையோரமாக ஸ்கூட்டியை நிறுத்த வேண்டியதாயிற்று.
” இதென்னது இண்டைக்கு ஒருநாளும் இல்லாமல்?”
முணுமுணுத்தபடி ஸ்கூட்டியை மீண்டும் இயக்க என்னால் முடிந்தளவு முயன்றேன். மாட்டேனே என்ற அடத்தோடு நின்றது என் ஸ்கூட்டி. இதில் உள்ள நம்பிக்கையில் தானே கால்மணித்தியால இடைவெளியில் அங்கும் இங்குமாக வகுப்புகளை வைத்திருக்கிறேன்.
“வாங்கேக்க ஒரேயடியாப் புதுசா வாங்கு உதயா. பாவிச்சதுகள் என்னதான் எண்டாலும் செலவு வைக்கும்.” என்று, நர்மதா சொன்னதுதான் நினைவில் வந்து போயிற்று!
‘இந்தா வச்சிட்டே!”
‘இப்ப என்ன செய்யிறது?’ யோசித்துக்கொண்டே மணியைப் பார்த்தேன். ஐந்து நான்கு. ‘இன்னும் பத்து நிமிசத்தில அங்க இருக்க வேணுமே!’ மனதுள் சொல்லிக்கொண்டே, நின்றிருந்த கால்கள் ஸ்கூட்டியைத் தள்ளியபடி நடக்கவே தொடங்கியிருந்தன.
‘இப்பிடியே போய் ஓல்ட் பார்க் ரோட்டால திரும்பி…’ கணம் நின்றது என் நடை. இப்போதைக்கு அருகிலுள்ள கராஜ் சூர்யாவுடையதுதான், வேறு வழியே இல்லை.
“இப்ப அவர் என்ன கராஜில வெளியில வந்து நிக்கவா போறார்?” தடுமாறி முணுமுணுத்தாலும் நடக்கத் தொடங்கியிருந்தேன்.
‘ஒன்றும் செய்யேலாது. மெல்ல ஐயாட்டச் சொல்லி விட்டுட்டுப் போவம். டியூசன் முடியவிட்டு வந்து எடுத்திட்டுத் தின்னவேலிக்குப் போகலாம்.
எதுக்கும் அஞ்சு பத்து நிமிசம் பிந்தி வருவன் எண்டு சொல்லீட்டால் நல்லம்.’
நினைத்தபடி, வேகமாக நடந்து ஓல்டு பார்க் வீதிக்குள் செல்வதற்காகப் பாதையைக் கடக்க முனைகையில், எனக்குப் பின்புறமிருந்து வந்த மோட்டார் சைக்கிள் என்னருகில், மிக மிக அருகில் வந்து நின்றது.
‘இவ்வளவு பக்கத்தில வந்து நிக்கிறது யார்?’ மனம் எண்ணியதற்கு முதலே திடுக்கிட்டுத் திரும்பி இருந்தேன்.
“என்ன உருட்டிக் கொண்டு போறீர்?”
கேட்டுக்கொண்டே தனது மோட்டாரை நிறுத்திவிட்டு வந்தது, “தள்ளு பார்ப்பம்.” என் ஸ்கூட்டியைப் பிடித்தவரிடம் ஸ்கூட்டியைக் கொடுக்கவில்லை நான்.
“இல்ல பரவாயில்ல, நானே கொண்டுபோய் கராஜில விடுறன்.” என்றுவிட்டு நகர முயன்றேன்.
மறுநொடி, “விடு உதயா!” அதட்டலோ!
பாதையோரமாகத் தள்ள முயல்பவரோடு அதில் நின்று இழுபறிப்படுவதா என்று விலகி நின்றேன்.
இப்போ என்னைப் பார்த்து முறைத்தார்.