கடைக்கண் பார்வை அவனிடம் சென்றது. பெரிய அமெரிக்க பிரசிடெண்ட் இவர்! செய்யிறது என்னவோ காளான் வியாபாரம்; ஃபோன் கதைக்கேக்க டன் கணக்கில லெவல் காட்ட வேண்டியது! “ மூஞ்சியையும் ஆளையும் பாருங்கவன்…குரங்கு!” மனதில் தொடங்கிய முணுமுணுப்பு வார்த்தைகளாக நழுவியது.
பின்னால் வந்து, சாப்பிடலாம் வா என்றழைப்பான் என்ற நப்பாசை இருந்தது. அது பார்த்தால், காதலியோடு களவாகக் குசுகுசுப்பது போல் கைப்பேசியில் கதைத்துக்கொண்டே இருந்தான், அவன்.
அவள் நண்பர்கள் வேறு, வெளிக்கிட்டுவிட்டாயா என்று அழைத்துக் கேட்டார்கள். முதல், அவர்களோடு படிக்கும் பிள்ளை வீட்டில் தங்கி நின்று, சாமம் பன்னிரெண்டுக்கு, பிறந்தநாள் பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு, மறுநாள் புறப்படுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்போது, இன்னொரு பெடியன் வீட்டில் நிற்கிறார்களாம் என்று சொல்லி, விலாசம் அனுப்பியிருந்தார்கள். வவனியா டவுனுக்கு வந்து விட்டுச் சொல், அழைத்துப் போகிறோம் என்றும் இருந்தார்கள்.
அவளுக்குப் பொறுமை அதிகம் தான்; தனக்கு மருந்துக்கும் இல்லை என்றது, பசி. இருந்தாலும், ரோசம் இருக்கே! அசைந்து கொடுக்கவில்லை. கடமுடக்கும் வயிற்றோடு, ஐரோப்பாச் சுற்றுலா சென்ற நேரம் எடுத்த புகைப்படங்களை, மீண்டும் மீண்டும் பார்த்தவளுக்கு, அந்தப் பயணம், தன் மனத்தில் ஏற்படுத்திய மாற்றமும் அதன் நினைவுகளும் பசுமையாய்!
உன் மிகுதி வாழ்க்கைக்கு இவன் தான் என்று ஆரூரனை கைகாட்டி, அவனை மனதுள் அழுந்தவே பதியச் செய்தது, உதடுகளில் மலர்வைப் பூசியது; அதுவும் அவள், காளானோடு நிற்கும் படத்தைப் பார்க்க பார்க்க, அவளுக்கே, அவளை அவ்வளவு பிடித்தது. அப்படியிருக்க, இவன் என்ன சடமா? அல்லது, அவளை ஒதுக்கித் தள்ளுவது அவ்வளவு இலகுவா? இப்படிச் சென்ற யோசனை மனதில் சுருக்கென்று தைத்தது. அதேநேரம், அவன், அப்படிச் சொல்ல என்ன காரணமாக இருக்கலாம் என்ற சிந்தனைக்கு, அந்தப் புள்ளியில் தான் பிரவேசித்தாள், பைரவி.
அவன் மறுப்பை யோசிக்க யோசிக்க இலகுவாக இருக்கவில்லை; இருந்தாலும் முயன்று பார்த்தாள். அவன் மீதான தன் விருப்புக்கு வழங்கும் மரியாதை அதுவென்று எண்ணியது, அவளுளும்.
அதுமட்டுமா? வார்த்தைகளில் கடுமையும் பார்வையில் கோபத்தையும் காட்ட முயன்றாலும் அவன், அவளிடம் தோற்றுத்தான் போகிறான். அவனுள், அவள் மீதிருக்கும் நேசத்தை அவளால் உணர முடிகிறதே! அதைப் பிரேமை என்று ஒதுக்க அவள் தயாராகவே இல்லை. இவையெல்லாம் சேர்ந்தே, பட்டவர்த்தனமாக, இவைதான் காரணமாக இருக்கலாம் என்று வரிசைப்படுத்த முயன்றாள்.
அதன் பின்னரே, அதுவரை இருந்த எரிச்சல், கோபம் மெல்ல மெல்ல விலக, குறும்பும் ரசிப்பும் வந்து அவளை ஆக்கிரமித்தன. இதெல்லாம் இல்லாமல் உண்மையில் அவளைப் பிடிக்காவிட்டால்? அதுதான் மறுத்தானோ! ஒரு கணம் இப்படியும் எண்ணி விட்டாள். இந்தக் கணமே, விடை கண்டு விடு! மனதுள் தீர்மானித்துக்கொண்டு எழ எண்ணியவள் முகத்துக்கு நேரே, கரமொன்று நீளவும் சடக்கென்று திடுக்கிட்டு விட்டாள், பைரவி.
கணம் தான். கரத்துக்குரியவன் அவள் முகத்தை நிமிரச் செய்திருந்தான். கை, அவள் புறம் நீண்டிருக்க நின்றவன் முகம் அதிசயமாகக் கனிந்திருந்தது. அதுவே, அவள் விழிகளைச் கலங்கச் செய்தது.
ஏதோவொரு சக்தி! அது என்ன ஏதோ ஒன்று! மனமெங்கும், அவளில் உள்ள நேசம் தான்…அவள் அமர்ந்திருந்த விதம் பார்த்து, அவனை அங்கு இழுத்து வந்திருந்தது. கடுமை காட்ட நினைத்தவனால் முடியவில்லை. அவன் கரம் சொல் கேளாது நிண்டுமிருந்தது. அவள் விழிகள் கலங்கி மெல்ல மெல்ல நிறைய, அவன் மனம் தள்ளாடியது; அப்படியே அவள் மேல் விழுந்து தொலைத்தது.
வார்த்தைகளை உதிர்த்து, தன்னை மறைக்க முயன்றான், ஆரூரன்.
“பச்! முதல் எழும்பி வாரும், சாப்பிடுவம். ப்ளீஸ்! நான் உம்ம வருத்திற மாதிரி ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சுக் கொள்ளும் சரியா? எனக்கு வேற வழி தெரியேல்ல பைரவி!” என்று அவன் சொல்கையில், மறுப்பின் காரணமாக அவள் கண்டறிந்தவை முன்னால் வந்து வரிசை கட்டி நின்றன.
“பொறுமையா யோசியும் உமக்கே விளங்கும்.” என்று தொடர்ந்தவன் குரலிலிருந்த வருத்தம், அவனை இனம் காட்டியும் விட்டது. பைரவி மீண்டிருந்தாள். அதுவே, அவன் கையைப் பட்டென்று அப்பால் தட்டிவிட்டு எழுந்து கொள்ள வைத்தது.
“நான் என்ன வயசு போன கிழவியா அல்லது ஏலாத ஆளா? அல்லது…” இறுக்கமாக இழுத்தவள் குரல் போலில்லாது, பார்வை, அவனைத் துளைத்தது; நெஞ்சாழம் செல்ல முயன்றது. கணமென்றாலும் தடுமாறிப் போனான், ஆரூரன். அதைக் குறித்துக்கொண்டே, “உமக்கு என்னில சரியான விருப்பம், அன்பு…கை நீட்டுறார் கை!” சத்தமாகவே சொன்னபடி சென்று வாகனத்தில் ஏறியவள், தன்னையும் மீறியே, மீண்டும் கதவை அடித்துச் சாத்தியிருந்தாள்.
“இதென்ன பழக்கம், கதவை அடிக்கிறது?” கண்டிப்போடு தான் ஏறியமர்ந்திருந்தான், ஆரூரன்.
“ஹலோ அதான் நான். ஓகே!” சீறினாள், அவள்.
“ஓ சரி!” பயந்து விட்டானாம் என்ற கணக்கில் சொன்னவன் கழுத்தை, நெரிக்க வேண்டும் போலிருந்தது. அவனோ, உணவைப் பரிமாறி அவள் புறம் நீட்டினான்.
“எனக்குப் பசிக்கேல்ல எண்டானான் எல்லா?” என்றதுக்கு ஒரு பார்வை.
“என்ன?” முறைத்தவளுக்குப் பதில் சொல்லவில்லை, அவன்.
உணவுத் தட்டை அவள் மடியில் வைத்துவிட்டுத் தனக்குப் பரிமாறிய வேகத்துக்கு சாப்பிடவே ஆரம்பித்திருந்தான்.
“உங்களுக்குப் பயம் மிஸ்டர் ஆரூரன் பயம்! லவ் பண்ணிட்டமே, அதுவும் ஒரு டொக்டர் பெட்டை, நல்ல வடிவு வேற! நீரோ, ஒன்பது வயசு கூடின முசுட்டுக் கிழடன் ! காளான் கொட்டிலை கட்டிக்கொண்டு திரியிறவன். மாட்டன் எண்டிட்டா எண்டு நெஞ்சிடி! அதை மறைக்க எவ்வளவு நடிக்கிறீங்க என்ன?”
அவள் வார்த்தைகள் அவன் மனதில் சென்று வேகமாக மோதின. அதுவே, அவளைப் பார்க்க வைத்தது. அதிலும், அவள், தன்னைப் பற்றிச் சொல்கையில் குரலில் வழிந்த பெருமிதம் அவன் உதடுகளில் முறுவலையும் தோற்றுவித்திருந்தது.
“என்ன இங்க பார்வை? இப்ப நான் பொய்யா சொல்லுறன்? உம்மட நடிப்பு எங்களுக்கு விளங்காம இல்லைச் சரியோ?” என்றவள், “எல்லாத்தையும் விட, எல்லாரும் வெளிநாடு எண்டு ஓடுறதுக்குத் தயாராக, நான் இங்க இருக்க ஓமெண்டு சொல்லுவனோ எண்டுறதும் உங்களுக்க இருக்கு.” என்று சொல்ல, அவன் பார்வை அதிர்ந்தது; கையில் இருந்த உணவுத் தட்டை மடியில் வைத்தவன் தலை, சீற்றில் சாய்ந்தது. விழிகள் கலங்குவது அவளுக்குத் தெரிந்தது.
“நீங்க தான் தைரியமான ரௌடி ஆச்சே! நீ சொல்லுறது போல எல்லாம் இல்ல. மதி போலத் தான் எனக்கு நீ எண்டு, இப்பச் சொல்லுங்க பார்ப்பம்?” சவாலாகக் கேட்டவள் குரல் இதயத்தைப் பிடித்துக் கொள்ள விழிகளை மூடிக் கொண்டான், ஆரூரன். அவனையும் மீறிய இமையோர மென் கசிவு, அவன் மனத்தின் தடுமாற்றத்தை அவளுக்குணர்த்தி நின்றது.
“இதெல்லாம் தெரிஞ்சு தான் விரும்பினனான் ஓகே!”என்றதும் முறைத்துப் பார்த்தான்.
“என்ன? நான் சொன்னதில ஏதாவது ஒண்டு இல்ல எண்டு சொல்லுங்கவன் பாப்பம்?”புருவங்கள் உயரக் கேட்டவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எத்தனை பேரின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டிவிட்டுச் சத்தமேயில்லாது செல்பவன், இவளிடம்…
மேல் கைகள் மாறி மாறி உயர்ந்து விழிகளைத் துடைத்துக் கொண்டன.
“நான் கிடைக்க மாட்டேனோ எண்டு நினைச்சு அழுதீங்க தானே?” வம்பிழுத்தாள்.
பதில் சொல்லவில்லை, அவன்; அவளைப் பார்க்கவும் இல்லை. சிறு முறுவலோடு உணவுத் தட்டை எடுத்துக் கொண்டான்.
“அலட்டினது போதும் சாப்பிடும். நேரம் போகுது.” உணவைக் கிள்ளி வாய்க்குள் அடைத்துத் தன்னைக் கட்டுப்படுத்த முயன்று வென்றான்.
“இன்னும் நடிக்கிறீங்க என்ன ஆரூரன்? இப்ப சொல்லுறன் நல்லா நினைவில் வச்சிருங்க. நான் சொன்னது எதுவும் எப்பயும் மாறாது.” என்ற போது, அவளை பாராதே இடையிட்டது, அவன் குரல்.
“அது சரி, வருசக் கணக்கில காதலிச்சு, கல்யாணம் செய்திட்டு, ஒண்டு இரண்டு வருசத்தில டிவோர்ஸ் எடுக்கிற ஆக்கள் தான் இப்பக் கூட! அதுக்க, உம்மட கதையைக் கேட்டாச் சிரிக்கிறதா அழுகிறதா எண்டு இருக்கு!” என்றவனுக்குப் பதில் கோபமாகவே கிடைத்தது.
“இங்க பாருங்க, அங்கயும் இங்கயும் நடக்கிறதுகள நம்மட விசயத்துக்கு உதாரணமா எடுக்காதீங்க சரியா? ஆன்ட்டி மும்மரமா கலியாணம் பாக்கிறா. மகனுக்கு வயசு போகுதே கல்யாணம் நடக்குதில்லையே எண்டு கவலைப்படுறா!” சீறலாகத் தொடங்கி, நக்கலாகச் சொன்னவளை முறைத்தான், அவன்.
“வாட்…உங்களுக்கு என்ன இருபத்தி ஐந்தா ? இல்லையே! அது ஒண்டு தான் எனக்கு யோசனை…என்ர படிப்பு முடிய இன்னும் நாலு வருசம் கிடக்கே! அப்ப உங்களுக்கு 35 வந்திருமே…என்ன செய்வம். இப்பவே கட்டுவமா?”
வலு இலகுவாக, கண்ணடித்தபடி கேட்டு, அவனைத் தடுமாற வைத்தாள். அதுமட்டுமா? தத்தளித்துத் தவித்தவனுக்கு, தம் திருமணம் பற்றி யோசிக்கவும் செய்துவிட்டாள்.
“அதுக்குள்ள, ஆரையாவது கட்ட நினையும், அப்ப கொலை… கொலையே செஞ்சிருவன்.”என்றவள், வலக்கை அவன் கழுத்தை நெரித்துப் பிடித்திருந்தது. அக்கணம், இந்த அன்பு, வாழ்வு முழுமைக்கும் அவனுக்கு வேண்டுமே என்று அவாக் கொண்டான், ஆரூரன்.
அவன் பார்வையை எதிர்கொண்டவள், “மற்றும் படி, இனி நீங்களா இதைப் பற்றிக் கதைக்கிறது வரை, நான்…நான் உங்களுக்கு ஒரு இடைஞ்சலும் தரமாட்டன்.” என்றவள் விழிகளின் கலக்கம் அவனை வெகுவாகவே தாக்கியது.
உன்னை விரும்புகிறேன் என்று, முகத்துக்கு நேரே சொல்லிவிட்டவளுக்கு, பதிலாக என்ன சொன்னான். உணவுத் தட்டு மீண்டும் மடியில் அமர, இடக்கை நகர்ந்து அவள் தலையை பிடித்துத் தன் தோள் வளைக்குள் சாய்த்துக் கொண்டது.