அத்தியாயம் 30 – 1

 “உதயாஉதயா…”  என்ற  அழைப்போடு, தோளில் தட்டும் விழத் திடுக்கிட்டு முழிப்பு வந்தாலும், இமைகளோ பிரியேன் என்று அடம் பிடித்தன.

  “நேரமாச்சு. நான் வெளிக்கிட்டுட்டன், எழும்பி வெளிக்கிடுமன்; அம்மாவேட்ட ஒருக்காப்  போயிட்டு வாறன். ” என்ற குரலில் பட்டென்று திறந்து கொண்டன இமைகள்.

  ‘நான் எங்கஇவர் எப்பிடி?’ கணம் குழம்பிய பின்னரே தெளிந்தேன். மறுநொடி விசுக்கென்று கட்டிலை விட்டு இறங்கிய  என்னைப்  பார்த்துச் சிரித்தாரோ

  ‘சரியான கும்பகர்ணி என்று நினைச்சிருக்கும் ஆள்.’ 

  கைபேசியை எடுத்து மணிபார்க்க முயல, “ஆறு மணியாச்சு; ஏழுக்கு வான் வரும்; நீர் ஆறுதலா வெளிக்கிடும், தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வாறன்.” என்றவர், பதிலுக்குக்  காத்திராது வெளியே சென்றுவிட்டார்.

  “அப்பப்பா! பெரிய அக்கறை தான்! இவர் வாங்கித் தராட்டி(தரவில்லையோஎனக்கு இண்டைக்குத் தேத்தண்ணி கிடையாது பாருங்க!” 

  விடியவெள்ளன காரணமே இன்றிச் சிடுசிடுத்த நான், தொடர்ந்து வந்த வார்த்தைகளை  கப்பென்று விழுங்கி விட்டேன்.

  அந்த வேகத்தில் போனவர் ஏன் வந்தார்? கடவுளேகட்டாயம் கேட்டிருப்பார்.

  ‘உதயா! ஏனடி? ஏன்?’ மனதுள் என்னை நானே கண்டித்துக் கொண்டிருக்க, ஒரு கணம் வாயிலில் நின்றபடியே என்னை உற்றுப் பார்த்தவர் விறுவிறுவென்று உள்ளே வந்தார்.

  வந்தவர் எதையாவது சொல்லிவிட்டுப் போனால் நான் என் வேலையைப் பார்ப்பேன் தானே? அதைவிட்டு விட்டு இப்படிப் பார்த்தால்?

   “என்?” தடுமாறினாலும் என் பார்வை அவரின் பார்வையைத் தாங்கி நின்றது.

   எனக்கே என்னை நினைக்கக் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. அவரோடு வீணாக வம்பிழுக்கிறேனோ!     

   ‘ஆசை பாருங்க எனக்கு!’ மனதுள் சிலுப்பினாலும், ஏனோ, ‘சீண்டிப் பார்த்தால்?’ என்ற விபரீத எண்ணமே தலைதூக்கியது.

   ‘எனக்கு என்னவோ நடந்திட்டு!’ தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிய என்னை அவரோ பார்த்துக் கொண்டே நின்றார்.

   “என்ன என்றன்.” என் குரல் கொஞ்சம் அழுத்தத்தை கடன் வாங்கியிருந்தது.

   “இல்ல, உம்மைச் சரியான அமைதியான பிள்ளை எண்டு நினைச்சிட்டன்.” சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு, சத்தமே இல்லாமல் உதட்டுக்குள். அதோடு சேர்ந்து நகைத்த விழிகள் தான் அந்தத்  தாடிக்குள் இருந்த உதடுகளில் பூசிய முறுவலைப்  பட்டவர்த்தனமாக்கின

   “அதுக்கு நான் என்ன செய்யிறது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத்தர் பற்றி ஒவ்வொரு மாதிரியாக நினைப்பு இருக்கலாம்; நினைக்கலாம். ” என்றுவிட்டு நகர முயல, தானும் சேர்ந்து நகர்ந்து, “அப்ப உம்மோட கவனமாக இருக்க வேணும் எண்டு சொல்லுறீர்?” என்றாரே பாருங்க.

   “யாரு? நீங்க என்னோட கவனமாக இருக்க வேணுமா? அல்லது நானா?” என்றுவிட்டு, நான் பார்த்த பார்வையில் தான்  அவர் கண்களில் இருந்த முறுவல் துணிகொண்டு துடைத்துவிட்டது போலவே காணாமல் போய்விட்டது  என்றுதான்  நினைத்தேன். அது பார்த்தால், என் வலது கரம் கன்னத்தைத் தடவிக் கொண்டு இருந்தது; எனது கன்னத்தைத்தான்.

  அது தன்பாட்டில் உயர்ந்திருக்கு. சரி இருக்கட்டும். என்ன தான் பிழை? அன்றைக்கு அந்த அறை விட்டாரே! எனக்கு இவர் தந்த  கலியாணப் பரிசு அதுதானே?  

  அன்றைய நாளின் நினைவில் மூக்கைக் கரித்துக்கொண்டு வர, என்னிலேயே கோபம் வந்தது. இப்போ இதில் நான் கலங்கி நின்று இவரின் இரக்கம் சம்பாதிக்க வேண்டுமோ

  “நேரம் போயிற்று!”  விலகி நடந்தேன்.

   நான் பயணப்பையிலிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் செல்லும் வரையும் அவர் அசையவில்லை

  நன்றாகப் பார்த்துக்கொண்டு நில்லும். நானும் திரும்பிப் பார்க்கவில்லை.

  “அறையை நான் வெளிப்பக்கம் மூடிட்டுப் போறன் எண்டு சொல்லத்தான் வந்தன்.” 

  குளியலறைக் கதவை மூடுகையில் குரல் வந்து செவிகளைத் தழுவியது.

  சரிதான்.

  குளியலறைப் பைப்பைத் திறக்கையில் முதல் நாளிரவு நினைவுகள்தான் எட்டிப் பார்த்தன

  “நீயும் அண்ணாவும் தங்கிற அறை  அங்கதான் கீழ…” என்று வெகு சாதாரணம் போலத்தான் குட்டி அக்கா சொன்னார்நானுமே இதை எதிர்பார்த்திருந்தேன். அதனால்தானே மெல்ல நர்மதா வீட்டில் தங்கலாம் என்று நினைத்திருந்தேன்.

    எங்கள் இருவரையும் நெருக்கமாக்க எங்கடா சின்னச் சந்தர்ப்பம் கிடைக்கும்  என்று அனுதினமும் கண்களில் எண்ணைவிட்டுக் கொண்டு திரியும் அம்மம்மாவும் குட்டியக்காவும்  இந்தச்  சந்தர்ப்பத்தை விட்டுவிடுவார்களா என்ன?

   ‘அவரோடையா? அதெல்லாம் என்னால முடியாது! வீட்டில போலவே வேறு வேறா இருக்கத்தான் விருப்பம்.’ என்றெல்லாம்  நான் சொல்லவில்லை. என்றாலும், அவரில் எனக்கு நிறையவே மனவருத்தம்  இருந்தது. அப்படியிருக்க அவரோடு தங்க மனமும் வரவில்லை. என்னதான் செய்வது என்று வேறு வழியில்லாதுதான் வந்திருந்தேன். அது பார்த்தால் என் முகத்தை முகத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தால்

  அதனால்தான் குளியலறையில் நிறைய நேரம் நின்றேன், அவர் தூங்கி இருக்க மெல்லப்  போய்த் தூங்கலாமே என்ற எண்ணத்தோடு.

   அவரோ, குழந்தை குளியலறைக்குள் வழுக்கி விழுந்திட்டாலும் என்ற கணக்கில் அல்லவா கதவைத் தட்டி நலம் விசாரித்தார்ப்பா! என்ன ஒரு அக்கறை!

  ‘இனி என்ன செய்யிறதுதன்ர வீட்டுக்காரர்கள் சொந்தங்களுக்காக என்னைச் சகித்துப் போக நினைக்கிறார்!’  எரிசலும் கோபமும் வந்ததுதான்.

error: Alert: Content selection is disabled!!