பேரூந்து எதிலோ பலமாக மோதுபட்டு நின்றது. அய்யோ இல்லை இல்லை, அப்படியே… சரிகின்றதா என்ன?
அப்படியே ஒருபக்கமாகச் சரிந்த நான் கையை ஊன்றி நிமிரப் பார்த்தேன், சுலபத்தில் முடியவில்லை.
மேலே வைத்திருந்த பெட்டிகள் எங்கள்மீது விழுவது பத்தாதென்று எங்களுக்குப் பின்புறமிருந்தவர்கள் பெருங்குரலோடு கடந்து செல்ல முயன்றார்கள்.
ஒவ்வொரு பயணிக்கும் உயிர்ப்பயம்தான். ஓலமிட்டபடி வெளியேறிடவே முனைந்தார்கள். பேரூந்தினுள் இருந்த மங்கிய விளக்குகளும் அணைந்து ஒரே கருமை! சட்டென்று எதையும் பார்க்கவோ, நடந்ததை முழுமையாக யூகிக்கவோ முடியவில்லை!
‘பள்ளத்தில் பிரண்டு கொண்டிருக்கிறமா?’ என் சந்தேகம் அதுதான்.
“ஐயோ அசையாமல் இருங்க! ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்ல! பயப்படாதீங்க! ஏய் சொல்லுறது விளங்கேல்லையா? கொஞ்சம் அப்பிடியே இரு! ஆடாதீங்க!”
கத்தினான் அந்தப் பையன்.
“அண்ணா! கதிரண்ணா!” சாரதியை உலுப்பினான். மயங்கிப் போனானோ!
கூச்சலுக்கு மத்தியில் என் முதுகில் யாரோ மிதித்துக் கொண்டே செல்லவும் முயன்றார்கள். உதயாவை நெஞ்சோடு இறுக அணைத்திருந்தேன் போலும். ஒரே கூச்சல்கள். அதில் உதயாவின் குரல் எனக்குக் கொஞ்சமும் கேட்கவில்லை. நெஞ்சில் பலமாகவே அவள் அழுத்தவும் தான் அசைந்தேன்.
“உதயா! உனக்கு அடி ஒண்ணும் பட இல்லையே! கொஞ்சம் அப்பிடியே இரு! வெளிய போயிரலாம்.” சொன்னது என் குரலா என்ற வகையில் நடுங்கிக் கொண்டுதான் வெளிவந்தது.
அவள் அழுகிறாள் என்பதை உணர முடிந்தது. அவள் உடல் வேறு தடதடவென்று நடுங்கியது. என் நெஞ்சும் சேர்ந்து நடுங்கியது.
‘இப்படியொரு விபத்தில் தான் அவளும் போயிருப்பாளோ!’
என்னையறியாது உதயாவை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டேன்.
“பயப்படாத உதயா ஒண்ணும் இல்ல.”
என்பாட்டில் தேற்ற முயன்றாலும் நெஞ்சில் அளவில்லா கிலி! அவளும் அழுதபடி எதையோ சொல்லிக்கொண்டு நகர முயன்றாள். இந்தக் கூச்சல்களில் அவள் கதைப்பது எனக்குச் சரியாகக் கேட்காதது போலவே தானே நான் சொல்வதும் அவளுக்கு எட்டாது போகும்.
“உதயா! இங்க பார், கொஞ்ச நேரம் அசையாமல் அப்பிடியே இரு! நமக்கு ஒண்ணும் இல்ல!” கைவளைக்குள் இருப்பவளை என்னோடு சேர்த்தணைத்தபடி கத்தினேன்.
அதற்குள் வெளியில் ஆட்கள் கூடிவிட்டார்கள். பின்னால் வந்த வாகனங்கள் மட்டுமில்லாது முன்னால் போட்டி போட்டுக்கொண்டு ஓடிய பேரூந்தும் நின்று அதிலிருந்தும் ஆண்கள் பெண்கள் என்று இறங்கி வந்திருப்பார்கள் போல.
“மாறி மாறிப் போட்டி போட்டு ஓடும் போதே சொன்னம் தானே? கழிசடை நாயல் கேட்டால் தானே? என்னத்தச் சாதிக்க இப்படியெல்லாம் செய்றான்களோ!”
“ஒருத்தரும் பயப்பட வேணாம்; பஸ் மரத்தில சாஞ்சு நிக்குது; அமைதியா இருங்க; வெளியில வரலாம்.”
“நல்லகாலம் இந்த மரம் மட்டும் இல்லையோ அப்படியே அந்த வயலுக்குள்ள பிரண்டு இருக்கும் .”
“இப்படித்தான் அண்டைக்கு ஒரு பஸ் தலைகீழாப் பிரண்டு பதினோரு பேர் அந்த இடத்திலேயே சரி!”
“பொறுப்பில்லாதவங்கள்; இவங்களை நம்பிக் காசையும் குடுத்திட்டு ஏறி வாற எங்களைச் சொல்ல வேணும்!”
“இது ஒரு கிழவிட தேத்தண்ணிக் கடை எல்லா? அப்படியே சரி; இதுக்க மட்டும் ஆட்கள் இருந்திருந்தால் இண்டைக்கு என்னவாகி இருக்கும்?”
“இங்க பாருங்க, நாய் ஒண்டு செத்துக் கிடக்கு! ஐயோ பாவம்!”
வெளியில் மாறி மாறிக் கேட்ட குரல்களின் மத்தியில் மெல்ல மெல்ல ஒருவர் ஒருவராக இழுத்து இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
“ஏய் இங்க பாருங்க, இந்த ஆச்சி மயங்கிப் போயிருக்கிறா போல! மெல்ல மெல்ல மிதிச்சிராம பார்த்து வாங்க.”
இப்போது, பல டோச் வெளிச்சங்கள், கைபேசி ஒளி என, அந்த இடத்தின் கோலத்தைப் படம் பிடித்துக் காட்டின.
“உதயா அடுத்ததா நாம போகலாம்; மெல்ல மெல்ல இப்பிடிக் கையை ஊன்றிக் கொண்டே போ!” அதுவரை என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தவள் நகரவில்லை.
“நீங்க?” விம்மலும் அழுகையுமாகக் கேட்டாள்.
“இல்ல, நீ முதல் போ! ஐயோ! எல்லாரும் இறங்கத் தானே வேணும்? கொஞ்சம் பொறுங்க.” பின்னிருந்து என் மீது விழுந்து புரண்டு கடக்க முயன்ற மனிதனைப் பார்த்துக் கத்தி விட்டேன்.
“நீ போ உதயா…எல்லாரும் இறங்க வேணும்.” அசையாதிருந்தவளில் கோபமும் வந்தது.
“பிள்ள இறங்கு, இல்லையோ எங்களப் போகவிடு! பஸ் எப்பத் தலைகீழாகச் சரியப் போகுதோ எண்டு கிடக்கு!” சினந்தார் அந்த மனிதன்.
நகர முயன்றவள், “இல்ல…நீங்களும் வாங்க!” அழுதாள்.
“அட…போவன் தம்பி .”
“ம்ம்… போ வாறன்!” நானும் நகர்ந்தேன் .
“ஆ அம்மா!”
“ஐயோ சூர்யா!”
மேலே கடைசியாகத் தொங்கிக்கொண்டிருந்திருக்கும் போல, பயணப்பெட்டி ஒன்று சக்கென்று தலையைப் பதம் பார்த்தது.
“சூர்யா ஒன்றுமில்லையே!”
“இல்லப் போ உதயா!”
ஒருமாதிரித் தவழ்ந்து தவழ்ந்து வெளியே வந்துவிட்டோம். திடீரென்று தாக்கிய திகிலில் நெஞ்சம் துவண்டிருந்ததில் நேராக நிற்க முடியாது தள்ளாடியது உடல்.
“உனக்கு ஒன்றுமில்லையே!” பதைபதைப்போடு அவள் முகத்தைப் பற்றிக் கேட்டேன்.
‘இல்லை‘ என்பதாய்த் தலையாட்டினாள். இருந்தும் சமாதானம் ஆகாது அங்குமிங்குமாக விழுந்த அரை வெளிச்சத்தில் எங்கேயாவது அடிபட்டுள்ளதா என்று ஆராய்ந்தேன்.
“எனக்கு…ஒண்ணுமில்ல. உங்களுக்கு?” தந்தியடித்தது அவள் குரல்.
“ஒன்றுமில்லை; நீ இதில இப்பிடி ஒதுங்கி நில்லு; நான் அங்க இருந்து ஆட்களை இறக்க உதவி செய்திட்டு வாறன்.” நகரப்போன என் கரத்தை இறுக்கப் பற்றியவள், “வேணாம் சூர்யா, நீங்க எங்கயும் போக வேணாம்.” ஒரே தாவலாக என்னைக் கட்டிக்க கொண்டாள்.
அதிர்விலும் பயத்திலும் இருந்து இன்னும் மீளவில்லை என்பதை நடுங்கும் அவளுடலும் அழுகையும் சொல்லியது. என் முதுகை வளைத்திருந்த மெல்லிய கரங்கள் இரண்டும் விட்டுவிடமாட்டோம் என்றளவில் இறுக்கி அணைத்திருந்தன.
“ஒன்றுமில்ல உதயா; பயப்படாத!” என் நெஞ்சில் அழுத்திய அவள் தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தது என் கரம். ஆனாலும் ஆறுதலாக நின்று தேறுதல் சொல்லும் தருணமா இது?
“இங்க பார், அங்க நிறையப்பேர் இன்னும் இறங்காமல் இருக்கீனம். இதில நில்லு, நான் இப்ப வாறன்.” அவளைப் பிரித்து விட்டு விட்டு ஓடினேன்.
“சூர்யா! நில்லுங்க நில்லுங்க! உங்கட முகத்தில என்ன ரத்தம்?” கத்திக்கொண்டே பின்னால் ஓடி வந்தாள் அவள்.
*****

