Skip to content
மனைவி மூலம் விசயமறிந்த சுகுமாரோ, நீண்ட நேரமாக எதுவுமே கதைக்கவில்லை. பாமினி மனம் தான் தவித்துப் போனது.
“உங்கட தங்கச்சி ஆக்கள் கேட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகினம் குமார். ஆனா …பிள்ளையிட விருப்பம் தானே நமக்கு முக்கியம். ஆரூரன் குறை சொல்ல முடியாத பெடி.” என்று கதைக்க ஆரம்பித்தவர், கணவருக்கும், மகள் இலங்கையில் தொடர்ந்து இருப்பதே பிரச்சினை என்றறிந்ததும் ஆருரனோடு கதைத்துப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதன் பின் தாமதிக்கவில்லை; கௌசல்யாவுக்கு அழைத்துக் கதைத்தார்கள்.
*****
தாய் தந்தையிடம் தன் மனதைப் பகிர வேண்டுமென்று முயன்றாள், பைரவி. அந்த எண்ணத்தோடு தான் அழைப்பாள்; பிறகு நடப்பதுவோ, அதையிதைச் சொல்லிவிட்டு வைத்து விடுவாள். எதுவென்றாலும் வெளிப்டையாகக் கதைக்கக் கூடிய பெற்றோரிடம், தன் எதிர்காலம் பற்றிக் கதைக்க விடாது எது தடுக்கிறது? கலங்கும் விழிகளோடு நடமாடும் பைரவி அவளுக்கே புதிதானவள்.
சுகுமாரின் தாய் சுகவீனமாக இருப்பதால் வந்துவிட்டுப் போகவேண்டும் என்றிருந்தார், பாமினி. எப்போதென்று தான் சொல்லவில்லை. சரி, நேரிலேயே கதைப்போம் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள், பைரவி.
அன்று, பாமினியோடு கதைக்க வேண்டும் என்று காத்திருந்த கௌசல்யா, கதைத்த சிலமனே இல்லை; ஆருரனிடம் கேட்டால், தெரியாதென்றான்; பின்னரோ, அழைப்பு ஏற்கப்படவில்லை என்றான்.
இப்படியிருக்கையில், இரு நாட்களின் பின், பொழுது புலர்ந்து கொண்டிருக்கையில் வந்திறங்கிய தாய், தந்தையர் இருவரையும் நித்திரையகலா விழிகளோடு வாயடைக்கப் பார்த்து நின்றாள், பைரவி.
பாமினி, கண்கலங்க கட்டிப்பிடித்தார். மகள், நேரில் கண்ட பின்னர் சரி, தன் விருப்பத்தைச் சொல்வாள் என்று எதிர்பார்த்தார். அவள், வேறு கதைகளைக் கதைத்தாளேயொழிய, இது பற்றி ஒரு வார்த்தை வரவில்லை.
எத்தனைக்குப் பொறுப்பது? “பிறகு, ஆரூரன் என்னவாம்?” கேட்டுவிட்டார். அவர் கேட்ட தோரணையே விசயம் தெரியும் என்றுணர்த்தியது.
என்னதான் என்றாலும் அதுவரை மனதுள் இருந்த பதற்றம் விலக, “அம்மா” என்றபடி அணைந்தவள் தான், வாயே திறக்கவில்லை. இனி நான் என்ன சொல்லக் கிடக்கு என்ற வகையில், அமைதியாக இருந்த மகளை ஆழம் பார்த்தார், தகப்பன்.
தாயோ, படித்துவிட்டு ஆருரனோடு கனடா வந்துவிடு என்பதை, மகள் மனத்தில் அழுத்தமாகப் பதிய வைக்க முயன்றார். அவளோ, புன்முறுவலோடு கேட்டிருந்தவள், “அப்ப உங்களுக்கு ஆரூரனப் பிடிச்சிருக்குத் தானே?” என்று கேட்டு, தகப்பன் தாய் முறைப்பை வாங்கிக் கொண்டாள்.
“இல்ல இல்ல… நீங்க பிடிக்கேல்ல எண்டு சொன்னாலும் ஒரு பிரயோசனமும் இல்ல.” கண்ணடித்த மகளை, இப்போது, சுகுமாரும் கண்கலங்க அணைத்துக் கொண்டார்.
“உன்ர சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம். ஆனா…” என்று அவர் இழுக்க, அந்த ‘ஆனால்’ பின்னால் இருந்ததை மகளுக்கு எடுத்துச் சொன்னார், தாய்.
“ எங்களுக்கு என்ன நாலு பிள்ளைகளா? நீ மட்டும் தான் மா. எங்களையும் விடன். உங்கட எதிர்காலத்துக்காக அங்கயே வாழுறது தான் நல்லம். நீயே யோசிச்சுப் பாரன். நாங்களும் ஆருரனோட கதைக்கிறம்” எப்போதும் போலவே இரத்தினச் சுருக்கமாகக் கதைத்தார், சுகுமார்.
“நான் நினைக்கேல்ல அப்பா. அவருக்கு இங்க இருக்கிறதுதான் விருப்பம். எனக்கும் இங்க பிடிச்சிருக்கு.” எப்படி இலங்கையில் மருத்துவம் படிச்சே தீருவேன் என்று வாதாடினாளோ, அதுபோலவே, மூவருக்குள்ளும் வாதாட்டம் ஆரம்பமாகிவிட்டிருந்தது.
*****
ஆரூரன், அன்று அதிகாலையே, கொக்குவில் பண்ணைக்குப் போய்விட்டிருந்தான். ஒரே நேர் சீராகச் சென்று கொண்டிருந்த அவன் வேலைகளில், அண்மைய நாட்களாக, சின்ன சின்னத் தளம்பல்கள். திடுதிப்பென்று அவனுணர்ந்த நேசத்தின் வாசம் செய்யும் வேலையிது! அதுவே, காலைப்பொழுதில் முடிக்க வேண்டும் என்று நினைத்த வேலைகளை, இன்னமும் வரிசையாக நிற்கச் செய்திருந்தது.
அப்படியிருக்கையில், எட்டரை போல் ‘ என்னைக் கவனி’ என்றது கைப்பேசி!
எடுத்துப் பார்த்தால், அவன் ‘பையா’ தான். கைப்பேசியில் இருந்த அந்தப் ‘பையா’ அவன் முகத்தில் விரிந்த முறுவலைக் கொண்டு வந்திருந்தது.
‘எங்க நிக்கிறீங்க?’ என்று ஆரம்பித்திருந்தவள், பெற்றோர் வரவைக் குறிப்பிட்டிருந்தாள். அவன் நெற்றியேறி இறங்கியது.
‘உங்கட வீட்ட போகப்போகினம். கெதியா வாங்கோ ஆரூரன்’ என்றதில் அவசரம் மின்னியது. அது போதாதென்று கௌசல்யா அழைத்திருந்தார். “தம்பி, என்ன வேலை எண்டாலும் விட்டுட்டு வாங்க. எல்லாரும் வந்திருக்கினம். வீட்ட வரப் போகினம்.” என்றுமிருந்தார். அவனும் தாமதிக்கவில்லை.
வீட்டினுள் உள்ளிட்ட வேகத்தில் கிணற்றடிக்குச் செல்லவிருந்தவன், தம் வீட்டினுள் இருந்து சிட்டாக ஓடி வந்த பைரவியைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றான். அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம்; அவர்கள் நேசம் பகிர்ந்த போது கூட, அவள் முகம் இவ்வளவு மகிழ்வைக் காட்டவில்லை. பெற்றோர் தரப்பிலிருந்து, சிறு எதிர்ப்பு வந்திருந்தாலும் இந்த மகிழ்வு இருந்திருக்குமா?
“ஆரூரன் ஏன் இவ்வளவு நேரம்?”
மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கியவன் புன்சிரிப்பும் கேள்வியுமாகப் பார்த்தான்.
“ஆன்ட்டி ஆக்கள் வீட்டயா நிக்கினம்? குளிச்சிருவம் எண்டு நினைச்சன்.” அழுக்கோடு இருந்த தன்னைத்தானே பார்த்தபடி சொன்னான்.
“ப்ச் அதெல்லாம் வடிவாத் தான் இருக்கிறீங்க. வாங்க” மணிக்கட்டில் பிடித்தவள், சற்றே நிதானித்தாள்.
“இங்க பாருங்க, முதல் முதல், அத்த வீட்ட வரேக்க எப்படி ரவுடி கணக்கில வந்திங்களோ, அந்த லுக்கில இருக்கிறீங்க. இப்ப உங்களைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் மறுவார்த்த கதைக்காமல் கலியாணத்திகதி எப்ப வைக்கலாம் எண்டு கேக்கோணும்.” கண்ணடித்தபடி சொன்னவள், மேலும் கீழுமாக பெருமையாகப் பார்த்தாள்.
என்னதான் வீரன் சூரன் என்று தன்னை நினைத்திருந்தாலும் அவனுள்ளே பதற்றம் தான்.
அதை மறைத்து, “அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல. நீர் யோசியாதேயும்” அவன் சொல்லி முடிக்கவில்லை, “பிரச்சினை இல்லையோ? அப்ப, கனடாவுக்கே வரப் போறீங்களா?” வம்பிழுத்தாள்.
முறைப்போடு அவள் பிடரியில் தட்டிவிட்டான், ஆரூரன்.
“ஹலோ! இதான் வேண்டாம் எண்டுறது.” துள்ளி, அவன் பிடரியில் நன்றாகவே ஒரு அடி போட்டாள்.
“உன்ன! இதுதான் சாட்டு எண்டு அடிக்கிறீர் என்ன?”
இருவரும், சுற்றம் மறந்து மாறி மாறி அடிபட்டார்கள்.
மகள் எழுந்தோட, பின்னால் எழுந்து வந்து கதவோரமாக நின்றிருந்த பாமினி மனதில், அதுவரையிருந்த ஒருவகைத் தவிப்பு இருந்த இடம் தெரியாது மறைந்திருந்தது; அவர்கள் இருவரிடையேயான அன்னியோன்யம் அதை மறைத்திருந்தது.
“எப்பப் பாத்தாலும் எலியும் பூனையும் தான் பாமினி. அந்தளவுக்குக் கடிபடுவினம். இப்பவும், ரெண்டு பேரும் விரும்பினம் எண்டுறத என்னால எண்டா நம்பேலாமல் இருக்கு!” பின்னால் நின்ற கௌசல்யா சொல்ல, பாமினி இதழ்களில் முறுவல்.
‘காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அது!’ மனதுள் சொல்லிக் கொண்டவர், “வாங்க தம்பி!” மலர்ந்த முகத்தோடு வெளியில் இறங்கினார்.
பின் கதைச் சுருக்கம்:
பிறகென்ன? இரு குடும்பங்களும் கலந்து கதைத்து, ஒரு வருடத்தில் கல்யாணம் என்று முடிவாக்கினார்கள். ஆரூரன், பைரவி நாட்கள், வழமையோடு சேர்ந்து இன்னமும் வடிவானதாக, இரசிப்பானதாகக் கடந்து போய்க் கொண்டிருந்தன.
அடுத்த மாதமே, மன்னார் நகர மத்தியில் ஒரு உணவு விடுதியைத் திறந்திருந்தான், ஆரூரன்.
‘ஆரூர் மஷ்ரூம் ஃபூட் கோட்’ ஆரம்பத்திலேயே சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. வாரத்தில் சில நாட்கள் ஆரூரன் அங்குதான்.
அப்படியிருக்கையில், “மன்னாரச் சுத்திப் பாக்கோணுமே” என்று, அவனோடு தொத்திக்கொண்டு வந்திருந்தாள், பைரவி. வந்தவள், சுத்திப் பார்த்துவிட்டுச் சும்மா இருப்பாளா? ‘ஆரூர் மஷ்ரூம் ஃபூட் கோட்’ எங்கு திரும்பினாலும் அவள் பிரசன்னமும் குரலும் தான்!
வேலையை விழுந்து விழுந்து பார்ப்பது போலவே, சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் போதும் ஆரூரனைச் சீண்டிக் கொண்டும் இருந்தாள்.
அது, பரபரப்பு அடங்கும் இரவுப் பொழுதொன்று; மழை வேறு தூறிக்கொண்டிருந்தது.
போகிற போக்கில், இடித்துக்கொண்டு சென்ற பைரவியை, முறைத்துக்கொண்டு நிற்கையில், எதுவோ ஒன்று தோன்றச் சுற்றிப் பார்த்தான், ஆரூரன்.
உணவுக் கூடத்தின் கடைசி மேசையில் ஒருவர் அமர்ந்திருந்தார்; பார்வை இவர்களில் தான். இவன் பார்வை அவரில் பட, அவர் விழிகள் சுருங்கி இயல்பானது. இவன் உடலில் சட்டென்று நிமிர்வு; விறுவிறுவென்று அவரை நோக்கிச் சென்றான்.
“என்னதான் வீரன் தீரனாக இருந்தாலும் அவனுக்கேயுரிய உறவுகளிடம் அவன் அடையாளங்கள் செல்லுபடியாவதில்லை!” கொடுப்புக்குள் நகைப்போடு சொன்ன சுனில் விஜயவர்தன, “ Made for each other! Bless you my boy!” சின்னக் குரலில் தொடர்ந்த வேகத்தில் தனக்கொரு சூப் சொன்னார்.
அவர் இடும் அபாயகரமான கட்டளைகளை, நிறைவேற்றியே பழக்கப்பட்ட, அவர் தேர்ந்தெடுத்த முத்துக்களில் ஒன்றான ஆரூரன், இன்று, நிறைந்த மகிழ்வோடு, அவருக்கு, தன் கையால் சூப் தயாரிக்க விரைந்தான்.
சுபம்
error: Alert: Content selection is disabled!!