Skip to content
“உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும் உதயா!”
நான் சாப்பிட்ட கையைக் கழுவிவிட்டு வர, அவள் என்னைக் கடந்து கைகழுவச் சென்றாள்; அப்போதுதான் இதைச் சொன்னேன்.
மனத்தில் முட்டி நின்றவற்றை அப்படியே அவளிடம் கொட்டிவிட வேண்டுமே என்று துடித்தேன் நான்.
அவளைத் திருமணம் முடித்து இந்த எட்டு மாதங்கள் கடந்துவிட்ட வேளையில் முதன் முதலாக அவளிடம் என் மனத்தைத் திறக்க துணிந்துள்ளேன்; அதில் தாமதம் ஏன்?
“நேற்றிரவு முழுவதும் நித்திர இல்ல; உங்களுக்குத் தலையில அடிபட்டிருக்கு; சின்னக் காயமும் இல்ல, நாலு தையல் போட்டிருக்கு.”
“அதுதான் எனக்குத் தெரியுமே!”
“தெரியும் தானே? போய்ப் பேசாமல் தூங்குங்க. நான் இங்க தானே இருப்பன்; கதைப்பம்!”
சொல்லிவிட்டு நகர்ந்தவள் கரம் பற்றி நிறுத்திய நேரம் இல்லாத இருமலை வரவைத்துக்கொண்டு வந்தார், சின்னத்தான்.
சற்றே சங்கடமாகப் போயிற்று எனக்கு. அவளுமே நெளிந்தாள். பட்டென்று அவள் கரத்தை விட்டுவிட்டேன் .
சிரித்துவிட்டுச் செல்கிறாளா என்ன?
“இந்தாப்பு தண்ணி!” அம்மாதான் தந்தார். என் கலியாணத்துக்குப் பிறகு இன்றுதான் அவர் கையால் சாப்பிட்டிருக்கிறேன். கொஞ்சமாகத்தான் உண்ண முடிந்தது. ஆனால், வயிறு நிறைந்திருந்தது, மனத்தைப் போலவே.
“பிள்ளை சொல்லுறது தான் சரி தம்பி. பார், கண்ணெல்லாம் வீங்கிக் கிடக்கு! நல்லா நித்திரை கொண்டால்தான் கொஞ்சம் சரி நல்லா இருக்கும். போ! கண்டதையும் யோசியாத; எல்லாம் நாளைக்குக் கதைக்கலாம், தூங்கு!”
காயம் பட்ட என் தலையைப் பாசத்தோடு வருடிய அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“இப்ப ஏனண…” மெல்ல அணைத்து அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டேன்.
“நிறையவே அழவச்சிட்டன் என்னம்மா? இனிச்சரி என்னை நினைச்சு உங்கட கண்கள் கலங்கவே கூடாது.” என்று நான் சொல்ல, அம்மாவோ, சந்தோசத்தில் பொங்கிய அழுகையை அடக்கப் பெரும்பாடுபட்டார்.
” கிழவி! எல்லாம் போதும், இப்படித் தள்ளுங்க!” அவரை இழுத்து அப்பால் விட்டாள் தீபி.
“ஏய்! நீங்க வீட்ட தானே போனீங்க?” நான் கேட்கும் போதே அவள் பின்னால் வந்தாள் கவி.
“புனிதம் ஆன்ட்டி இப்பவே உங்களைப் பார்க்க வேணும் எண்டு வெளிக்கிட நாங்களும் சேர்ந்து வந்தம்.” என்று அவள் சொல்ல, “எங்க? இருக்கச் சொன்னாயாம்மா?” என்றபடி நகர்ந்தார் அம்மா.
“ஹலோ மாமா! அக்கா போய்த் தூங்குங்க எண்டு சொல்லேக்கயே நான் வந்திட்டன். எப்பவும் இப்பிடிச் சொல்லுக் கேட்டு நடக்க வேணும். பிறகு ஒவ்வொண்டுக்கும் பஸ் ஒண்டைப் பிரட்ட முடியாது, சரியோ!” சீண்டினாள் தீபி.
“உனக்கு…”ஆட்காட்டி விரலால் எச்சரித்தேன்.
“இப்படியே வாயடித்துக்கொண்டு இருந்தால்…” நான் சொல்லி முடிக்கவில்லை என் செல்லங்கள் இருவரும் என்னை இறுகக் கட்டிக்க கொண்டார்கள்.
“தேங்க்ஸ் மாமா…” என்றாள் கவி, அழுதுகொண்டே. தீபியும் விசும்பினாள்.
“அசடுகள்! என்னத்துக்கு இப்ப அழுகிறீங்க? போற வாற நேரமெல்லாம் என்னைப் போட்டு என்ன பாடு படுத்துவீங்க? இப்ப நல்ல பிள்ளைகளுக்கு நடிக்க வேணாம் சரியோ!” செல்லமாக இருவர் தலையிலும் கொட்டினேன்.
“கவி, தீபி! என்னடி, நிக்கச் சொல்ல இவளும் சேர்ந்து போய்ட்டாளே என்று சாப்பிட்டுட்டுப் போன் பண்ண வேணும் எண்டிருக்க வந்து நிக்கிறீங்க? யாரோட வந்தீங்க? சித்தி வந்திருக்கிறாவோ?” என்றபடி வந்தாள் உதயா.
அதன் பின்னர் சிறிது நேரமிருந்துவிட்டு புனிதம் ஆன்ட்டி விடைபெற கவி, தீபியும் உடன் சென்றார்கள்.
“இங்க நில்லன் தீபி!” என்று உதயா சொன்னபோது, “இவர்…மாமா உங்களைக் கொன்றிட்டாலும் எண்டுதானே நான் துணைக்கு இருந்தன்? இனித் தேவையில்லை.” என்றபடி ஓடினாள் அவள்.
“முதல் வேலை இவளவேட வாய அடக்க வேணும் உதயா!” என்றார் அம்மா. அப்படிச் சொன்னவர் குரலில் துளியும் கோபமில்லை.
சின்னக்கா குடும்பமும் விடைபெற, “அசதியாக் கிடக்கு நானும் சரியப் போறன் பிள்ளைகள்; நீங்களும் போய்த் தூங்குங்க, நாளைக்கு எல்லாம் கதைக்கலாம்.” என்றபடி சென்றார் அம்மா.
அதே கையோடு, “உங்களுக்கு இன்னும் வலி இருக்கா? வலிச்சா ரெண்டு பரசிட்டமோல் போட்டுட்டே தூங்குங்க!” என்றுவிட்டு நகர முயன்றவளை, நகரவிடாது பற்றியிருந்தது என் கரம்.
அதேநொடி, ஒன்றும் கதைக்காது விறுவிறுவென்று வெளியே இறங்கி கிணற்றடி நோக்கி நடந்தன, என் கால்கள்.
“சூர்யா…வெளியில சரியாக் குளிருது. பாருங்க, நல்ல குளிர் காற்றடிக்குது! உங்களுக்குக் கூடாது.” என்றவள் சொன்னதை என் செவிகள் வாங்கிக்கொள்ளவில்லை.
என் மனத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டால் மனப் புழுக்கமும் பாரமும் தீருமென்றிருக்கையில் வெளிப்புறக் குளிர் என்ன செய்துவிடுமாம்!
“எனக்கு உன்னோட கதைக்க வேணும் உதயா; அதுவும் இப்பவே!”
அழுத்தமாகவே சொன்னபடி துணிதுவைக்கும் கல்லில் அமர்ந்து, “இப்படி இரு!” அவளை அருகில் அமரச் செய்தேன்.
அன்று முழுமதி நாள். வான்பரப்பில் எந்தவிதத் தடையுமின்றி பால் வண்ண ஒளியை இறைத்தபடி கம்பீரமாக ஊர்ந்துகொண்டிருந்தான் சந்திரன்.
இருந்தும், அந்தக் கிணற்றடியைச் சுற்றி நின்ற தென்னகீற்றுகளுக்கு அவனோடு பலத்த போட்டி போலும்!
‘எங்களைத் தாண்டி நிலமகளை உன்னால் முத்தமிட முடியுமா?’ என்று வம்பு பண்ணி நின்றன.
தாகம் கொண்ட சந்திரனுக்கு உதவிக்கரம் நீட்டியது காற்று. அது சற்றே அதிகமாகவே துணை செய்ததில், கள்ளச் சிரிப்போடு நிலமகளை முத்தமிட்டு மகிழ்ந்தான் முழுமதியானவன்.
error: Alert: Content selection is disabled!!