அத்தியாயம் 36 -3

“கொஞ்ச நேரம் அப்பாட்ட இருங்க, சூட்டி வோஸ் ரூம் போயிட்டு வாறன்.” அவனைத் தகப்பனிடம் கொடுக்க முனைந்தாள்.

“நானும் வோஷ் ரூம் வாறன்.”

“அடோய் பெடியா! ஆம்பளப் பெடியன் ஜென்ட்ஸ் டொயிலட்டுக்க போக வேணும், அப்பாவோட வாங்கோ!” வலுக்கட்டாயமாக மகனை வாங்கிக் கொண்டவன், அவனை ஒருகைக்கு மாற்றிவிட்டு அப்படியே கயலையும் அணைத்துக்கொண்டான். மீண்டும் கயலிடம் தாவ முனைந்த ஆதித் தகப்பனின் நெஞ்சோரமாக அணைந்தவளில் விழுந்து விட்டான்!

கயல்விழியை கட்டிப் பிடித்திருந்த லாதியின் ஒரு கரம் தகப்பனையும் வளைத்துக் கொண்டிட்டு. 

அக்கணம், அவர்களைப் பார்த்து நின்ற உறவுகள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதுவரை கல்லென நின்ற பூபாலன் விழிகள் கூட கசிந்திட்டு. 

‘எங்கள விட்டுப்போட்டு அவ்வளவு ஈசியா போயிருவியா கயல்?’ சத்தமாகக்  கேட்க அவாக்கொண்டது,  அவனுள்ளம். ‘இது என்ன விசர்க் கேள்வி? இந்தா போகத்தானே வெளிக்கிட்டு வந்திருக்கிறன்.’ என்று சொல்லிவிட்டாள் என்றால், கட்டாயம் சொல்லக் கூடியவள்! மனம் முறுகலோடு தன்னை வெளிப்படுத்தத் தயங்கினாலும் அவனே அவன் மனதைத் தெள்ளென இனம் கண்டு கொண்ட தருணமாக அது இருந்திட்டு. 

எப்போ இலங்கை போகிறேன் என்று சொன்னாளோ, அந்தக் கணத்தில் இருந்து இன்னதென்று பகுத்தறிய முடியாத வலியொன்று அவனைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. ஆளில்லா சாலைகளில் விசரன் போல் மணித்தியாலக் கணக்கில் காரைச் செலுத்த வைத்திருந்தது. கடைசியில், அதற்கான காரணமாக, தனக்குச் சொல்லாமல் வெளிக்கிட்டு இருக்கிறாளே என்றதையும், இவள் பிரிவால் பிள்ளைகள் வருந்துவார்களே என்றதையும் பிடித்துக் கொண்டு நிண்டிட்டு.

உண்மைக் காரணம் இப்போதானே தெரிகிறது! அதுவரை, தாங்கொணா கனம் தந்த மனம் இலேசானதாக உணர்ந்தான், பூபாலன். இவ்வளவுக்கும் தன் நேசத்துக்கு அவளிடம்  எதிரொலி உண்டா என்றே தெரியாதிருந்தாலுமே மனதில் இதம் பரவிற்று. 

அவனையும் அறியாது குனிந்த தலை அவள் உச்சியில் உதடு பதித்திட்டு, அழுத்தமாகவே!

பட்டென்று தலையை நிமிர்த்தி கண்ணீரைச் சிமிட்டிவிட்டு அவன் முகம் பார்க்க முயன்றாள், கயல்விழி.  ‘சூட்டி நானும்.’ சிணுங்கிய ஆதித்தின் தலையைக் கடந்து சிறு இடைவெளியால் தெரிந்த பூபாலன் விழிகளில் கசிவு. அப்பார்வையில், இத்தனை நாளும் இல்லா நெருக்கம் உணர்ந்தாள், அவள். அக்கணம், நால்வருமாக நின்ற அத்தருணம் அவளுள்ளும் மாற்றம் நிகழ்ந்திட்டு! அவள் மனதாழத்தில் அமிழ்ந்து கிடந்த அவன் மீதான பிரத்தியேகமான அன்பை அவளால் தெள்ளத் தெளிவாகவே இனம் கண்டுகொள்ள முடிந்திட்டு. இதுதான் அவனைப் பாராதே பாராதே என்று மனம் கட்டளை இட்டதன் காரணமோ! 

போக விடவே விடோம் என்று பிடித்து வைக்க முயலும் இந்தச் சின்னன் சிறுசுகளைப் போலவே, அவன் அணைப்பும் இருப்பதாகப் பட்டிட்டு அவளுக்கு. அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆசை கொண்டது உள்ளம். வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரோ! சுணக்கம் கொள்ளும் வகையில் சென்றிட்டு எண்ணம்.  

கேவலை அடக்க முடியாது விம்மியவளை, இறுக அணைத்துக் கொண்டான் பூபாலன்.

‘அப்படியே திரும்ப வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போயிரு பூபாலன்’ மனம் இப்படிச் சொல்ல, பிள்ளைகளைப் பிரிந்து போற சோகத்தில அழுகிறாள், அவ்வளவும் தான் என்றது புத்தி.  அதையும் மீறி, ‘என்ர பிள்ளைகளுக்கு மட்டும் இல்ல, எனக்கும் உன்னப் பிடிக்கும் கயல்! எங்களோட இருந்திரும், எப்பவும்.’ என்று சொல்ல உன்னிய மனமோ, “எப்பவும் நீரும் எங்களில ஒருத்திதான்!” என்றே வார்த்தை வடிவம் குடுத்திட்டு.

அதையும் கூட மெல்லத்தான் சொன்னான். மனதுள் பொங்கிய மகிழ்வுக் குமிழ்களில் பட்டென்று பெருவாரியாய் நீர் தெளித்தது போலிருந்தது, அவன் வார்த்தைகள். சற்றுமுன் அவன் பார்வையில் உணர்ந்த நேசத்தை அந்த வார்த்தைகளில் தேடி ஏமாந்திட்டு, அவள் மனம்.

மீண்டும் ஒருதடவை, நேருக்கு நேராக அவன் விழிகளைப் பார்த்துத் தான் உணர்ந்ததை உறுதி செய்துவிட நினைத்தாள், கயல். மனமோ அதற்கு அனுமதியேன் என்றிட்டு.  

இப்படி அவள் தவித்து நிற்க, “கவனமா போயிட்டு வாரும்.” கரத்தை மெல்ல  விலத்தி மகனை நிமிர்த்தி இருகரங்களாலும் தன்னோடு பிடித்து வைத்துக் கொண்டு விடை கொடுத்து விட்டான், அவன். 

அவ்வளவுமே தானா? இத்தனை நாட்களும் இல்லாது தன் மனதை உணர்ந்து கொண்டவளுக்கு அக்கணம் பெரும் ஏமாற்றமாக இருந்திட்டு. தன்னிலேயே கோபமும் வந்திட்டு. அதன்பின், அவளால் அங்கு எவரையும் பார்க்க முடியாதிருந்தது. பட்டென்று குனிந்து லாதியை அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்து இரு கன்னங்களிலும் கொஞ்சிவிட்டு, “போயிட்டு கோல் பண்ணுறன்.” விசுக்கென்று விலகி விரைந்தாள். 

“ஸ்வீட்டி!” பின்னால் ஓட எத்தனித்த மகளை பூபாலன் கரம் பற்றிக்கொள்ள, “சூட்டி நானும்… சூட்…டி!” வளைந்து நெளிந்து இறங்க முயன்றபடி கத்தி அழுத மருமகனைத் தூக்கிக்கொண்டு வெளிப்புறமாக நடந்தான், காயுவின் சகோதரன்.

“லவ் யூ ஸ்வீட்டி!” விம்மிய மகளைத் தூக்கிக்கொண்டு கயலையே பார்த்திருந்தான், பூபாலன்.

“கயல் நில்லடி!” வாய்விட்டுக் கத்தத் தோன்றிட்டு, அவனுக்கு.  ஒரு தடவை, ஒரே ஒருதரம் பார்க்க மாட்டாளா என்றேங்கி நின்றான், பூபாலன். அவள் தான் திரும்பவேயில்லையே! விரைந்து பார்வையிலிருந்து மறைந்திருந்தாள்.

“போகலாம் தம்பி!” அவன் முதுகில் பரிவோடு தடவினார், சரசு.

எவரையும் ஏறிட விருப்பம் வரவில்லை, அவனுக்கு.

“லாதி, சித்தி ஆக்களோட நில்லுங்க; அப்பா வோஷ் ரூம் போயிட்டு வந்திருரன்.” மகளை இறக்கி விட்டுவிட்டு விறுவிறுவென்று நகர்ந்து விட்டான்.

நடந்து கொண்டே கயலுக்கு அழைத்தான். ‘எப்ப கயல் திரும்பி வருவ?’ என்று கேட்டுவிட வேண்டும் என்ற பரபரப்பு அவனுள். ‘உன்ர அப்பாட்டக் கதைக்கவா எண்டும் கேட்டிரு பூபாலன்!’ கட்டளையே இட்டுட்டு மனம். அழைத்தான் அழைத்தான் விடாது பல தடவைகள் அழைத்தான்.

‘ப்ளீஸ் கயல், பிக்கப் த கோல்’ குறுஞ்செய்தியும் தட்டி அனுப்பினான். மறுபுறம் எவ்வித அசுமாத்தமும் இல்லை. 

சுறுசுறுவென்று கோபம் ஊற்றெடுத்திட்டு. நியாயமா சரியா என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை. தம் மூவரையும் சட்டென்று உதறிச் செல்ல முடிந்தவளில் கோபம் வளர்வதைத் தடுக்க முடியவில்லை.

கால் மணி நேரத்துக்கும் மேலாகவே, கைபேசியையே பார்த்துக்கொண்டு வோஷ் ரூமுக்குள் நின்றவன் மனம் விட்டுப் போயிற்று. சோர்வோடு வெளியில் வந்தான்.

ஆதித் கையில் பெரிய பலூன். அதுவும் அவனுக்கு விருப்பமான கரடி பலூன். இருந்தும் அவன் சிணுக்கம் குறையவில்லை. லாதி அழுகையை நிறுத்தியிருந்தாலும் முகத்தில் சுரத்தேயில்லாது தன் சித்தியோடு அணைந்து நின்றிருந்தாள். தாவிய மகனை வாங்கிக்கொண்டு லாதியையும் பிடித்துக்கொண்டு, “போவம் என்ன?” முன்னால் நடந்தான் பூபாலன். 

கையில் ஏந்தியிருந்த மகன், மறுகையில் பிடித்திருந்த மகள் மட்டுமல்ல, விடைபெறும் முன்னர் தன் நெஞ்சோர அணைவில் நின்று பார்த்தாளே ஒரு பார்வை, கண்ணீரின் கசிவில் தத்தளித்த அந்தப் பார்வையும் அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு வீடு நோக்கிச் சென்றிட்டு.

 

error: Alert: Content selection is disabled!!