Skip to content
“நான் ஆர் கயல் உம்மோட கோவிக்க? முதல், நல்ல வேலை தான் செய்து இருக்கிறீர். இப்ப வரைக்கும் எங்களுக்காக எத்தனையோ உதவிகள் செய்து இருக்கிறீர், அதோட சேர்த்து இன்னொரு உதவியும் செய்யுமன். ப்ளீஸ்!” சொன்னவன் விழிகளில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
என்னவென்று கேளாது பார்த்திருந்தாள், கயல்.
“அப்ப அம்மாவோட சேர்ந்து ஒரு பொம்பள பாருமன். உங்கட ஆசைகள ஏன் கெடுப்பான் நான் கட்டுறன்.” லாதி தம்பிக்காரனோடு கதைக்க, அவர்களைப் பார்த்துப் பார்த்து மெல்ல இவளுக்கு கேட்கும் வண்ணம் தான் சொல்லியிருந்தான்.
கேட்டவள் முகம் எக்கச்சக்கமாகவே கோணிற்று. “நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது!” கடித்த பற்களிடையே சொன்னதைக் கேட்டவன் கோபமாகச் சிரித்தான்.
“ஏன், பிழைப்புக் கெட்டுப் போற மாதிரி இப்ப என்னத்த நினைச்சிட்டன்? சொல்லுமன் கேப்பம்.”
அவள் விழிகளில் பொறி பறந்திட்டு.
“கழுத்த நெரிச்சுக் கொண்டிருவன் சொல்லிட்டன்.” என்றவள், அவன் விழிகளில் சுவாரசியம் பளிச்சிடுவதை அவதானித்தாள். நெற்றியை ஏற்றியிறக்கியவன் உதடுகளில் முறுவல் நெளிந்திட்டு.
“நான் இல்ல எண்டு சரியான சந்தோசமா இருக்கிறீங்க போல இருக்கே!” முறைப்போடு தொடர்ந்தவள், ஏதோ சொல்ல முயன்றவனுக்கு அனுமதிக்காது தொடர்ந்தாள்.
“நீயும் எங்களில ஒருத்தி!” வாயைச் சுழித்தபடி சொல்லிக் காட்டி, “அப்பிடியே அன்பைப் பொழிஞ்சு, கவனமா போய்த் துலை எண்டு என்ன இங்க அனுப்பிப் போட்டு உங்களுக்குக் கலியாணம் கேக்குதோ! அதும் நான் பாத்துச் சொல்ல வேணும்! ம்ம் அம்மாவும் மகனுமா கழுத்து நெரிபடப் போறீங்க சொல்லிட்டன்!” விரல் நீட்டி எச்சரித்தவள் விழிகளால் கண்ணீர்த் துளிகள் உருள, “டோய் கயல்…” தவிப்போடு அழைத்தவனுக்கு வார்த்தைகள் வரேன் என்றிட்டு. ‘அவளுக்கும் என்னில விருப்பம் இருக்கு’ என்ற உணர்வே மௌனியாக்கீற்று.
அதே நேரம், ‘என்ன எண்டாலும் என்னட்டச் சொல்ல வேணும் எண்டு இருக்கேல்லையே! விசுக்கிக்கொண்டு வெளிக்கிட்டுப் போட்டு, நான் கலைச்சு விட்டது போலவே கதைச்சா!’ என்ற சுணக்கமே இன்னும் கொஞ்சம் சீண்டச் சொல்லிற்று.
“உண்மையாத்தான் சொல்லுறன், நாள் கடத்தாமல் பாரும் கயல். இப்ப என்னையும் பிள்ளைகளையும் பற்றி உம்மைவிட ஆருக்கு நல்லாத் தெரியும்? அதை வச்சு யோசிச்சுப் பொருத்தமான பொம்பளையாப் பாருமன், கலியாணம் கட்டுறன்.” அவளைக் கிண்டிக் கிளரும் நோக்கில் அவன் சொல்லி முடிக்கவில்லை, சரேலென்று திரும்பித் தகப்பனைப் பார்த்தாள், லாதி.
மறுநொடி கயல்விழியையும் பார்த்தாள். ‘சரி போச்சு, இனி கத்தப் போறா! எப்பிடிச் சமாளிக்கப் போறார்!” கயல்விழிக்கு பெரும் கவலையாக இருந்தது.
“அப்பா!” பூபாலன் கன்னமிரண்டையும் இறுக்கப் பற்றிக் கொண்ட லாதியின் பார்வை தகப்பனின் கண்களில். அவன் பார்வையை அப்பால் இப்பால் நகரவிடாது பார்த்தாள், அவன் மகள்.
அதைத் தொடர்ந்து வெகு நிதானமாக அறுத்துறுத்து, “நீங்க ஸ்வீட்டியயே கலியாணம் செய்யிறீங்களா அப்பா!” என்று, அவள் கேட்பாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தகப்பன் விழிகளில் துள்ளி வந்தமர்ந்த வியப்புப் போர்த்திய மகிழ்வையோ, யாழில் இருந்தவர்களின் விழிகள் சுர்ரென்று சுரந்ததையோ கவனிக்காது தொடர்ந்தாள், சிறுமி.
“பிறகு அவா நம்மோடேயே இருக்கலாம் எல்லா? இலங்கைக்குப் போகவே தேவேல்ல. ப்ளீஸ் அப்பா!” தகப்பனின் மனம் தெரியாத சிறுமி கெஞ்சினாள்.
இங்கோ, சரசரவென்று விழிகள் உடைப்பெடுக்க அவர்களையே பார்த்திருந்தாள், கயல்விழி. தேநீர்க்கோப்பைகளோடு வந்த சாரதா மட்டுமல்லாது, “போக வேணாம் எண்டு எவ்வளவு சொல்லியும் போய்ட்டாளா? இன்னும் என்ன கதை அங்க? சுடர் ஓடிப்போய் அக்காவக் கையோட கூட்டிக்கொண்டு வா பிள்ள.” அம்மம்மா கத்தவே, ஓடி வந்திருந்த சுடரும் அப்படியே நின்று விட்டாள்.
தகப்பன் பதில் சொல்லாது கண்கள் கலங்க, “ப்ளீஸ் அப்பா!” அவனைக் கொஞ்சி, கெஞ்சலாக கேட்டவள் பட்டென்று கயல்விழிடம் திரும்பினாள்.
“ஸ்வீட்டி! ப்ளீஸ் அப்பாவக் கலியாணம் செய்திட்டா எங்களோட இருக்கலாம் எல்லா? நீங்க இங்க வாங்க… ஸ்வீட்டி… ப்ளீஸ்! அம்மா…வும் இல்ல. நீங்களும் இல்ல, நாங்க மூணு பேரும் இங்க தனிய!” வெடித்து அழுகின்ற நிலைக்கு வந்திருந்தாள், சிறுமி.
“செல்லம்மா!” மகளை அரவணைத்தவன் பார்வை இமைக்காது கயல்விழியில்!
“சொல்லுங்கவன் ஸ்வீட்டி!” சின்னவள் கேட்கும் கேள்விக்குப் பதில் நீ சொல்கிறாயா நான் சொல்லவா என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டுக் கொள்கின்றார்களோ என்றவகையில் பார்த்திருந்தார்கள் இருவரும்.
வெடித்த விம்மலை அடக்க முடியவில்லை சாரதாவால். அவரின் விம்மலில் தான் சுதாகரித்தாள் கயல்.
“பெரிய மனுசியைப் போல கதைக்கிறதுக்குப் பிடி அவள!” பகிடியாகச் சொன்னபடி, எட்டி லாதியைப் பிடிப்பது போல பாவனை செய்தாள்.
“ஸ்வீட்டி லவ் யூ ப்ளீஸ்!” ஐபாட் திரையருக்கு வந்திட்டு லாதியின் முகம். அவளை இடித்துக் கொண்டு வந்தது சின்னவன் முகம்.
“சூட்டி ஆதித் ஃபிளைட்டுக்கு இந்த உடுப்புப் போடவோ!” கையில் ஒரு ஜீன்சும் டீ சேரட்டும்.
“அடோய்! இங்க பாருங்க இவர! மடிச்ச உடுப்பு எல்லாம் கிளறிக் கொட்டிட்டார். இவர்…இவர இண்டைக்கு… பிடிம்மா லாதி!”
வீட்டில் எப்போதும் நடக்கும் விளையாட்டு இது. லாதி திரையில் இருந்து விசுக்கென்று மறைந்தாள். தகப்பனிடமும் கயல்விழியிடமும் தான் கேட்டதையும் பதில் வராததையும் மறந்து, பின்னால் அலுமாரி இருந்த பக்கமாகச் செல்வது தெரிந்திட்டு.
கிளுகிளுத்துச் சிரித்தபடி தகப்பனின் ஒருபுறம் ஏறியமர்ந்த ஆதித், “அப்பா வெளிக்கிடுவம்.” இராகம் இழுத்தான்.
இத்தனைக்கும் பூபாலன் பார்வை கயல்விழியின் முகத்திலிருந்து நகரவேயில்லை. அவளால் தான் அவன் முகம் பார்க்க முடியவில்லை. அதோடு, பின்னால் திரும்பவில்லை என்றாலும் பூபாலன் அன்னையும் தந்தையும் நிற்பதும் தெரியுமே!
“ஸ்வீட்டி ஆதித் எல்லாம் இழுத்துக் கீழ போட்டிருக்கிறான்.” லாதியின் முகம் திரைக்குள் வந்திட்டு.
“சொன்னன், எல்லாம் ஆரால? முதல் எத்தின மணி இன்னும் தூங்கேல்ல. எல்லாம் ஆரால?” கேட்படி பூபாலனை முறைத்தாள், கயல். அவள் முகத்தை விட்டு விழிகளை இன்னமும் அசைக்கவில்லை, அவன். நான்கு விழிகள் தமக்குளே கதைத்துக் கொள்வது தெரியாத லாதியின் முகத்தில் அழகிய சிரிப்பு. வலக்கை மடிந்து தகப்பனைச் சுட்டிக் காட்டிட்டு.
error: Alert: Content selection is disabled!!