அத்தியாயம் 7- 3

அவளது யோசனையைக் கலைப்பது போல செல்போன் அலறியது. புதிய எண். ஒருவேளை அழைத்து செல்லவிருக்கும் டிரைவராக இருக்குமோ? அவசர அவசரமாக எடுத்தாள் 

“ஹலோ, ஹலோ”

“பரவால்லையே உனக்கும் சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இல்லைன்னு நினைச்சேன். கொஞ்சம் வேகமாத்தான் இருக்க… இதையே தொடர்ந்தாள் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” இத்தனை குத்தலாகப் பேசுபவர் காவ்யாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? 

“அன்னைக்கு கவனக்குறைவா உங்களை இடிச்ச அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வச்சு அவங்க குணாதிசயமே இதுதான் அப்படின்னு முடிவு செய்றது தப்பு”

“என்கிட்டவே உன் வாயாடித்தனத்தைக் காமிக்காதே. நான் உன் முதலாளி நினைவில் இருக்கட்டும்”

“எனக்குத் நேர்முகத் தேர்வு வச்சுத் தேர்ந்து எடுத்தது நல்லாவே நினைவில் இருக்கு மேடம். உங்களுக்குத் தரும் மரியாதையில் ஒரு குறைவும் இருக்காது”

“ஓ தகுதியின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டவன்னு சொல்லிக் காமிக்கிறியா? பைத்தியக்காரி… உன் தகுதி என்னன்னு தெரியுமா?”

“என் படிப்பு, அனுபவம், பொறுமையான குணம் இதைத்தவிர வேறு என்னவா இருக்க முடியும்?”

“ஓ ….. ஹா… ஹா… ஹா… ஹய்யோ… சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடும் போலிருக்கே… ஏன் செம்பருத்தி,  உன்னைத் தவிர திருநெல்வேலி ஜில்லாவிலேயே  படிச்சவங்க தகுதியானவங்கன்னு யாருமே இல்லைன்னு நினைக்கிறியா… “

அவளது குரலில் ஏகப்பட்ட நக்கல், எகத்தாளம். “இப்ப சொல்றேன் உன் தகுதி என்னன்னு. நீ போறியே அந்த வீட்டில் ஒருத்தன் இருக்கான். அவன் ஒரு பொண்ணைக் கூட விடமாட்டான். அதனாலதான் அசிங்கமா, குண்டா பாக்கவே அவலட்சணமா எந்த ஆணும் விரும்பாத ஒரு பொம்பளையா இருக்கணும்னு நிபந்தனை வச்சோம். அதுக்குத் தகுந்தாப்பில நீயும் மாட்டின. இப்ப தெரிஞ்சதா உன் தகுதி என்னன்னு. பாக்கலாம் நீ எத்தனை நாள் அந்த வீட்டில் தாங்குறேன்னு” 

மனதைக் குத்திக் கிழிக்கும் சிரிப்புடன் அழைப்பு துண்டிக்கப்பட மனவலியுடன் அந்த அலைப்பேசியை அப்படியே வெறித்தாள் செம்பருத்தி. 

‘அசிங்கமா, குண்டா, பாக்கவே அவலட்சணமான பெண்’ யார் நானா? சரி அப்படியே இருந்துட்டு போறேன். நீ அழகு சுந்தரியாவே இருந்துக்கோ. ஆனால் என்னைப் பாத்து இந்த மாதிரி வார்த்தைகளை சொல்ல யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது. நீ சம்பளம் கொடுக்கப்போறது நான் செய்யப் போற வேலைக்கு மட்டும்தானே. என் சுய மரியாதைக்கும் தன்மானத்துக்கும் இல்லையே?

இப்ப என்ன செய்றது? என் தன்மானம் பெருசுன்னு சொல்லிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வீட்டுக்குப் போய் விடலாமா? வீட்டை வேற வாடகைக்கு விட்டுட்டேன். என்னை ஸ்டேஷனில் ஏத்திவிட்டுட்டு இப்பத்தான் ப்ரியா வீட்டுக்குப் போயிருப்பா. பின்னாடியே போய் நானும் நின்னா? இது தோல்விதானே. 

கடவுளே எனக்கு மட்டும் ஏன் அடுக்கடுக்கான பிரச்சனைகள்?

முதல் வகுப்புப் பெட்டியில் அவள் மட்டுமே இருந்ததால் அப்படியே வெளியில் வெறித்தாள். திருவனந்தபுரம் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை பசேல் என்று தெரிந்த இயற்கை காட்சிகளும், அல்லிக் குளங்களும் அவளது மனதை மெது மெதுவாகவே குளிர்வித்தது. 

கதவைத் தட்டிய ஒரு சிறுவன் கேட்டான் “காப்பி, டீ, மெதுவடை,மசால்வடை,  சமோசா இருக்கு. எதுவும் சாப்பிடுறிங்களா அக்கா?” 

அந்த சாப்பாட்டுப் பட்டியலே எல்லா கவலையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வாம்மா மின்னல் பழகலாம் என்று சொல்வது போல இருந்தது. 

“சூடா இருக்கா?”

“டீ பயங்கர சூடா இருக்கும்கா”

“சூடா ஒரு டீ. ரெண்டு சமோசா கொடு”

சூடான சர்க்கரை தூக்கலான டீ அப்படி ஒரு இனிமையாக தொண்டையில் இறங்கியது. உணவு ஆசை தப்பில்லை. நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது உயிர் வாழவே ஆசை இல்லாமல் போய்விடும். அந்த எண்ணம் தொடர்வது விபரீதத்திற்கு வழி வகுக்கும். அதைத் தொடரவிடாது சின்ன குழந்தைக்கு விளையாட்டு காட்டுவது போல மனம் செய்யும் மாயம்தான் உணவு ஆசை. 

இப்போது எனக்குத் தேவை நல்ல உணவு.அது உயிர் வாழ ஆசை ஏற்படுத்தும். அதன்பின் என்ன செய்வது என்று யோசிக்கலாம்.

“தம்பி, மறுபடியும் இந்தப் பக்கம் எப்ப வருவ?”

“இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு சாப்பாடு ஆர்டர் எடுக்க வருவேன்கா”

“அப்ப டீ எடுத்துட்டு வருவியா?”

“உங்களுக்கு வேணும்னா சொல்லுங்கக்கா எடுத்துட்டு வர்றேன்”

இப்போதுதான் பார்த்த இந்த சிறுவனையே அன்போடு பேசி ஒட்டிக் கொள்ள முடிகிறது என்றால், போகுமிடத்தில் அவளால் ஏன் அவர்களைக் கவர முடியாது? யோசித்தாள்.

இப்போது எதற்கு இந்தக் காவ்யா எனது புதிய அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்து இந்தத் தகவலைச் சொல்ல வேண்டும்? அவள் என்ன என் நலம் விரும்பியா? அவளுக்கு நான் வேலை செய்ய வேண்டும் ஆனால் மனம் புழுங்கிக் கொண்டே இந்த ஒரு வருடம் வாழ வேண்டும். என்னே ஒரு நல்லெண்ணம்?

‘பைத்தியக்காரி நானில்லை காவ்யா நீதான். நான் வேலை தேடிப் போறேன். அதுக்கு வேலை தெரிஞ்சா போதாது. எதுக்காக ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கா அழகா இருக்கணும்? 

அன்னநடை, மின்னல் இடை, தாமரைப் பாதம், பொன்னிறம் எல்லாம் இருக்க அவள் என்ன அழகிப் போட்டிக்கா போகிறாள்.

ராவணனோட அரண்மனைல வேலை செய்யப் போகிறாள். காண்ட்ராக்டில் இவள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றித் தெளிவாக அட்டவணை போட்டுத் தந்திருக்கிறார்கள். இதில் அழகு அவலட்சணம் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.  இந்த காவ்யா சொல்வதை எண்ணி மனம் குழம்புவதைவிட தெளிவாக இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்வது உத்தமாம். 

போகும் இடத்தில் இருப்பவன் ராமனாக இருந்தால் என்ன ராவணனாக இருந்தால் என்ன? பாதுகாப்புக்குக் குறைவு இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லி அனுப்பி இருக்கின்றனர் இவளை இந்த பணிக்குத் 

தேர்ந்தெடுத்தவர்கள். அங்கே இன்னும் சில பெண்கள் கூட வேலை செய்கிறார்களாம். 

 அந்த ராவணனின் லங்கையில் இருந்து சீதாதேவி பத்தினித் தெய்வமாகத்தான் திரும்பி வந்தாள். இவள் வேறு காவ்யாவின் கூற்றுப்படி சூர்ப்பனகை வகையறா. என்ன நடக்கிறது என்று ஒரு கை பார்த்துவிடுவோம். 

கடுமையான வார்த்தைகளுக்கு பயப்படுபவள் இல்லை இந்த செம்பருத்தி. 

கடலில் இருக்கும் உப்புத் தண்ணியை குடிக்கும் மேகம் மழையை உப்பு கரிக்கவா பெய்கிறது? காவியாவின் இந்த கரிக்கும் வார்த்தைகளை ஜீரணித்து இனிக்க இனிக்கவே வேலை செய்வேன் என்று செம்பருத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டாள். 

error: Alert: Content selection is disabled!!