அத்தியாயம் 9-1

எனக்கு முழு மனதோட சம்மதம். போதுமா?” 

  ஒருபோதுமின்றி உயர்ந்திருந்தது என் குரல்.

   சொன்ன வேகத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் வந்து நின்ற எனக்கு மூச்சு விடவே கடினமாக இருந்தது

  உடலில் ஒரு நடுக்கம். இதயம் தடதடவென்று கண்டபடிக்கு அடித்துக்கொண்டது

  ‘கட்டாயத்தின் பெயரில் தான் எழுத்துக்குச் சம்மதிச்சன்; காதலிச்சவள மறக்கப் போறதில்ல; நான் மாறப்போவதும் இல்ல; இதுதான் என்ர நிலை. அப்படியிருக்க, உனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பமா? இல்லையோ, சொல் கலியாணத்தை நிறுத்தலாம்என்று, வெளிப்படையாகக் கேட்கையில், விருப்பம் என்று என்னால் எப்படிச் சொல்ல முடிந்தது

  உள்ளம் கிடந்து அலறியதில், எனக்கே என்னில் பயங்கரமாகக் கோபம் ஏற்பட்டது.

  சித்தியின் அச்சுறுத்தலில் சம்மதம் என்று தலையாட்டிய நான், அதன் பிறகு என்னை நானே சமாதானம் செய்வதில் ஈடுபட்டுவிட்டேன் என்பது உண்மைதான்

  நமக்கு என்று விதித்த திருமண வாழ்க்கை இதுதான் என்ற எண்ணம் என்னுள் நன்றாக ஊன்றிவிட்டதோ!

  என்னையும் அறியாது இடக்கையைத் தூக்கிப் பார்த்தேன். புத்தம் புது எழுத்து மோதிரம்

  இப்பொழுது சூர்யாவில் கோபம் கோபமாக வந்தது

 அங்கும் கட்டாயத்தின் பெயரில் தான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்கிறார் என்றது அரசல் புரசலாகக் காதுகளில் விழுந்ததுதான்

  கண்ணுக்கு முன்னால் மகன் அழிவதை யாரால் தான் பார்த்திருக்க முடியும்? திரும்பத் திரும்ப இந்தக் கதை வேணாம் விடுவம்.

   திருமணத்துக்கான எனது சம்மதம் அறிய வேண்டும் என்றால் அதற்கு இதுவா நேரம்?

  எழுத்து முடிந்து இதோ கல்யாணத்துக்குச் சில நாட்களே என்றிருக்கும் போது இது என்ன கேள்வி? படு முட்டாள்தனமாக இல்லையா?

 பதில் கேள்வி கேட்ட என் புத்திக்கு திடீரென்று இந்தக் கேள்வி முளைக்கக் காரணம் என்னவென்று புரிந்திட்டு!

 “புனிதா ஆன்ட்டி வந்து பிரச்சினப்பட்டதை முழுவதும் நிண்டு கேட்டிருக்கிறார்.” முணுமுணுத்துக்கொண்டேன்

  சிலநொடிகள் தான் என்றாலும் அவரின் கண்களில் தெரிந்த வேதனையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

  எந்த மனிதருக்குத்தான், ‘அவனக் கலியாணம் செய்வதைவிட கலியாணம்  எண்ட ஒன்றையே செய்யாமல் இருக்கலாம்என்றோ, ‘அந்தப் பெண்ணைக் கொன்று போடலாம்என்றோ கதைப்பதைக் கேட்க முடியும்?

   படு பயங்கரமான அவமானம் சுர்ரென்று குத்தியிராதா?

  இவ்வெண்ணம் தோன்றியதும் என்னால், சற்றுமுன் என் சம்மதம் கேட்ட சூர்யாவின் மனத்தைப் படிக்க முடிந்தது

  ‘இருந்தும், கடந்தவை எதையும் மறக்கத் தயாரில்லை என்று சொல்கையில்அதில் எத்தனை உறுதி தொனித்தது!’ என் மனத்தின் முணுமுணுப்பு  அடங்கேன்  என்றது.

 சத்தியமாகவே என் நெஞ்சில் நடுக்கம் எடுத்தது. அக்கணம், என் எதிர்காலம் படு பயங்கரமாகத் தெரிந்து தொலைத்தது. அது மட்டுமா?  

  “இவா தான் கல்யாணி; உங்கட மாமி…” என்ற அறிமுகத்தோடு, ஒருமுறை சூர்யாவும் கல்யாணியும் இங்கு வந்திருந்ததுதான் நினைவில் மின்னியது. அதுவும் அந்தக் கல்யாணியின் முகம் மிகத் தெளிவாக

  அப்போ, என்னாலும் அந்த உருவை மறக்க முடியாதோ! என் வாழ்வு எப்படிப்பட்டதாக அமையும்?

   சற்றுமுன் புனிதா ஆன்ட்டியை என்ன சொல்லிச் சமாதானம் செய்திருதேன்?

  “எப்பிடியும் என்ர வாழ்க்கை நல்லபடி இருக்கும்என்று நர்மதாவிடம் சொன்னதையேதான் அவரிடமும் சொல்லியிருந்தேன். உண்மையில் என்  மனதோரம் அந்த நம்பிக்கை உரமாகவே விழத் தொடங்கியிருந்தது.

  அது, சூர்யாவில் உள்ள நம்பிக்கை இல்லை; என்னில் நான் கொண்ட நம்பிக்கை; நம்பிக்கை தானே வாழ்க்கை

  இப்பவோ, அது நடக்காது என்று சம்பந்தப்பட்டவரே சொல்கிறாரே! பிறகு? நான் மட்டும் அதே நிலையில் நிற்பது மதியீனம் இல்லையா? நம்பிக்கை நடுக்கம் கண்டது.

   இத்தனைக்குப் பிறகும், ‘அப்பிடியெல்லாம் எதுவும் இல்லை. எந்த மனிதன் தான், தான் தரம் தாழ்த்தி விமர்சிக்கப்படுவதைக் கேட்டுவிட்டு அமைதியாகப் போவான்? அப்படியான ஏச்சுப் பேச்சுகளைக் கேட்ட கோபத்தில்தான் இப்படியெல்லாம் கதைச்சார். அவரை எப்படியும் மாற்றிவிடலாம்; மாறுவார்.’ இதைச் சொல்வதும் என்நெஞ்சம் தான்.

 இருந்தும், அந்த முணுமுணுப்பையும் மேவி, ‘நிச்சயம், என்ன ஒரு முட்டாள்தனம்மூளை எச்சரித்தது

  அந்த நிலையிலும், உள்ள நிலைமை தெளிவாக விளங்கிய போதும் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று, அதுவும் எழுத்தும் முடிந்த நிலையில் என்னால் கூற முடியவில்லை.

  அப்படியே சொல்வது என்றால் இந்த எழுத்து நடக்க முதலே நான் உறுதியாக மறுத்திருக்க வேண்டும்.

   அவரும் தான், “விருப்பமா  எண்டு இப்ப வந்து கேட்டால்?”  வாய்விட்டே சொல்லிக்கொண்டு வாங்கிலில் தொய்ந்தமர, இருமருங்கிலும் வந்தமர்ந்து கொண்டார்கள் தங்கைகள்.

   “அக்கா! மாமாவே உங்கட விருப்பத்தக் கேட்கிறார். விருப்பம் இல்ல எண்டு பட்டென்று சொல்ல வேண்டியது தானே? அவரே கல்யாணியை மறக்க ஏலாது எண்டு சொல்லேக்க இந்தக் கலியாணம் வேணாம்  கா!” அழுதாள் கவி.  

   எப்போதும் போல் சட்டென்று அவளைச் சமாதானம் செய்ய முனையாது அப்படியே இருந்தேன் நான்.

  “ஓமக்கா, அவர் அந்தக் கல்யாணியை மறக்க மாட்டார்; குடிக்கிறத விடவும் மாட்டார். உதயா பாவம் எண்டு குட்டிச் சித்தியும் அம்மாட்டச் சொல்லிச் சண்டை போட்டத என்ர காதால கேட்டனான்

  இப்ப, அவரே வந்து கேக்கேக்க விருப்பமில்ல எண்டு ஏன் சொல்லேல்ல? அம்மா சாகிறன் அப்பிடி இப்பிடி எண்டதெல்லாம் சுத்தப் பொய் கா; நீங்க ஒண்டையும் நம்ப வேணாம். வாங்க நாம மாமாக்குப் போன் பண்ணி இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்ல எண்டு சொல்லுவம்.” 

    என்னைக் கட்டிப் பிடித்து அழுதபடி சொன்னாள் தீபி.

   அவளுக்கு நான் ஆறுதல் சொல்ல முதலே சித்தி வந்துவிட்டார்.

   “அடியேய் எரும! கடைசிப்பிள்ள எண்டு கொஞ்சம் செல்லம் குடுக்க நீ எனக்கேக் குழி பறிக்கிறியா? நான் ஒழுங்கு செய்த கலியாணத்த நீ நிப்பாட்டுவியா? அப்ப எனக்கு இங்க என்ன மரியாதை?” 

  பாய்ந்து வந்த சித்தி தீபியை இழுத்தெடுத்துப் பளார் பளார் என்று அறைந்தார்

   எனக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு கோபம் வந்திச்சோ?

   “ஐயோ சித்தி! அவள விடுங்க!” 

  சித்தியின் கரத்தைப் பிடித்திழுத்து தீபியை விலக்கிப் பின்னால் தள்ளிவிட்டு சித்தியின் முன் உக்கிரமாக நின்றேன். இதுவரை என்னுள் கிடந்து அலைக்கழிந்த உணர்வுகள் அனைத்தும் விசுக்கென்று வெளியேற முனைந்தது.

error: Alert: Content selection is disabled!!