அத்தியாயம் 9 – 1

நவீன மயமாக்கப்பட்ட அந்த ரயில் நிலையத்தைக் கண்களை விரித்து வியந்து பார்த்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. கேரளம் என்றால் ஆறு, மலை, குளம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு,  அங்கிருந்த கட்டடங்களும், வழுக்கல் சாலைகளும் ஆச்சிரியப்படுத்துவது இயற்கைதானே. 

“ஒகே யாம்மா” என்று கோபன் அவளது பதிலைக் கேட்டதும்தான் இந்த உலகிற்கு வந்தாள்.

“என்னங்க கோபன்”

அவள் சம்மதிக்கவில்லையோ என்ற எண்ணத்தில் வேகமாக “இங்கதாம்மா… இன்னும் அரைமணி தொலைவுதான். வாங்கிட்டுப் போயிடலாம்”

என்ன வாங்கணும்? என்னமோ சொல்லிக் கொண்டிருந்தானே.. இப்படியா அசட்டுப் பிசட்டென்று நடந்துக் கொள்வேன். யாராவது எதையாவது பேசும்போது கவனிக்க வேண்டும். அதுதானே வேலை செய்யும் இடத்தில் முன்னேறுவதற்கு முதல் படி. சாதாரண மனிதப் பிறவிக்கு ஒரே நேரத்தில் எப்படி கவனிப்பதும் யோசிப்பதும் சாத்தியமாகும்?

“கோபன். அங்க ஏழிக்கரைல அது கிடைக்காதா?”

“எங்கம்மா?… அங்க நாட்டு காய்தான் கிடைக்கும். அய்யா வெளிநாட்டில் ரொம்ப காலத்தில் இருந்தவங்க இல்லையா? அதனால இந்த அவகடோ, பச்சை காலிப்ளவர், தண்டு மாதிரி இருக்குமே ஆஸ்பிராகஸ்,  ஸ்டராபெரி பழம் இன்னும் என்னன்னவோ இருக்கு. எனக்கு பேர் கூட நினைவில்  இல்லை. அய்யா சாப்பிடுற சாப்பாடெல்லாம் வெளிநாட்டில் இருந்துதான் வரும்”

“அய்யாவுக்காகவா?”

“அய்யாவுக்காக மட்டும் இல்லைங்க… நம்ம பெரியய்யாவுக்கு சொந்தமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் கொச்சில இருக்குல்ல. அதுக்கும் டூரிஸ்ட்டுகளுக்காக வெளிநாட்டில் இருந்து காய்கறி வரும். நம்ம போன் பண்ணி சொல்லிட்டா அதில் ஒரு பெட்டி நம்ம வீட்டுக்கு எடுத்து வச்சுடுவாங்க”

“அய்யா அந்த ஹோட்டலில் சாப்பிட மாட்டாரா?” பேசாமல் ஐந்து நட்சத்திர விடுதியின் உணவாகவே உண்டு விடலாமே என்று எண்ணித்தான் கேட்டாள்.

“ஐயோ… அய்யாகிட்ட தவறி போயி கூட இப்படியெல்லாம் கேட்டுடாதிங்க. அவரு இந்த பை ஸ்டார் ஹோட்டலில் அவரோட மூச்சுக் காத்துக் கூடப் படாதுன்னு சபதம் போட்டிருக்காரு. பயங்கர கோவக்காரரு”

“சரி கேக்கல… “ என்று படக்கென்று சொல்லி விட்டாலும். 

இவள் வேலை செய்த  மிட்டாய் கடையைத் திறப்பதிலிருந்து இரவில் கடையை சாத்தி திருஷ்டி கழிக்க சூடம் ஏற்றுவது வரை அங்கு நின்றுக் கொண்டிருந்துவிட்டுத்தான் மங்கிலால் கிளம்புவார். பணத்தை ஒரு முறைக்கு பத்து முறை எண்ணி எண்ணிப் பார்த்துட்டுத்தான் தரணும் என்று வேறு இவர்களுக்குப் பாடம் எடுப்பார். 

“பாருடி ஒரு நாள் ரூபா நோட்டை அழுத்தி எண்ணி எண்ணியே கிழிக்கப் போறாரு நம்ம முதலாளி” என்று காதைக் கடிப்பாள் ஜலப்பிரியா. 

‘மங்கிலால் மாதிரி  கண்கொத்திப் பாம்பாய் தொழிலைக் கவனிக்க வேண்டாமா? இதென்ன சொந்தத் தொழிலைக் கூட கவனிக்க மாட்டேன் என்று சபதம் வேண்டிக் கிடக்கிறது… சுத்தக் கூமுட்டைத் தனமா இருக்கே?’ இதெல்லாம் இந்த கோபனிடம் கேட்டால் அப்படியே அலேக்காக அடுத்த ட்ரைனில் ஏற்றி நெல்லைக்கே அனுப்பி விடுவார்கள். அது கூடாதே… அதற்காக பதில் தெரியாமல் இருந்துவிட முடியுமா?

“அய்யாவோட மூச்சுக் காத்து கூட இங்க படாது. அப்பறம் எப்படிப்பா ஹோட்டல் நடக்குது? யாரு பாத்துக்குறா?”

“அதுக்குத்தான் நம்பிக்கையான மேனேஜர் ஒருத்தரைப் போட்டிருக்கார் பெரியய்யா… மேனேஜருக்கு சின்ன வயசுதான். ஆனால் பயங்கர திறமையானவர். ஹோட்டல் மட்டுமில்லாம இவங்களோட இறால் , மீன் ஏற்றுமதி நிறுவனம் , ஏர்லைன் உணவு கான்டராக்ட் இதெல்லாம் கூட அவருதான் பாத்துக்குறார்.மேனேஜர் அனுப்புற கணக்கு வழக்கெல்லாம் சின்னய்யா பார்ப்பார். அதனால தப்பு நடக்க சான்சே இல்லை”

அதற்குள் கோபன் சொன்ன இடம் வந்துவிடவும். அவளைக் காரில் காத்திருக்க சொல்லிவிட்டு பெட்டிகளை எடுத்து வரச் சென்றுவிட்டான். 

‘அடக்கடவுளே… இவனோட இந்த அய்யா, பெரியய்யா கேரக்டரே இன்னும் புரியல. இதுக்கு நடுவில் மேனேஜர், சின்னய்யான்னு வேற புதுசா ரெண்டு கேரக்டரா? ஒரு பெண் கேரக்டர் கூட இது வரைக்கும் வரலையே. இந்த அய்யாசாமிகளில்  யாரைப் பார்க்க நம்ம வந்திருக்கோம்? இதென்னடா எனக்கு வந்த சோதனை?’ என்று குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள் செம்பருத்தி. 

பெட்டிகளை கார் டிக்கியில்  ஏற்றிக் கொண்டு கிளம்பினான் கோபன். வெளியே தெரிந்த ஆங்கில போர்ட்டுகளைப் பார்த்த செம்பருத்தி “கொச்சி – குயின் ஆப் அரேபியன் ஸீ” என்று பார்த்து ஆச்சிரியப்பட்டுப் போனாள். எர்ணாகுளம் கொச்சி இவ்வளவு பக்கமா? 

கோபனிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டு ஜலாப்ரியாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். ஜலப்பிரியா பதிலாக ‘எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் கொச்சி இருக்கு’ என்று ஒரு சிரிப்பு பொம்மை படம் போட்டு அனுப்பி இருந்தாள். 

சே இது கூடத் தெரியாம இருந்திருக்கேனே! பத்தாவதில் புவியியல் பாடத்தில் தூங்கி இருக்கக் கூடாதோ? எப்பொழுதுமே புத்தகப் பாடம் மதிப்பெண் களுக்காகப் படிப்பது. அந்தந்த வருட முழுப்பரிட்சையில் கொட்டித் தீர்ப்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது. 

புவியியலில் ஊர் பெயருடன் நிறுத்தி விடுகிறானா? எந்தெந்த பகுதியில் என்ன மாதிரியான நிலம் இருக்கிறது. எந்தெந்த ஊரில் என்னென்ன பயிர்கள் விளையும் என்றெல்லாம் போட்டு ரம்பமாய் அறுத்துத் தள்ளுகிறானே. 

இந்தியாவில் எந்த இடத்தில் கரிசல் மண் இருந்தால் என்ன? எங்கு என்ன விளைந்தால் என்ன? காசு கொடுத்தால் உலகில் எந்த மூலையில் இருந்தும் வீட்டிற்கே வந்து விடுகிறதே. இந்த அய்யாக்களுக்கு பிளேனில் வருவது போல.  

இந்த காரணங்கள் போதாதா நமது மூளைக்கு புவியியலில் படித்தது எல்லாம் தேவை இல்லை என்று சொல்லி பத்தாவதுக்குப் பிறகு கூட்டி முறத்தில் அள்ளி புறத்தாலே போட்டு விடுகிறது. 

சரி, இப்போது கற்றுக் கொண்டால் போகிறது. லேட்டாய் கற்றுக் கொள்வது தப்பில்லை. கற்றுக் கொள்ளாமலே கடைசி வரை இருந்துவிடுவதுதான் தோல்வி. நம்ம பயபுள்ள தனக்குத்தானே தேற்றிக் கொண்டது. 

காரின் ஓட்டத்தின் ஊடே கண்ணாடி வழியே தெரிந்த காட்சிகளில் நகரத்தின் மின்மினி விளக்குகள் மறைந்து கிராமத்து அகல் விளக்குகள் மினுக்கிட ஆரம்பித்தன. 

கோபன் எழிக்கரை செல்லும் வழியெங்கும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான். எல்லாம் மலையாளத் தமிழில்தான். அவனது கிராமம் கூட சிறிய தீவுக் கிராமம் தானாம். பெயர் கூட என்னவோ சொன்னான். அவனது அக்காவைப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு தீவுக் கிராமத்தில் கல்யாணம் கட்டித் தந்திருக்கிறார்களாம். 

“இங்க எத்தனை தீவுக் கிராமம் இருக்கு”

“அது இருக்கும்மா ஒரு பத்து பதினைஞ்சு. இதில் நம்ம லங்கையும் ஒரு கிராமம்தான்”

“நிஜம்மாவே அது பேரு லங்கையா.. நான் ஸ்ரீலங்கா மட்டும்தான் கேள்விப் பட்டிருக்கேன்”

“நிஜம்மாவே அது ஒரு சின்ன தீவு கிராமம்மா…  எண்ணி சில குடும்பங்கள்தான் தீவுக்குள்ள இருக்கு. ஆனால் தீவை ஒட்டி இருக்குற பல ஏக்கர் நிலங்கள் எங்க பெரியய்யாவுக்கு சொந்தம். அதில் ஒரு அம்பலம் அதாவது கோவில், சர்ச், பள்ளிவாசல் கட்டிருக்கார்”

“கடவுள் பக்தி ரொம்ப அதிகமா?”

“ஜனங்க வழிபட ஏற்பாடு செய்றது ராஜாக்களோட வழக்கம்தானே… அதைத்தான் பெரியய்யா செஞ்சாரு”

error: Alert: Content selection is disabled!!