அத்தியாயம் 10 .
விரிவுரையை முடித்துக்கொண்டு அவ்வழியால் வந்து கொண்டிருந்த ராம், சீனியர்ஸ் புடைசூழ ஸ்ரீ அமர்ந்திருப்பதைக் கண்டான்.
ராகிங் அவ்வளவு மோசமாகப் போவதில்லை என்ற நம்பிக்கையிருந்தாலும், அவள் தனியாக இருப்பதைப் பார்த்ததும், ‘அம்மா இவர்கள் சாப்பிட வருவார்கள் என்றாரே! மஞ்சு, மயூ எங்கே?’ யோசித்தவன், அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றியே அழைத்தான்.
ஆனால் அவளோ! இவ்வளவு வேகமாக தன்னை நோக்கி வருவாள் என அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
கண்ணீரும் கையில் ஒரு ஒற்றையுமாக தன்முன் ஓடி வந்து நின்றவளை, ஒரு கணம் உற்றுப் பார்த்தான் ராம்.
‘‘ஏன் அழுகிறீர்? அது என்ன கையில்?! தாரும், என்னவென்று பார்க்க!’’ கரத்தை நீட்டியதும், அவள் பார்வை, இருக்கையை விட்டெழுந்து இலேசான சஞ்சலத்துடன் நின்று கொண்டிருந்த சீனியர்ஸ் மாணவர்களைத் தொட்டு மீண்டது.
‘மவன்களே! நவீன குறல் கேட்குதா உங்களுக்கு! இதை இப்போ இவர் கையில் கொடுத்தால், அப்போ தெரியும் உங்க குறலின் இனிமை!’ மனதில் வெறுப்புடன் நினைத்தாலும், ‘‘அது..அது..ஒன்றுமில்லை…சார்!’’ வெகுவாகச் சமாளித்தவள், அவ்வொற்றையைக் கசக்கியவாறே, முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டாள்.
அவள் அப்படிச் சொன்னதும் கூர்மையாய் அவளை அளவிட்டவன், ‘‘சரி, இங்கு தனியாக என்ன செய்கிறீர்? சாப்பிடப் போகவில்லையா? நீங்க வருவீங்க என்று அம்மா சொன்னாரே! எங்க இரண்டு வாலுகளும்?’’ அடுத்தடுத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தான் .
‘‘சாப்பிடப் போக வரும் போது தான்…’’ திரும்பவும் சீனியர்சை திரும்பிப் பார்த்தவள், ‘‘அவர்கள் அந்தப் பக்கமாக நிற்பார்கள் என்று நினைக்கிறேன்!’’ என்று முடிக்க,
‘‘ம்ம்…நேரமாச்சு, கெதியாப் போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. ம்ம்…போம்.’’ என்றவன், திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே தன் நீண்ட கூந்தல் ஆட விரைந்தவளையே பார்த்திருந்தவன், ‘கையில் என்ன ஒற்றை?! லவ் லெட்டர் குடுத்தாங்களோ!’ நினைத்து, ‘மஞ்சுவிடம் கேட்டால் தெரியவரப் போகுது!’ முடிவெடுத்தபடி, தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சீனியர்சை கைகாட்டி அழைத்தான்.
தயங்கிக் கொண்டே தன்னருகில் வந்தவர்களிடம் இலகுவாகப் புன்னகைத்து, ‘‘என்ன ராகிங்கா? ம்ம்ம்.. நடத்துங்க…நடத்துங்க. ஆனால் அழும் அளவுக்கு…ஹ்ம்…பார்த்துச் செய்யுங்க!’’ அவர்களில் ஒருவன் தோளில் தட்டியவாறே தம் ஓய்வறை நோக்கிச் சென்றான் .
*****
காலையில் பிள்ளைகள் பாடசாலை சென்ற பின், மதியச் சமையலுக்கான மரக்கறி வகைகளையும் மீனையும் வாங்கி வருவதற்கென வெள்ளவத்தை சந்தைக்குப் புறப்பட்டுச் சென்றார் நரேனின் தாய் ரஞ்சி.
தனக்குத் தேவையானவற்றை வாங்கி முடித்து, பழக்கடை நோக்கிச் சென்றவரை, ‘‘ரஞ்சி…’’ பழகிய குரலொன்று திரும்பிப் பார்க்க வைத்தது!
அவசரமாகத் திரும்பிப் பார்த்தவர், அங்கே தனது தூரத்து உறவான பகவதியைக் கண்டதும், அவருடன் நின்று கதைத்துக் கொண்டிருக்கும் போது, பேச்சு நரேனின் திருமணத்தில் வந்து நின்றது.
‘‘ஏன் ரஞ்சி, அப்போ மகனுக்கு ஏதும் சம்பந்தம் பொருந்தி வந்திருக்கா?’’ அறியும் ஆவலில் கேட்டார் பகவதி.
‘‘அதையேன்கா கேட்கிறீங்க? நானும் எத்தனை அருமையான சம்பந்தங்கள் பார்த்தேன். அவன் பிடி கொடுத்தால் தானே!’’ அலுத்துக் கொண்டார் ரஞ்சி.
‘‘இதென்ன நீ! இப்படிச் சொன்னால் சரியா? கட்டுடா என்றால் கட்டிவிட்டுப் போறான்; அவன் அருமையான பிள்ளை!’’ அழுத்திச் சொன்னார் பகவதி.
‘‘இதையார் இல்லையென்றது? அவனைப் போல் ஒரு பிள்ளை கிடைக்க, நிறையப் புண்ணியம் செய்திருக்கிறேன் அக்கா. ஆனால், கல்யாண விசயத்தில பிடி கொடுத்தால் தானே!’’ மழுப்பலாக இழுத்த ரஞ்சியை, தீர்க்கமாய்ப் பார்த்தார் பகவதி.
‘‘அரசல் புரசலாக எல்லாம் கேள்விப்பட்டேன் ரஞ்சி! இதெல்லாம் இப்ப சகஜம், பிள்ளைகள் மனது அப்படி இப்படிப் போகும் தான். அதற்கென்று அவர்கள் நினைப்புக்கு விட முடியுமா சொல்லு? உங்க வீட்டுக்கு ஒரு தரம் வர இருந்தேன்; அதற்குள்ள இங்கே சந்தித்து விட்டோம்!’’ என்றவர் தொடர்ந்து,
‘‘நம்ம ஊர் தணிகாசலம் அண்ணாவை தெரியும் தானே! அவரின் கடைசிப் பெண்ணுக்கு சம்பந்தம் பார்க்கிறார்கள். நம்ம தம்பி பற்றிச் சொல்ல, அவர்களும் ஆசையாக ஜாதகத்தை வாங்கித் தருவீங்களா என்று கேட்டார்கள்.’’ என்றவர், ஏதோ சொல்ல முயன்ற ரஞ்சியைத் தடுத்தார்.
‘‘பொறு…பொறு…இப்போ ஏன் அவசரப்படுறாய்? முதல், ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்ப்போம்; பிறகு மிச்சத்தைப் பார்ப்போம். இந்த சம்பந்தம் மட்டும் அமைந்தால், உனக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? தணிகாசலம் அண்ணா பெண்ணுக்கு குறையில்லாமல் நிறையச் செய்வார். அதனால நீ கொஞ்ச பொறுமையாகவே மகனோடு கதை ரஞ்சி. எப்படியும் அவனை வழிக்குக் கொண்டு வரப் பார்.’’ முடிவாகச் சொன்னார்.
‘‘நான் இப்பவே உன்னோடு வருகிறேன், ஜாதகத்தைத் தா!’’ கூடவே வந்து, ஜாதகத்தை வாங்கிக் கொண்டு செல்பவரை அனுப்பிவிட்டு மதியச் சமையலில் ஈடுபட்டிருந்த ரஞ்சியினுள், மகனைப் பற்றிய யோசனையே நிறைந்திருந்தது.
படித்து முடித்து வேலை செய்யத் தொடங்கியிருந்தவனுக்கு, நல்ல சம்பந்தமாக அமைந்தால் திருமணத்தை செய்து வைக்க விரும்பினார் ரஞ்சி. ஆனால் அவனோ, பிடிபடாமல் நழுவிக் கொண்டிந்தான்.
‘அவனைத் தன் வழிக்குக் கொண்டு வருவது சாத்தியமா?’ என்ற கேள்வியும் அவர் மனதில் எழாமலில்லை!
மகன் தன் நண்பனின் தங்கையைக் காதலிக்கிறான் என்பதை, அவன் மூலமாகவே தெரிந்து கொண்டதிலிருந்து, அம்மாவுக்கும் மகனுக்கும் ஆரம்பமானது பனிப்போர்!
தன் விருப்பை வெளிப்படையாக மகன் கூறியும், அதை ஏற்றுக் கொள்ளவோ, நடத்தி வைக்கவோ அவர் கொஞ்சமும் விரும்பவில்லை.
இருவருமே ஒருவரையொருவர் தத்தமது வழிக்குக் கொண்டு வர முயன்றாலும், இன்றுவரை இருவருமே இழுபறி நிலையில் தான் நிற்கின்றனர்.
மகன் காதலிக்கும் பெண்ணை ரஞ்சிக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் யாழில் இருந்த போது, காணுமிடங்களில் சந்தோசமாக கண்டு கதைத்துப் பழகிய பிள்ளை தான் என்றாலும், தன் மருமகள் என்று பார்க்கும் போது, அந்த வாயாடிப் பெண்ணை அவரால் அந்த இடத்தில் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை.
அது மட்டுமின்றி, மருத்துவனான தன் மகனுக்கு நன்றாகச் சீதனம் வாங்கித் திருமணம் செய்தால், அது அவன் வாழக்கைக்கு மட்டுமின்றி, தனக்கும் உதவியாக இருக்குமென்று நினைத்தார் ரஞ்சி! அந்த நினைப்பில் அவரால் பிழையேதும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பெரியவர்களாக இருந்தாலும், தனக்குத் தோன்றுவதை முகத்துக்கு நேரே கதைக்கும் மஞ்சு, தன்னிடமிருந்து மகனை நிரந்தரமாகப் பிரித்தாலும் பிரித்து விடுவாள் என ரஞ்சியின் உள்மனம் ஐயம் கொண்டது!
‘என்ன பாடு பட்டாவது தணிகாசலம் அண்ணாவின் மகளை இவனுக்குச் செய்து வைக்க வேண்டும்!’ என்ற முடிவுடன் தனது சமையலை முடித்தவர், மகனின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார் .
மாலை வேலையிலிருந்து வீடு திரும்பிய நரேன், வழமை போல தாய் புறுபுறுத்துக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் தங்கைகளுடன் கல கலப்பாக சிறிது நேரம் செலவிட்டவன், அவர்கள் படிக்கச் சென்றதும் தனது வேலைகளைச் செய்து விட்டு, இரவுச் சமையலில் ஈடுபட்டிருந்த தாயிடம் சென்று, ‘‘அம்மா …நான் ஏதாவது உதவி செய்து தரட்டுமா?’’ என்றான் அன்பாக!
எப்போதுமே வீட்டில் நிற்கும் போதெல்லாம் தனக்கு உதவுவது அவனின் வழக்கமாதலால், இன்று அவருக்குமே கதைப்பதற்கு விடயமிருப்பதால், ‘‘இதை ஒருக்காத் திருவித் தாடா!’’ தேங்காயை எடுத்து மேசையில் வைத்தவர், தனது வேலையைத் தொடர்ந்தார்.
அவனும் தேங்காயை கழுவி உடைத்துத் துருவத் தொடங்கினான்.
‘‘தம்பி! உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்!’’ திடீரென்று ஆரம்பித்தார் ரஞ்சி.
‘‘நானும் தான்மா! ஒன்று சொல்ல வேண்டும்!’’ பதிலுக்குச் சொன்னவன் காத்திருக்காமல், ‘‘எங்கட பெடியள் யாழ்ப்பாணதிற்கு ஒரு கிழைமைக்கு கேம்ப் போவதற்காக ஒழுங்கு செய்கிறாங்கள்மா. நானும்..இல்ல.. இல்ல…என்னையும் கட்டாயம் வர வேண்டுமென்று சொல்லி வற்புறுத்தினாங்கள்…அது தான்..’’ என்றவன், சிறிது இடைவெளி விட்டு, தாயின் எரிக்கும் பார்வைக்குள் சிக்கிக்கொண்டே, ‘‘பெயர் கொடுத்திட்டேன்மா. இந்த சனி வெளிக்கிட இருக்கிறோம்; ஒரு கிழமையில் திரும்பி வருவேன்.’’ தயங்கினாலும் முடிவாகச் சொன்னான்.
தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக் கூடக் கேட்காது, அவசரமாக மகன் தகவல் சொன்னதைக் கேட்டதும், ரஞ்சியினுள் புகைந்து கொண்டிருந்த கோபத்தீ மெல்ல மெல்ல ஏரியத் தொடங்கியது!
‘‘நீ எதை நினைத்து இப்படிச் செய்கிறாய் என்று எனக்கு நன்றாக விளங்கும் தம்பி! அதற்கு மட்டும் நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். அதையும் நீ நினைவில் வைத்துக் கொள்!’’ சீறலாகச் சொன்னவர், ‘‘உனக்கு ஒரு நல்ல சம்பந்தம் தானாக கேட்டு வந்திருந்தார்கள்; ஜாதகம் கொடுத்திருக்கிறேன்!’’ மெல்ல தான் சொல்ல நினைத்ததை கோடி காட்டியவர், ‘ஜாதகம் பொருந்தியிருந்தால், மிகுதியை பிறகு கதைப்போம்!’ என, நினைத்துக்கொண்டே, ‘‘சரி…உன் ஆசைப்படியே கேம்ப் போய்விட்டு வா; மிகுதியை பிறகு பார்ப்போம்.’’ என்றவர், மகனின் பார்வையைத் தவிர்த்து, தன் வேலைகளைத் தொடர்ந்தார்.
அப்போதும் தயங்கி நின்று, ‘‘வேறு ஏதாவது செய்ய வேண்டுமாம்மா?’’ என்று கேட்ட மகனுக்கு ரஞ்சியின் முறைப்பே பதிலாகக் கிடைக்க, அவ்விடத்தை விட்டு நகர்ந்து தனது அறையினுள் சென்றமர்ந்தான் அவன்.
சிறுவயது முதலிருந்தே, வீட்டில் இருக்கும் போது தாய்க்கு உதவுவது அவனது பழக்கம்.
தன்னை விட ஏழெட்டு வருட இடைவெளியில் பிறந்த தங்கைகள் அவன் பார்வையில் தன் குழந்தைகளாகவே தெரிந்தனர். அவர்கள் பொறுப்புக்கள் அனைத்தும் தன்னதே என்பதையும் அவன் மனதில் நிறைத்து வைத்திருக்கிறான்.
தான் நேசிப்பவளும் அவ்வாறே தன் குடும்பத்தை அரவணைப்பாள் என்பதில் அவனுக்கு எவ்வித ஐயமும் இல்லையென்றாலும், அதைத் தாயை ஏற்கச் செய்யும் வழி தெரியாது திண்டாடிக் கொண்டிருக்கிறான்.
அவன் தந்தையைப் பொறுத்த வரையில் அவருக்கு இதிலெல்லாம் ஒன்றுமே அக்கறை இல்லை. ‘‘ஓ! விரும்புகிறாயா? ம்ம்… உன் அம்மா தலையாட்டினால் எனக்கும் சரி!’’ என்பதுடன் அவர் ஒதுங்கி விட்டார், வழமை போலவே!
‘இந்த அம்மாவை என்ன செய்வது? எவ்வளவு சொல்லியும் சும்மா சும்மா குறிப்பைக்(ஜாதகம்) கொடுத்து, பொருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறாரே!’ எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான் நரேன்.
‘நான் உறுதியாக இருந்தால், இவர்களால் என்ன தான் செய்ய முடியும்?’ என்றெண்ணியவனுக்கு, இந்த விடயத்தில் தாயுடன் தர்க்கம் செய்து களைப்பும் சலிப்பும் ஏற்பட்டிருந்தது.
மனதில் எழுந்த அலுப்பையும் சலிப்பையும் போக்கும் மருந்தாக, தன்னவளுடன் நான்கு வார்த்தைகள் கதைப்போம் என நினைத்தவன், அதற்குமுன், தான் யாழ் வருவதை நண்பன் சிவாவிற்குச் சொல்வோம் என்றெண்ணி கைபேசியை எடுத்தான்.
நண்பனுடன் கதைத்த பின், தன் மனதில் நிறைந்து தன்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவளுக்கும் தான் அங்கு வரப்போவதைக் கூறியவன்,
‘பல்கலை தொடங்கியும் நாலு மாதங்களுக்கு மேலாகிவிட்டது! யாழ்பாணம் போய் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களிருக்கும்!’ வியப்புடன் நினைத்துக் கொண்டாலும், அங்கு போகப் போகிறோம் என்ற நினைப்பே மனதை மகிழ்வால் நிறைக்க, தாய், இரவுணவு உண்பதற்காக அழைக்கவே, முறுவலுடன் எழுந்து சென்றான்.

