அவள் அன்று காட்டிய ஒதுக்கமும், அவனைப் பார்த்த விதமும், அவனை, திரும்பவும் இயல்பாய் அவள் முன்னால் போய் நிற்க விடாமல் தடுத்தது!
அன்றைய நிகழ்வை, மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தவன், அத்தோடு மலேரியாவும் வரவே வருத்தத்துடன் போராடிக் கொண்டிருந்தான்.
ஆனால், மஞ்சுவுக்குமே தெரியாதது ஒன்றிருந்தது!
அவன், அவளை விரும்பியதை என்று மனதில் உணர்ந்தானோ, அதை நன்றாக தன்னில் தானே உறுதி செய்தவுடன் நேரே சென்று நின்ற இடம் சிவாவின் முன்னால் தான்!
அதுவும் சும்மா இல்லை! “உன் தங்கையை எனக்குத் திருமணம் செய்து தருவாயா?” என்ற கோரிக்கையுடன் !
சிவாவோ, நரேன் இப்படி நேரடியாகக் கேட்டதும் திகைத்துக் குழம்பியவன், இதை இப்பொழுதே தனது வீட்டில் கதைத்தால், மஞ்சுவும் படித்துக் கொண்டிருப்பதால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகலாம், அவள் குழம்பலாம் என்று நினைத்தவன், நரேனைப் போல ஒரு மாப்பிள்ளையை தன் தங்கைக்கு கணவனாக நினைத்துப் பார்க்கையில், தான், தன் குடும்பம், தங்கை எல்லோருமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றுணர்ந்து, ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின், தனது சம்மதத்தை தெரிவித்தான் .
ஆனாலும், ‘‘மஞ்சுவிடம் உடனே கதைக்காதே! அவள் சின்னப் பிள்ளை!’’ என்று சிவா சொன்னதை நரேனின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவனுக்கோ, தன் விருப்பத்தை அவளிடம் சொல்லி, ‘உனக்கு நான், எனக்கு நீ!’ என்பதை உடன் முடிவு செய்து விட வேண்டுமென்று ஆவலாய் இருந்தது.
அன்று மஞ்சுவுடன் கதைக்கப் போகிறேன் என்ற நரேன், அதன் பின்னர் தன்னையும் தன் வீட்டையும் தவிர்க்கவே, சிவாவுக்குமே ‘மஞ்சு ஏதும் எடுத்தெறிந்து சொல்லிவிட்டாளோ?’ என்ற நினைப்பு வந்தாலும், அவளிடம் நேரடியாக கேட்க முடியவில்லை. நரேனும் அன்று அங்கு நடந்ததை சிவா எத்தனையோ முறை கேட்டும் கூறவில்லை.
இதையெல்லாம் கணப்பொழுதில் நினைத்துப் பார்த்த நரேன், மெல்லச் சென்று அவள் அருகிலமர்ந்து, அவள் தலையை ஆதரவாய் வருடினான்.
‘‘இப்போ ஏன் இந்த அழுகை மஞ்சு? இங்க பாரும், பேசாமல் வீட்டுக்கு கிளம்பும். நான்…பிறகு…கொஞ்சம் சுகம் வந்தவுடன் வீட்ட வாறேன்!’’ சிறு பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்ல, அழுது கொண்டிருந்தவளோ அப்படியே அவன் மடியில் முகத்தைப் புதைத்து தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
மடி மீது படுத்துக் குமுறிக் குமுறி அழுபவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல், தடுமாறினான் நரேன்.
‘ரூமுக்கு வந்திருக்கிறாள்! இந்த நேரம் பெடியல் யாராவது வந்துவிட்டால் என்ன நினைப்பான்கள்?’ இதுவே அவன் சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது!
‘‘மஞ்சு…சொல்வதைக் கேளுடா! முதல் அழாதேயும்.’’ சிறு கண்டிப்பை குரலில் கலந்து சொல்லியும் அவளது அழுகை நிற்காததைக் கண்டவன், ‘‘ம்ம்ம்…இப்போ ஏன்னிந்த அழுகை?! இல்ல கேட்றேன்! ஒரு கப் டீ, அதுவும் வேண்டா வெறுப்பாப் போட்டுத் தந்துவிட்டு, சரி போனாப் போகட்டுமென்று அந்த சுடுதண்ணியை நானும் குடிக்கத் தொடங்க, என் மேலேயே தட்டி விட்டனீர் தானே! அது மட்டுமா? ஏதோ உம் கையைப் பிடிச்சு இழுத்த மாதிரி ஒரு பார்வை வேற! பிறகு இத்தனை நாளுக்குப் பிறகு மனிசன் காய்ச்சலில் அவதிப்படும் போது வந்து அழுகிறா…’’ குரலில் வருத்தத்துடன் சலித்துக் கொண்டான் .
அவன் மடியிலிருந்து வேகமாய் தன் தலையைத் தூக்கியவள், காய்ச்சல் சோர்விலும், குரலில் கேலியும் அலுப்பும் கலந்திருந்தாலும், கண்களில் அன்பைத் தேக்கி வைத்திருக்கும் அவன் பார்வையுடன், ஒருகணம் தன் பார்வையைக் கலந்தாள். அடுத்த நொடி, ‘‘இப்ப என்ன? நான் இங்க வந்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை, அப்படித் தானே! நான் போய்ட்டு வாறேன்!’’ எழ எத்தனித்தாள்.
அவள் பார்த்த பார்வையிலேயே, தம்மிருவருள்ளும் உள்ள நேசத்தையும் உரிமை உணர்வையும் புரிந்து கொண்டவன், ‘என்ன தான் என்றாலும், மகாராணி இத்தனை நாள் சென்று, அதுவும் இப்போ காய்ச்சல் என்றதும் தான் வந்திருக்கிறா! இல்லையென்றால்….’ என்ற மனச்சுணக்கம் விலகாமலேயே, எட்டி அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
சிறிது நேரம் எதுவுமே பேசாது அவளையே பார்த்திருந்தவன், ‘‘மஞ்சு, அன்றைக்கு கேட்க வந்ததை இப்போ கேட்கிறேன்மா!” குரல் கனிய ஆரம்பித்தான்.
“நீர் இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும்…” நிறுத்தி அவளையே நோக்கியவன், “இருவரும் கல்யாணம் செய்து கொள்வோமா?” அவன் விழிகளில் மின்னிய நேசத்தை முந்திக்கொண்டு வழிந்தது கேலி!
“என்ன?? வளர்ந்ததுமா? அப்போ, நான் குட்டை என்று கேலி செய்கிறீங்களா? நீங்க என்ன ஆறடி என்ற நினைப்போ!” சீறினாள் மஞ்சு.
“ஹா…ஹா…மஞ்சு…ஹா…ஹா” இயலாமையையும் மீறி நகைத்தான் நரேன்.
“இருவரும் கல்யாணம் செய்து கொள்வோமா என்றும் கேட்டேன் தானே! முக்கியமானது உம் காதில் ஏறி இருக்காதே!” என்றதும், சற்றுமுன் சீறியவள் இவளா என்கின்ற மாதிரி, முகம் கனிய, பார்வை தடுமாற தலையைக் குனிந்து கொண்டாள் மஞ்சு.
மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி, நீரில் பளபளத்த அவள் விழிகளை உற்றுப் பார்த்தான் நரேன்.
“உம்மைப் பிடித்திருக்கு என்பதைச் சொல்லத்தான், அதுவும் உங்க அண்ணாவிடம் சம்மதம் கேட்டு, அந்தப் பெரிய மனிசனும் ஒரு மாதத்துக்குப் பிறகு தலையாட்டிய பின்தான் அன்று கதைக்க வந்தேன். ஆனால்…. நீர்…’’ என்றவன், வாயைப் பொத்தினாள் மஞ்சு.
‘‘ஸாரி ஸாரி. வேண்டுமென்று நினைத்தா அப்படிச் செய்தேன்! நீங்க திடீரென்று வித்தியாசமாக நடக்க, ஏதோ பயத்தில் அப்படி நடந்துவிட்டேன். அதற்காகக் கோபித்துக்கொண்டு இத்தனை நாட்களாக வீட்டுக்குக் கூட வரவில்லை என்ன?’’ மேலே பேச்சு வராமல் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
இத்தனை நாட்களாக, அவளிடம் தன் நேசத்தைச் சொல்ல நேரம் பார்த்து, அதுவும் நண்பனின் அனுமதியும் வேண்டிக் காத்திருந்த நரேனின் உள்ளமோ, ‘ஹப்பாடா!’ என்று அமைதி அடைந்தாலும், நிச்சயம் அவர்கள் வாழ்வில் இணைவது அப்படியொன்றும் இலகுவான காரியமில்லை என்பதுவும் அவனுக்குத் தெரியும்.
அப்படியிருந்தாலும், ‘‘ இது நமக்குச் சரி வராது..’’ என, உண்மை நேசம் கொண்ட அவனால் ஒதுங்கிப் போக முடியவில்லை!
தாயாரால் தடை வரும் என தெரிந்திருந்தவன், ‘அதை எப்படியும் தாண்டி, இவளுடன் இணைவேன்!’ என்ற உறுதியுடன், தன் தோள் சாய்ந்திருந்தவளை அன்பாய் அணைத்துக் கொண்டான்.
அவன் அணைப்புக்குள் அடங்கியவளுக்கோ எதையோ வென்றுவிட்ட, சாதித்து விட்ட நிம்மதியால், சந்தோஷத்தால் மனம் நிறைந்திருந்தது.
நீண்ட நாட்களாக தெரிந்தவன்; மிகவும் கண்ணியமும், அன்பும் கொண்டவன்; தன் கஷ்டம் பாராமல் யாருக்கும் உதவுவதுடன், பழகுவதற்கு இனிமையும் இலகுவுமான நரேனைக் கண்டு ஆசைப்பாடாதவர்களே இல்லை எனலாம்.
‘அப்படிப்பட்டவன் என்னை விரும்பினான்; அவன் என்னுடயவன்!’ என்ற நினைவே, அவளை எங்கோ அழைத்துச் சென்றது!
அதுவும் தன் அண்ணாவிடம் அனுமதி பெற்றுத்தான் தன்னிடம் பேச வந்ததாக அவன் சொன்னது, அச் சிறுபெண்ணின் மனதுக்கு மிகவும் இதமாய் இருந்தது.
தனக்காக இத்தனை யோசித்துச் செய்பவன் , நிச்சயம் தன்னை நன்றாக வைத்திருப்பான் என்ற நம்பிக்கை அவள் மனதில் நிறைந்திருந்தது.
இவ்வாறு அவர்கள் இருவரும் தத்தமது நினைவுகளுடன் தம்மை மறந்திருந்த அந்தசில நிமிடங்களில், அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தது, ‘‘ மஞ்சூ..’’ என்ற கடுமையான குரல்.
சட்டென்று திடுக்கிட்டு, தாமிருக்கும் நிலையுணர்ந்து, தன்னில் சாய்ந்திருந்தவளை விலக்கி, விரைந்தெழுந்தான் நரேன்.
திறந்திருந்த வாயிலில், கையில் சாப்பாட்டுக் கூடையும், கோபச் சிவப்பேறிய விழிகளுமாக நின்றான் சிவா.
‘ச்சே, கடைசியில் நான் என்ன காரியம் செய்துவிட்டேன்! இப்ப வந்தது சிவா; இதுவே வேறு யாருமாக இருந்திருந்தால்?’ மனதில் பதைபதைத்த நரேன், பயத்தால் நடுங்கி விழிகள் கலங்கி நின்ற மஞ்சுவை ஒருபார்வை பார்த்துவிட்டு, நண்பனை நோக்கிச் சென்றான்.
தமையன் அதிகம் பேசாவிடினும் கண்டிப்பில் தந்தைக்குச் சளைத்தவனல்ல என்பதை நன்கறிந்திருந்த மஞ்சு, ‘இன்றைக்கு இருக்குடி மஞ்சு உனக்கு!’ அந்த நிலையிலும் மனதில் முணுமுணுத்துக் கொண்டே, மெல்ல நகர்ந்து மேசையிலிருந்த தன் சைக்கிள் சாவியை எடுத்தவள், “அண்ணா…அது…வந்து..’’ என்று தொடங்க, ‘‘வாயை மூடிக்கொண்டு பேசாமல் வீட்டுக்குப் போ; மிச்சத்தை அங்கே வந்து கதைத்துக் கொள்கிறேன்!’’ உறுமினான் சிவா.
தமையனின் அடங்கிய குரலில் வெளிப்பட்ட ஆத்திரம் கண்டு உள்ளம் நடுங்க, எதுவுமே சொல்லாமல் நரேனைப் பார்த்து தலையாட்டிவிட்டு ஒரே ஓட்டமாய் இறங்கி, பதைபதைக்கும் உள்ளத்துடன் வீடு நோக்கிச் சென்றாள் மஞ்சு.

