‘‘யார் கைக்குள்ள அம்மா? எங்கே பார்ப்போம் காட்டுங்க?’’ இவர்கள் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த சுரேன் கேலியாகக் கேட்டான்.
‘‘போதும்டா…விளையாட்டு. நான் சீரியசா கதைக்கிறேன்.’’ என்றவர்,
‘‘என் மனதில கொஞ்ச நாட்களாக இந்த நினைப்பு இருக்குதுங்க. நம்ம மதுவை அகிலுக்கு செய்தாலென்ன? நாம பார்க்க வளர்ந்த பிள்ளை! மயூவை விட இரண்டு வயது தான் அதிகம். அகிலுக்கு நல்ல பொருத்தம். குணமும் பிழை சொல்ல முடியாது.’’ என்றார், கணவனின் மனதை அறியும் ஆவலுடன்.
தன் மனைவியை ஆச்சரியமாய்ப் பார்த்தார் ரவி.
‘‘உண்மையாகவேப்பா, எனக்கு இப்படி தோணவே இல்ல பாருங்க. அதுக்கென்ன செய்திட்டாப் போச்சு; ராகவனோட கதைப்போம்!’’ என்றார் சந்தோஷத்துடன்.
‘‘இல்ல இல்ல. முதல் அகிலுக்கு விருப்பமா என்று கேட்டுவிட்டு, அவர்களோடு கதைப்போம். அவனும் இன்னும் ஒரு கிழமையில வரப்போவதாகச் சொன்னான்.’’ ராஜி சொன்னதும், சிறிது நேரம் யோசித்த ரவி, ‘‘அதுவும் சரிதான். முதல் அவனின் விருப்பத்தைக் கேட்போம்.’’ என்று ஆமோதித்தார்.
அறையினுள் தனது கவலையினுள் அமிழ்ந்து கொண்டிருந்த மயூ, இப்பேச்சினைக் கேட்டு தன் கவலைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, தன் செல்ல அண்ணாவின் திருமணம், அதுவும் தன் தோழி மதுவுடன் என்ற எண்ணம் தந்த ஆனந்தத்தில் சந்தோசமாய் ஹாலுக்கு விரைந்து வந்தவள், ‘‘அம்மா..! அதற்கு அண்ணா வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இப்பவே ஃபோனில கேட்போமே!’’ என்றவாறே, அவர் பதிலையும் எதிர் பாராது தமையனைத் தொலைபேசியில் அழைத்தாள்.
*****
பெற்றவர்கள் தாம் பெற்ற பிள்ளைகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அவர்கள் சார்ப்பான தங்கள் எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் நிறைவேறி, அவர்கள் நல்லபடியாக நலமுடன் வாழ்வதைக் காண்பதிலேயே முழுமையான நிறைவை அடைகின்றனர்.
இதற்கு விதிவிலக்கானவர்கள் நம்மிடையே இருக்கவே செய்தாலும், முன்னவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவே!
அந்தவகையில், ராகவன் மிகவும் மன நிறைவுடனும் சந்தோஷத்துடனும் இருந்தார்.
தன் தங்கை மகனுக்கு மூத்த பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்து, அதில் பிரச்சனை வந்து தங்கையுடன் பிரிவு வந்தும் கூட, அந்தத் தங்கையே அவர் மகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அண்ணா மனதை வென்று விட்டார்.
ஆனால் இப்போதோ, அவர் சிறிதும் எதிர்பாராததல்லவா இது!
மூத்த மகள் விடயத்தில், தங்கை மகன் சத்தியனை அவள் கணவனாக நினைத்திருந்து ஏமாற்றம் அடைந்ததில், இப்படி, நட்புக்குள் உறவுக்குள் எதிர்பார்ப்புக்களை வளர்ப்பதில்லை என்று உறுதியுடன் இருந்ததால், இப்படி ஒரு நினைப்பு எழவில்லை அவருக்கு!
வீடு தேடி வந்து, தன் முன்னால் அமர்ந்திருக்கும் உயிர் நண்பனையும், முகம் கொள்ளா சந்தோஷத்துடன் அமர்ந்திருக்கும் நண்பன் மனைவியையும் பார்க்கையில் ராகவன் கண்கள் கலங்கின!
தான் வந்து, “உன் மகளை என் மகனுக்கு திருமணம் செய்ய விருப்பமா?” என்று கேட்டதற்கு, ராகவன் எதுவுமே சொல்லாது மலைத்து, திகைத்திருப்பதையும், ராகவன் அப்படி இருப்பதால் அவர் மனைவி தவிப்புடன் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதையும் பார்த்த ரவி, நண்பனின் தோளில் கை வைத்து இலேசாகத் தட்டினார்.
‘‘நாங்க எங்க விருப்பத்தைக் கேட்டோம் ராகவன்! உனக்குப் பிடிக்கவில்லையென்றால், தாராளமா சொல்லலாம்; நாங்க ஒன்றுமே நினைக்க மாட்டோம்.’’ என்றார், தொடர்ந்து.
அப்போது தான், தன் நினைவிலிருந்து மீண்டார் ராகவன், ‘‘இல்ல.. இல்ல. நான்…நான்…’’ அப்போதும் தடுமாறியவர், எட்டி ரவியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.
‘‘சந்தோஷத்தில் எனக்கு வார்த்தையே வரவில்லை ரவி! அதற்குள்ள என்னவெல்லாம் சொல்கிறாய்? நான் கொஞ்சம் கூட இப்படி யோசித்துப் பார்க்கவில்லடா.’’ மகிழ்வாய்ச் சொன்னவர், ‘‘எனக்கு பூரண சம்மதம். உங்களுக்கு?’’ நிறைந்த மகிழ்வுடன் தன்னருகில் நின்ற மனைவியிடம் வினவினார்.
‘‘இதென்ன கேள்வி? அகிலைப் போல மாப்பிள்ளை மதுவுக்கு அமைய அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.’’ சந்தோஷமாக தன் சம்மதத்தை வெளியிட்டார் ராகவனின் மனைவி.
சம்பந்திகளாகப் போகும் நண்பர்கள் இருவரும், தம் மனைவிமாருடன் சந்தோஷ மிகுதியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்த மயூ, ‘‘ஹாய் ஆன்ட்டி, அங்கிள் எப்படி இருக்கிறீங்க?’’ என்றவாறே, தாயின் அருகில் வந்தமர்ந்தாள்.
‘‘வாடாம்மா, கம்பசுக்கு போயிட்டு வாறீங்க போல!’’ என்ற ராகவனின் மனைவி, ‘‘சரி, குடிக்க என்ன கொண்டு வர? டீ போடட்டா?’’ என்றவாறே சமையலறை நோக்கித் திரும்பினார்.
‘‘மது எங்கே ஆன்ட்டி?’’ தானும் எழுந்தாள் மயூ.
அப்போது ரவி, ‘‘எதற்கும் மதுவிடமும் ஒரு வார்த்தை கேட்டுட்டே மிகுதி வேலைகளைத் தொடங்குவோம் ராகவன்.’’ என்றதும், அவர் மனைவியோ, ‘‘தேவையில்ல அண்ணே! முதல்ல ஜாதகத்தைப் பார்ப்போம். எங்களுக்குச் சம்மதம் என்றால் அவள் ஓமென்று சொல்லுவாள்.’’ என்றார், மகளிலும் ஜாதகத்திலும் நம்பிக்கையுடன்.
‘‘இல்லை…நீங்க எதற்கும் ஒருதரம் மதுவின் விருப்பத்தையும் கேட்டு முடிவெடுங்க. அதுதான் நல்லது.’’ மீண்டும் சொன்ன ரவி, சிறிது நிதானித்து, ‘‘ஜாதகம்…’’ என்று மெல்ல இழுத்தவர், ஒரு எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கும் நண்பனைப் பார்த்து, ‘‘அகிலிடம் மதுவைச் செய்ய விருப்பமா என்று நான்கு நாட்களிற்கு முதல் கேட்டேன் ராகவன். எங்களுக்கு சம்மதமென்றால் தனக்கும் சம்மதம் என்றான். அதோடு இன்னொன்றும் சொன்னான்.’’ என்றவர், திரும்பவும் ஒருகணம் மௌனம் சாதித்தவர் மனதில், நண்பன் இதை ஏற்பானா என்ற கேள்வி எழுந்தது.
அந்தக் கேள்வியை ஒதுக்கிவிட்டு ,‘‘இங்க பாருங்க ராகவன், ஜாதகம் பார்க்கப் போய் தற்சமயம் அதில் பொருத்தமில்லை என்றால் என்ன செய்வது? அதற்குப் பிறகு அதை அப்படியே மறந்து கல்யாணம் செய்தாலும், மனதுக்குள் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும் தானே! காதலிக்கின்ற பிள்ளைகள் ஜாதகம் பார்த்தா செய்கிறார்கள்? அது போல நாமளும் அந்த விடயத்தை மறந்திட்டு, கடவுளை நம்பிச் செய்வோமே!’’ என்றார், இதுதான் தங்கள் விருப்பம் என்பதாக!
பின்னர், தான் சொல்வதை யோசனையாகக் கேட்டிருக்கும் நண்பனையும் அவன் மனையாளையும் பார்த்து, ‘‘இதை நான் சொல்ல இல்லப்பா; அகில் தான் சொன்னான். செய்வது என்று முடிவு எடுத்தால் ஜாதகம் பார்க்காதீங்கப்பா என்றான்.’’ என்றார், இனி முடிவு உங்கள் கையில் என்ற வகையில்.
‘‘என்றாலும் அதெப்படி அண்ணே…’’ மனம் சமாதானம் அடையாமல் தடுமாறினார் ராகவன் மனைவி.
மனைவியை இடையிட்ட ராகவனோ, ‘‘நீ சொல்வதும் சரிதான் ரவி. ஜாதகம் பார்த்துப் பார்த்துச் செய்யும் கல்யாணங்கள் எத்தனை இடையிலேயே காணாமல் போகுது. ம்ம்ம்…வேறு என்ன சொல்வது! கடவுளை நம்பிக் கல்யாணத்தைச் செய்ய வேண்டியது தான்!’’ நல்ல மாப்பிளையை இழக்க மனமின்றி சொன்னவர், மனைவியைப் பார்த்து, ‘‘எதற்கும் நீங்க ஒருதரம் பிள்ளையிடம் சம்மதமா என்று கேளுங்கோவன்.’’ என்றார் முடிவாக.
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து பெரியவர்கள் கதைப்பதைப் பார்த்திருந்த மயூ, ‘‘கொஞ்சம் பொறுங்கோ ஆன்ட்டி, நானே என் ஆசை அண்ணியிடம் சம்மதமா என்று கேட்கிறேன். சம்மதமில்லையென்று கூட சொல்லுவாவா பார்ப்போமே!’’ என்றவாறே, ‘‘எங்க நிக்கிறா ஆன்ட்டி?’’ கேட்டவள், ‘‘அவள் பின்னுக்கம்மா, தோட்டத்தில…” ராகவனின் மனைவி சொல்ல, ஒரே ஓட்டமாய் ஓடினாள்.

