அத்தியாயம் 15.
மாலைப் பொழுதில், தனக்கேயுரிய விதத்தில் இயங்கிக் கொண்டிருந்தது யாழ் நகரம்!
மாலைத் திரைப்படக்காட்சியை பார்த்துவிட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ‘கேஎப்சி’யில் அமர்ந்திருந்தனர் தோழிகள் மூவரும். கூடவே மயூவின் தம்பி சுரேனும், மஞ்சுவின் தங்கையும், ராம், நரேனும் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீயின் தம்பிமாருக்கு டியூசன் இருந்ததாலும், சிவாவும் அவர் மனைவியும் வேலையிலிருந்து நேரத்துக்கு வர முடியாததாலும், அவர்களால் இவர்களுடன் வரமுடியவில்லை .
நேற்று மாலை மஞ்சுவின் காதல் விடயம் தெரிந்து கோபப்பட்ட நண்பிகளை, தனது வழக்கமான முறையில் சமாதானம் செய்து விட்டான் நரேன்.
மயூ வீட்டினரை, தன்னை விட ஒரு சில வருடங்களே இளைய மயூவின் அண்ணா அகிலை நரேனுக்கும் மிக நன்றாகத் தெரியுமாதலால், நேற்று மாலை மஞ்சு அழுது கொண்டிருந்ததை சிவா மூலம் அறிந்தவன், அதன் காரணத்தை கேட்டறிந்ததும், மயூவின் வீட்டிற்கு மஞ்சுவை வரச் சொல்லி தானும் நேராக அங்கே சென்றான்.
நரேன் வந்தடைவதற்கு முன்பே, அருகிலிருக்கும் நண்பி வீட்டுக்கு வந்திருந்த மஞ்சுவை அன்பாக வரவேற்ற மயூவின் பெற்றவர்கள், கலங்கியிருந்த அவள் முகத்தைப் பார்த்ததும், ‘‘என்னம்மா நடந்தது? ஏன் ஏதோ போல இருக்கிறீர்?’’ என்றனர்.
‘‘அது ஒன்றுமில்லை ஆன்ட்டி, இலேசாய்த் தலைவலி அவ்வளவு தான்.’’ என, அவள் சொன்னாலும், ‘இல்ல ஏதோ நடந்திருக்கு! கம்பஸ் முடிந்து, மயூ கூட ஒரு மாதிரித் தான் வந்தாள். ஏதாவது பிரச்சனையோ!’ நினைத்துக் கொண்ட ராஜி, ‘எதுவென்றாலும் அவங்களுக்குள்ள பேசித் தீர்க்கட்டும்!’ என நினைத்தவர், வாயிலைப் பார்த்துக்கொண்டு முற்றத்திலேயே தயங்கி நின்றவளிடம், ‘‘உள்ளுக்குள்ள வாம்மா, மயூ அவள் ரூமில் இருக்கிறாள்!’’ அன்புடன் அழைத்தார்.
வாயிலில் இவர்கள் குரலைக் கேட்ட மயூ, ‘ஏதாவது சொல்லிச் சமாளிப்பதற்காக வந்திருக்கிறாள். ஸ்ரீ நல்லாத் தான் திட்டிவிட்டாள்; இவளும் பாவம் தான்!’ மஞ்சுவுக்காக வருந்தியவள், வீட்டுக்கு வந்தவளுடன் முகம் திருப்ப விரும்பாமல், ‘‘என்ன மஞ்சு, ஏதாவது அலுவலா? உள்ளுக்கு வா.’’ என்றாள் கறாராக.
‘இதப் பார்ரா! இவளிடம் தேவை இருந்தால் தான் நான் வரவேண்டுமா? ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைப் போட்டு என்ன மாதிரி தாளிக்கிறாளவையள்; எருமை மாடுகள்!’ மனதில் தோழிகளைத் திட்டியவள், ‘‘அது வந்து, நரேன் உங்க வீட்டுக்கு வருவதாகச் சொன்னார்.’’ அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நரேனின் மோட்டார் சைக்கிள் வந்து மயூவின் வீட்டு கேட்டருகில் நின்றது!
கொழும்பிலிருந்து நரேன் வந்திருப்பாதாக மகள் மூலம் கேள்விப்பட்டிருந்த மயூவின் பெற்றவர்கள், ‘திடீரென்று இந்தத் தம்பி இங்கே ஏன் வாறார்?!’ மனதில் ஆச்சரியத்துடன் கேள்வி எழுந்தாலும், நரேனை அன்பாக வரவேற்று கதைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் டியூசன் முடிந்து வந்த சுரேனும், வழமைபோல மஞ்சுவுடன் வாயாடிக் கொண்டே நரேனுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.
ஏதோ குற்றம் செய்த பாவனையும் மௌன அவஸ்தையுமாக நிற்கும் மஞ்சுவைப் பார்த்த நரேன், ‘இப்போ ஏனிப்படி நிற்கிறாள்? அட! இவளுக்கு கூட இப்படி அவஸ்தைபடத் தெரியுமா?!’ வியந்தவாறே, ‘‘மஞ்சு ஏன் நிற்கிறீர்? இப்படி வந்து இருமன்.’’ குரலில் அடங்கிய சிரிப்புடன் சொல்ல, அவனை, கண்ணால் சுட்டுப் பொசுக்க முயன்றவள், தான் முறைத்த அழகை அங்கிருந்தவர்கள் பார்த்ததைப் புரிந்ததும், தன்னையே குறுகுறுப்பாகப் பார்த்திருக்கும் தன் தோழியின் அருகில் சென்று, அவள் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.
மஞ்சுவின் இச்செய்கை, அவள் மீதான கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மயூவுக்கு, அதை இருந்த இடம் தெரியாது விரட்டி விட உதவியது.
தானும் அவளது கரங்களை ஆதரவாகப் பிடித்துக்கொண்டே, அருகிலிருந்த சாப்பாட்டு மேசையில் சென்றமர்ந்தவளுக்கு, தம் சண்டை நரேன் காதுக்குப் போய்விட்டது என்பது நன்றாக விளங்கியது.
மயூவின் பெற்றோரும் நரேனும், பொதுவாகவும் அகிலின் திருமணம் சம்பந்தமாகவும் கதைத்துக் கொண்டிருக்க, தேநீர் கொண்டு வந்து கொடுத்த மயூ, ‘‘நல்லூர்த் திருவிழாவுக்குப் பிறகு தான் அண்ணாவுக்கு கல்யாணம் என்று நினைத்திருக்கிறோம் அண்ணா; கட்டாயம் வருவீங்க தானே?’’ என்றதும், “அதெப்படி நான் வராமல், கட்டாயம் வருவேன்மா!’’ என்றவன், ராஜியையும் ரவியையும் சிறு தயக்கத்துடன் ஏறிட்டான்.,
‘‘அங்கிள்…ஆன்ட்டி, நான் இப்ப வந்தது ஒரு விஷயம் சொல்லத்தான். நம்ம மூன்று இணைபிரியாத் தோழிகளுக்கும் இடையில் இன்றைக்குச் சண்டையாம். பிறந்து, தொட்டிலில் போட்ட நாளிலிருந்து தாங்கள் நண்பிகளாம்; அவர்களை நான் பிரித்து விட்டேனாம்!’’ என்றவன், அவனையே ஆச்சரியமாக நோக்கியவர்களைப் பார்த்து சிறுமுறுவலுடன், ‘‘அப்படித்தான் என் மீது வேண்டாத பழியைப் போடுறா மஞ்சு; அதுதான்…சமாதானம் செய்து வைப்போம் என்று வந்தேன்!’’ என்றான், இடைக்கிடை மஞ்சுவையும் பார்த்துக் கொண்டே!
‘‘அட, அதுதான் இவள் இவ்வளவு நேரமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாளா?! சரி தம்பி, இவர்களுக்கு இடையில் நீங்க எங்கே வந்தீங்க?!’’ வியப்பாகக் கேட்ட ராஜியை, தயக்கமாய்ப் பார்த்தான் நரேன்.
‘‘அது வந்து ஆன்ட்டி…இன்னும் சிவாவின் அப்பாவுக்கும் தெரியாது, வெளியில் யாருக்குமே தெரியாது. அது வந்து நானும்..’’ என்றவன் சிறிது நிறுத்தி, சிறு சிரிப்புடன் மஞ்சுவை ஏறிட்டவன்,
‘‘அது ஒன்றுமில்ல ஆன்ட்டி, நம்ம சிவா இருக்கிறான் இல்லையா, அவன் என்னிடம் வந்து, என் தங்கச்சி இப்படி ஒரு அறுந்தவாலா இருக்கிறாளே! எவருமே இவளைக் கல்யாணம் செய்ய முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால, எனக்காக, நீதான் அவளுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று, கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினான் ஆன்ட்டி! அதுதான் நானும்…இனி என்ன செய்வது என்று அவன் முகத்துக்காக தலையாட்டியிருக்கிறேன்!’’ என்று சொல்லச் சொல்ல இருக்கையை விட்டு கோபத்துடன் எழுந்த மஞ்சு,
‘‘என்ன?!! திரும்பச் சொல்லுங்க பார்ப்போம். நீங்க எனக்கு வாழ்க்கை கொடுக்கப் போறீங்களா? நான் அறுந்த வாலா? போனாப் போகுதென்று தலையாட்டினீங்களா?’’ தான் இருக்கும் இடத்தையும் மறந்து முன்னே பாய, அவளைத் தடுத்து நிறுத்தி இறுக்கிப் பிடித்துக் கொண்ட மயூ,
‘‘ஹைய்யோண்ணா, நட்புக்காக உங்க வாழ்க்கையையே தியாகம் செய்தீங்க என்று சொல்லுறீங்களா? நீங்க கிரேட்தான்ணா. என்றாலும் நீங்க பாவம்! கடவுளே!! உங்க வாழ்க்கை இப்படியா போக வேண்டும்! தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்கிற மாதிரி நீங்களே உங்களுக்கு, ஹ்ம்ம்…எல்லாம் விதி செய்த சதி அண்ணா!’’ என்றாள், அதீத கவலையாக!
மயூ சொல்லச் சொல்ல விழிகளில் நீர் துளிக்க பார்த்திருந்த மஞ்சு, தன்னைப் பிடித்திருந்த அவள் கரங்களை வெடுக்கென்று உதறியவள், ‘‘உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தால் விசரி போலத் தெரியுதா?’’ வெளியே செல்ல முயல, அது வரை சிறியவர்கள் கதைப்பதை பார்த்து, ‘இதுதான் விஷயம்’ என கிரகிக்க முயன்று கொண்டிருந்த ராஜி ரவியில், முதலில் தன்னைச் சுதாகரித்த ராஜி, ‘‘மஞ்சு இங்க வாடா செல்லம்…’’ என்று கைகளை நீட்ட, அன்பாய் தன்னிடம் வந்தணைந்தவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவர்,
‘‘ஆஹ, இதுதான் விசயமா?! அப்ப நீர் இவயளுக்கு இதை மறைத்துவிட்டீர் போல! தெரிந்ததும் இந்த இரண்டு வாலுகளும் உம்மைப் போட்டு உருட்டுறாள்களா?’’ என்று கேட்டவர், ஆதரவாய் அவள் தலையைத் தடவிக் கொடுத்தார்.
அவளோ, ‘‘பாருங்க ஆன்ட்டி, இனிமேல் உனக்கும் எங்களுக்கும் சரிவராது என்று ஸ்ரீ சொல்ல, இவள் பேசாமல் நிற்கிறாள்!’’ கண்ணீர் விட்டாள்.
சும்மா சும்மா மஞ்சுவை வம்பிக்கிழுக்கும் சுரேனோ, ‘‘ஹப்பாடா! மயூக்கா, இப்ப சரி நீ முழிச்சாயே! இனித்தான் நீ நல்லா இருப்பாய்!’’ என்றான் தன் பங்கிற்கு.
உடனே அவனைக் கடிந்து கொண்ட ராஜி, தன் கடமை முடிந்தது என்ற ரீதியில் இருந்து வேடிக்கை பார்க்கும் நரேனிடம், ‘‘ஹைய்யோ தம்பி! இவர்களின் சண்டையை பெரிசா எடுத்து, இப்ப நீங்க இதைச் சொல்வதற்காக வந்தீங்களா?’’ என்றார், லேசான சங்கடத்துடன்.
ரவியோ, ”சந்தோசமா இருக்கு தம்பி. மஞ்சு இப்படி வெடுக் வெடுகென்று கதைத்தாலும் அருமையான பிள்ளை. அவள் எங்களுக்கும் மகள் தான், நீங்க இங்க வந்து சொன்னதும் மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கு!’’ என்றவர், இன்னமும் தன் மனைவியோடு அணைத்திருக்கும் மஞ்சுவைப் பார்த்து, ‘‘மஞ்சு, நீ கொடுத்து வைத்தனியம்மா; இப்படி ஒரு அருமையான பிள்ளை கிடைக்க!’’ என்று சொல்லி கதைத்துக் கொண்டிருக்க, சுரேனும் மயூவும் நரேனிடம், ”எங்களுக்கு ட்ரீட் எப்போ?’’ என்று வற்புறுத்தியதால் தான், எல்லோருமாக படம் பார்த்துவிட்டு வெளியே சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கே எஃப் சி வந்துள்ளார்கள்.
ஒருவரை ஒருவர் பகிடி(கேலி) பண்ணி கலகலத்துக் கொண்டிருந்தவர்களை, முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ராமும் நரேனும்.
கதையோடு கதையாக ராகிங் பற்றி சுவாரஸ்சியமாய் உரையாடிக் கொண்டு வந்தவர்கள், புதுவிதமாய் திருக்குறளை வாசிக்க வேண்டி வந்ததைச் சொல்லி ஸ்ரீயை கேலி செய்யத் தொடங்கினர்.
“ஏன்டி, உங்களுக்கு நான் தான் எல்லாத்துக்கும் கிடைப்பேனா? பேசாமல் வாயை மூடுங்கடி; வேற கதையுங்கடி.’’ கோபமாகச் சொல்ல முயன்று கெஞ்சலில் முடித்தாள் ஸ்ரீ.
ஆனாலும், தன்னையறியாமலேயே அவள் விழிகள் எதிரே இருந்த ராமைத் தொட்டு மீண்டன! அவனுமே அவளைத்தான் பார்த்திருந்தான்.
ஸ்ரீ அவ்வளவு சொன்ன பிறகும், அப்பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தாள் மஞ்சு.
‘‘அதைவிடப் பெரிய பகிடி என்ன தெரியுமா நரேன்?’’ விழிகள் நகைப்பில் சுருங்க நரேனிடம் கேட்டவள், அருகிலிருக்கும் ராமை ஒருகணம் பார்த்துவிட்டு, ‘‘ஹாஹா..ஹாஹா..’’ கொஞ்சம் பெரிதாகவே சிரித்தவள்,
மீண்டும் ராமைப் நோக்கியவாறே குறும்பு கூத்தாடும் குரலில் அவனை வம்பிழுக்கும் நோக்கத்துடன், ‘‘ நரேன், உங்களுக்கு ஒன்று தெரியுமா? நம்ம ராமண்ணாதான் அன்றைக்கு ஸ்ரீயை சீனியர்ஸிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறார். ஆனால், கையில் என்ன கடிதம் என்று இவர் கேட்க, ஸ்ரீ காட்டவில்லையாம். அதற்குப் பிறகு இவர்..’’ என்று சொல்லிக் கொண்டு வர, அவளைப் பார்த்து முறைத்தான் ராம்.
”மஞ்சு போதும், எல்லாரும் உம்மையே பார்க்கிறார்கள்; இந்தப் பேச்சை இதோடு விடும்.’’ அவள் பேச்சை நிறுத்த முயன்றான்.
‘நானா? நீங்களா? இதுக்கெல்லாமா நான் அடங்குவேன்!’ நினைத்தவாறே அவனை முறைத்த மஞ்சுவும், ‘‘ஆங்…எங்கே விட்டேன்…ஆ…ராமண்ணாவுக்கு அன்றைக்கு முழுதும் நித்திரையே இல்லையாம்! ஏன் தெரியுமா? அந்தக் கடித்தத்தில என்ன இருந்தது என்று யோசித்துத் தான்.’’ கேலிசெய்து நகைத்தாள்.
ஒருநாளும் இல்லாதவகையில் வெளிப்படையாகவே அவளை முறைத்தான் ராம்.
‘‘மஞ்சு, போதும். அலட்டாமல் சாப்பிடும். இல்லாட்டி நான்…’’ சொல்லிக் கொண்டு வந்தவனை, அதே சிரிப்புடன் எதிர்கொண்டாள் மஞ்சு.
‘‘இப்ப ஏன் இந்தப் பாடுபடுறீங்கண்ணா? நான் பகிடிக்குக் கதைக்கிறேன் என்று எல்லாருக்குமே தெரியும். கூல்ண்ணா கூல்.’’ என்றவள், நரேனின் முறைப்பைக் கவனத்திலேயே எடுக்கவில்லை.
ராமோ தன் தலையில் அடித்துக்கொண்டே, ‘‘எப்படிடா நரேன் உன்னால் மட்டும் முடியுது? சிவா உண்மையிலேயே நிறையப் புண்ணியம் செய்திருக்கிறான். இல்லையென்றால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் சொல்லு பார்ப்போம். ஏதோ அவன் செய்த புண்ணியம் நீ அகப்பட்டுவிட்டாய்.’’ கேலியாகச் சொல்ல, தான் சொல்ல வந்ததை மறந்து, அவன் அப்படிச் சொன்னதற்காக அவனுடன் சண்டை போடத் தொடங்கினாள் மஞ்சு.

