அத்தியாயம் 16.
உறக்கம் தழுவ மறுக்க, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் ஸ்ரீ!
படுத்ததும் எவ்வித சலனமுமில்லாது நித்திரை கொள்வது போல் இன்று முடியாமல், மனமோ கலவையான உணர்வுகளால் கனத்துக் கிடந்தது!
காதல்!
மிக மிக அழகான உணர்வென்று சொல்லிக் கேட்டிருக்கிறாள்!
திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள்!
கதைப்புத்தகங்களில் விரும்பி வாசித்திருக்கிறாள்!
அதேகாதல் இருவரினதும் குடும்பங்களால் ஏற்கப்படாத சந்தர்ப்பத்திலோ, அல்லது காதலில் சம்பந்தப்பட்ட இருவரும் அதற்கு உண்மையாக இல்லையென்றாலோ, நிச்சயம் அது சுகத்தைத் தருமா? அல்லவே!
குடும்பத்தவர்கள், உறவுகள், நட்பு, சுற்றம் அனைவரதும் ஆசியுடன் அழகான காதலை நுகர்ந்தவர்களுக்குமே இப்படி ஒருநிலை வந்தால், மனஉளைச்சலை, பிரச்சனைகளை எதிர்நோக்கத்தானே வேண்டும்! அச்சந்தர்ப்பத்தில் அவர்களை தோள்சாய்த்துத் தேற்ற, அவர் தம் உறவுகள் நிச்சயம் இருப்பாரல்லவா?
அதுவே குடும்பத்தை மீறி, எல்லோர் எதிர்ப்பையும் இலாவகமாகத் தாண்டி வாழ்வில் இணைகையில், தொலைதூரமாய் நீண்ட வாழ்வுப்பாதையில், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தனியே துணையின்றி சந்திக்க வேண்டிய நிலைகுட்படுகின்றனர்.
இப்படியான பல நேரங்களில், பிரச்சனைகளின் கொடூர முகங்களுக்கு எதிர் நிற்க முடியாமல், தோள் தாங்கி உதவிகள் செய்ய உறவுகளுமின்றி அல்லற்படுவோரும் அநேகர் எனலாம்.
இவற்றையெல்லாம் கண்டும் கேள்விப்பட்டும், ‘ஏன் தான் இப்படிக் காதலிப்பான்? பிறகு கஷ்டப்படுவான். பேசாமல் அந்த வேலையையும் அம்மா அப்பாவே பார்த்துக் கொள்ளட்டும்.’ என்ற மனப்போக்குள்ளவள் ஸ்ரீ.
அதற்கென்று, அவள் காதலுக்கு எதிரியானவள் அல்ல! காதலிப்போரை வெறுப்பவளும் அல்ல!
‘நமக்கு இந்த வேலை வேண்டாம்.’ என்ற எண்ணம் உடையவள்.
அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவள், இன்று, இத்தனை நாட்களும் இல்லாதவாறு குழம்பிப்போய் இருக்கிறாள்! தவிக்கிறாள்!
ஒருவர் ஒரு விடயத்தை மிகச் சாதாரணமாக நினைத்து, நாட்கள் செல்லச் செல்ல அதை மறந்தும் போகலாம். அதுவே இன்னொருவரால் மிக முக்கியமான விடயம் போல சொல்லப்படுகையில், இவருக்கும் பெரிதாக தோன்றும் அல்லவா?! அப்படி ஒரு நிலையை, தன்னையறியாமலேயே தனது சுபாவத்தால் ஏற்படுத்தி வைத்தாள் மஞ்சு. அதுவும் ஒருதரம் இல்லை மூன்று முறைகள்.
முதல் முறை, தவறுதாலாய் மோதி, திட்டிப் பேசியது ராமைத்தான் என்பதை தங்களிடம் சொல்லாது மறைத்தாள் என்று தோழியைக் கேலி செய்தவள், ‘‘உன்னைப் பற்றி அவர் துருவித் துருவி கேட்டார்டீ…என்னமோ நடத்து…நடத்து.’’ என்று கேலி பேசி, அக்கதை ஓய்ந்து போகையில், திரும்பவும் முதல் நாள் விரிவுரையில், ‘‘உன்னையே ஒரு மாதிரி பார்த்தார்டீ.’’ என்று கலாய்த்தாள்.
பிறகும், ”ராகிங்கில், உன் கையிலிருந்த கடிதம் என்னவென்று திரும்பத் திரும்ப, அதுவும் ஃபோன் பண்ணிக் கேட்டார் டீ!’’ என்று கேலி மேல் கேலி செய்தவள். இன்றோ, அத்தனை பேர் முன்னிலையில் அதை மீண்டும் சொல்லிக் காட்டி விட்டாள்.
‘எருமை மாடு, என்ன நினைத்துக்கொண்டு கதைப்பாளோ!? கொஞ்சமும் யோசித்துக் கதைப்பதில்லை! இவளுக்கு இதே வேலையாப் போச்சு!’
‘என்னதான் என்றாலும் அவளுக்கு, அவர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். எனக்கு அவர் விரிவுரையாளர் மட்டும்தானே!’ மக்கு மக்கு…அவருக்கும் நல்ல கோபம் வந்தும் மெல்லச் சமாளித்தார்.’ மனதில் தனது தோழியைத் திட்டியவளால், தன் தோழி மீது நிச்சயமாய் கோபம் கொள்ள முடியவில்லை.
சிறு வயதிலிருந்து பழகும் அவள் குணம், மிகவும் நன்றாக இவளுக்குத் தெரியும். இப்படிக் கதைக்க வேண்டும் என்று நினைத்து அவள் கதைப்பதில்லை. ஏதோ அந்த நேரத்தில் எல்லோரையும் சிரிக்க வைக்க, தான் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்க சிரிக்கச்சிரிக்க கதை சொல்வாள்; அது சில சமயம் இப்படியும் ஆகிவிடும்!
இப்படிக் குழம்பிய ஸ்ரீ, ‘ நாளை எப்படி சாதாரணமாக அவரின் வகுப்பில் இருக்க முடியும்?!’ எனக் குழம்பினாள்.
‘அவரும் தான் அப்பிடிக் கேட்டிருப்பாரா? இல்லாவிட்டால் இவள் புலுடா விடுறாளா? கேட்டிருந்தால் இவர் ஏன் அதைக் கேட்பான்? அதுவும் ஃபோன் செய்து!’ தன்னுள்ளே கேள்விக் கணைகளை ஏவிக் கொண்டிருந்தாள், பதிலின்றியே!
கடைசியில், ‘இந்த எருமை தான் சின்ன விசயத்தைப் பெரிதாகக் கதைக்கிறாள்.’ என முடிவெடுத்தவள், சாமம் ஆகிவிடவே கண்களை இறுக்க மூடி நித்திரை கொள்ள முயன்றாள்.
‘கேஎப்சி’யிலிருந்து, தோழிகள் தம் சகோதரங்களுடன் சென்றுவிடவே, ‘‘சரி..கவனாமாப் போங்க.’’ என, விடைகொடுத்த ராமும் நரேனும், தாமிருவருமாக வீடு வந்து சேர்ந்தனர்.
மஞ்சு, ராமை கேலி செய்ததில், சமாளிப்பாகக் கதைத்தாலும், அவனுக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொண்ட நரேனும், அந்த இடத்தில் மஞ்சுவிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், ‘கட்டாயம் அவளிடம் இது பற்றிக் கதைக்க வேண்டும்! எல்லாமே பகிடியில்லை என்று சொல்ல வேண்டும்! இவன் இப்போ அவர்களின் விரிவுரையாளர்; அவள் அப்படியா நடக்கிறாள்? சரி, அவள் அப்படி நடக்காவிட்டாலும் பரவாயில்லை; அவனும் ஒன்றும் நினைக்கமாட்டான். ஆனால், எல்லோருக்கும் முன்னால் வைத்து கேலி செய்கிறாளே!’ மனதில் திட்டிக் கொண்டு வந்த நரேன்,
ராம் அமைதியாய் தன்னறைக்குள் செல்வதைப் பார்த்துவிட்டு, ஹாலில் இருந்த அவன் பெற்றவர்களுடன் அமர்ந்து கதைக்கத் தொடங்கினான்.
நரேனுடன் கதைத்துக் கொண்டிருந்த ராமின் பெற்றவர்களின் ஒரே கவலை, ராமின் திருமணம் தான் !
எதைப் பற்றிக் கதைத்தாலும் கடைசியில் அவர்கள் பேச்சு, ‘‘ இவன் இன்னும் ஒரு கல்யாணத்துக்கு ஓமென்று சொல்கிறான் இல்லையே!’’ என்பதில் தான் வந்து நிற்கும்.
இன்றும் அப்படியே இவனிடம் தங்கள் மனக்குறையை கொட்டிக் கொண்டிருந்தனர். நரேனுக்குத்தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘உயிர்க் காதலின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அவமானம், தலைகுனிவு, வேதனையால் உறைந்து நின்றவனை, இந்தளவுக்கு மீட்டுவர நாங்க பட்டபாடுகள் தான் எத்தனை!?’ என நினைத்துப் பார்த்தவனால், என்றும் போலவே, ‘‘கொஞ்சம் பொறுமையா இருங்க ஆன்ட்டி; எல்லாம் சரி வரும்.’’ என்று மட்டுமே சொல்ல முடிந்தது.
ஆனாலும், ‘இந்த முறை இதைப் பற்றிக் கொஞ்சம் கதைக்க வேண்டும்; இப்படியே விட்டாச் சரிவராது!’ தன்னுள் முடிவெடுத்தவாறே அவர்களுடன் தன் பேச்சைத் தொடர்ந்தான் நரேன் .
தன்னறைக்குள் சென்ற ராம், சிறிது நேரம் மௌனமாக தனது சிந்தனைகளில் உழன்றவன், ‘இப்படியே இருந்தாச் சரி வராது…’ என நினைத்து விட்டு வெளியே சென்று, தனது மனப்புழுக்கம் மறையும் வரை , இலேசான வெதுவெதுப்பான கிணற்றுநீரை அள்ளி அள்ளித் தலையில் ஊற்றிக் கொண்டான்.
தன் மனதில் எஞ்சி நிற்கும் வேண்டாத நினைவுகளின் எச்சங்கள் எல்லாம், தம் சுவடின்றி நீரிலே கரைந்து போய் விடாதா என்ற ஏக்கத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தவன், தண்ணீர் இழுத்துக் கைகள் ஓய்ந்த பின், தலையைத் துவட்டிக்கொண்டே மீண்டும் தன்னறைக்குள் நுழைந்தான்.
உடைமாற்றிக் கொண்டு வந்தவன், இன்னமும் நரேன் தன் பெற்றவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பவும் பின்பக்கம் சென்று மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
வானிலே ஒளிரும் பால் நிலவையும், அதனை மறைத்து அப்பப்ப அதோடு தொட்டு விளையாடும் பஞ்சு மேகங்களையும், கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் அழகிய நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில், அன்று மாலை மஞ்சு செய்த கேலிகளும், அதைக் கேட்டு பதைபதைத்துத் தவித்த ஸ்ரீயின் தோற்றமும், அவன் அனுமதியின்றி வந்து வந்து போயின!
அது மட்டுமின்றி, தான் வாழ்வென்று நம்பியவள் செய்த துரோகமும், தன்னை ஒரு பழைய காகிதம் போலத் தூக்கிப் போட்ட அவள் செய்கையும், எவ்வளவுதான் மனதிலிருந்து அகற்ற நினைத்தாலும் முடியாமல் அவன் நினைவில் வந்து போயின!
‘இந்த நினைவை அறவே மறந்து, என்னால் இயல்பாய் இருக்க முடியுமா?!’ என்று நினைத்தவனுக்கு முடியாதென்றே தோன்றியது.
‘‘அதெப்படித்தான் அவள் மட்டும் இன்னொருத்தனைக் கல்யாணம் செய்து, எந்தவித சலனமும் குற்ற உணர்வும் இல்லாமல் வாழ்கின்றாளோ?! வியந்தான்.

