அன்பெனும் பூங்காற்றில் – 18

அத்தியாயம் 18 .

அன்று நல்லுர்த் தேர்த் திருநாள்!
எல்லோரது வீட்டிலும் போல, மயூ வீட்டிலும் அதிகாலையில் இருந்தே ஒரே பரபரப்பாய் இருந்தது !
கொழும்பிலிருந்து அகிலும் வந்திருந்ததால், அதுவும் அடுத்த மாதம் மதுவுக்கும் அவனுக்கும் கல்யாணமும் நடக்கவிருப்பதால், கேலிப் பேச்சுக்களும் வேலைக்களுமாய், ஒரே மகிழ்ச்சி ஆரவாரத்தில் நிறைந்திருந்தது அவர்கள் வீடு!
இத்தனை ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், மனதில் தளும்பி நின்ற தவிப்பை வெளியில் தெரியாமல் மறைக்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள் மயூ.
அப்படியிருந்தும், ‘‘ஏன்மா ஒரு மாதிரி இருக்கிறாய்? உடம்புக்கு ஏதும் முடியாமல் இருக்கா?’’ பல தடவைகள் வினவிய ராஜி, ‘‘விரதமும் இருக்கிறாய், அது தான் சோர்வாய்த் தெரிகிறாய்!’’ தானே பதிலும் சொல்லிக் கொண்டார்.
என்றாலும், தாயின் கூரிய பார்வையிலிருந்து தப்பிப்பதற்கும், தன்னை அடக்கிக் கொள்ளவும் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள் மயூ.
எல்லாவற்றுக்கும் மேலாக, கேள்விகளால் துளைத்தெடுக்கும் தன் மனசாட்சியிடமிருந்து இலேசில் தப்ப முடியாமல், அதற்குப் பதில் தரவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள்.
‘ராகவன் அங்கிளோட சண்டை என்று தானே போன வருடங்கள் இந்தப் பக்கம் வரவில்லை. இப்போது தான் அப்படியில்லையே! ஆனாலும், இந்த முறையும் வரவில்லையே!’’ நினைத்து மறுகினாள்.
‘அண்ணாவிடம் கேட்டுப் பார்ப்போமா? அவர் சத்தியனின் ஃப்ரெண்ட் தானே!’ இந்த எண்ணத்தின் பிடியில் அகப்பட்டுத் திண்டாடி, ‘நீ ஏன் கேட்கிறாய் என்று அண்ணா கேட்டால் என்ன பதில் சொல்வது?!’ என நினைத்து அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டு, இயந்திரத் தனமாக திருவிழாவுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள் மயூ.
ராகவன் தன் மகள் மலர் மூலம் நடந்ததை அறிந்த பின், மூத்தமகள் திருமணத்துக்குக் கூட தங்கையை அழைக்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் குற்றஉணர்ச்சியிலும், இம்முறை குடும்பமாய் நேரே கொழும்பு சென்று, சின்ன மகள் மது கல்யாணத்துக்கு அழைப்பும் வைத்து விட்டார்.
இப்பொழுது அண்ணாவும் தங்கையும் தம் தேவையற்ற மனக்கசப்புக்களை மறந்து சேர்ந்து விட்டார்கள். ஆனாலும், திருவிழாவுக்கு இன்னும் அவர்கள் வரவில்லை. வரப் போவதாக ராகவன் சொல்லவும் இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள், பிரச்சனைகள், பார்க்க வேண்டிய முக்கியமான விடயங்கள் இருந்தாலும், நல்லூர்த் தேர்த்திருவிழாவுக்கு முன் அவை எப்படியும் முக்கியமற்றுப் போய்விடும்.
திருவிழாக் காலங்களுக்கே உரிய ஆர்ப்பாட்டமும் கலகலப்பும் யாரையும் தம் சிந்தையை அதன் பால் திருப்பி விடுமல்லவா?
அப்படியே, மயூவும் தன் உள்ளக் குமுறல்களை மறைத்து ஒருவாறு தயாராகியவள், வீட்டினரும் தயாராகிய பின்னர் எல்லோருமாக சேர்ந்து கோவிலை நோக்கிப் புறப்பட்டனர்.
மயில்கழுத்து வண்ண சில்க்காட்டன் சேலையில், அதற்குரிய எளிமையான பான்சி நகைகளுடன், அழகு தேவதையாக வந்தாள் மயூ!
தன்னருகில் கொள்ளை அழகுடன் வந்து கொண்டிருக்கும் ஆசைத் தங்கையை அடிக்கடி ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான், கூடவே வந்து கொண்டிருந்த அவள் அண்ணன் அகில்.
இதைக் கவனித்த மயூ, ‘‘என்னண்ணா, ஒரு மாதிரிப் பார்க்கிறீங்க?’’ புன்னகையுடன் வினவினாள்.
‘‘ம்ம்..என் குட்டிச் செல்லம் இத்தனை அழகா என்று பார்க்கிறேன்!’’ என்றான் அவன், கனிந்த முறுவலுடன்.
அகில் அப்படிச் சொன்னதும், தன் தந்தையுடன் கதைத்துக் கொண்டு வந்த மயூவின் தம்பி சுரேன், ‘‘அண்ணா! என்றாலும் உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியவில்லையா? எருமைமாடு போல வளர்ந்து நிற்கிற அக்காவைப் பார்த்து, ஹா..ஹா….குட்டியா? போங்கண்ணா…உங்க தங்கச்சிப் பாசத்துக்கு அளவே இல்லை!’’ தன் வழக்கப்படி மயூவை வம்பிழுப்பதற்காகச் சொன்னான்.
‘‘நீ தாண்டா எருமை! கோவிலுக்குப் போகும் போது சரி, உன் வாயிலிருந்து நல்லது வருதா? அது சரி, நீ கோவிலுக்கு வருவதே வேற வேலைக்குத் தானே!’’ தம்பியை செல்லமாகக் கடிந்து கொண்டே நக்கலாகச் சொன்னாள் மயூ.
‘‘அப்பா வேண்டாம், அக்காவை நிறுத்தச் சொல்லுங்க!’’ இவர்களின் கலாட்டாக் கதைகளைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே வந்த தந்தையிடம் முறையிட்டான் சுரேன்.
‘‘போதும்டா; நீ தான் தொடங்கினாய். எனக்கு எப்பவுமே நீங்க இரண்டு பேருமே குட்டிச் செல்லங்கள் தான்டா. சரி விடு, கோவிலுக்குப் போகும் பொழுதுசரி கொஞ்சம் பேசாமல் வாடா.’’ இடையிட்ட அகில் சமாதானமாகச் சொன்னான்.
‘‘சரி அண்ணாவுக்காக…’’ என்ற சுரேன், மயூவைப் பார்த்து முறைத்துக் கொண்டே தந்தையுடன் கதைத்தவாறு முன்னே சென்றவன், வழியில் தன் நண்பர்களைக் கண்டதும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
‘‘சரிடா, போய் நீ வந்த வேலையைப் பார்! அடி கிடி வேண்டிடாத.’’ என, தன்னைச் சீண்டிய தமக்கையை பார்த்துக் கண் சிமிட்டிய சுரேன், அவர்களை விட்டு விலகிச் செல்ல, வழி நெடுகிலும் தெரிந்தவர்களின் நல விசாரிப்புக்களுடன் ஒருவாறு கோவிலை வந்தடைந்தனர் மயூ குடும்பத்தினர்.
கோவிலைச் சுற்றி திரளாக குவிந்திருந்தனர் மக்கள்!
வண்ண மயில்களாக இளம் பெண்கள் கூட்டம்! அவர்களை, கலாட்டா செய்வதும், பார்த்தும் பாராமல் இருப்பதுமாய் இளைஜர் கூட்டம்!
சந்தோஷ ஆரவாரத்துடன் அங்குமிங்குமாய்த் துள்ளித் திரியும் சிறுவர் சிறுமியர்!
பக்தி மயமாக, தங்கள் தேவைகள் கவலைகள் எல்லாவற்றையும், முருகனிடம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் பெரியோர் கூட்டமுமாக, கோவிலுக்குள்ளேயும் வெளியேயும் மக்கள் திரண்டிருந்தனர்.
கோவிலுக்கருகில் வந்ததும், அகிலும் தன் நண்பர்களைக் காணவென்று விலகிச் சென்று விட, அப்பா ஆண்கள் புறமாகச் செல்ல, மயூவும் ராஜியும் பெண்களுடன் நின்று கொண்டனர்.
தேர் இழுக்கத் தொடங்கியவுடன், அதோடு சேர்ந்து திரளான மக்கள் கூட்டமும் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.
சற்றுத் தள்ளி தாயுடன் வந்து கொண்டிருந்த மயூவின் கால்கள் நகர்ந்தாலும், அவள் விழிகளோ, ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் அச்சன சமுத்தரத்தை துளாவிக் கொண்டிருந்தன!
அவள் மனமோ, நிலையில்லாது தவித்தது! ஏக்கத்தின் கனம் தாங்காது தளர்ந்து தள்ளாடியது! ‘இதுவரை பொறுத்தது போதும் போதும்!’ என, கூக்குரல் எழுப்பியது!
விழிகளைச் சுழற்றியவாறே அங்கங்கே எதிர்ப்பட்ட அறிமுகங்களுக்கு முறுவலுடன் தலையாட்டி வந்தவளின் பார்வை ஓரிடத்தில் பதிய, அவள் விழிகள் இரண்டும் தம் அசைவை மறந்து நிலைகுத்தி அவ்விடத்திலேயே நின்றன!
தேர்க் கொட்டஹைக்குப் பக்கத்தில் அவள் அண்ணாவுடன் கதைத்துக் கொண்டு நிற்பவன், ‘ஆமாம்! சந்தேகமே இல்லை!’ கூக்குரலிட்டது அவளிதயம்!
‘அவர் …அவர் சத்தியனே தான்!’ இனம் கண்ட இதயமோ துடிக்க மறந்தது!
இதுவரை அவளுள்ளே திமிராக கோலோச்சி, அவளைப் படாதுபாடு படுத்திய ஏக்கமும் தவிப்பும், உதயனைக் கண்ட பனியாக உருகி மறையத் தொடங்கின!
வருடக் கணக்கில், அவன் வார்த்தைகளின் பலத்தில் அழகாக பொத்திப் பொத்தி அவள் வளர்த்து வைத்திருந்த காதல் செடி, மாயமோ மந்திரமோ என்ற வகையில் விருட்ஷமாகி பலவண்ண மலர்களை மலரச் செய்தது!
அதன் சுகந்தத்தின் மயக்கத்தில் தள்ளாடினாள் மயூ!
இத்தனை வருடங்களின் பின் கண்ட தன்னவனை, அணுவணுவாக வருடத் துணிந்தன அவள் நயனங்கள்!
‘எவ்வளவு மாறிவிட்டார்!? கொஞ்சம் உடம்பு வைத்திருக்கோ! அவர் கம்பீரத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் மீசை வைத்திருக்கிறாரே!’ பட்டு வேட்டியும், தோளைத் தழுவிய பட்டுத் துண்டுமாக நின்றவனை விட்டு விலக மறுத்த விழிகளோடு, கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்தாள் மயூ.
‘உனக்குள் தான் இத்தனை ஏக்கமும் தவிப்புமா? அவரைப் பார்! எவ்வளவு சந்தோசமாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்! இவருக்கு உன் நினைவு இருக்குமென்று நினைக்கிறாயா?’ அவளுள்ளே எழுந்த கேலிக் குரலில் ஆடிவிட்டாள் மயூ.
தன் தேடலுக்கு விடைகிடைத்த மகிழ்வில் உள்ளம் துள்ள, தன்னை மறந்து அவனை ஆராய்ந்தவள், தான் இவ்வளவு தவிக்க, அவன் தவிப்பின்றி சாதாரணமாக நிற்கின்றானோ என்ற ஐயம் எழுந்ததும், அவன் மீது இலேசான கோபமே உருவானது!
அகிலுடனும், தன்னுடன் கொழும்பிலிருந்து வந்திருந்த இரு சிங்கள நண்பர்களுடனும், கதைத்துக் கொண்டு நின்ற சத்தியனின் பார்வையில் மிகத் தற்செயலாகப்பட்டாள் அவன் மனம் கவர்ந்தவள்.
அவனையே விழி அகலப் பார்த்துக்கொண்டு வந்தவள், அவன் விழிகளைச் சந்தித்த அக்கணத்தில், இரு உள்ளங்களிலும் இனம் புரியாத் தவிப்பு, அது மட்டுமின்றி, ‘ அப்பாடா!’ என்ற மகிழ்ச்சி!
முட்டைக் கண்கள் விரிய தன்னைப் பார்த்தவளை, ஒற்றைப் புருவம் உயர்த்தி ஒர் மென்சிரிப்புடன் விழிகளால் நலன் விசாரித்தான் சத்தியன்.
ஆனால், அதை அவள் புரிந்து கொண்டாளா என அவனால் அனுமானிக்க முடியவில்லை.
திரண்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் சென்று கொண்டிருந்தவளின் உருவை, தன்னால் முடிந்தவரை உள்வாங்கிக் கொள்ள முயன்றான் அவன்.
‘பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாள். அதுவும் சேலையில்…’ மனதில் நினைத்துக் கொண்டவன், அவளைப் புகைப்படங்களில் பார்த்திருந்தாலும், நீண்ட நாட்களின் பின் நேரில் பார்க்கும் போது ஏற்பட்ட இன்ப, இதமான உணர்வு சொல்லிலடங்காது.
அப்போதுதான் தன் தங்கையையும் தாயையும் கண்ட அகில், தங்கள் பக்கமாகவே பார்த்துக் கொண்டு வரும் தங்கையைப் பார்த்துக் கையசைக்க, தன் உணர்வுக்கு வந்த மயூ, தமையனைப் பார்த்து தலையசைத்து விட்டு அந்தப் பக்கம் பார்ப்பதையே தவிர்த்தாள்.
‘நான் அவரை பார்த்ததை அண்ணா கண்டிருப்பாரா?’ தன்னைத்தான் கடிந்து கொண்டாள்.
‘அண்ணா, அவர் வந்தது பற்றி சொல்லவே இல்லையே? இப்போது இங்கே வைத்துத்தான் கண்டாரோ?’ தானே கேள்வியும் கேட்டு விடை சொல்ல முயன்றாலும், அவள் உள்ளம் என்றுமில்லா வண்ணம் அமைதியுடன் இருந்தது .
அதே நேரம், வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு! ‘‘முருகா நன்றி.. நன்றி..’’ என்று, வாய் ஓயாமல் முணு முணுத்தது.
தேர் புறப்பட்ட இடத்தை வந்தடையவும், அர்ச்சனை செய்வதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது. ‘இதற்குப் பிறகு அன்னதானம், எப்படியும் வீடு போக மூன்று மணியாகும்.’ என எண்ணியவள், ‘‘தலை சரியாய் வலிக்குதம்மா; நான் வீட்ட போகட்டா?’’ என்றாள், தாயிடம் கெஞ்சலாக .
‘‘அது தான்மா, சொன்னால் கேட்க மாட்டாய்! ஒவ்வொரு நாளும் தலையில தண்ணி ஊற்றினால் தலைவலிக்காமல் என்ன செய்யும்!? வெயில் ஒரு புறம், சரி கொஞ்சம் பொறு; இந்தக் கூட்டத்தில அப்பா எங்கே நிற்கிறார் என்று பார்; அர்ச்சனைக் கூடையைக் கொடுத்துவிட்டு நானும் வருகிறேன்.’’என்ற ராஜி, கணவனைத் தேடத் தொடங்கினார் .
‘‘இல்லம்மா, நீங்க எல்லாம் முடிச்சிட்டே வாங்க. நான் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வாறனான் தானே; தனியப் போறேன். கொஞ்சம் நித்திரை கொண்டால் எல்லாம் சரியாகும்.’’ என்றவள், தாயிடம் வீட்டுத் திறப்பை(சாவி) வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
கோவில் வீதியில், பத்து நிமிட நடையில் உள்ள வீட்டை வந்தடைந்தவள், தன் அறைக்குச் சென்று அங்கிருக்கும் கதிரையில் ‘தொப்’பென்று அமர்ந்தாள். மறுகணம் அதுவரை அடக்கியிருந்த கண்ணீர் வழிய, ‘‘ ஓ’’ வென்று கதறிவிட்டாள்.
‘இத்தனை வருடங்களுக்குப் பிறகு கண்டும், என்ன மாதிரி இயல்பாகப் பார்க்கிறார்!?’
‘அவர் பார்வையில காதல் இருந்ததா? என் மனம் துடிக்கிறது, தவிக்கிறது போல அவரும் துடித்துத் தவிக்கிறாரா?’ என்ற கேள்விகள் அவளை போட்டு வதைத்தன!
இப்படி ஒவ்வொன்றையும் யோசித்துக் கதறியழுதவள், அழுதபடியே அருகிலிருந்த மேசையில் தலைசாய்த்து உறங்கி விட்டாள்.

error: Alert: Content selection is disabled!!