அத்தியாயம் 19.
திருவிழாவுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அம்மா தங்கைகளுடன் யாழ் வந்திருந்தான் நரேன்.
நல்லூரடியில் வசிக்கும் தம் உறவுக்காரருடன் தாயும் தங்கைகளும் தங்க, அவன் வழமை போல் ராம் வீட்டில் தங்கியிருந்தான்.
காலையில் கோவிலுக்கு வந்தவனும் மஞ்சுவும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருந்தாலும், இன்னமும் சந்தித்துக் கொள்ளவில்லை.
‘‘இந்த மனிசன் வந்து இரண்டு நாளாச்சு! ஒருதரம் என்னை வந்து பார்க்கவில்லை. என்றாலும் அம்மாவுக்கு இப்படிப் பயப்படுகிறாரே!’’ மனம் சுணங்கி முணுமுணுத்தவாறே, தன் அம்மா, அண்ணி, தங்கையுடன் தேரை வலம் வந்து கொண்டிருந்த மஞ்சுவின் பார்வையில் பட்டனர், நரேனின் தாயும் தங்கைகளும்.
திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை மெல்ல விலக்கிக் கொண்டு அவர்கள் அருகில் சென்றவள், ‘‘ஹாய், எல்லாரும் எப்படி இருக்கிறீங்க? நல்லா வளர்ந்திட்டீங்க! படிப்பெல்லாம் எப்படிப் போகுது?’’ தன்னைவிட சில வருடங்கள் சிறியவர்களான நரேனின் தங்கைகளைப் பார்த்து இயல்பாகக் கேட்டவள், உள்ளே எழுந்த தயக்கத்தை மெல்ல ஒதுக்கி, துணிவாக நரேனின் தாயாரைப் பார்த்து, ‘‘எப்படி இருக்கிறீங்க ஆன்ட்டி? வந்து, வீட்டுப் பக்கம் வரவேயில்லை; கொழும்புக்குப் போக முதல் கட்டாயம் வாங்க.’’ அன்பாக வரவேற்றாள்.
‘இவளின் துணிச்சலைப் பார். எல்லாம் அவன் குடுக்கின்ற இடம்தானே! ஒன்றுமே தெரியாத மாதிரி அல்லவா கதைக்கிறாள்!’ மனதில் பொரிந்து கொண்ட நரேனின் தாயார், தமக்கு தூரத்துச் சொந்தமான மஞ்சுவின் அண்ணியைப் பார்த்து ஆதரவாய்ச் சிரித்தவர், ‘‘எங்களுக்கு என்ன குறை! இப்ப வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறோம். இனித் தான் என்னென்னவோ…’’ எல்லோருக்கும் பொதுவாக கேலியோடிய குரலில் சொன்னார்.
அவரது கேலியையும், ‘கெட்டது நடந்தால் அது உன்னால் தான்..’ என்று அவர் மறைமுகமாய்ச் சொன்னதையும் அங்கிருந்தவர்கள் அனைவரும் உணர்ந்தாலும், உடனே சுதாகரித்த அவரின் மூத்த மகள், ‘‘மஞ்சுக்கா, நாங்க நல்லா இருக்கிறோம்; படிப்பு எல்லாம் சூப்பராப் போகுது! உங்களுக்கு கம்பஸ் எப்படிப் போகுது?’’ என்றவள், மஞ்சுவின் கரங்களைப் பற்றிக் கொண்டே, ‘‘கட்டாயமா, போறத்துக்கு முதல் வீட்ட வாறோம்கா; நான் அண்ணாவிடம் கேட்கிறேன்.’’ என்றாள் பாசமாக!
அப்படிச் சொன்ன மகளை, தீ விழி விழித்துப் பார்த்தார் தாய். தன் ஆத்திரத்தைக் காட்ட இது சமயமில்லை என நினைத்துத் தன்னை அடக்கிக் கொண்டே, ‘‘ சரி பிறகு பார்ப்போம்…’’ என்ற படி அவர்களை விட்டு விலகி நடக்கத் தொடங்க, பிள்ளைகளும், ‘‘வாறோம்கா!’’ என்றபடி தாயைத் தொடர்ந்தனர்.
அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற மஞ்சுவின் அம்மா, ‘‘என்னம்மா, இவர் கதைப்பதைப் பார்த்தால்..’’ கவலையாகத் தன் மருமகளைப் பார்த்து ஆரம்பிக்க, மாமியாரின் கரங்களை ஆதரவாகப் பற்றித் தடுத்தவள், ‘‘கவலைப்படாதீங்க மாமி, எல்லாமே சந்தோசமாக நடக்கும்!” தன் கலங்கிய விழிகளை மறைத்த மஞ்சுவைப் பார்த்தவாறே சொன்னாள்.
தேர் இருப்பிடம் வந்து சேர்ந்தபின், சனத்திரளில் முண்டியடித்து ஒருவாறு அர்ச்சனையை செய்த நரேனின் தாய், பிள்ளைகளுடன் அன்னதானம் நடக்கும் இடத்துக்குச் சென்றார் .
சாப்பிடுவதற்காகப் பந்தியில் அமர்ந்தவர் மனமோ, உலைக்கலமாய்க் கொதித்துக் கொண்டிருந்தது !
எந்த விதத்திலும் அவரால் மகனைத் தன் வழிக்குக் கொண்டு வர முடியவில்லையே!
‘‘கட்டினால் மஞ்சுவைத் தான் கட்டுவேன்! அதற்கு சம்மதம் சொல்.’’ என்று பிடிவாதம் பிடிப்பவனை மாற்றி, தான் பார்த்திருக்கும் பெண்ணுடன் திருமணத்தை நடத்துவதெப்படி என்று ஏற்கனவே குழம்பிக் கொண்டிருந்தவர், இப்போது மஞ்சுவை நேரில் கண்டதும், அவள் இலகுவாய்த் துணிவுடன் தன்னுடன் கதைத்ததும், மிகவும் கோபம் கொண்டார்.
‘நீ என்ன தான் தலைகீழாக நின்றாலும், என் மகன் உனக்கு கிடைக்க மாட்டான். அது மட்டும் நான் இருக்கும் மட்டும் நடக்காது!’ மனதில் கறுவிக் கொண்டவர், அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
‘‘அம்மா, வாங்கம்மா கடைகள் பார்ப்போம்!’’ ஆசையாக இழுத்த சின்னமகளை முறைத்து, ‘‘உனக்கு உன் வேலை ஆக வேண்டும்; வேறு எதைப் பற்றியும் கவலையே இல்லை. மனிசருக்கு மண்டை இடி தாங்க முடியாமல் இருக்கு! சரி வாங்க ஒரு சுற்றுப் போய்விட்டு வீட்ட போவோம்…’’ சிடுசிடுத்தவாறே கடைகளை நோக்கித் திரும்பியவர், எதிரில் வந்த மஞ்சுவின் தந்தை மணியைக் கண்டு அப்படியே நின்றார்.
‘‘மஞ்சுவின் அப்பாவுக்கு மட்டும் இன்னும் எங்க விஷயம் தெரியாதம்மா, நீங்க சம்மதம் சொன்னதும் அவரிடம் சொல்லலாம் என்று இருக்கிறோம்.’’ என, மகன் தன் காதல் விடயத்தை தன்னிடம் சொன்ன போது கூறியதை நினைத்துப் பார்த்தவர் மூளை, விரைவாகச் சிறுதிட்டம் ஒன்றைத் தீட்டியது.
‘செலவில்லாமல் பொம்பிளப் பிள்ளையைக் கரையேற்றப் பார்க்கிறாரே மனிதன்!’ மனதில் திட்டிக்கொண்டே முகத்தில் புன்னகையைத் தவழ விட்டவர், “எப்படிங்க இருக்கிறீங்க? என்னைத் தெரியுதா?’’ என்றார், வருவித்த மென்மையான குரலில்.
மஞ்சுவின் தந்தை யோசனையாய் நெற்றியைச் சுருக்கவும், ‘‘ இதென்ன! அவ்வளவு கெதியா மறந்திட்டிங்களா? நான் நரேனின் அம்மா…’’ என்று சொல்ல, களைத்திருந்த முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டினார் பெரியவர்.
‘‘ஓ! பாருங்க வெயிலில் நிறைய நேரம் நின்றது, களைப்பில் உடனே தெரியவில்லை. ஞாபகம் வரவில்லை. ம்ம்ம்.. பார்த்தும் நிறைய நாட்களாகிவிட்டது தானே!’’ என்றவர், ‘‘எப்படி இருக்கிறீங்க? நரேனும் வந்திருக்கிராறா? வீட்டுப் பக்கம் காணவில்லையே!’’ என்றார் தொடர்ந்து.
‘இங்க பாருடா, இங்கே வந்ததும் இவர் வீட்டில போய் ‘சைன்’ வைக்க வேண்டுமாம்; குடும்பமே வளைச்சுப் போடுவதிலேயே குறியா இருக்கு!’ மீண்டும் மனதில் திட்டிய ரஞ்சி, ‘‘என்ன செய்வது. நிறைய நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறோம், சொந்த பந்தங்கள் வீடுகளுக்குப் போகவே நேரம் போதவில்லை!’’ என்றவர், ‘‘சாப்பிட்டுவிட்டீங்களா?’’ என்றார் பெரியவரிடம்.
‘‘இல்லம்மா, இனித்தான்; அதற்காகத் தான் வந்தேன்!’’
‘‘சரி சரி போய்ச் சாப்பிடுங்கோ. நாங்களும் கடைப் பக்கம் ஒருக்காப் போவோம் என்று பார்த்தோம்.’’ என்றவர், நின்ற இடத்தை விட்டு நகராது, தயக்கமும் இலேசான தவிப்புமாக அவரைப் பார்த்தார்.
‘‘நான் சொல்கிறேன் என்று நீங்க குறை நினைக்காதீங்க. வயதில் பெரியவங்க, அதுமட்டுமில்லாமல் நாலும் தெரிஞ்சவங்க. அதனால தான் சொல்கிறேன்.’’ என்றவர், தன்னையே கேள்வியாகப் பார்த்திருக்கும் பெரியவரை இப்போது கண்கள் கலங்கப் பார்த்தார்.
‘‘உங்களுக்கே எங்க வீட்டு நிலைமை தெரியும். பாருங்க, நல்லதொரு சம்பந்தம் நரேனுக்கு பேசி வந்திருக்கு!’’ என்று தொடங்க ,
‘‘அப்படியா! நானும் சிவாவிடம் அடிக்கடிக் கேட்கிறனான். சரி எப்போது கல்யாணம்? பெண் உங்க சொந்தத்திலா?’’ வெகுளியாக வினவினார் மஞ்சுவின் தந்தை.
‘ஹைய்யோ, அதற்கு நீங்க பெத்து வைத்திருக்கும் வாயாடி ரத்தினம் விட்டாத் தானே!’ மனதில் திட்டிய நரேனின் தாய், ‘‘அது வந்து…அதைத் தானே சொல்ல வாறேன். அவன் மாட்டேன் என்று நிற்கிறான். சின்னப் பிள்ளைகள் பார்க்கிறது, பேசுறது, அதைக் காதல் கத்தரிக்கா என்று சொல்வது வழமை தானே! ஆனாப் பாருங்க, வாழ்க்கை என்று வரும் போது இரண்டு குடும்பத்துக்கும் சரி வருமா என்று பாக்க வேண்டும் இல்லையா?’’ பெரியவரிடமே கேள்வி கேட்டார்.
‘இதையேன் என்னிடம் கேட்கிறார்?’ நினைத்துக் கொண்டாலும், ‘‘அது சரி தான். கல்யாணம் என்றால் என்ன விளையாட்டா? இரண்டு குடும்பமும் காலத்துக்கும் சேர்ந்திருக்க வேண்டும் தானே! ஆனால், இப்ப எங்கதான் அப்படி நடக்குது? எல்லாப் பிள்ளைகளும், தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று தனித் தாட்டன்களா முடிவெடுக்கிறார்கள். பிறகு பட்டு அனுபவிக்கும் போது அழுது புரண்டு என்ன பயன்?’’ என்றார் பெரியவர்.
‘‘சரியாச் சொன்னேங்க! பெரியவங்க என்றா பெரியவங்க தான்.’’ என்று அவரைப் புகழ்ந்து, கொதிக்கும் வெயிலுக்கு இதமாய் அவர் உச்சியில் ஐஸ் மழையைத் தூவியவர், கதையோடு கதையாய் மெதுவாய் நரேனும் மஞ்சுவும் காதலிப்பதைச் சொன்னார்.
வெகுவாய்த் தன்னைப் புகழ்ந்தவருடன், தன் வயிற்றுப் பசியையும் மறந்து கதைத்துக் கொண்டிருந்த மஞ்சுவின் தந்தை, அவர் தன் மகள் அவர் மகனைக் காதலிப்பதால் தான் அவன் கல்யாணத்தை மறுப்பதாகச் சொல்ல திடுக்கிட்டவர், தனது வழமையான கோபம் தலை தூக்க,
‘‘இங்க பாருங்க, என்ன பேச்சுப் பேசுறீங்க? மஞ்சுவா? இதை நான் நம்ப வேண்டுமா? அவள் எல்லாரோடும் கலகலப்பாகக் கதைப்பாள், உள்ளுக்குள்ள ஒன்றுமே வைத்திருக்கமாட்டாள். எங்க வீட்டுக்கு எத்தனை வருசமா உங்க மகன் வந்து போறார். என்பிள்ளை போல அவர்.’’ கோபத்தில் சீறினார்.
‘‘இப்படி அபாண்டமாக கதைச்சா உங்களுக்கு அடுக்குமா? அதுவும் கோவிலில் வைத்து, உங்களிடமும் பொம்பிளப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.’’ தொடர்ந்தார், அடங்காத ஆத்திரத்துடன்.
இதை மிகுந்த கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சி, ‘‘இங்க பாருங்க, இந்த விஷயம், உங்களைத் தவிர வீட்டில் எல்லாருக்கும் தெரியும். நான் சொல்வதை நம்பமுடியவிட்டால், உங்க வீட்டாக்களைப் போய்க் கேளுங்க. அது மட்டுமில்ல, நான் ஒருக்காலும் இதுக்கு சம்மதிக்கமாட்டேன். அவனுக்கு நான் நல்ல சம்பந்தம் பார்த்திருக்கிறேன்.’’ என்று படபடத்தவர்,
‘‘என்ன சொன்னீங்க? என் பிள்ளைகளை உங்க வாயாடியோட ஒப்பிட்டுச் சொல்லுறீங்களே! என் பிள்ளைகளுக்கு சுட்டுப் போட்டாலும் இந்தக் குணம் வராது கோபத்துடன் பொரிந்தவர்,
மஞ்சுவின் தந்தையின் அதிர்ந்த தோற்றத்தையோ, அவர் தடுமாறிக் கொண்டதையோ கவனிக்காது, தாய் வம்படியாக இப்படிக் கதைப்பதைப் பார்த்த பிள்ளைகள் சஞ்சலத்துடன் , ‘‘பேசாம வாங்கம்மா.’’ என்று இழுக்க, விறு விறுவென்று கடைகள் இருந்த பக்கமாய் நடந்து சென்றார்.

