‘‘என்ன சொறியட்டா? ஏன்டி உனக்கு என்ன விசரா? வந்தாய்! அழுதாய்! பிறகு ஸாரி சொல்கிறாய்! என்ன தான் உனக்குப் பிரச்சனை? ம்ம்ம்…நானும் கொஞ்சக் காலமாப் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன். நீ…ஏதோ சரி இல்லைடி! எதையோ மனதுக்குள் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாயோ என்று எண்ணத் தோன்றுதடி!’’ சிடுசிடுப்பாகத் தொடங்கி ஆதங்கமாக முடித்தவள், மௌனமாக, கலங்கும் விழிகளை யன்னல் புறமாய்த் திருப்பிக் கொண்டவளைப் பார்த்து முறைத்தாள்.
‘‘ஏன்டி லூசு, நான் இங்கே கதைத்துக் கொண்டிருக்க, நீ இயற்கையை இரசிக்கிறாயோ!’’ மீண்டும் கடுகடுப்பும் கேலியுமாக கேட்டவள், அவள் மௌனத்தில் எழுந்த கோபத்தால் தோளில் ஒரு அடியும் வைத்தாள்.
‘‘ஆ நோகுதடி மாடு. ஏன்டி இப்படி அடிக்கிறாய். நரம்பி..நரம்பி..’’ பொய்க் கோபத்துடன் சீறிய மயூ, ‘‘ஒன்றுமில்லைடி ஸ்ரீ. தாங்க முடியாத தலையிடி! அதுதான்…உன்னைப் பார்த்ததும் அழுதிட்டேன்; வேறு ஒன்றுமில்லைடி.’’ என்றவள், நம்பாமல் முறைத்த நண்பியிடம், ‘‘உண்மையாகவே வேறு ஒன்றுமில்லைடி…’’ அழுத்திச் சொன்னவள், ‘‘சரியாப் பசிக்குதடி ஸ்ரீ! இன்னும் ஒன்றுமே சாப்பிடவில்லை….’’ சொல்லும் போதே மீண்டும் அவள் கண்கள் நிறைந்தது.
நிச்சயம் எதுவோ நடந்திருக்கின்றது என்பதையும், தோழி மறைக்கிறாள் என்பதையும் உணர்ந்த ஸ்ரீ, அவள் வெளிப்படையாகக் கதைப்பவள் என்பதால், நிச்சயம் தாங்கள் அறிய வேண்டியதை சொல்வாள் என்ற நம்பிக்கையில் தூண்டித் துருவாமல் விட்டவள், அவள் இன்னமும் சாப்பிடவில்லை என்றதும் பதறிப் போனாள்.
‘‘இப்போ எத்தனை மணியாகப் போகுது? நீ இன்னும் சாப்பிடவில்லையா? லூசாடி நீ!?’’ கோபப்பட்டாள்.
‘‘சரிடீ..சரி. நீ ஒன்றுமில்லை என்று சொன்னதை நானும் அப்பிடியே முழுசா நம்பிவிட்டேன். மலிஞ்சாச் சந்தைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்போ பார்ப்போம். எனக்கென்னவோ நீ நல்லாப் பொய் சொல்லப் பழகிவிட்டாய் போல தோன்றுது! நீயாக சொல்லும் வரை நான் ஒன்றுமே கேட்கப் போவதில்லை. கேட்டால் மட்டும் உடனே சொல்லிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பாய்!’’ அவளைப் போட்டு கேள்விகளால் துளைக்காமல், ஆராய்ச்சியில் தொடங்கி அலுப்பாய் முடித்தவள்,
‘‘அப்போ, அன்னதானம் சாப்பிடவில்லையா? சரி, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்; போய் முகத்தை அலம்பீட்டு வா.’’ தன் அலுமாரியில் இருந்து துவாயை எடுத்து அவள் மேல் போட்டுவிட்டு, ‘‘அம்மா… அம்மா…’’ தாயை அழைத்தவாறே அறையை விட்டு வெளியேறினாள்.
‘‘இவ்வளவு நேரமாகச் சாப்பிடாமல் இருந்தால் தலையிடிக்காமல் வேற என்ன செய்யும்? ஏன் பிள்ளைகள், படிச்சனீங்க இது கூட தெரியாதா?’’ கடிந்து கொண்டே, பாசமாய் உணவைப் பரிமாறினார் ஸ்ரீயின் தாயார்.
எப்போது எந்த நேரத்தில் சென்றாலும், ஸ்ரீ வீட்டில் உணவு கட்டாயமாக இருக்கும். அப்படி இல்லையென்றாலும், மின்னல் வேகத்தில் தயாரித்துக் கொடுப்பார் ஸ்ரீயின் தாயார்.
சாப்பிட்டு முடித்த பின்னர், ஹாலில் சென்றமர்ந்து தொலைக்காட்சியை பார்த்தவாறே கதைத்துக் கொண்டிருந்தனர் நண்பிகள் இருவரும்.
உணவு உள்ளே சென்றதால், மயூவுக்கு பழைய திடம் பெரும்பாலும் திரும்பி இருந்தது. மனம் மட்டுமே வேதனையில் சுருங்கிக் கிடந்தது, ‘இனி இப்படித் தானே இருக்கப் போகிறேன்!’ என்ற வகையில்.
ஏதேதோ அளவளாவிக் கொண்டே தொலைக்காட்சியில் விழிகள் பதித்திருந்தவர்கள், முன்வாயிலில் ஸ்ரீயின் தாயார் யாருடனோ கதைப்பது கேட்க, ‘‘யாரோ வந்திருக்கிறார்கள் போல. கொஞ்சம் இருடி, நான் போய் பார்த்துவிட்டு வாறேன்.’’ எழுந்தாள் ஸ்ரீ.
அதற்கிடையில் அங்கு வந்த ஸ்ரீயின் தாய், ‘‘மயூ, உங்க ராகவன் அங்கிளின் மருமகன் உம்மைத் தேடி வந்திருக்கிறார். கண்டு எவ்வளவு நாட்களாயிற்று! எனக்கு அடையாளமே தெரியவில்லை. உள்ளே கூப்பிட்டால் வராமல் வெளியில் நிற்கிறார். போய் என்னவென்று பாரும்மா.’’ என்றபடி சமையல் அறைப் பக்கம் சென்றார்.
‘சத்தியனா? என்னைத் தேடியா? இதுதான் நான் கட்டப் போகும் பெண் என்று காட்ட வந்திருப்பாரோ!? இப்போ நான் என்ன செய்வது? இங்கேயே வந்துவிட்டாரே!’ மனதில் கலங்கிச் செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தாள் மயூ.
தாய் சொல்லிச் சென்றதைக் கேட்ட ஸ்ரீயோ, ‘‘ஹைய்ய்…..சத்தியன் அண்ணாவா? ஏன்டி எரும, சொல்லவே இல்லை. வா..வா..’’ சிறுவயதில் இருந்தே மயூ வீட்டில் வைத்து அறிமுகமாகியிருந்த சத்தியனை அவளுக்கும் நன்றாகவே தெரியுமென்பதால், அண்மையில் சில வருடங்களாக அவர்கள் வாராமல் இருந்ததையும் அறிந்திருந்தவள், இப்போது வந்திருக்கிறான் என்றதும் சந்தோசத்தில் ஆரவாரித்தபடி, மயூவின் கையைப் பிடித்திழுத்த வண்ணம் வெளியே ஓடினாள்!
தோழியின் இழுப்பில் வெளியே வந்தவளின் பார்வை, முற்றத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த நித்தியகல்யாணி மரத்தையே வெறித்தபடி, பிடிவாதத்தில் இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்த சத்தியனில் பட்டு நிலைத்து நின்றது.
அரவம் கேட்டுத் திரும்பிய சத்தியன். மயூவைப் பார்த்த பார்வையில், என்ன இருந்தது?! சத்தியமாக அவளுக்கு விளங்கவில்லை!!
‘எனக்கு இது வரை எது தான் சரியாக விளங்கியிருக்கு?’ தன்னைத்தானே சலித்துக் கொண்டாள் அவள்.
‘‘சத்தியாண்ணா! ஹப்பா! பார்த்து எவ்வளவு வருஷமாயிற்று!! எங்களையெல்லாம் யாரென்று நினைவிருக்கா?’’ மலர்வுடன் கேட்டவாறே, ‘‘ஏன் வெளியே நிற்கிறீங்கண்ணா? உள்ளுக்கு வாங்கோவன்.’’ அன்பாய் அழைத்தாள் ஸ்ரீ.
‘‘உங்களை மறப்பேனாம்மா? எப்படி இருக்கிறீர்? படிப்பெல்லாம் எப்படிப் போகுது?’’ அன்புடன் நலம் விசாரித்தான் சத்தியன்.
‘‘இன்னொரு நாளைக்கு உள்ள வாறேன்மா. இப்போது…’’ சொல்லி நிறுத்தியவன் விழிகள், மயூவையே கூர்மையாய் அளவிட்டது.
‘‘இந்த மேடத்தை கூட்டிக் கொண்டு போகத் தான் அவசரமாக வந்தேன்; அம்மா இவவைப் பார்க்க வேண்டுமென்று அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்’’ என்றவன், மயூவை புரியாத பார்வை பார்த்தவாறே, ‘‘மேடம், வாறீங்களா போவோம்!’’ வெகு மரியாதையாகச் சொன்னவனின் பார்வையில், அவளின் தடித்துச் சிவந்த விழிகளும், சோர்ந்த முகமும் படத் தவறவில்லை.
‘அசடு, அழுதிருக்கிறாள் போல! இவளுக்கும் இவள் வீட்டாருக்கும் சிறு ஆச்சரியம் கொடுக்கவென்று, எனக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளதாகச் சொன்னதை, ராஜி ஆன்ட்டி இவளிடம் சொல்லியிருக்கிறார் போல! அதை நினைத்துதான் அழுதிருக்கிறாள். முட்டாள்.’ தன்னையறியாமலே அவளைத் திட்டினான்.
தான் சொன்னதற்கும், தன்னைக் கண்டதற்கும் எவ்விதச் சலனமுமில்லாது அவள் நிற்பதைப் பார்த்தவன், ‘‘மேடம், உங்களைத் தான். காது கேட்குதில்லை போல!’’ அளவுக்கதிமாகவே ஆச்சரியம் காட்டியவன், ‘‘ம்ம்ம் …வாறீங்களா?’’ என்றான், அழுத்தத்துடன்.
இதுவரை அவனையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தவள், அவன் அழுத்தத்தை உணர்ந்ததும், ‘ஓஹோ! மயூம்மா…மயூ செல்லம்…இப்ப மேடம் ஆகிட்டாவா! ரொம்பத்தான் மரியாதை தாறார்!’ மனதில் கடு கடுத்தவள், ‘நீர் அழைத்ததும் நான் வர வேண்டுமோ!’ மனதில் முறுக்கிக் கொண்டே, ‘‘நான்…நான் சைக்கிளில் வந்தேன். நீங்க போங்க, வாறேன்.’’ என்றாள், ஒட்டாத குரலில்.
‘‘தெரியும்..தெரியும். சைக்கிள் இங்கேயே இருக்கட்டும். பிறகு எடுக்கலாம்.’’ என்றவன், ஒரெட்டில் அவளை அணுகி கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் கரத்தைப் பற்றி பிடித்திழுத்தபடி, ‘‘போய்ட்டு வாறோம் ஸ்ரீ, அம்மாவிடமும் சொல்லிவிடும். கட்டாயமாக கொழும்பு போக முதல் வீட்டுக்கு வந்திட்டுப் போறேன்மா.’’ என்றவன், அவன் செய்கையில் அதிர்ந்த மயூவையோ, இவர்கள் இருவரையும், அவர்களின் பேச்சுக்கள், பாவங்களையும் ஆச்சரியமாகப் பார்த்த ஸ்ரீயையோ கொஞ்சமும் பொருட்படுத்தாது மோட்டார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து, ஏறி ஸ்டாட் பண்ணியவாறே, ‘‘ம்…ஏறுங்க மேடம்…’’ என்றான், மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளிடம்.
அவன் செய்கையில் திகைப்பின் உச்சியைத் தொட்டிருந்தவள், இப்போது திகைப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, ‘‘இல்லையில்லை…நான் சைக்கிளிலேயே…’’ மெல்ல முணுமுணுத்தாள்.
‘‘ப்ளீஸ் மயூ, திருப்பித் திருப்பி அதையே சொல்லாமல் முதல்ல ஏறு!’’ சிறு கடினத்துடன் சொன்னவுடன், சட்டென்று ஏறி அமர்ந்தாள் அவள்.
அவனின் பரிச்சயமற்ற கடினம் மனதை எதுவோ செய்தது அவளுக்கு!
ஆனாலும், என்றோ அவன் சொன்ன வார்த்தைகளிற்கு பலவித வர்ணம் பூசி, அவன் மீது கொள்ளை அன்பை வளர்த்து, தன்னுள் பொத்தி வைத்துப் பேணிக் காத்தவள், இன்று அந்த அன்பே கேள்விக்குறியாக நிற்பதில் மனதில் அடி வாங்கித் துவண்டிருந்தவள், அவனுடனான தன் வாழ்வுக்கு பெரிய முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது என்று கலங்கிக் கொண்டிருந்த வேளையில், இப்போதைய அவன் செய்கையில் குழம்பித் தவித்தாள்.
ஆனாலும், தாய் சொன்ன செய்தியால் நம்பிக்கையில் ஆட்டம் கண்டிருந்த உள்ளத்தால், எதையும் நல்லதாக நினைக்க முடியவில்லை.
மோட்டாரின் பின் கம்பியை இறுகப் பற்றியபடி, வெறித்த முகத்துடன் வருபவளை, முன் கண்ணாடி வழியே உற்றுப் பார்த்தான் சத்தியன்.
குழப்பத்தைக் காட்டும் அவள் முகபாவனையில் அவள் மனதை அறிந்தவன், அவள் வேதனையில் சோர்ந்த முகம் உள்ளத்தை குத்த, இதற்கு முழுக் காரணமும் நான் தானே என்ற குற்ற உணர்வு தாக்க, வண்டியை மிக வேகமாக செலுத்த தொடங்கினான்.
அதைப் பார்த்ததும் அவன் காதுக்கருகில் குனிந்த மயூ, ‘‘ இங்க பாருங்க, மெதுவாப் போங்க; இல்லையோ குதிச்சிடுவேன்..’’ பல்லைக் கடித்துக் கொண்டே மிரட்டினாள்.
அவனோ, அவளைக் கண்ணாடியால் பார்த்து, அவளும் தன்னைப் பார்ப்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டு அழகாகக் கண்ணடித்தான்.
‘‘ஏன் மயூ, அப்படியே பயமாயிருந்தால் என்னைப் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்!’’ தனக்கேயுரிய கம்பீர முறுவலுடன் தொடர்ந்தவன், மோட்டாரின் வேகத்தைச் சற்றும் குறைக்கவில்லை.
‘‘இந்தாளுக்கு விசர் பிடிச்சிட்டுது!’’ மனதில் திட்டிக்கொண்டே, கஷ்ட்டப்பட்டு இரு கைகளாலும் கம்பியைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தவள், அவன் நேராக ராகவன் வீட்டில் வண்டியை நிறுத்தியதும், ‘‘இங்க ஏன்?’’ என்றாள்.
‘‘உள்ளே தான் எல்லோரும் இருக்கிறார்கள். உங்க வீட்டிலிருந்தும் வந்திருக்கிறார்கள்.’’ இயல்பாகச் சொன்னவாறே மோட்டாரை நிறுத்திவிட்டு, ‘‘வாரும்..’’ என்றபடி, நுழைந்தவனைத் தானும் பின் தொடர்ந்தாள்.
தாங்கள் வந்து போகும் வீடு, இனி அண்ணாவின் மாமனார் வீடும் கூட, ஆகவே தயக்கமின்றியே அவன் பின்னால் நுழைந்தவள், உள்ளே நிலவிய அமைதியில் நெற்றி சுருங்க, ‘‘எங்கே, ஒருவரையும் காணவில்லையே?’’ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விரைந்து சென்று வாசல் கதைவைத் தாழிட்டான் சத்தியன்.
அவன் செய்கையால் கணநேரம் அதிர்ந்து நின்றவள், ‘‘இப்போ…ஏன் கதவை மூடுறீங்க? எங்கே எல்லாரும்?’’ என்றாள் யோசனையுடன்.

