அவன் செய்கை அவளைப் பதறவைக்கவில்லை. அவன் அவள் சொந்தமல்லவா? பின் எப்படிப் பதறுவாள்!? அவன் செய்கை அவளுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.
அவனோ, அவள் விழிகளை உற்று நோக்கிய தன் விழிகளில் காதலை நிரப்பி, தனக்கேயுரிய வசீகர முறுவலுடன், தன்னிரு கரங்களையும் அவள் புறம் நீட்டி, மென்மையான தலையசைப்பின் மூலம் ‘வா’ என அழைத்தான்!
அக்கணம் தான் காண்பது கனவா? நிஜமா? என நம்பமுடியாது விழிகள் விரித்து அப்படியே திகைத்து நின்றவளை, ‘‘மயூம்மா! இங்க வாடா.’’ நேசத்தில் குழைந்த அவன் குரல் நடுக்கத்துடன் அசைத்தது.
அடுத்த கணம் தாய்ப் பறவையைப் பிரிந்திருந்த குஞ்சு எவ்வாறு தன் தாயின் சிறகுகளுள் தாவிச் சென்று அடங்குமோ, அப்படியே அவளும் தன் மனதிற்கினியவனின் அணைப்புக்குள் ஓடிச் சென்று அடங்கிக் கொண்டாள்.
உள்ளத்தில் ஒருவர் ஒருவரை நினைத்து இத்தனை நாட்களாக உள்ளுக்குள் உருகிக் கொண்டிருந்த இவ்விருவரும், இக்கணத்தில் அடைந்த பேரானந்தத்தை, ஆறுதலை, சாதாரண வார்த்தைக் கோர்வைகள் மூலம் நிச்சயம் விளக்கிடவே முடியாது.
நின்று, நிதானித்து, ஆழ்ந்துணர வேண்டிய தருணமல்லவா இது!
அப்படியே இருவரும் தம்மை மறந்து நின்று, தவித்துத் துடித்த உள்ளங்களுக்கு ஆறுதலை ஆசைதீர ஊட்டினர்.
சிறிது நேரத்தின் பின், மெல்ல அருகிலிருந்த இருக்கையில் அவளை அணைத்தவாறே அமர்ந்து, தன்னவளின் மென்முகத்தை ஆசையும் நேசமுமாக நிமிர்த்தினான் அவன்.
‘‘செல்லம்…ஐ லவ் யூ மா..!” என்றவாறே, அவள் கலங்கிய விழிகளையும் அழுகையில் துடித்த இதழையும் வருடிய அவன் விழிகளில், இலேசான வருத்தின் சாயல் படர்ந்தது.
‘‘என் செல்லத்தை சரியாகக் கஷ்டப்படுத்திட்டேனாடா?” கேட்டவனை இமைக்காது பார்த்தவள் தலையோ, ‘இல்லை’ என்பதாக அசைந்தது; வாய்பேசாது அவனையே பார்த்திருந்தாள் அவள்.
“இல்லடா.. உன்னை நிறையவே கஷ்டப்படுத்தி விட்டேன்தான்!” குரலில் வருத்தம் படரச் சொன்னவன், “நான் என்னம்மா செய்ய? நம்ம நேசத்தால் பெரியவங்களுக்குள்ள மனக்கசப்பு வேண்டாமென்றுதான் இத்தனை நாட்களாக பொறுமையாக இருந்தேன்! அதுவும் நீ என் நினைவில் இருப்பது தெரிந்த பிறகே…’’ என்றான் கனிவுடன்.
அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டவள், அணைப்பிலிருந்து மெல்லத் தன்னை விடுவித்தபடி, ‘‘ என்ன சொன்னீங்க? நான்…என் மனதில் …அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’’ என்றாள் ஆச்சரியத்துடன்.
‘‘அதுவா?!’’ அவளைப் பார்த்தவன் விழிகளோ, தன்னுள் அடக்கியிருந்த நேசத்தையும் மகிழ்வையும் குறும்பில் குழைத்து மின்னியது!
‘‘எல்லாம் என் நண்பன் உபயம்!’’ பெருமிதமாகச் சொன்னவன், அவளின் குழப்பமான முகத்தைப் பார்த்து முறுவல் பூத்தான்.
‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்? உன் அண்ணா வேலை தான். நீ என் படத்தை தலகணைக்கடியில் வைத்திருப்பதும், அப்பப்ப படத்திலுள்ள என்னோடு கதைப்பதும், சண்டைபோடுவதும்..” சொல்லிக்கொண்டு வந்தவன், வியப்பில் விரிந்த அவள் நயனங்களில் மயங்கினான்.
“ஏன் கொஞ்சுவது கூட அகிலுக்குத் தெரியும்! அதெல்லாம் அப்பப்ப ஐயா காதுக்கு வந்திடுமே!’’ உல்லாசச் நகைப்புடன் தொடர்ந்தவன், அவன் சொன்ன விதத்திலும், தன் கதை முன்னரே அண்ணாவுக்குத் தெரிந்திருக்கே என்றும் மெல்லிய நாணத்துடன் நெளிந்தவளை, மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.
‘‘ஆனால், நான் எப்பவோ வீட்டில நீ தான் என் மனைவி என்று சொல்லிவிட்டேன் தெரியுமா?’’ என்றான், அவன் அணைப்பை இறுக்கிக் கொண்டே!
‘ஓ! இதைத்தான் காலையில் அம்மா சொல்ல, நான் தான் தவறாக எண்ணிவிட்டேனா? அப்படியென்றால் அம்மாவையளுக்கும் விஷயம் தெரிந்திருக்குமோ?! ஆனால் அம்மா…தெரிந்த மாதிரி கதைக்கவில்லையே!’ தன்னுள்ளே நினைத்துக் கொண்டவள், ‘முருகா நன்றிப்பா! என்னை நான் விரும்பியவருடன் சேர்த்ததற்கு!’ முருகனுக்கு, இதுவரை கொடுத்த தொல்லைகளை நினைத்து மனமார நன்றி கூறினாள்.
‘அம்மா அப்பா சொன்னால் புரிந்து கொள்வார்கள்; நிச்சயம் சந்தோசப்படுவார்கள்.’ நம்பிக்கையோடு நினைத்தவள், தன்னவனின் தோள்களில் உரிமையாய்ச் சாய்ந்து கொண்டே மெல்ல அவனை நோக்கினாள்.
‘‘நீங்க என்னதான் சொன்னாலும், இத்தனை வருடமாக நான் எத்தனை நாள் அழுதிருப்பேன். ஒரே ஒருதரம்… ஃபோனில் சரி பேச முடியவில்லையா?’’ கேட்கும் போதே குரல் அடைத்து கண்கள் கண்ணீரை சொரிந்தது.
‘‘என்னம்மா இது? உன்னை…முக்கியமாக உன் படிப்பை எந்த விதத்திலும் குழப்பக் கூடாது என்று தான் அமைதியாக இருந்தேன். சின்னப் பிள்ளையை ஏன் குழப்புவான் என்று.’’ என்றவன், அவளை குறும்பும் கேலியுமாக உற்றுப் பார்த்தான்.
‘‘நீங்க சின்னப்பிள்ளையில்லை என்று எனக்குத் தெரியாமல் போச்சே…பச்… நல்ல சந்தர்ப்பங்களை இழந்திட்டேன் போலவே!’’ அதிகமாகக் கவலைப்பட்டவன் போன்று நடிக்க, அவள் முறுக்கிக் கொண்டு விலக எத்தனிக்க, விடாது இறுக்கிக் கொண்டான் சத்தியன்.
‘‘ஆனாலும், மனசு பொறுக்காமல், நீ கம்பசுக்கு போன முதல் நாள் எடுத்துக் கதைத்தேனே!’’ பெரிய சாதனை செய்தேன் என்ற கணக்கில் தொடர்ந்தான்.
அவன் அப்படிச் சொன்னதும், பொய்க் கோபம் காட்டினாள் மயூ.
‘‘ம்ம்…பெரிசா கதைச்சீங்க! அதெல்லாம் சேர்ப்பில்லை! உங்களுக்கு என்னில் உண்மையான அன்பில்லை. அதனால்தான் என்னை இத்தனை வருடங்களாக அழ வைத்தீங்க…’’ சிணுங்கியவள், தான் சொன்னதற்கு நேர் மாறாக அவனுடன் நெருங்கி அணைந்து கொண்டாள்.
தன்னில் ஒன்றிக்கொண்டவளை பாசம் பொங்கப் பார்த்தவாறே அணைத்துக் கொண்டவன், “ஹ்ம்ம்…அப்போ மேடம் கோபாமா இருக்கிறீங்க போலவே! ம்ம்ம் …நான் உங்களை நினைக்கவேயில்லையல்லவா?’’ இதழோர நகைப்போடு ஒருமாதிரி இராகம் இழுத்தான்.
‘‘டேய் சத்தியா, உன் நிலையைப் பார்த்தாயாடா!? நீ அப்பப்ப கொடுத்து விடும் கிஃப்ட் எல்லாம் சந்தோசமாக, முகம் கொள்ளாப் புன்னகையோடு வாங்கி, கழட்டாமல் போட்டுக் கொண்டிருப்பார்களாம்; பிறகு இப்படியொரு பழி தேவையா உனக்கு?’’ தன்னையே கேள்வி கேட்டு நொந்து கொண்டான்.
‘‘இதென்ன புதுக் கதை சொல்லுறீங்க? நீங்க எனக்கு.. அதுவும் கிஃப்ட்..ஹா ஹா..‘’ என்றவள், அவனிலிருந்து விலகி அமர்ந்தவாறே சிரிக்கவும், அவனும் சேர்ந்து நகைத்தான்.
‘‘மயூ செல்லம், இங்க பாருங்க நீங்க கட்டியிருக்கின்ற இந்த மணிக்கூடு, கழுத்தை விட்டு கலட்டாமல் போட்டிருக்கின்ற இந்தச் செயின், இதெல்லாம் உங்க அண்ணாவிடம் வாங்கிக் கொடுத்தது இந்த அய்யா தான்டா! அதுமட்டுமில்லை, இந்த இடைப்பட்ட நாட்களில உங்க அண்ணா உங்களுக்கு வாங்கித் தந்தது எல்லாமே நான் ஆசை ஆசையாக பார்த்துப் பார்த்து வேண்டிக் கொடுத்ததாக்கும்..” என்றான் பெருமை பொங்கிய குரலில்; நானும் உன் நினைவில் தான் வாழ்ந்தேன் என்று சொல்லாமல் சொல்லும் வகையில்!
சட்டென்று நீர் ஊறிய விழிகளோடு அவனை வியப்பாய்ப் பார்த்தாள் மயூ. அவள் வலக்கரமோ தன் பிறந்த நாளிற்காக, தன் சம்பளத்தில் வேண்டியதாகக் கூறி அண்ணன் தந்த செயினைத் தடவிய அதேவேளை, அவள் பல்கலைக்கு போனதற்காக என்று சொல்லி வாங்கித் தந்த அழகிய கடிகாரத்தில் விழிகள் நிலைத்தன.
‘‘கள்ள அண்ணா! அப்போ எனக்கு ஒன்றுமே அவரின் காசில் வாங்கித் தரவில்லையா? இன்றைக்கு இருக்கு அவருக்கு!’’ செல்லமாய் சிணுங்கியவள், ‘‘என்றாலும் உங்களுக்கு என்னில் அன்பு குறைவு தான்..” மீண்டும் சொல்லி, அதற்கு மாறாக காதலாய்த் தன்னவனைப் பார்த்தவளிடம்,
‘‘ஏன் சொல்ல மாட்டீங்க? நீங்களும் உங்க வால்களும் இங்கே சந்தோசமாக லூட்டி அடித்துக் கொண்டு இருந்துவிட்டு, என்னைப் போய் இப்படிச் சொல்லுறீங்க?’’ என்றவன், அவளை மீண்டும் தன்னருகில் இழுத்துக் கொள்வதற்காய் கைகளை நீட்டவும், அவனின் கைகளுக்குப் பிடிபடாமல் அங்கிருந்து எழுந்தவள், ” வீட்ட போவோமா?’’ மெல்லக் கேட்ட படி கதவை நோக்கி நகர்ந்தாள்,
அவள் செய்கையில் பெரிதாகச் சிரித்தவாறே, ‘‘ஏன் மயூ, என்னோடு தனியாக இருக்கப் பயமா இருக்கா?’’ என்றான் சத்தியன்.
‘‘பயமா?? எனக்கென்ன பயம், அதுவும் உங்களிடம்…’’ சொல்லிக் கொண்டே நகர்ந்தவளை முறுவலுடன் நோக்கி, ‘‘சரி வாரும் போவோம். அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் வந்தேன். உங்க வீட்டில அவர்கள் கதைத்திருப்பார்கள். நேரமும் போய்ட்டுது தான்.’’ என்றபடி எழுந்தவன், அவளுடன் மயூ வீட்டை நோக்கிச் சென்றான்.
தம் மனதின் ஆசைகளை, விருப்புக்களை, தங்களைச் சார்ந்தவர்களிற்காக தம்முள்ளே பொத்தி வைத்திருந்து, இன்று அவர்கள் ஆசியுடன் இணையப் போகும் தம்மிருவர் வாழ்வும், இனிவரும் காலம் முழுதும் நேசமும் அன்பும் நிறைந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையில், கரங்களை இறுகப் பற்றிக் கொண்டே மயூ வீட்டை வந்தடைந்தவர்களுக்கு, அங்கிருந்தோரின் மகிழ்வு நிறைந்த முகங்களே விடயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதென்று கூறாமல் கூறியது.
என்னதான் என்றாலும் ராஜியால் கொஞ்சமும் நம்ப முடியாமல் இருந்தது!
தம் குட்டி மகள் மனதில் இப்படி ஒரு விடயத்தை வைத்து மறுகியிருக்கிறாளே என்று அவளையே விழியெடுக்காது பார்த்திருக்க, அவளோ தாயின் பார்வையைப் புரிந்து கொண்டவள், ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவள், ‘‘அம்மா என் மேல் கோபமா?’’ தடுமாறிக் கொண்டே கண்கள் கலங்க கேட்டாள்.
‘‘என்னடாம்மா இது?! அப்படியெல்லாம் ஒன்றுமில்லைம்மா.’’ அவள் கண்களைத் துடைத்து விட்ட ராஜி, ‘‘இதில் கோபிக்க என்ன இருக்கு மயூ? ஆனால், உனக்கு அப்படி என்ன நம்பிக்கைம்மா? தம்பி அன்று சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிச் சென்றிருந்தால், இன்று உன் நிலை?’’ சொன்னவர் குரல் நடுங்கியது.
அவர் கலக்கத்தைப் பார்த்த சத்தியன் அவரின் மறுபுறம் வந்தமர்ந்தவன், ‘‘ஆன்ட்டி, நடக்காதை ஏன் நினைக்கிறீங்க? மயூ, சின்னப்பிள்ளையில் இருந்து எனக்குத் தெரிந்தவள்; நான் பார்க்க வளர்ந்தவள்; அவள் வாழ்வில் விளையாடுவேனா சொல்லுங்க?’’ என்றான் அன்புடன்.
அவனைப் பெருமையாகப் பார்த்த ராஜியின் கண்கள் ஆனந்தத்தால் நிறைந்தது!
தன் மகளுக்கு பொன்னான வாழ்வு அமைந்த பெருமையில், நிறைவாகப் புன்னகைத்தவாறே கணவரைப் பார்த்தவர், அவரும் அதையே பிரதிபலிக்க, சத்தியன் கரத்தைப் பற்றி மெல்ல அழுத்தியவர், ‘‘மிக்க நன்றி சத்தியன், இந்த ஒரு வார்த்தையே போதுமைய்யா எங்களுக்கு!’’ என்றார் அடிமனதிலிருந்து.

