அன்பெனும் பூங்காற்றில் 21 – 2

‘‘அம்ம்மா..’’ என்றழைத்தபடியே, பதற்றத்துடன் ஹாலை நோக்கி விரைந்தாள்.
‘‘என்னம்மா! யார் ஃபோனில..’’ மகளின் பதற்றத்தைப் பார்த்து யோசனையுடன் கேட்டார் ராஜி.
‘‘அம்மா, மஞ்சுவின் அப்பாவை பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து இருக்கிறார்களாம். கோவிலில் மயங்கி விழுந்து தலையில் காயமாம்.’’ கண்கலங்கியவாறே சொன்னாள் மயூ.
‘‘என்னம்மா சொல்கிறாய்? உனக்கு யார் சொன்னது?’’ அவசரமாகக் கேட்ட தந்தைக்கு, ‘‘ஸ்ரீயின் அப்பா, யாரோ தெரிஞ்சவங்களைப் பார்க்க அங்கே போயிருந்தாராம். அப்போ மஞ்சுவின் அம்மா ஆட்கள் எல்லாரும் அழுது கொண்டு நின்றார்களாம். அவர் போய் விசாரித்துவிட்டு எங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று நினைத்து உடனே சொல்லவில்லையாம். இப்போதான் கடையால் வந்து சொன்னாராம்.’’ தன் நண்பி சொன்னதைச் அவர்களிடம் சொன்னவள், ‘‘அப்பா, வாங்கப்பா மஞ்சு வீடுவரை போய் வருவோம்.’’ பதற்றம் குறையாமலே கேட்டாள்.
‘‘இல்ல வேண்டாம் மாமா, நீங்க இருங்க; நானே கூட்டிக் கொண்டு போகிறேன்.’’ மகளுடன் செல்வதற்காக எழுந்த ரவியை அமர்த்திவிட்டு தான் எழுந்த சத்தியன், ‘‘வாரும் மயூ, போய்விட்டு வருவோம்..” வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
ஒரு கணம் தயக்கமாய் தன் தாயைப் பார்த்த மஞ்சு, ‘‘ ராஜாத்தி போம்மா..’’ என்று பூரணி சொன்னதும், ‘‘ம்ம்..போய்ட்டு வாறேன்..’’ அனைவருக்கும் பொதுவாய்ச் சொல்லியபடி சத்தியன் பின்னால் ஓடினாள்.
சிறுவயதிலிருந்தே மயூவின் தோழிகளையும் அவர்கள் மூன்று பேருக்குள்ளும் இருக்கும் அன்பையும் நன்கறிந்து இருந்த சத்தியன், தன் பின்னால் எதுவுமே பேசாது அமர்ந்து வரும் மயூவின் மனநிலை அறிந்து அமைதியாக மோட்டாரை ஒட்டிக் கொண்டிருந்தவன், மஞ்சுவின் வீட்டுக்கு முன்பாக பைக்கை நிறுத்தி, ‘‘ஒன்பது மணியாகப் போகுது மயூ..’’ என்று இழுக்க,
“பரவாயில்லை, உள்ளுக்கு வாங்க; அதோ அண்ணாவும் அண்ணியும் இருக்கிறார்கள்.’’ சொல்லிக் கொண்டு உள்ளே ஓடினாள் மயூ.
முன் விறாந்தையில் அமர்ந்திருந்த சிவாவும் அவன் மனைவியும் வாயிலில் வந்து நின்ற மோட்டார் சத்தத்துக்கு எட்டிப் பார்த்தவர்கள், உள்ளே ஓடிவந்த மயூவைப் பார்த்து, ‘‘வாங்க மயூ…’’ என்ற சிவாவின் மனைவி, பின்னால் வந்த சத்தியனை யார் என்று தெரியாததால், மயூவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
நெருக்கமான பழக்கமென்று இல்லையென்றாலும் சத்தியன் இன்னார் என்று தெரிந்திருந்த சிவா, ‘‘வாங்க சத்தியன். நிறைய நாட்கள் கண்டு. எப்படி இருக்கிறீங்க?’’ என்றவன் அவன் கைகளைப்பற்ற, அவனும் சிவாவின் கைகளைப் பற்றிக் கொண்டவன், ‘‘நல்லா இருக்கிறேன் சிவாண்ணா. நீங்க?’’ என்ற படி சிவாவின் மனைவியைப் பார்த்து, ‘‘ஹாய்..’’ என்று புன்னகைக்க, சிவாவும் சத்தியனை தன் மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
அவர்கள் கதைத்துக் கொண்டிருக்க, உள்ளுக்குள் ஓடிய மயூ, தோழியின் அறைக்குள் நுழைந்தாள்.
அறை இருட்டாய் இருக்கவே, ‘நித்திரையா? அதுவும் அதுக்குள்ள!’ யோசித்தவள், ‘சரி அப்படியே இருந்தாலும் எழுப்புவோம்.’ என்ற முடிவுடன் மின்விளக்கைப் போட்டாள்.
அங்கே அறையினுள் இருபக்கத்திலும் போடப்பட்டிருந்த கட்டில்களில் மஞ்சுவும் அவள் தங்கை கீதாவும் படுத்திருந்தனர். மின்விளக்கு வெளிச்சத்தில் கண்களைச் சுருக்கிக்கொண்டே, ‘’யாரது?’’ கேட்ட கீதா, வாயிலில் நின்ற மயூவைக் கண்டதும்,
‘‘மயூக்கா…’’ என்று எழுந்தோடி வந்து அவளைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.
‘‘கீதா, என்னம்மா இது! இப்ப ஏன்மா அழுகிறாய்? எனக்கு இப்போ தான்மா தெரியும். சொல்லியிருக்கலாமே! வருத்தமாய்ச் சொன்னவள், ‘‘வாரும்..வந்து இதில் இரும். முதலில் கண்ணைத் துடையும்.’’ அவளை ஆறுதல் படுத்தியவாறே, தான் மின்விளக்கைப் போட்டும் தன்புறம் திரும்பாமல் சுவரைப் பார்த்துக்கொண்டே படுத்திருக்கும் மஞ்சுவை யோசனையுடன் பார்த்தவாறே அவள்ருகில் சென்று, ஆதரவாக அவள் தலையைத் தடவினாள்.
‘‘நீ நித்திரையில்லை என்று தெரியும் டீ. இங்க பார், முதல் எழும்பு பார்ப்போம்.’’ மென்மையாகச் சொன்னதும் தான் தாமதம், சட்டென்று எழுந்த மஞ்சு, நண்பியைக் கட்டிக் கொண்டு ”ஓ ” என்று அழவும் திகைத்துப் போனாள் மயூ.
‘‘மஞ்சு என்னடி இது? இங்க பார், நீ அழ கீதாவும் அழுகிறாள். முதல் அழாதேடி!’’ தோழியின் அழுகையில் தானும் கண்ணீர் விடத் தொடங்கியிருந்தாலும் சமாளித்துக் கொண்டே சொன்னாள் மயூ.
அப்பொழுது அங்கே வந்த அண்ணி, ‘‘மஞ்சு இதென்ன சின்னப்பிள்ளை போல! நீங்க அழுகிறது வெளியில் கேட்குதும்மா. மயூவோடு சத்தியனாம், அவரும் வந்திருக்கிறார். முதல் இப்படி அழுவதை நிறுத்துங்க.’’ சிறு கண்டிப்புடன் சொன்னவள்,
‘‘உங்க அண்ணா, மாமியைக் கூட்டிக் கொண்டுவர ஹாஸ்பிட்டலுக்குப் போகப் போறார்.’’என்று சொல்லிச் சென்றார்.
‘‘மயூ..’’ என்றழைத்த சத்தியன், அறையிலிருந்து வந்தவளிடம் ,
‘‘நானும் சிவா அண்ணாவோட போய் அங்கிளைப் பார்த்திட்டு வாறேன். அது வரைக்கும் நீர் இங்கேயே இரும். நான் வீட்டுக்குச் சொல்லிவிட்டுப் போகிறேன்.’’ என்றதும் தலையாட்டியவள், திரும்பவும் மஞ்சுவின் அறைக்குள் வந்து அழுதவாறே சுவரை வெறித்துக் கொண்டமர்ந்திருக்கும் தோழியின் அருகிலமர்ந்து அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்ட போதுதான், அவளின் ஒரு பக்கக் கன்னம் சிவப்பாய் கன்றிப் போய் இருப்பதைக் கண்டாள்!
நண்பியின் வீங்கிய கன்னத்தைப் பார்த்ததும் துணுக்குற்ற மயூ, ‘யார் இவளை இப்படி அடித்தது? இங்கே அடிப்பதென்றால் அங்கிள் மட்டும் தானே! அவர் கூட மிகக் கடுமையான கோபத்தில் தான் கைநீட்டுவார். ஆனாலும், அங்கிள் அடிச்சிருக்க முடியாதே! அவர் கோவிலிலிருந்தே ஹாஸ்பிட்டல் போய்விட்டதாத் தானே ஸ்ரீ சொன்னாள். மற்றும்படி சிவா அண்ணா…ம்ம்ம்…சான்சே இல்லை. வேற யாரு?!’ மனதுள் குழம்பினாள்.
மஞ்சுவின் முகத்தைப் பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தி, ‘‘என்ன நடந்ததடி? யார் உன்னை அடித்தது?’’ கேட்டவளுக்குப் பதிலாகக் கிடைத்ததென்னவோ அழுகையே!
‘‘போதும் டீ. நீயாடி அழுகிறாய்? எங்களுகெல்லாம் எவ்வளவு சொல்லுவாய்! இன்றைக்கு அந்த வீரமெல்லாம் எங்கே போயிற்று?! ம்ம்ம்..’’ என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாலும், அவளின் அழுகையை நிறுத்த, கடிந்து கொண்டாள் மயூ.
எதிப்புறம் போடப்பட்டிருந்த கட்டிலிலிருந்து அழுது கொண்டிருந்த மஞ்சுவின் தங்கையைப் பார்த்து, ‘‘கீதா போய் சூடா ஒரு கப் டீ போட்டுக் கொண்டு வாடாம்மா..’’ என்றதும், அவளும் தலையாட்டிக் கொண்டே எழுந்து சென்றவள், சிறிது நேரத்தில் தேநீருடன் வரவே அதைக் கஷ்டப்படுத்தி மஞ்சுவைக் குடிக்க வைத்தவள்,
‘‘கீதா, நீர் சாப்பிட்டீரா?’’ ஒரு சந்தேகத்தில் வினவ, அவளோ கலங்கும் விழிகளுடன் தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடன் பேசி ஒருவாறு சமாதானம் செய்து சாப்பிட அனுப்பிய மயூ, ‘‘மஞ்சு நீ கொஞ்ச நேரம் படுத்திரு. நான் இதோ கொஞ்சத்தில வருகிறேன்.’’ சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவள், ஹாலில் கவலையாய் அமர்ந்திருந்த அண்ணியைப் பார்த்ததும், ‘‘அண்ணி, நீங்க சாப்பிட்டிங்களா?’’ அன்புடன் கேட்டபடி அவரருகில் அமர்ந்து கொண்டாள்.
‘‘சாப்பிட்டேன்மா. அதுவும் அவர் வந்து பேசின பிறகு தான். மஞ்சுவும் கீதாவும் எவ்வளவோ கேட்டும் மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.’’ கவலையும் சோர்வும் அப்பிய முகத்துடன் சொன்னவள், ‘‘சாப்பாடு தொண்டையால இறங்கினால் தானேம்மா!’’’ தளம்பும் குரலில் தொடர்ந்தாள்.
ஆதரவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்ட மயூ, ‘‘அண்ணி, என்னண்ணி நடந்தது? மஞ்சு சொல்வாள் என்று நான் நினைக்கவில்லை. ப்ளீஸ் அண்ணி…நீங்க சரி சொல்லுங்க.’’ என்று கெஞ்சலாய்க் கேட்கவும், அவரும் நடந்ததைச் சொல்லத் தொடங்கினார்.

error: Alert: Content selection is disabled!!