அத்தியாயம் 22.
கோவிலிலிருந்து நீண்ட நேரமாக கணவர் வீட்டுக்கு வராததால், சிவாவின் கைபேசிக்கு அழைத்து அவன் தாய் விசயத்தைச் சொல்ல, அவனோ மிகவும் தயங்கியவன், பின் மஞ்சுவிடம் அலைபேசியைக் கொடுங்கள் என்று தாயிடம் சொல்லி, தந்தை இப்போது வைத்தியசாலையில் இருப்பதையும், அதன் காரணத்தையும் கூறினான்.
பசியினாலும் வெயிலாலும் மயங்கியதால் தான், அருகில் கிடந்த பெரிய கல்லில் அவர் தலை அடிபட்டு காயம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டு, நரேனும் சிவாவும் வைத்தியசாலைக்கு விரைய, அங்கு தந்தைக்கு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் தன் பெரிய தங்கை அழைக்கவே, “நான் ஹாஸ்பிட்டலில் நிற்கிறேன்!” என்ற நரேனிடம், “யாருக்கு என்னண்ணா?” என்று அவள் வினவ, “மஞ்சுவின் அப்பாவுக்கு..” என்று தொடங்கி அவன் விபரத்தைக் கூற, திகைத்துப் போன அவன் தங்கையோ, தாய் அவருடன் சண்டை போட்டதைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டாள்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அருகில் நின்ற சிவாவிற்கும் அவர்கள் கதைத்தது இலேசாகக் காதில் விழுந்தாலும், அவன் அதையெல்லாம் பெரிதுபடுத்தும் மனநிலையில் இருக்கவில்லை.
ஆனால், தங்கையுடன் கதைத்து அலைபேசியை வைத்த நரேன், அருகிலிருந்த நண்பனின் கரங்களைப் பற்றிக் கொண்டு, கசங்கிய முகத்துடன் மன்னிப்புக் கேட்கவும் தான், இதுதான் நடந்தது என்று சிவாவினால் தெரிந்து கொள்ள முடிந்தது.
கேட்டதும் நண்பனின் தாயில் அடங்கா ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தாலும், தாயின் செயலை இப்போதைக்காவது மறைக்க நினைக்காது, நியாயப்படுத்தாது தன்னிடம் சொன்னது மட்டுமின்றி, மன்னிப்பும் வேண்டி நிற்கும் தன் உயிர் நண்பனுக்காக தன்னை அடக்கிக் கொண்ட சிவாவால், மஞ்சுவுடன் கதைக்கும் போது நடந்ததை மறைக்க முடியவில்லை.
தங்கையிடம் விபரமாகச் சொல்லவில்லை என்றாலும், தந்தை இன்று வைத்தியசாலையில் இப்படியிருக்க முக்கிய காரணம், நரேனின் தாயின் பேச்சும் நடத்தையும் என்று, தன் தங்கை பற்றி மிக நன்றாகத் தெரிந்திருந்தும் சொல்லிவிட்டான் சிவா.
அவனிருந்த பதற்றத்தில், இதைக் கேட்டதும் தங்கையின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்று நினைக்காது விட்டுவிட்டான் போல!
சிவா தந்தை பற்றிச் சொல்லச் சொல்ல, முதலில் அதிர்ந்து தவித்துப் போன மஞ்சு, பின்னர் நரேனின் மீதும் அவர் தாய் மீதும் புசு புசுவென்று எழுந்த கோபத்தை தற்காலிகமாக அடக்கி வைத்தவள், இந்த விடயத்தை தன் அண்ணி மூலம் தாயிடம் பக்குவமாய்ச் எடுத்துச் சொல்லி, மூவருமாக வைத்தியசாலைக்குச் சென்றனர்.
அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மணியை, சிறு கண்ணாடி வழியாகப் பார்த்ததும் எல்லோருமே துடித்துப் போயினர்.
அதிலும், ‘இதற்கு மூலகாரணம் இந்த ரஞ்சி ஆன்ட்டி தானே!’ என்று நினைத்துப் பார்த்த மஞ்சுவிற்கு, துடித்துப் போய் அழும் தாயைப் பார்த்ததும், ‘என்னால தான் எல்லாம்..’ என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
உடனே, ‘‘ அண்ணி கொஞ்சம் அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்க. நான் இதோ வருகிறேன்.’’ சொல்லிக் கொண்டே நகர, ‘‘எங்கம்மா போகப் போறீங்க.. முதல்ல கீதாவுக்கு விசயத்தைச் சொல்லுங்க மஞ்சு. அண்ணா டாக்டருடன் கதைத்துக் கொண்டிருக்கிறார்; இப்போ வந்திடுவார் கொஞ்சம் நில்லுங்க.’’ தன் அண்ணியின் குரலுக்கு நடையை மெதுவாக்கி திரும்பிப் பார்த்தவளை ஓரெட்டில் அணுகிய அவள் அண்ணி, மஞ்சுவின் கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தினாள்.
‘‘மஞ்சு, அப்பாவுக்கு ஒன்றுமில்லைம்மா. எல்லாம் சுகமாகிடும் யோசிக்காதீங்க.’’ ஆறுதலாகச் சொன்ன தன் அண்ணியின் கையை மெதுவாக விலக்கினாள் மஞ்சு.
‘‘இல்லை அண்ணி, இந்த ரஞ்சி ஆன்ட்டியை இன்றைக்கு நாலு கேள்வி நல்லாக் கேட்கும் வரைக்கும் எனக்கு அடங்காது.’’ என்றவள், விருட்டென்று கிளம்பிச் செல்லவும், பதற்றமடைந்தவள் கணவனின் கைபேசிக்கு அழைத்து விபரம் சொல்ல, சிவாவுடனிருந்து வைத்தியருடன் கதைத்துக் கொண்டிருந்த நரேனிடம் சிவா விசயத்தைச் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டே எழுந்தான் நரேன்.
‘இவளை என்ன செய்வது? இப்போ இருக்கின்ற பிரச்சனைகள் போதாதா? அங்க போய் இன்னும் பெரிதாக்கப் போறாள்.’ மனதில் மஞ்சுவைத் திட்டிக் கொண்டே அவசரமாய் வெளியில் வந்தவன், மஞ்சுவின் கைபேசிக்கு அழைக்க அழைக்க அவள் அதை எடுக்கவே இல்லை.
உடனே தாய்க்கு அழைத்தவன், ‘‘நீங்க எங்கே நிற்கிறீங்க?’’ குரலில் அடக்க மறுத்த சினத்துடன் கேட்டான்.
‘‘அது தான் தம்பி, இவள் முதலே சொன்னேன் என்றாளே! சொல்லவில்லையா? நாங்க இங்க ராம் வீட்டுக்கு வந்திருக்கிறோம். பொழுது பட வீட்ட போவோம்.’’ என்றார், தன் மூத்தமகள் இதைச் சொல்லவில்லையா என்ற கேள்வியுடன்.
கைபேசியை வைக்க முனைந்த நரேனைத் தடுத்த அவன் தாய், ‘‘சரி, நீ என்ன செய்கிறாய் நரேன்? கண்ட இடங்களுக்கும் போய் சுத்தித் திரியாது விரைவாக வீட்டுக்கு வா.’’ கட்டளையிட்டுவிட்டே கைபேசியை வைத்தார்.
‘கண்ட இடங்களா? முருகா! நான் இவங்க இரண்டு பேருக்கும் நடுவில் அகப்பட்டு முழிக்கிறது உனக்குத் தெரியவில்லையா?’ மீண்டும் தன் தலையில் அடித்துக் கொண்ட நரேன் எதிரில் வந்த சிவாவின் மனைவியிடம், ‘‘நான் ராம் வீடு வரைக்கும் போய்விட்டு வாறேன். சிவாவிடம் சொல்லுங்க.’’ என்றவன், விரைந்து நகர்ந்தான்.
நரேனின் தாய் தன் தந்தையுடன் என்ன என்ன பேசினார் என்ற விபரங்கள் சரியாகத் தெரியாவிடினும், அவரின் பேச்சும் தன் தந்தையின் இன்றைய நிலைக்குக் காரணம் என்று மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்துடன், தங்கள் காதல் விடயம் தெரிய வந்ததிலிருந்து அவர் இருபகுதிக்கும் தெரிந்தவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தன்னைக் குறை கூறி, தான் தன் மகனின் வாழ்க்கையைப் பாழாக்குவதாக கதைப்பதை எல்லாம் இதுவரை பொறுத்துக் கொண்டிருந்த மஞ்சு, ‘இன்றைக்கு இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன்.’ என்று கடும் கோபத்தில் முடிவெடுத்தவள், நரேனின் மூத்த தங்கைக்கு கைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு விலாசம் கேட்க முயன்றாள்.
அவளோ, ‘‘நாங்க ராம் அண்ணா வீட்ட நிற்கிறோம்…மஞ்சுக்கா..’’ என்றதும், தொடர்ந்து கதைக்க முனைந்த அவளை அதற்கு அனுமதிக்காது, ‘‘அப்பிடியா? சரி.’’’ என்று சொல்லி கைபேசியை வைத்தவள், ராம் வீட்டை நோக்கிச் சைக்களை மிதிக்கத் தொடங்கினாள்.
அடங்காத ஆத்திரத்துடன் ராம் வீட்டை வந்தடைந்து சைக்கிளை முற்றத்தில் நிறுத்தி விட்டு விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்து, ராமின் பெற்றோர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த ரஞ்சியின் முன்னால் போய் நின்றவள், ‘‘உங்க மனசில என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீங்க? இல்லை தெரியாமல் கேட்கிறேன்.’’ என்றாள், சினம் காட்டும் முகமும் இடுங்கிய விழிகளுமாக!
அவளைப் பற்றி மிக நன்றாகத் தெரிந்த ராமின் தாயார் விரைந்தெழுந்து அவளை அணுகியவர், ‘‘மஞ்சும்மா, என்ன இது? பெரிவர்களோடு இப்படியா கதைப்பது? இங்கால வாம்மா.’’ கனிவும் கண்டிப்புமாக அவள் கையைப் பிடித்து உள்ளே கூட்டிச் செல்ல முனைய, ‘‘முதல் கையை விடுங்க ஆன்ட்டி.’’ அவர் கையை உதறினாள் அவள்.
‘‘அது யாரு ஆன்ட்டி பெரியவர்கள்? இவரா? பெரியவர்கள் நடக்கின்ற மாதிரி, மதிக்கும் மாதிரியா இவர் செய்கைகள் இருக்கு? தான் ஏதோ வானத்திலிருந்து நேராக இறங்கி வந்த மாதிரியும், காணக் கிடைக்காத அதிய மனிசன் இவரின் பிள்ளை போலவும், நாங்க போய் இவர்களிடம் கையேந்தி நிற்கின்ற பிச்சைக்காரர் மாதிரியும் அல்லவா இவர் கதைப்பதெல்லாம் இருக்கு!’’ ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினாள்.
‘‘பாருங்க..பாருங்க. உங்கள் எல்லோர் முன்னாடியே வாய் காட்டுவதை! மரியாதை தெரியாமல் வளர்த்து வைத்திருக்கிறார்கள். அதை எங்கள் தலையில் கட்டத் திட்டம் போடுகிறார்கள்.’’ கிடைத்த சந்தர்ப்பத்தை விடமனமில்லாது, ராமின் பெற்றவர்களிடம் சினத்துடன் முறைப்பாடு செய்தார் ரஞ்சி.
நிலைமை மோசமாவதைப் பார்த்து, ‘‘மஞ்சு, கொஞ்சம் பொறுமையா இரும்மா. இப்படிப் பேசுவதை முதல் நிறுந்துங்க.’’ எவ்வளவோ தடுத்த ராமின் பெற்றவர்களின் பேச்சை மீறி, ஆத்திரத்தால் தன்னிலை மறந்திருந்த மஞ்சுவும், அவளை எப்படியும் தன் மகன் வாழ்விலிருந்து விலக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்த நரேனின் தாயாரும், கிடைத்த சந்தர்ப்பத்தில் மாறி மாறிக் கதைத்து, வாய்த் தர்க்கத்தை வளர்த்துக் கொண்டே சென்றனர்.
இவர்கள் சத்தத்தில் உள்ளேயிருந்து ஓடிவந்த நரேனின் தங்கைகள் செய்வதறியாது திகைத்து விழித்துக் கொண்டு நிற்க, ‘‘கடவுளே முருகா! இந்த முட்டாள் பயலுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லையே! இப்படி ஒரு வாய்க்காரியோடு குடும்பம் நடத்த நினைக்கிறானே!’’ ரஞ்சி அலுப்புடன் அங்கலாய்க்க,
” யாரு வாய்க்காரி? நானா? அதை நீங்க சொல்லுறீங்களா? அது தான் உங்க மகன் வழிஞ்சு கொண்டு வந்தவாரா? ஏதோ நாங்க அவரிட்ட வழிஞ்சு கொண்டு போன மாதிரி சொல்லுறீங்க? உங்களைப் போல ஒரு பொம்பிளையோட ஒருத்தரால குடும்பம் நடத்தமுடியும் என்றால்…’’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அதைக் கேட்டுக் கொண்டு புயலாய் நுழைந்த நரேன், இறுக்கி ஒரு அறை வைத்தான் மஞ்சுவின் கன்னத்தில் !

