அன்பெனும் பூங்காற்றில் 23 – 2

ஆரம்பத்தில் அவனுடன் கோபித்துக் கொண்டு கதைக்காமல் இருந்த ராமையே பெரும் பாடுபட்டுத் தான் கதைக்க வைத்தான். ஆனால் மஞ்சு?
‘அவள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவும் தான்!’ வேதனையுடன் நினைத்தவன் வீட்டினுள் வர, ஹாலிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவனின் தாய், ‘‘வா தம்பி, குளிச்சிட்டு வாவன்…சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.’’ சொல்லிக் கொண்டே எழ, அவரை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தவன், மௌனமாக தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
எத்தனை விதங்களில் கதைத்துப் பார்த்தாலும், ஏதாவது முக்கிய தேவைகளுக்கு மட்டுமின்றி தன்னுடன் இயல்பாய்க் கதைப்பதை ஆசைமகன் நிறுத்தி விட்டதை நினைத்து, வழமை போல அதற்கும் மஞ்சுவைத் திட்டித் தீர்த்தார் ரஞ்சி.
‘பாவி! எந்த நேரத்தில என் மகனில் கண் வைத்தாளோ, அவன் அவனாக இல்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவும் வருகுதில்லையே! இனி அவளாக வேறு ஒருத்தனைக் கட்டினால் தான், இவன் அவள் நினைப்பை விடுவான் போல!’’ என்று நினைத்தவருக்கு, அன்றொரு நாள் நரேன் தன்னுடன் சண்டை பிடித்துக் கூறியது அப்படியே செவிகளில் ஒலித்தது.

மஞ்சுவுக்கும் ரஞ்சிக்கும் நேருக்கு நேராய் வாக்குவாதம் நடந்த அன்று மஞ்சுவை அறைந்த நரேன், அவள் சென்ற பின்னும் புலம்பிக் கொண்டேயிருந்த தாயுடன் பெரிதாக ஒன்றுமே கதைக்கவில்லை !
உடனேயே ஓர் காரை ஒழுங்கு செய்து, அவர்களை கொழும்புக்கு அனுப்பி வைத்தவன், அவர்கள் காரினுள்ளே ஏறியதும் தாயை தீர்மானமாகப் பார்த்தான். ‘‘அம்மா இப்போதும் சொல்கிறேன், என் வாழ்க்கை மஞ்சுவோடு மட்டும் தான்.’’ என்றவன், தாயின் பதிலைக் கேட்பதற்கு அங்கு நிற்கவில்லை.
பின், மஞ்சுவின் தந்தை குணமடைந்து வீடு சென்ற பின்னரே, தான் கொழும்புக்கு வந்து சேர்ந்தான்.
அதன் பின்னரும் எவ்வளவோ பேசிப் பார்த்த ரஞ்சியுடன் கதைக்காது தானும் தன் வேலைக்களுமாக இருக்க ஆத்திரம் கொண்டார் ரஞ்சி.
‘‘ஏன்டா, நீ மனதில என்னதான் நினைத்திருக்கிறாய்? நான் ஒருத்தி கண்டவளிட்டையும் அவமானப்பட்டு வந்திருக்கிறேன். அவளுக்கு ஒரு அறை மட்டும் கொடுத்த நீ, பிறகு அவளின் அப்பனையே இராப் பகலா ஆஸ்பத்திரியே கதி என்று கிடந்தது பாரமரித்து விட்டு ஆற அமர வந்து சேர்ந்தாய்! இப்ப என்னவென்றால் என்னவோ நான் தான் கெட்டவள், பொல்லாதவள் போல, என்னோட முறைத்துக்கொண்டு திரிகிறாய்!’’ கத்தினார்.
படித்துக் கொண்டிருந்த அவர் மூத்த மகள் தாயிடம் வந்து, ‘‘ஹைய்யோம்மா தொடங்கிட்டீங்களா? விடுங்கம்மா. பேசிப் பேசி எல்லாத்தையும் பெரிதாக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு!’’ கடிந்து கொள்ளவும், ஆத்திரம் தலைக்கேற அவளைப் போட்டு நாலு அடி அடித்தவர்,
‘‘சொல்லுவீங்கடி, இதுவும் சொல்லுவீங்க இன்னமும் சொல்லுவீங்க. நான் உங்க நல்லதுக்காகத் தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்று உங்களுக்கே விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்வது?’’ அழுதவாறே புலம்பினார்!
‘‘இதுதான்…இதைத்தான் மஞ்சுவும் சொல்வாள்; நீங்க எப்பவும் சுயனலமாகத் தான் யோசிக்கிறீங்க என்று! உங்களுக்கு என் வாழ்க்கை என் ஆசை முக்கியமில்லை. அதைப்பற்றி அக்கறையுமில்லை. என்னில் நம்பிக்கையுமில்லை. உங்க விருப்பம், ஆசை மட்டும் தான் முக்கியம். அப்படித்தானே!?’’ தாய் தன்னை நம்பவில்லையே என்ற ஆதங்கத்துடனும் சீறினான் நரேன்.
ஒரு பொழுதும் தன்னை எதிர்க்காத மகன், அதுவும் மஞ்சு சொன்னது தான் சரி என்றவாறு கதைக்கவும், தன் தலையில் அடித்துக் கொண்டு பெரும்குரல் எடுத்துக் கத்தினார் ரஞ்சி.
‘‘ஏன்டா! இதற்குத் தான் உன்னை இத்தனை கஷ்டப்பட்டு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வளர்த்தேனா? அப்படிப்பட்ட என்னைப் போய், சுயநலகாரி என்கின்றாயே! அதுவும் எங்கிருந்தோ வந்த தாட்டான் கூடச் சேர்ந்து.” ஆங்காரமாய் அழுதார் .
‘‘வேண்டாம்மா…வேண்டாம். இதற்கும் மேல அவளைப்பற்றி கண்டபடி கதைத்தால் நான் மனிசனா இருக்க மாட்டேன்; அவ்வளவும் தான் சொல்லுவேன்.’’ நரேனும் பதிலுக்குக் கத்த, பெண்பிள்ளைகளோ கலங்கி அழுதனர்.
‘‘போதும்டா சாமி. நீ உன் விருப்பம் போல ஆடு! எக்கேடும் கெட்டுப் போ! நான் பேசாமல் செத்துப் போகிறேன்.’’ தாய் தன் கடைசி ஆயுதத்தை எடுத்து விட, இருந்த இருக்கையை தள்ளிக்கொண்டு வேகமாக எழுந்தான் நரேன்.
‘‘இங்க பாருங்க, மஞ்சு தான் என் வாழ்க்கை. இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம். அவளே என்னை வேண்டாம் என்று வேற வாழ்க்கையைத் தேடினாலும், நான் சொன்னதிலிருந்து சாகும் வரைக்கும் மாற மாட்டேன்.’’ என்றான், உறுதியான குரலில் கடுமையாக!
‘‘அதற்கென்று நீங்களே முன்னின்று முழு விருப்பத்துடன் செய்து வைக்காமல் என் கல்யாணமும் நடக்காது.’’ தொடர்ந்து கூறி, விருட்டென்று வெளியே சென்றவன், அதன் பிறகு இந்த ஆறு மாதங்களிற்கும் மேலாக தாயுடன் முகம் பார்த்து சந்தோசமாகக் கதைத்ததேயில்லை எனலாம். அதேநேரம் எந்தவொரு கடமைகளிலிருந்தும் அவன் பின் வாங்கவும் இல்லை.
ஆனால், இவை எதுவுமே ரஞ்சியின் மனதை இதுவரையிலும் மாற்றவில்லை! அவரும் எவ்வளவோ முயற்சிகள் யார் யாரைக் கொண்டெல்லாம் செய்து பார்த்தும், நரேனும் கொஞ்சமும் மாறுவதாய் தன் மனதை மாற்றுவதாய் இல்லை.
எப்படியென்றாலும், மஞ்சுவும் நரேனை ஒதுக்குவதில் ரஞ்சிக்கு மிகுந்த சந்தோசம், நிம்மதி!
மஞ்சு, நிச்சயமாய் நரேனை விட்டுவிட்டு வேறு யாரையாவது தான் திருமணம் செய்வாள் என்பதே அவர் நம்பிக்கை.
அந்த நாளையும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பழைய நினைவுகளிலிருந்து மீண்ட ரஞ்சி, மகனுக்கான உணவை மேசையில் எடுத்து வைத்ததும், வந்தமர்ந்து அமைதியாய் உண்டவன் எதுவும் பேசாது எழுந்து செல்ல முனைந்தான்.,
‘‘தம்பி, அந்த சத்தியன்..அதுதான் இரண்டு மூணு தரம் நாரஹென்பிட்டாவில இருந்து உன்னிடம் வந்து போனாரே, அவரை அவரின் அம்மாவோட வெள்ளவத்தையில கண்டேன். நல்ல மனிசி, நல்லாக் கதைத்தார். ஒருநாளைக்கு வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறேன். அவயளின் அண்ணாவும் யாழ்பாணத்தில தான் இருக்கிறாராம் என்ன?’’ மகனோடு பேச்சை வளர்த்தார் ரஞ்சி.
அவனோ, சிறிது தயங்கி நின்று தாய் சொல்வதைக் கேட்டுவிட்டு, விடுவிடுவென்று தன்னறைக்குள் புகுந்துகொண்டான்.
அவன் உடலோ, மிகவும் களைத்துப் போய் ஓய்வை யாசித்தது! உள்ளமோ அதற்கு நேர் மாறாக குழப்பத்துடன் அடம் பிடித்துக் கொண்டிருந்தது!
சத்தியனை நரேனுக்கு பெரிதாக அறிமுகம் இல்லை, ஆனால், அன்று யாழில் பிரச்சனைகள் நடந்த நேரத்தில் சத்தியனும் அங்கு நின்றபடியாலும், மஞ்சுவை சத்தியனுக்கும் நன்றாகத் தெரியுமாதலால், அதன் பின்னர் கொழும்பு வந்த நரேனை சத்தியன் அடிக்கடி சந்தித்தும் தொலைபேசியில் உரையாடியும் நல்ல நண்பனாகி விட்டான்.
சத்தியனுக்கும் மயூவுக்கும் திருமணம் முடிவானது தெரிந்த பின்னர் அவர்கள் நட்பு இன்னும் இறுகி விட்டது.
சத்தியனின் நட்பும் அன்பும் ஆறுதலும் தான், ராமும் இவனைத் தவிர்த்த போதும், இன்றைக்கும் இவனுக்கு பெரும் ஆறுதலாய் இருந்து வருகிறது.
பல தடவை அகிலுடன் சத்தியன் வீட்டுக்கும் போய் வந்ததில், அவன் பெற்றவர்களுக்கும் இவனை நன்றாகத் தெரியும்!
‘‘தம்பி நீங்க ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அந்தப் பிள்ளைகள் படிப்பை முடிக்கட்டும்; மிச்சத்தை நாங்க பார்த்து செய்து வைக்க மாட்டோமா?’’ என, ஆறுதலாய் நரேனைத் தேற்றி வருகிறார் பூரணி.
‘பூரணி ஆன்ட்டி அம்மாவுடன் கதைத்து வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இங்கே வந்து மஞ்சு பற்றிக் கதைக்க, இந்த அம்மா மரியாதை இல்லாமல் ஏதும் கதைத்து விட்டால்?’ கலங்கிய நரேன்,
‘‘சத்தியனிடம் இதைப் பற்றிச் சொல்லி வைக்க வேண்டும்.’ என்று நினைத்தபடியே படுக்கையில் சாய்ந்தான், தன் மனதில் எழும் நினைவலைகளுடன் போராடிக் கொண்டே கண்ணயர்வதற்காய்!

error: Alert: Content selection is disabled!!