ராமையும் ஸ்ரீயையும் ஆரம்பத்திலிருந்து கேலி பேசிக் கொண்டிருந்த மஞ்சுவும், தன்னுள் தன் கவலைகளுடன் சுருண்டு விட்டதால், தோழியில் அடிக்கடி ஆதுரமாய்ப் பதிந்து மீளும் ராமின் பார்வைகளை அவளாலும் இனம் காண முடியவில்லை.
தோழிகள் மூவருமாய் ராம் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தாலும், ஸ்ரீ ராமுடன் தேவையற்றுக் கதைப்பதில்லை. அவள் மனதில் ஆரம்பத்தில் அவனால் ஏற்பட்ட சலனம் வளரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், அழிந்து விட்டதா என்றால் அதற்கும் அவளிடம் தக்க பதில் இல்லை! அப்படிச் சொல்வதை விட அதைப் பற்றியெல்லாம் ஆராய்வதில், அவள் தன் நேரத்தை செலவிடவில்லை என்பதே உண்மை.
தன் மனதில் அவள் பற்றிய நினைவுகள் அழிக்க முடியாதவாறு நிலையாகப் பதிந்து விட்டதை எப்பவோ உணர்ந்திருந்த ராம், தானா இப்படி என ஆச்சரியப்பட்டாலும், தன் முதல் காதலால் ஏற்பட்ட ரணம் முற்றாக அழியாவிடினும், தற்போது வெகுவாய் மறைந்திருப்பதையும், ஸ்ரீயுடன் தன் காதலைப் பகிராமலேயே அவளுடன் நெருக்கமாய் உணர்பவன், இன்று அவளைத் தனியாகச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சமும் நழுவவிட விரும்பாமல், தான் கேட்டதற்கு பதில் சொல்லாது முழித்துக் கொண்டு நிற்பளை நெருங்கினான்.
‘‘என்ன ஸ்ரீ, எங்கே உம் பொடி கார்ட்ஸ்…வாலுகள்?’’ கேலியாகக் கேட்க, அவனை இலேசாய் முறைத்தவள், எதுவும் சொல்லாது வெளியே பார்வையைப் பதித்தாள்.
‘‘ஏன் ஸ்ரீ, இன்றைக்கு மௌன விரதமா? பேச மாட்டிங்களா? இல்லையென்றால்…’’ மீண்டும் கேலியாகவே பேச்சைத் தொடர்ந்தான் ராம்.
‘‘இல்ல சார்…நேரமாச்சி. நான் போயிவிட்டு வாறேன். மஞ்சுவை கேட்டீங்க என்று சொல்கிறேன்.’’ அவசரமாக இடையிட்டுச் சொன்ன ஸ்ரீ, வெளியில் இறங்குவதற்காய் படியில் கால் வைக்க, ஓரெட்டில் நெருங்கி அவள் கரம் பற்றித் தடுத்தான் ராம்.
‘‘கொஞ்சம் நில்லும்; நான் எப்போ மஞ்சுவை விசாரித்தேன்?! நீர் என்ன.. கதைத்துக் கொண்டிருக்கும் போதே இடையில் விட்டுவிட்டு ஓடுகிறீர்?’’ அவளுடன் மல்லுக்கு நிற்கும் உத்தேசத்தில் வந்தவன் போல் மிகச் சாதாரணமாக பேச, பயம் கலந்த அதிர்வுடன் நூலகத்தின் உள்ளே திரும்பிப் பார்த்தாள் ஸ்ரீ.
அதேநேரம், ‘‘சா..ர்.. முதல்ல கையை விடுங்க…” தடுமாறியவாறே கையை உதற, அவன் பிடி இறுகியது. அவளின் முறைப்பைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை அவன்.
‘‘இந்த மழையில், அதுவும் சைக்கிளில்…இருட்டியும் போச்சு.. உமக்கு என்ன விசரா?’’ என்றவன், ‘‘பேசாமல் என்னோடு வீட்டுக்கு வாரும், நான் கொண்டு போய் விடுகிறேன்.’’ என்றான் முடிவாக.
‘‘ஹைய்யோ சார், உங்களுக்குத் தான் விசர்; முதல் என் கையை விட்டுட்டு கதையுங்க.’’ பதறிவிட்டாள் ஸ்ரீ.
அவளின் பதற்றத்தில் துடித்த உதடுகளையும், கலங்கிய விழிகளையும் இரசித்தபடி மெதுவாகப் பிடியைத் தளர்த்தி அவள் கரத்தை விட்டவன், ‘‘பயப்படாதேயும் ஸ்ரீ, இங்கே ஒருத்தரும் இல்லை; யாரும் பார்க்கவும் இல்லை.’’ அவன் முகத்தில் விரிந்த முறுவல் பளிச்சிட்டது!
‘லூசு! மறை கழன்ற லூசு! இதெல்லாம் ஒரு லெக்ஷ்ரர்! மடச்சாம்பிராணி! காலில் கிடக்கிறதால வேண்டியிருப்பாய்; ஆன்ட்டியோட முகத்துக்காகப் பார்க்கிறேன். அதோடு, இளிப்பு வேற வேண்டிக் கிடக்குதா?’ வெளியில் கொட்டும் மழைக்குப் போட்டியாய் மனதுள் அர்ச்சனை மழை பொழிந்தாள் ஸ்ரீ.
உள்ளே குமுறும் ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டவள், இன்னமும் ஆர்வமாய் அவன் தன் முகத்தையே பார்த்திருப்பதைப் பார்த்து, ‘இப்ப ஏன் இந்தப் பார்வை பார்க்குது?’ மனதில் சினக்க முற்பட்டாலும் சட்டென்று அவன் விழிகளைத் தவிர்த்து விலகியது அவள் நயனங்கள்!
இதுவரை, மழைக்குளிரால் சில்லிட்ட அவள் உடலும் உள்ளமும் அவன் பார்வையாலும் செய்கைகளாலும் மெல்ல மெல்ல நடுக்கம் கொண்டது.
சட்டென்று சமாளித்துக் கொண்டாள் ஸ்ரீ. அக்கணம், இத்தனை நாள் தன் விரிவுரையாளர் என்று மனதில் சுமந்த மரியாதையைக் கடந்திருந்தால் அவள். அதை அவள் சற்றும் உணரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை தேவையில்லாது ஒத்தவார்த்தை பேசியிராதவள், யாரோடும் இலேசில் கோபம் கொள்ள நினைக்காதவள், இவனுடனான முதல் சந்திப்பில் சீறியது போலவே சண்டைக் கோழியாகச் சிலிர்த்துக் கொண்டாள்.
‘‘இங்க பாருங்க சார், எப்படி வந்தேனோ, அப்படியே போகவும் தெரியும்; உங்க உதவி தேவையில்லை. கேட்காமலேயே உதவ நினைத்த உங்க நல்ல மனதுக்கு நன்றி.’’ வெட்டும் பார்வையோடு சொன்ன வேகத்தில் படிகளில் இறங்கத் தொடங்க, தானும் இணைந்து இறங்கிய ராம், அவள் வெளியில் கால் வைக்கவும், மீண்டும் அவள் கரத்தைப் பற்றி நிறுத்த, சட்டென்று மூண்ட சினத்துடன் அவனை முறைத்தாள் ஸ்ரீ.
‘‘சார்…வேண்டாம். ஒரு அளவுக்குத் தான் எல்லாருக்கும் மரியாதை கொடுக்கலாம்.நீங்க என்ன செய்றீங்க என்று உங்களுக்கு விளங்கவில்லையா? யாராவது பார்த்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? உங்களுக்கென்ன..” என்றவளை, மேலும் கதைக்க விடாமல் தொண்டை அடைத்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கியிருக்க, கண்களோ, கசிந்த கண்ணீரை வெளியேற்றவா வேண்டாமா என்று வாக்குவாதத்தில் இறங்கியிருந்தன!
‘‘ஹைய்யோ ஸ்ரீ, லூசா நீர்? ஸாரி ஸாரிம்மா.. இந்தளவுக்கு உம்மை நான் வருத்துவதற்கு நினைக்கவில்ல.. நான்…உம்மை…வேண்டாம் விடும் … மன்னிச்சிக் கொள்ளும்..’’ அவன் வாய் தடுமாறியபடி சொன்னாலும், அவன் கரம் பிடித்த பிடியை விடவேயில்லை.
அந்த நேரம் பார்த்து, அவளோடு படிக்கும் பையன்கள் சிலர் நூலகத்திலிருந்து வெளியில் வர, சட்டென்று அவளை மறைத்தவாறு நின்று கொண்டான் ராம்.
‘‘இங்க பாரும் ஸ்ரீ, கிட்டத்தட்ட இரண்டு வருடமாக என்னை தெரியுமல்லவா? உமக்கு என்னில் நம்பிக்கை இருந்தால், பேசாமல் இதிலேயே நில்லும்; கையை விட்டதும் ஓடாதேயும்.’’ அடிக்குரலில் தீவிரமாய்ச் சொன்னவன், மெல்ல அவள் கரத்தை விட்டான்.
இவர்களை நெருங்கிய அப்பையன்கள், ‘‘சார், என்ன இங்க?’’ எனத் தொடங்கி, அவனருகில் நின்றவளைக் கண்டதும், அப்பட்டமாக முகத்தில் ஆச்சரியத்தை காட்டினார்கள்.
மறுகணம், ‘‘அப்போ, சார் நாங்க வாறோம்…’’ என்றவாறே நகர, ‘‘நாளைக்குப் பார்ப்போம். போயிட்டு வாங்க..’’ அவர்களின் விரிவுரையாளராக இயல்பாகச் சொன்னான் ராம்.
பின், தன் கையிலிருந்த தடித்த புத்தகங்கள் இரண்டையும் ஸ்ரீயிடம் நீட்டி, ‘‘இதை ஒருக்காப் பிடிச்சுக் கொள்ளும்.’’ அதே இயல்புடன் சொல்ல, அவளோ, தங்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டு செல்லும் பையன்களை நினைத்து உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவள், ‘கடவுளே! இவன்கள் என்னவெல்லாம் நினைத்து, எப்படியெல்லாம் கதைகட்டப் போறான்களோ!’ மனதில் தவித்துக்கொண்டே, ராம் தந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டாள்.
‘இந்த மனிசனுக்கு மூளை தான் கெட்டுப் போச்சு! இவருக்கு சேட்டைக்கு நான் தான் கிடைச்சேனா?’ அவள் திரும்பவும் மனதில் புலம்பிக் கொண்டிருக்க, ஒரு கரத்தால் தன் பெரிய குடையை அவளுக்கும் சேர்த்துப் பிடித்துக் கொண்டே, மறுகையால் கைபேசியில் செக்குரிட்டிக்கு அழைத்தவன், அவள் சைக்கிளை ‘ஷெட்’டில் விடுமாறும், நாளை வந்து எடுப்பதாகவும் சொன்னவன், அப்பொழுதும் கலங்கும் விழிகளோடு தன்னையே பார்த்திருந்தவளை அன்பாய்ப் பார்த்து புன்னகைத்தான்.
‘‘என்ன? எனக்கு நல்லா திட்டித் தீர்த்தாச்சா? சரி பரவாயில்லை விடும். யார் திட்டினது? நீர் தானே! அதற்கு உமக்கு எல்லா உரிமையும் இருக்கு; வாரும் போவோம்.’’ வெகுவாகப் பழகிய நெருக்கமானவன் போல் பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினான் ராம்.
‘இவரின் பேச்சும் நடத்தையும் கொஞ்சமும் நல்லா இல்லை. என்னைப் பற்றி இவர் என்ன நினைத்திருக்கிறார்? பெரிசா உரிமைக் கதையெல்லாம் கதைக்கிறார்! இவர்களின் வீட்டில் போய் சாப்பிடுவதால், எதை வேண்டுமென்றாலும் கதைக்கலாம் என்று நினைக்கிறாரோ?’ உள்ளத்தில் கோபமும் கலக்கமும் கலக்க, அவன் புத்தகங்களைத் திருப்பி வாங்கிக் கொள்ளாததால் அவற்றையும் அணைத்துப் பிடித்தவாறு, மறுக்க முடியாது அவனோடு சேர்ந்து நடந்தாலும் ஒரு குடைக்குள் அவனோடு இணைந்து நடப்பதில் மிகவும் அசௌகர்யத்தையே உணர்ந்தாள் அவள்.
ஒருநாளும் இல்லாமல் இப்படி நடந்து கொள்பவனை, தப்பான பார்வையிலும் பார்க்க முடியவில்லை. முதல், அதற்கு அவள் மனம் சிறிதும் இசையவில்லை.
எனவே, ஜாக்கிரதையாய் கொஞ்சம் தள்ளியே நடந்தவள், விஞ்ஞானப்பிரிவு நுழைவாயிளால் வெளியில் வந்து, முன்னாள் இருந்த சிறு ஒழுங்கைக்குள் புகுந்து ராம் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
குடை பெரிதாக இருந்தாலும், தள்ளி நடந்து வந்ததால் கொஞ்சத் தூரத்திலேயே பாதி நனைந்து விட்டாள் ஸ்ரீ.

