‘ஓஹோ! அப்போ நம்மைப் பற்றி ஏதோ எடுத்து விட்டிருக்கிறா என் செல்லம்! அதுதான் மஞ்சு அதை இங்க போட்டு உடைக்கத் துடியாத் துடிக்கிறா! என்னவாக இருக்கும்?! ம்ம்ம்…சரி சரி, எப்பவும் போல மஞ்சுவிடமே கேட்டுட்டாப் போச்சு!’ என்று ஸ்ரீயைத் தன் பார்வையால் வருடிய வண்ணமே மனதில் நினைத்துக் கொண்டிருந்தவன், கல்யாணத்தை படிப்பு முடிய வைப்போமா என்று மஞ்சு கேட்டதும் அதிர்ந்தே விட்டான்.
அதேநேரம், மஞ்சு சொன்னதும் திகைத்து நிமிர்ந்த ஸ்ரீயை, ஆதரவாக அணைத்துக் கொண்ட ராதா, ‘‘இல்லை..இல்லை. அதற்கெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன்! எவ்வளவு விரைவாக என் பிள்ளைக்கு கல்யாணம் நடக்குதோ அதுதான் எனக்கு சந்தோசம்! என்ன ஸ்ரீ உமக்கும் பிரச்சனை இல்லத் தானே! கல்யாணத்துக்குப் பிறகு தாரளாமா எவ்வளவு வேணுமோ படி ராஜாத்தி; நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அதை ராமோடு வாழ்ந்து கொண்டே செய்யலாம்.’’ சிறுகுழந்தையாய் கண்கள் கலங்க பிடிவாதம் பிடித்த ராமின் தாயைப் பார்த்த ஸ்ரீ, ராமையும் ஒரு பார்வை பார்த்தவாறே,
‘‘எனக்கு…பிரச்சினை ஒன்றுமில்லை ஆன்ட்டி…’’ என்றதும் அவளைக் கட்டிக் கொண்ட ராதா, ‘‘ஆன்ட்டி இல்லம்மா மாமி என்று சொல்லுடா.’’ என்றவாறே, ‘‘இனி என்ன? இப்பவே ஐயாவிடம் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கச் சொல்லுவோம்.’’ என்றார், நிறைந்த ஆனந்தத்துடன்.
திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமின்றி பெற்றவர்களை எதிர்க்கும் துணிவின்றி, மனக்குழப்பத்துடனேயே ஏனோ தானோ என்று கோவிலுக்கு வந்தவள், இங்கு வந்தும் கலங்கிக் கொண்டிருந்தவள், ராமைக் கண்டதும் அதிர்ந்து, பின் ஆச்சரியத்தால் மகிழ்ச்சியால் விழித்ததைக் கண்ட மயூவும் மஞ்சுவும்,
‘‘ஸ்ரீக்கு கூட ராமண்ணா மீது விருப்பம் இருந்திருக்கு! ராமண்ணா அவர் வீட்டில் தனக்கு ஸ்ரீயை பிடிச்சிருக்கு என்று சொல்லி இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை என்றால், இந்த அமுக்குண்ணி மாடு வெளியே சொல்லாமல் தனக்குள்ளேயே வைச்சிருந்திருப்பாளோ!’’ தம்முள் கதைத்துக் கொண்டவர்கள், தம் தோழிக்கு அருமையான வாழ்வு அமைந்ததில் மனம் நிறைந்து காணப்பட்டனர்.
அப்போது தற்செயலாக வாயிலைப் பார்த்த மயூ, ‘‘அங்க பாருங்க, நரேன் அண்ணா வருகிறார்!!’’ ஆச்சரியக் குரலில் கூவ, அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்த மஞ்சு, தன் குடும்பத்தினருடன் நரேன் வந்து கொண்டிருப்பதைக் கண்டு, தானிருந்த இடத்தை விட்டு விருட்டென்று எழுந்தாள்.
களையிழந்த முகமும், மெலிந்த தோற்றமுமாக வரும் நரேனையே அவள் பார்த்திருக்க, அவனோ மஞ்சு என்று ஒருத்தி அங்கிருப்பதையே உணராதவன் போல, மறந்தும் கூட அவள் புறமாகத் திரும்பாது வெகு சாதாரணமாக வந்தவன், ‘‘வாழ்த்துக்கள் ராம். ஸ்ரீ வாழ்த்துக்கள்மா…’’ மலர்வாக இருவரையும் வாழ்த்திவிட்டு, ராம் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
பின்னர் எல்லோருமாகச் கலந்தாலோசித்து, ராம் ஸ்ரீ கல்யாணத்தை வரும் விடுமுறையில் நடத்துவது என்று முடிவு செய்தார்கள்.
படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் செய்கிறேனே என்று தம்முடன் வாதாடிய மகள், இப்போது அமைதியாக கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி அமர்ந்திருப்பதைப் பார்த்த ஸ்ரீயின் பெற்றோரும், ராமின் பெற்றோர் திருமணம் பேச அவர்கள் வீட்டிற்கு வரும் போதே மஞ்சு வீட்டினரும் கூடவே வந்திருந்ததையும்,
அப்போது மஞ்சு, ‘‘ஸ்ரீக்கு இப்ப தெரிய வேண்டாம் ஆன்ட்டி. அவளுக்கு ராமண்ணா என்றால் பிடிக்கும். கட்டாயம் சம்மதம் என்று சொல்லுவாள் பாருங்க.’’ என்று சொன்னதையும் நினைத்துக் கொண்டவர்கள்,
‘மஞ்சு சொன்னது போல இவளுக்கு பிடிச்சுத் தானிருக்கு! இல்லையென்றால் இப்படி மலர்வாக இருப்பாளா?’ நினைத்துக் கொண்டவர்கள், முழுநிறைவுடன் திருமணம் பற்றி பேசி முடிவு செய்தனர்.
சந்தோசமாக கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முடிந்ததும், ஸ்ரீ குடும்பம் தாங்கள் போய் வருவதாகச் கூறி ஆயத்தமாக, ராம் குடும்பமும் மஞ்சு குடும்பமும் அவர்களுக்கு விடை கொடுத்தவர்கள், தாம் இன்னும் சிறிது நேரத்தில் புறப்படலாம் என்றவாறே கோவில் மண்டபத்தில் தங்கிக் கொண்டனர்.
அதுவரையிலும் நரேன் தன் பக்கமே திரும்பியும் பாராது, மற்றவர்களுடன் மிகவும் சகஜமாக கதைத்துக் கொண்டிருப்பதை உள்ளக் கொதிப்புடனேயே பார்த்திருந்த மஞ்சு, இனியும் இங்கிருந்தால் தன்னையும் மீறி, தான் எதுவும் கூறிவிட்டால் என்ற பயத்தில், ‘‘ஸ்ரீ… நில்லடி நானும் உங்க கூட வாறேன். வீட்டில இறக்கி விட்டுட்டுப் போங்க.’’ இறுகிய முகத்துடன் சொன்னவள், ‘‘நான் வீட்ட போறன்மா.’’ என்றவாறே அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள் .
சிறு தயக்கத்துடன் நரேனைப் பார்த்த மயூவும், ‘‘நில்லுடி நானும் வாறேன்.’’ என்றவள், அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று தன் தோழிகளுடன் இணைந்து கொண்டாள்.
மஞ்சு நரேனுக்கு இடையிலான மனஸ்தாபம் பற்றி அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்ததால், யாருமே எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை.
மயூ தன் வீட்டருகில் இறங்கிக் கொள்ள, மஞ்சுவை அவர்கள் வீட்டின் முன்னால் இறக்கிவிட்ட ஸ்ரீ குடும்பம் தங்கள் வீடு நோக்கிச் சென்றது.
வாகனத்திலிருந்து இறங்கிய மஞ்சு, விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தவள், அத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த உள்ளத்தின் குமுறலை அப்படியே வாயில் கதவில் காட்டி அதை அறைந்து சாத்தியவள், நெஞ்சை இறுக்குவது போல அடைத்துக் கொண்டுவர, அப்படியே அருகிலிருந்த சோஃபாவில் தொப்பென்று விழுந்தாள்.
இடைப்பட்ட இந்த காலப்பகுதியில் நரேன் எத்தனையோ தடவைகள் எத்தனையோ வழிகளில் முயன்றும், அவனை எல்லா வழிகளிலும் பிடிவாதமாகத் தவிர்த்து வந்தவள், இன்று எதிர்பாராது அவனைச் சந்தித்ததும் மிகவும் ஆடித்தான் போய் விட்டாள்.
இந்தப் பிரச்னைகளிற்குப் பிறகு, தம் காதல் தெரிந்தவர்களிடமும் நரேனிடமும், ‘‘எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றுமேயில்லை.’’ என்று அவள் வெளிப்படையாகச் சொன்னாலும், இந்த ஜன்மத்தில் பிரிக்கக் கூடிய, மறக்கக் கூடிய பந்தமாக தனக்கும் நரேனுக்கும் இடையிலான உறவை ஒருகணம் கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை! ஏன் அதற்கு அவள் முயன்றதும் இல்லை.
தன்னால் நரேனுக்கு எந்த விதத்திலும் மனகஷ்டம் வரக்கூடாது என்று மட்டுமே அவள் நினைத்தாள்.
ஆனால், தனது அந்த நினைப்பும், நரேனை எந்தளவுக்கு வருத்தும் என்பதும் அவளால் அறிய முடியாததில்லை. என்றாலும், அவன் தாயாரின் பிடிவாதத்தின் முன்னால் நின்று போராட அவள் விரும்பவில்லை என்பதே உண்மை.
ஆனால் இன்று, அவனைத் திடீரென்று சந்தித்ததும், அவனது பாராமுகமும் அவளை மிகவும் பாதித்தது; வேதனையில் சுருள வைத்தது எனலாம்!
‘என் வீட்டு ஆட்களோடு வருகிறார். ஆனால் என்னோடு மட்டும்…’ கண்களில் நீர் துளிர்க்க நினைப்பைத் தொடரவே கஷ்டபட்டாள்.
‘ஒரு சொல்லு..எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் அவர் சொத்தா கரைந்து போய்விடும்? ம்ம்ம்.. அதுவும் வேண்டாம், ஒரே ஒரு பார்வைக்கு கூட நான் பெறுமதியில்லாதவள் ஆகிவிட்டேனா? அவரைப் பொறுத்த மட்டில் அந்தளவுக்கு நான் வேண்டாதவள் ஆகிவிட்டேன்! அப்படித்தானே?’ மனக் கொதிப்புடன் நினைத்துக்கொண்டே சோர்வாக எழுந்தவள், தன்னறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டே,
‘இப்ப எதற்காக வந்திருக்கிறார்? இவ்வளவு நாட்களாக இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லையே! அன்றைக்குப் போனவர் இன்றைக்கு ஏன் வந்தார்? ராமண்ணா கல்யாண விஷயம் தெரிந்தா?’ நரேனின் திடீர் வருகையின் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றவளுக்கு, இப்போது கவலையை வேதனையை மீறி, அவனில் ஆத்திரம் பொத்துக் கொண்டு எழுந்தது.
‘எனக்கு இப்ப வாற விசரில், அப்படியே அந்தாளைப் பிடித்து கழுத்தை நெரிச்சுக் கொல்ல வேண்டும் போல இருக்கே! நடிப்பு! எல்லாம் நடிப்பு! சுத்த நடிப்பு!’
‘தானாக வந்து காதலிப்பார்! பிறகு, என்னவோ தான் தான் சின்ன வயசிலிருந்து சோறு போட்டு வளர்த்த கணக்கில், எங்கே என்னவென்று பாராமல் கைநீட்டுவார்! எதையும் செய்திட்டு அழகா மன்னிப்பு என்று ஒரு வார்த்தை சொல்லி சமாளிக்கலாம் என்று நினைத்து பல்லைக் காட்டுவார்! ‘நான் அப்படியே உருகிப் போய் அவர் பின்னால போக வேண்டுமாக்கும்.’
‘தடிமாடு…தடிமாடு! இப்பப்பாரு, முகத்த மட்டும் ஏதோ நாலு கப்பல் ஒன்றாகக் கவிழ்ந்து போனது போல வைத்துக் கொண்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார்!’ தாறுமாறாக தன் எண்ணத்தில் நிறைந்திருப்பவனுக்கு எண்ணங்களால் சுழட்டி அடித்தாள் மஞ்சு.
இறுதியில் மீண்டும் விழிகள் நிறைய, ‘நான் அங்கேயிருந்தது அவருக்குத் தெரியாதா? இல்லையென்றால், உண்மையாகவே பார்க்க விருப்பம் இல்லையோ?!’
அவ்வளவு திட்டிய பின்னரும், அவன் பார்வை தன் மேல் விழவில்லையே என்று ஏங்கி, தாங்க முடியாமல் வருந்தினாள்.
இந்த சில மாதங்களில் எத்தனையோ தரங்கள் அவன் பேச முனையும் போதும், சமாதானம் செய்ய முனையும் போதும், தான் கொஞ்சமும் அதற்கு அனுமத்திக்காததை முற்றாக மறந்தவளாய், தன்னை அவன் இன்று கண்டு கொள்ளாதது மட்டுமே பிரதான பிரச்சனையாய் மனதில் உறுத்த ஹாலில் வந்தமர்ந்தவள், வீட்டின் அழைப்பு மணியோசை விடாது ஒலிப்பதைக் கேட்டு ,
‘‘வாறேன்…வாறேன். மணி இருக்கென்று இப்படியா போட்டு அடிப்பது!’’ திட்டிக்கொண்டே எழுந்து, யன்னல் திரையை விலத்தி யார் எனப் பார்த்தவள், அப்படியே ஓய்ந்து போய் யன்னலில் சாய்ந்து நின்று கொண்டாள்!

