தன்னை, தான் அவள்பால் ஈர்க்கப்படுவதை உணர்ந்த அக்கணத்திலேயே, வெகுவாய் யோசித்து சில விடயங்களைச் செய்த பின், நேராய் மஞ்சுவின் முன் போய் நின்றான், தன் உள்ளம் நிறைந்த காதல் கோரிக்கையுடன்!
எத்தனையோ நாட்கள் காத்திருந்து, அவள் தனியாக இருக்கும் சமயமாய் பார்த்து வீட்டுக்கு வந்த நரேனை, வழமைபோல எதிர் கொண்டாள் மஞ்சு.
‘‘அண்ணா இல்லையே, வெளியே போயிருக்கிறார். உங்க ரூமுக்கு வரவில்லையா?’’
அவனோ, எதுவுமே சொல்லாமல் விறாந்தையிலிருந்த கதிரையில் (இருக்கை) அமர்ந்தவன், ‘‘ஒரு கப் டீ தருவீரா மஞ்சு?’’ என்றான், அதற்காகத்தான் இப்போது வந்தேன் என்ற கணக்கில்!
‘‘என்ன…ஒரு மாதிரி இருக்கிறீங்க நரேன் அண்ணா? உடம்பு சரியில்லையா?’’ என்றவளை, பதில் சொல்லாது நோக்கியவனுக்கு, அவள் வழமையாக அழைக்கும் ‘அண்ணா’ என்ற அழைப்பு, அவள் மீது மனம் நிறைந்த நேசம் கொண்டுள்ள நிலையில், நிச்சயமாக இனிமை தரவில்லை! மாறாக, மனச் சுணக்கத்தையே தந்தது!
‘அண்ணாவாம் அண்ணா! என்னவோ நான் இவளோட பிறந்த மாதிரி!’ அவளையும், அவளின் அழைப்பையும் மனதில் கடிந்து கொண்டவன், வெளியில் மிகவும் அமைதியாக, ‘‘ம்ம்ம்…..இல்ல..நல்லாத்தான் இருக்கிறேன்; உடம்பு சரியில்லை என்றால்தான் டீ தருவீரோ?!’’ என்றான், கேலிப் புன்னகையுடன்.
அவன் பதிலில் வழமையான தன் துடுக்குத்தனம் தலைதூக்க, ‘‘இல்ல்ல… நான் தரும் டீயைக் குடித்த பிறகு சிலவேளை உடம்பு சரியில்லாமல் போகலாம்; அது தான் கேட்டேன்!” என்றவாறே சமையலறை நோக்கிச் சென்றவளின் மனதில், ‘என்ன, ஒரு நாளும் இல்லாமல் இப்படி வந்திருக்கிறார். அதுவும், அண்ணா வீட்டில் இல்லை என்ற பிறகும்!’ என்ற எண்ணம் எழுந்தது.
விரைவாக தேநீரைத் தயாரித்தெடுத்துக்கொண்டு வாயிலை நோக்கித் திரும்பியவள், அங்கே நின்ற நரேனை கண்டதும், அவனை அங்கு எதிர்பாராத அதிர்வோடு ஒருகணம் நின்றவள், மெதுவாக தன்னைச் சமாளித்தவாறே, ‘இவர் என்ன ஒரு மார்க்கமாகப் பார்க்கிறார்; அதுவும் இங்க வந்து நின்று கொண்டு!’ என நினைத்தவாறே,
‘‘இந்தாங்கண்ணா டீ. குடியுங்கோ அண்ணா. வாங்கோவன் வெளியில போய் இருப்போம் அண்ணா..” அடுக்கடுக்காய் அண்ணாக்களை இலாவகமாக அள்ளி வீசினாள்.
அவள் வேண்டுமென்றே ‘அண்ணா’ என்று அழுத்தி அழுத்திக் கூப்பிடுவதை உணர்ந்த நரேன், ‘மஞ்சுவா கொக்கா’ நினைத்தபடி பெரிதாக நகைக்கத் தொடங்கியவன், ‘‘வேண்டாம் மஞ்சு, இந்த அண்ணாவை இனி விட்டு விடும். உமக்குத்தான் ஆசையாய் கூப்பிட அண்ணா இருக்கிறானே! பிறகு ஏன் என்னையும் அண்ணா என்கிறீர்?’’ என்றான், மலர்ந்த சிரிப்புடன்.
மஞ்சுவோ, அவன் சொன்னதையும் அவன் சிரிப்பையும் ஒரு மாதிரிப் பார்த்தவாறே, ‘இவர் எப்போதுமே வீட்டுக்குள்ள வரமாட்டார், அதுவும் அண்ணா இல்லை என்றால் ‘கேட்’டோட போறவர், சமையலறை வரைக்கும் வந்து நின்று கதைக்கின்ற கதை பிழையாக இருக்கே!’ எச்சரிக்கை உணர்வு எழுந்தது.
‘‘சரி சரி, உங்களை எப்படி கூப்பிடுவது என்று இத்தனை நாளுக்குப் பிறகு, அதுவும் இன்றைக்கே கதைத்து முடிவெடுக்கலாம். முதல் கதவை விட்டு விலகுங்க; வாங்க விறாந்தையில போய் நின்று ஆறுதலாக கதைப்போம்!’’ அவனை வெளியே அழைத்துச் செல்ல முயன்றாள்.
அவள் முயற்சியை அறிந்து கொண்டவனோ, நன்றாகச் சமையலறை வாயிலின் நடுவில் நின்று கொண்டவன், சிரிப்பை அடக்காமல் அவளைக் கூர்ந்து பார்த்தான்.
அதே நேரம், ‘‘முதல் டீயத் தாரும்’’ கை நீட்ட, அவள் கை தானாக தேநீர் கோப்பையை அவனிடம் கொடுத்தது! மனமோ இலேசான பயத்துடன் கலங்கத் தொடங்கியது!
‘இவரை உள்ளுக்கு விட்டிருக்கக் கூடாதோ! இப்ப என்ன வந்தது; இன்றைக்கு நல்லா வேண்டிக்கொண்டு போகப் போறார்! அண்ணாவின் ஃப்ரெண்ட் என்றால், ஒரு அளவுக்குத் தான் மரியாதை!’ மனதில் கடுகடுத்தாள்.
‘ச்சே…அந்த டீயை கொடுத்திட்டேனே! கையில் இருந்திருந்தால் ஏதாவது சேட்டை விட்டால், மூஞ்சியில் வீசி அடிச்சிருக்கலாம்; அநியாயமாய் போச்சு!’ கடகடவென்று யோசிக்க, அவளையே பார்த்தவாறு தேநீரில் ஒரு வாய் பருகியவன், ‘‘என்ன மஞ்சு, இந்த டீயை என் முகத்தில் ஊற்றி இருக்கலாம் என்று யோசிக்கிறீரா?’’ என்றதும், அதிர்ந்து போனாள் அவள்.
உள்ளுக்குள் எழுந்த நடுக்கத்தை வெகுவாக மறைத்து, கஷ்டப்பட்டுத் தன்னைச் சமாளித்தவள், இழுத்து வைத்த பொறுமையுடன், ‘‘இங்க பாருங்க, எனக்கு விசர்(பைத்தியம்) வாறதுக்குள்ள நீங்க போயிட்டு அண்ணா வந்த பிறகு, அதுவும் கால் பண்ணிக் கேட்டுவிட்டு வாங்க!’’ என்றாள் சீறலாக!
ஆனால் அவனோ, அவள் கோபத்தை இரசித்தபடி சிறிதும் அசையாமல் நின்றான்.
அவனின் இச்செய்கையில் தன்னுள்ளே வெகுண்டே போனாள் மஞ்சு!
அவள் சுபாவமும் அசட்டுத் தைரியமும் ஒன்றாகச் சேரவே, அவனை, அவனே சிறிதும் எதிர்பார்க்காத வகையில், நெஞ்சில் கை வைத்து இறுக்கி வெளியில் தள்ளியவள், ஒரே ஓட்டமாய் முன் வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கி நின்று கொண்டாள்; ‘ஹப்பாடா ஒருமாதிரி தப்பி விட்டோம்!’ என்ற கணக்கில்!
சிறிதும் எதிர்பாராத வகையில் அவள் தள்ளிய வேகத்தில் பின்னால் உள்ள சுவரில் மோதி, கையில் வைத்திருந்த சுடு தேநீர் அப்படியே நெஞ்சில் ஊற்றப்பட்ட நிலையில், அதிர்ந்து போய், பரிதாபமாக நின்றான் நரேன்.
மனதில் தோன்றியுள்ள விருப்பத்தை அவளுடன் பகிர்ந்து கொள்வோம், அதேநேரம் அவள் மனதையும் அறிந்து கொள்வோமென்று வரும் போதே, அது நிச்சயம் இலகுவாக, சுமுகமாக அமையாது என்று தெரிந்திருந்தாலும், இப்படி, தன்னை ஒரு கெட்டவனைப் போல, அதுவும் அவளை ஏதோ செய்வதற்காக திட்டமிட்டு வந்தவனை போல நடத்துவாளென்று, இவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
பல வருடங்களாகப் பழகியும், தன்னைப்பற்றி இப்படி நினைத்து விட்டாளே என்று வருந்தியவன், கையிலிருந்த காலிக்கோப்பையை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு, வெறுமையான மனதோடு விறுவிறுவென வெளியில் வர, அவன் வந்த கோலத்தைப் பார்த்தவளுக்கோ, பதற்றத்தையும் மீறி, சிரிப்புப் பீறிட்டது!
‘பார்ரா முறைக்கிறதை! இது மட்டும் மணிக்கு தெரிய வேண்டும்; அய்யா இந்த வீட்டுப் பக்கம் தலைவைத்தும் படுக்க முடியாது. அது தெரிந்திருந்தும் எவ்வளவு திண்ணக்கம் இந்தாளுக்கு! அதுவும் என்னோடு..ஹ்ம்ம்..’ நினைத்தவள், உள்ளுக்குள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
அவனோ, புரியாத பார்வையில் இவளை ஏறிட்டவாறே வெளியில் இறங்க, இவளோ, விலகி, பின் பக்கம் ஓடுவதற்கு ஆயத்தமாகினாள்.
அதை உணர்ந்தவன் பார்வை இப்போது அவளை சுரத்ததேயில்லாது தொட்டு மீண்டது!
மனமோ, மிகுந்த வேதனையுடன் சுருள, எதுவுமே பேசாது வெளியேறினான் அவன்.
இப்படி, ஆசை ஆசையாய், இனிய எதிர்பார்ப்போடு, அவளிடம் தன் நேசத்தைப் பகிர்வோம் என்ற முதல் முயற்சி, தன் வாழ்வில் மறக்க முடியாதவாறு அமைந்ததை, அன்று அவள் தன்னை ஒரு வில்லன் போல் பார்த்து நின்ற பார்வையை, இன்று நினைத்துப் பார்த்த நரேன், ‘கில்லாடிடீ நீ!’ என, தன்னவளை மனதில் செல்லமாய் திட்டியவன், தாதி வந்து அழைக்கவே, என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து சென்றான்.

