‘‘ஏன்மா கேட்கிறீங்க? இன்னும் இரண்டு நாளைக்கு இருக்கும்; பிறகு இல்லம்மா.’’ என்றவள், தாயின் பதிலுக்காக காத்திருக்க, ‘‘அதில்லம்மா, மத்தியானம் போல நாலைந்து பெடியள் (பையன்கள்) வந்து கம்பஸில படிக்கின்ற கேர்ள்ஸ் இந்த வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டார்கள்! அவன்களைப் பார்த்ததும், நீங்க சொல்லும் ராகிங் கதைகள் எல்லாம் என் நினைவுக்கு வர, எனக்கு வந்த கோபத்தில்…’’ பெருமையாக சொல்லிக் கொண்டு வந்தவர், மகள் முகத்தில் கலவரத்தைப் பார்த்தும்,
‘‘நீ ஒன்றுக்கும் பயப்படாதே! கம்பஸா என்று கேட்டுவிட்டு, நல்லா நறுக்கென்று உரைக்கிற மாதிரிக் கேட்டு அனுப்பியிருக்கிறேன்!” என்றவர், “போகும் போது, ‘மன்னிச்சுக்கோங்க அம்மா… உங்க பிள்ளையை எங்களுக்கு யாரென்றே தெரியாது.’ என்று சொல்லி, உன் பெயரைக் கேட்டான்கள்; நானும் சொன்னேன். ‘இனிமேல் ராகிங்கே செய்யமாட்டோம்.’ என்று சொல்லிவிட்டுப் போறான்கள்!’’ என்றவருக்கு, மகளின் பாவனையை வைத்தே, தான் ஏதோ தேவையற்ற வேலை செய்துவிட்டது போலத் தோன்றியது.
தாய் சொல்லச் சொல்ல கேட்டு அதிர்ந்தவளோ, தலையில் கைகளை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.
‘‘ஹைய்யோம்மா! உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? அவன்கள் இங்க ஏன் வந்தான்கள்?’’ ஒருபோதும் இல்லாதவாறு கொஞ்சமே கொஞ்சமாக காரம் காட்டியவளால், உள்ளுக்குள் எழுந்த மொத்த ஆத்திரதையும் தாயிடம் காட்டினால், என்ன கிடைக்குமென்று தெரிந்திருந்ததால், வேறு வழியின்றி தன்னை அடக்கிக் கொண்டாள்.
‘‘அதும்மா, இங்க பக்கத்தில் இரண்டாம் வருடத்தில் படிக்கின்ற பிள்ளை ஒன்று வீடு மாறி வந்திருக்காம்; அந்தப் பிள்ளையைத் தேடி வந்தவன்களாம்!’’ என்றவர், ‘‘நீ பயப்படாதே! நான் நல்லாக் குடுத்திருக்கிறேன். இனி ராகிங் பண்ணும் எண்ணமே அவன்களுக்கு வராது!’’ ஆறுதலாகச் சொல்லி, ‘‘தேத்தண்ணி போடுறேன், வா!’’ உள்ளே சென்றார்.
ஸ்ரீயோ, அப்படியே அமர்ந்திருந்தவள், ‘‘இந்த அம்மா எங்களைத் திட்டுவது போல அவங்களையும் திட்டி இருப்பார். எனக்கு நாளைக்கு இருக்கு மங்களம். பேசாமல் இரண்டு நாளைக்கு அந்தப் பக்கம் போகாமல் இருப்போமா?’’ தனக்குத்தானே புலம்பினாள்.
‘பெயரையும் சொல்லி அனுப்பி இருக்கிறாரே!’ தன்னைத் தான் நொந்து கொண்டாள்.
‘இந்த விசயத்தை மயூ, மஞ்சுவிடம் சொல்வோம்!’ என எண்ணி, கைபேசியில் அழைத்து விபரத்தைக் கூறியதும், நண்பிகளோ, விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
‘‘ஹா…ஹா…ஆன்ட்டி…ஆன்ட்டி தான்! பார், போட்டிருக்கிறார் ஒரு போடு; அதுவும் கடைசி நேரத்தில்!’’ என்றவர்கள், என்ன நடக்குமோ என்று பயந்தவளிடம், ‘‘அப்படி மினக்கட்டு தேடி வருவான்களா? வரமாட்டான்கள்டீ. நீ பயப்படாமல் நாளைக்கு வா; பார்ப்போம்!’’ தைரியம் கூறி கைபேசியை வைத்தார்கள்.
அடுத்தநாள் காலை விரிவுரைகள் முடிய, ஒரு மணித்தியாலத்தின் பின் இன்னுமொரு விரிவுரை உண்டென்பதால், தோழிகள் மூவரையும் மதிய உணவுக்காக வரும்படி அழைத்திருந்தார் ராமின் தாயார்.
நடந்தே செல்வோம் என முடிவெடுத்த தோழிகள், விரிவுரைமண்டபத்தை விட்டு வெளியே நடந்துவந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, கன்டீன் வாசலில் நின்ற மாணவ கும்பல் ஒன்றிடம், இவர்களின் வகுப்பு மாணவர்கள் சிலர் இவர்களைக் கைகாட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்ட மயூ, ‘‘டீ…அங்க பாருங்க, நம்மைக் காட்டி ஏதோ கதைக்கிறார்கள்!’’ என்றவள் மனதில், ‘ஸ்ரீ..சொன்ன பெடியன்களாக இருக்குமோ!’ என நினைத்தாலும், அதை வெளியில் சொல்லவில்லை.
இவர்கள் மெல்ல நடந்து அருகில் வர இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ‘‘கொஞ்சம் நில்லுங்க!’’ மறித்தார்கள்!
தயங்கி நின்றவர்களிடம் அக்கூட்டத்திலிருந்த ஒருவன், ‘‘உங்களில், மார்டின் ரோட்டில் இருந்துவரும் ஸ்ரீ யாரு?’’ மூவரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டே கேட்டான்.
ராகிங்கில் மாட்டுப்பட்டு விட்டார்கள் என்று போவோர் வருவோர் பரிதாபப் பார்வை வீசிச் செல்ல, மெதுவாய் அங்கிருந்து நழுவப் பார்த்த ஸ்ரீயைக் கண்ட இன்னொருவன், ‘‘ஹேய் …நீர்…மாட்டின் ரோட் தானே! உமக்கு என்ன பெயர்?’’ கூர்மையாகப் பார்த்தவாறே வினவினான்.
‘கடவுளே! இவன் யாரு? நான் ஒரு நாளும் கண்டது கூட இல்லையே! அம்மா! உங்களால் இன்றைக்கு இவங்களிட்ட என்ன பாடு படப்போறேனோ!’ மனதில் அழுதுவாறே, ‘‘ நான்…நான் தான் ஸ்ரீ…’’ என்றாள், எழும்பாத குரலில்!
உடனே அங்கிருந்தவர்களில் மற்றொருவன் அவளை மேலிருந்து கீழாக உறுத்துப் பார்த்தான்.
‘‘ஒஹ்! நீங்க தானா அந்த மகாராணி! வாங்க மேடம்…வாங்க! உங்களோட நிறையக் கதைக்க வேண்டுமே! காலையிலிருந்தே உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம்!’’ பின்னால் வரும்படி சைகை செய்து விட்டு, அருகிலிருந்த ஸ்டோன் பெஞ்ச் நோக்கி நடக்கத் தொடங்கினான்.
கூடவே, ‘‘ம்…நட…’’ அதட்டிய நாலைந்து மாணவர்களுடன் ஸ்ரீ நடுங்கிக் கொண்டே செல்ல, அவளுடன் சேர்ந்து மயூவும் மஞ்சுவும் வருவதைக் கண்டவர்கள், இருவரையும் பார்த்து முறைத்தனர்.
‘‘எங்களுக்கு இந்த மகாராணியோட தான் பேச்சு! இரண்டு பேரும் சத்தம் போடாமல் இங்கிருந்து போய்விடுங்க; அதுதான் உங்களுக்கு நல்லது!’’ சொல்லவும் செய்தார்கள்.
அப்படிச் சொன்னதும் கேட்டுவிடுவாளா மஞ்சு!
‘‘இல்ல அண்ணா, அது வந்து…நாங்க சாப்பிட்டுவிட்டு திரும்ப வரவேண்டும் அண்ணா. ப்ளீஸ்..காலையிலும் சாப்பிடவில்லை அண்ணா. அவளையும் விடுங்க அண்ணா.’’ கெஞ்சும் பாவனையில் அண்ணாக்களை அள்ளி வீசியவள், அவர்களின் முறைப்பைக் கண்டதும், ‘‘வேண்டுமென்றால் பின்னேரம் விரிவுரை முடிந்ததும் கையோடு கூட்டிக் கொண்டு போங்க அண்ணா. அப்போதான் நிறைய நேரம் ‘ராங்க்’ பண்ணலாம்!’’ உள்ளடங்கிய கேலியோடு வழி சொல்லிக் கொடுத்தாள்.
அவள் அண்ணாக்களை அள்ளி வீசி சொன்ன விதத்தில் அங்கிருந்தவர்களில் முகங்களில் மெல்லிதாக முறுவல் எட்டிப்பார்க்க நினைத்தாலும், கடுமை அதை மறைக்க, நன்றாக முறைத்தார்கள்.
‘‘சொன்ன உடனே இடத்தைக் காலி பண்ணுங்க…ம்ம்…’’ தொடர்ந்து, கடுமையாகச் சொல்ல, செய்வதறியாது தயங்கித்தயங்கி அவ்விடத்திலிருந்து நகர்ந்தவர்கள், தாம் சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்தில் ஸ்ரீயை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஸ்ரீயை அழைத்துச் சென்றவர்களோ, அவளை அமர்ந்து கொள்ளச் சொன்னவர்கள், அவள் தயங்கிக்கொண்டே கல் இருக்கையின் நுனியில் அமர, தாங்கள் சுற்றி அமர்ந்தவர்கள், பயத்தில் முகம் வியர்க்க அமர்ந்திருந்தவளை, கோபமாகப் பார்த்தனர்.
‘‘ஏன்டி, உன் அம்மாவுக்கு கொழுப்பா?! என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா? விலாசம் கேட்கப் போக, எங்களுக்கு அம்மா இல்லையா? அக்கா தங்கச்சி இல்லையா என்று கேட்கிறார்! ராகிங் என்றால் எப்படியிருக்கும் என்று உன் அம்மாவிடம் இன்றைக்கு போய்ச் சொல்லு!”’ உறுமினான் அழைத்து வந்தவன்.
பின், தன் கொப்பியிலிருந்து ஒரு நீண்ட தாளை எடுத்து அவளிடம் கொடுத்து, ‘‘எங்களுக்கெல்லாம் கேட்கிற மாதிரி கட கடவென்று இதில் இருப்பதை வாசி பார்ப்போம்!” என்றதும்,
அருகிலிருந்தவனோ, “வாசிக்காமல் ஊமக்கொட்டான் வேடம் போட்டாயோ, இது மாதிரி நீயே எழுதி, உன் வகுப்பு தொடங்க முதல் முழு வகுப்புக்குமே வாசித்துக் காட்டுவாய்!’’ என்றான், சினக்குரலில் கொஞ்சமும் இளக்கமின்றி!
அவர்கள் சொன்ன விதத்தில் ஏற்பட்ட நடுக்கத்தையும் அழுகையையும் கஷ்டப்பட்டு அடக்கியவாறே, நடுங்கும் கரத்தால் அந்த ஒற்றையை வாங்கிக்கொண்டவள், பார்வையை மறைத்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்தவாறே, ‘ஒற்றையில் அப்படி என்ன இருக்குது!’ எண்ணமிட்டவாறே, அறியும் ஆவலில் அதில் பார்வையைப் பதித்தவளுக்கோ, தன்னருகில் இருப்பவர்களை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை!
‘கடவுளே! இந்தக் கிறுக்குகளைப் பார்த்து, அம்மா கேட்டதில் என்ன தப்பிருக்கு? அக்கா தங்கைகளோடு பிறந்திருந்தால் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? தம் அம்மாவை யோசிச்சுப் பார்த்தால் இப்படி எழுத வருமா?’ மனதில் தன்னைச் சுற்றி இருந்தவர்களைத் திட்டியவளுக்கு, வெளிப்படையாக அவர்களை எதிர்க்கும் தைரியம் வரவில்லை.
வீட்டில், தாயார் ஒரு வார்த்தை ஓங்கிச் சொன்னாலே, அடங்கிப் போய்விடும் சுபாவம் உடையவள் இங்கு வாய் திறப்பாளா?!
அப்படி ஏதும் செய்து, புதிதாக வந்த மாணவர்கள் தங்களை மதிக்கவில்லை என்று பிரச்னையை பெரிதாக்கும் எண்ணமும் அவளுக்கில்லை!
அந்த ஒற்றையில், அழகாய் பொக்கிஷமாய் போற்றப்படும் திருக்குறள்களை, மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகத்தில் அசிங்கமாக மாற்றி எழுதியிருந்தார்கள்!
‘இதை இந்த எருமைகளுக்கு வாசித்துக் காட்ட வேண்டுமா? கடவுளே! இப்போ நான் என்ன செய்ய!’ நடுங்கியவாறே, வேறு வழியின்றி மீண்டும் கடவுளையே துணைக்கழைத்தாள் .
கண்களில் தளும்பி நின்ற கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, செய்வதறியாது அவள் திகைத்திருக்க, ‘‘ஸ்ரீ!’’ என்ற அழைப்பு அமுதமாய் அவள் செவிகளில் நுழைந்து, குரல் வந்த திசையில் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
யார் அழைத்தது எனக் கண்டு கொண்டவளோ, அடுத்த கணம், சுற்றியிருந்தவர்களைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல் குரலுக்குரியவனை நோக்கி வேகமாக ஓடினாள்.

