அத்தியாயம் 3.
இரவு பன்னிரெண்டு மணி ஆகியிருந்தது!
கதைப் புத்தகங்களை விரும்பி வாசிக்கும் மஞ்சு, சாண்டில்யனின் ‘கடல் புறா’ கடைசிப் பாகத்தை வாசித்து முடித்தவள், ‘ஹாப்பா! எவ்வளவு அருமையான கதை! என்ன மாதிரி எழுதி இருக்கிறார்! எத்தனை தடவைகள் வாசித்தாலும் அலுக்காது!’ வியப்புடன் நினைத்தவாறே, மயூரியிடம் கொடுப்பதற்காக புத்தகப்பையினுள் வைத்தாள்.
பின், சற்றுமுன்வரை இருந்து படித்து விட்டு அயர்ந்துறங்கும் தங்கையை சிறிது நேரம் கனிவாய்ப் பார்த்திருந்தவள், மெல்ல எழுந்து தன் அலுமாரியைத் திறந்து, மாலை ராம் தந்த பார்சலை எடுத்துக்கொண்டு படுக்கையில் வந்தமர்ந்து, ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தாள்.
அதனுள்ளே, இரு அழகிய சல்வார்கள், அதுவும் அவளுக்கு மிகவும் பிடித்த நிறங்களில்! அத்தோடு ஒரு பெரிய சாக்லேட் பாக்ஸ்!
அழகுடன் தன்னைப் பார்த்து கண்சிமிட்டும் ஆடைகளை மெல்ல வெளியில் எடுத்து, மேசை விளக்கொளியில் பிடித்துப் பார்த்தவளின் நயனங்களில் மெலிதான நீர்ப்படலம்!
விழிகள் உடையில் நிலைத்திருக்க, கரங்கள் அவற்றை மென்மையாக வருடிக்கொடுக்க, அவள் நினைவலைகளோ மின்னல் வேகத்தில் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.
ஏறக்குறைய இரண்டரை வருடங்களுக்கு முன், மஞ்சு அப்போது தான் சாதாரணதரம்(பத்தாம் வகுப்பு) முடித்து உயர்தரத்தில் கால் வைத்திருந்த காலப்பகுதி அது!
சிறுவயதிலிருந்தே துடுக்குத்தனமும் வாயாடியுமான மஞ்சு, ஆண்பிள்ளைகளைக் கண்டால் ஒதுங்கிப் போகாமல் நட்பாகக் கதைத்துப் பழகுவாள். அதற்கென்று யாராவது சிறுபார்வை தப்பாகப் பார்த்தாலும், முகத்துக்கு நேரே நச்சென்று கேட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.
‘‘ஏன் எல்லோரோடும் வாய் காட்டிக்கொண்டு திரிகிறாய்?’’ என்று சொல்லிச் சொல்லியே அவள் அப்பாவும் களைத்தது தான் மிச்சம். அவள் குணத்தை எவராலும் மாற்ற முடியவில்லை! அவளும் மாற நினைக்கவில்லை!
இப்படித்தான் ஒருநாள், மஞ்சுவுடன் டியூசனில் படிக்கும் பக்கத்துவீட்டுப் பையனொருவன், தான் அன்று வகுப்பிற்குப் போகாததால் இவளிடம் வந்து நோட்ஸ் கேட்க, ‘அட படித்து… நல்லாவர முடிந்தால் வரட்டுமே!’ என்ற நல்லெண்ணத்தில் தனது கொப்பியைக் கொடுத்தாள் இவள்.
அவனோ, வாங்கிக் கொண்டு போய் எழுதி விட்டுத் திருப்பிக் கொடுக்க, அதை வாங்கியவளோ, மறந்து, வரவேற்பறையில் வைத்து விட்டுச் சென்று விட்டாள்.
சிறிது நேரத்தில், பின்புறத் தோட்டத்தில் வாழைகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவள், தந்தை சத்தமாக அழைப்பதைக் கேட்டு, வீட்டினருகில் இருந்த ஓடையால் முன்பக்கம் வர, அதேவேளை, சிவாவும் நரேனும் கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து முறுவலித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தவள்,
‘‘என்னப்ப்….’’ தொடங்கியவள், தந்தை தந்த அறையினால் அப்படியே கதிகலங்கி, கன்னத்தைக் கரங்களால் தாங்கிய வண்ணம் அதிர்ச்சியாய் அவரைப் பார்த்தவளுக்கு, பார்வை கூட சரியாகத் தெரியவில்லை! காதோ ஒரு பக்கத்தில் ‘‘நொய்ங்’’ என்று வினோத முனகல் எழுப்பியது.
விழிகளோ, கோபாவேசத்துடன் நிற்கும் தந்தையை கொஞ்சமும் தயங்காது முறைத்தன!
வீட்டில் அனைவருக்குமே, எந்த நேரமும் துடுக்குத்தனமாக கலகலத்துக் கொண்டிருக்கும் மஞ்சு மீது மிகவும் அன்பிருந்தாலும், அவள் அப்பாவுக்கும் அவளுக்கும் எப்பொழுதுமே எல்லா விடயத்திலும் கருத்து வேறுபாடு தான்.
கணவருக்கு தேநீர் ஊற்றிக் கொண்டிருந்த மஞ்சுவின் தாயார், கணவர் மகளைக் கத்தி அழைக்கும் போதே, ‘‘இன்றைக்கு என்ன பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறாளோ! இவளுக்கு இதே வேலையாப் போச்சு!’’ புலம்பியபடி முன்னறைக்கு விரைந்தவர், மகளுக்கு விழுந்த அடியில், தன் கன்னத்தைப் பற்றியவாறு செய்வதறியாது கதிகலங்கி நின்றார்!
அதேபோல், அப்போது தான் உள்ளே நுழைந்த சிவாவும் நரேனும் கூட நடந்ததைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றனர்!
சிவாவுக்கோ, தன் உயிர்த் தங்கைக்கு அடித்த அடி தனக்கே விழுந்தது போல் வலித்தது!
நரேனுக்கோ, ‘என்ன இந்த அங்கிள்!? இவ்வளவு வளர்ந்த பிள்ளையைப் போட்டு இப்படி அடிக்கிறார்!’ வேதனையாக இருந்தது !
அடித்த தந்தையை சிறிதும் பயமின்றி முறைத்தாள் மஞ்சு, ‘‘அப்பா, இப்போ ஏன்??’’ மீண்டும் தொடங்கியவள், அவர் விட்ட அடுத்த அறையால் அப்படியே சுழன்று போய் உள்ளே வந்து கொண்டிருந்த நரேன் மீது மோதி நின்றாள்!
விழுந்த அடியின் வேகத்தில் தன்மீது மோதி நின்றவளை பற்றிப் பிடித்த நரேன், கண்கள் சிவக்க கோபமூர்த்தியாய் மகளை அடித்தே துவைப்பதற்குத் தயார் என்ற நிலையில் நின்ற அவள் தந்தையைப் பார்த்து, ‘‘அங்கிள் என்ன இது?!’’ குரலில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரியக் கேட்டான்.
‘‘முதல் இந்தக் கழுதையை விடும் தம்பி!” மிகவும் கோபமாகச் சொன்னவர், “எந்த நேரமும் பெடியல் பெட்டயள் என்றில்லாமல் எல்லாரோடும் சிநேகிதம் வைக்க வேண்டியது! சொல்வதொன்றையுமே காதில் வேண்டுவதில்லை! இப்ப என்ன செய்திருக்கிறாள் தெரியுமா?’’ உறுமியவாறு அவளை நோக்கி முன்னே வர, அவளைத் தன் பின்னால் நகர்த்தினான் நரேன்.
என்ன தான் எல்லோரோடும் கண்டிப்பாகவும் சிடுசிடுவென்றும் பழகினாலும், தன்னுடன் எப்போதுமே வாஞ்சையாகப் பழகும் பெரியவரைப் பார்த்து, ‘‘அங்கிள், கொஞ்சம் பொறுங்கோ. முதல் என்ன நடந்தது என்று சொல்லுங்கோ!’’ என்றவாறு, ஒதுங்கி நிற்கும் சிவாவை முறைத்தான்.
அவனும் முன்னே வந்து, ‘‘அப்பா..என்ன நடந்ததுப்பா?’’ என்றுதும், கேள்வி கேட்கும் ஆண் பிள்ளைகளை முறைத்த பெரியவர், மறக்காது ஓரமாய் ஒடுங்கி நிற்கும் மனைவியையும் ஒரு நெருப்புப் பார்வை பார்த்தார்.
‘‘என்ன நடந்ததா? கழுதை…எல்லாம் முடிஞ்சு இப்ப லவ் பண்ணுறாவாம்!’’ என்றார், அடங்கா ஆத்திரத்துடன்!
அதைக் கேட்டிருந்த அனைவருமே அதிர்ந்து நின்றாலும், எல்லோரையும் விட அதிகமாக அதிர்ந்து போனது மஞ்சுவே !
‘அட…இங்க பாருடா, இந்த மணியின் கதையை! நான் லவ் பண்ணுறேனா? அதுவும் எனக்கே தெரியாமல்…ஹஹ்ஹஹ்ஹா…இது எப்படி இருக்கு!’ எரிந்த கன்னங்களைத் தடவியவாறே அப்போதும் கேலியாக நினைத்தவள், அனைவரும் அதிர்ந்து போய் தன்னையே பார்த்து நிற்பதைக் கண்டு, அசையாது, வழமையான நிமிர்வுடன் நின்றாள்.
அவள் மனமோ, ‘கடவுளே…லவ் பண்ணாமலே இரண்டு அறை வாங்கியாச்சு! பேசாமல் யாராவது ஒரு தடியனை லவ் பண்ணிவிட்டு வாங்கியிருந்தாலும் பரவாயில்லை!’ புலம்ப, விழிகளோ, சற்றும் தயங்காது தந்தையை முறைத்தன!
‘‘நான் லவ் பண்ணுவதாக எந்த மடச்சாம்பிராணி உங்களிடம் வந்து சொன்னது?’’ ஆத்திரமாக எதிர்க்கேள்வியும் பறந்து வந்தது!
ஏற்கனவே கோபாவேசத்தில் இருத்த பெரியவரோ, ‘‘பார்…பார்… இத்தனைக்குப் பிறகும் இவள் வாய் காட்டுவதை! முதல் உன் வாயைத் தைக்க வேண்டும்; அப்பதான் சரி வரும்!’’ கொதித்தவாறே முன்னே வந்தவர், திரும்பவும் அடிவிழப் போவதையுணர்ந்து நரேனின் பின்னால் பதுங்கியவளைப் பிடிப்பதற்காக அவனைப் பிடித்து விலக்க, அவனோ அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
‘‘அங்கிள் அங்கிள்… கொஞ்சம் பொறுங்கோ. முதல் கோபப்படாமல் வந்து இதிலிருங்க..’’ அவரை நடத்திச் சென்று அருகிலிருந்த இருக்கையில் அமர்த்தி, தானும் அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டவன், ‘‘என்ன சொல்லுறீங்க அங்கிள்?! உண்மையாகவே நம்ம மஞ்சு…லவ் பண்ணுறாவா??!!” அளவற்ற வியப்புடன் வினவவும் செய்தான்.
“அது யாரு அந்த பாவிப் பயல்! மூளையில்லாமல் வந்து இவகிட்ட மாட்டினது? கண்ணைத் திறந்து கொண்டே பாழும் கிணத்தில் குதிச்ச பாவி… அந்த அப்பாவி ஜீவன்…யார் அங்கிள்??’’ தொடர்ந்தவன் குரலில் கேலி ததும்பியது.
அவனது பாவனையால் அத்தனை நேரமாய் அங்கிருந்த இறுக்கம் சிறிதே சிறிதாக விலகினாலும், அவள் தந்தையோ கொஞ்சமும் அசையாது எரிக்கும் பார்வையால் மகளைச் சுட்டார்.
அதே முறைப்புடன், ‘‘இங்க பாருங்க தம்பி இந்தக் கடிதாசிய; நீங்களே வாசித்துப் பாருங்க. இது இவளின் இந்தக் கொப்பிக்குள் இருந்தது!’’ என்றவர், ஒரு மடித்த கடிதத்தை நரேனிடம் கொடுத்தார் .
மஞ்சுவை ஒரு கூர்மையான பார்வையால் அளந்தவாறே கடிதத்தை வாங்கிய நரேன், அதை வாசிக்கத் தொடங்க, சிவாவும் அருகில் வந்து வாசிக்கத் தொடங்கினான்.
‘கடவுளே! அந்த சீலன் லூசு தான் கடிதம் வைத்துக் கொப்பியைத் திருப்பித் தந்திருக்கு! ஹ்ம்ம்ம்..நமக்கு வந்த லவ் லெட்டர், நான் பார்க்காமலேயே எல்லோரும் பார்க்கிறார்கள்!’ நினைத்தவாறே, பெருமூச்சை வெளியேற்றினாள் மஞ்சு.
‘சரி என்ன தான் நடக்குதென்று பார்ப்போம்! டேய் சீலன் .. நீ இத்தனை நாளும் பம்மிப் பம்மிக் கதைத்தது இதற்குத் தானா? இன்றைக்கு இருக்குடா உனக்கு!’ நினைத்தவள், தன்னிடம் ஒருவார்த்தை கேட்காமலேயே தன்னை அடித்த தந்தையின் செயலில் சுறுசுறுவென்று கோபமெழ, பொறுமையை மிகவும் கஷ்டப்பட்டு இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டு பேசாது நின்றாள்.
இல்லையில்லை அப்படி நிற்க முயன்றாள்.
கடிதத்தை வாசித்து முடித்த நரேனும் சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே மஞ்சுவை நோக்கினர் .
‘‘மஞ்சு, என்னம்மா இதெல்லாம்?’’ சிவா!
‘‘அதைத் தானே இவ்வளவு நேரமா பார்த்தீங்க! விளங்கவில்லையா? அது என்ன யப்பான் பாஷையிலா எழுதி இருக்கு? எல்லாம் லவ் லெட்டர் தான்!’’ எகத்தாளமாக, பதில் கொடுத்தாள் மஞ்சு.
‘‘அதில் என்ன இருக்கு என்று திரும்பக் கேட்காதீங்க, நான் இன்னும் பார்க்கவில்லை; பார்க்க விட்டாத்தானே!’’ தொடர்ந்து சொன்னவள் குரலில், கேலியும் துடுக்குத்தனமும் விரவி நின்றது!
அதைக் கேட்டதும் முன்னால் வந்த அவளின் தாயார், ‘‘ ஏன்டி, சும்மா சும்மா வாய் காட்டிக்கொண்டு நிற்கிறாய்?! முதல், தம்பி கேட்டதற்கு ஒழுங்காப் பதில் சொல்லு. இந்தக் காதல் கத்திரிக்கா எல்லாம் நம்ம வீட்டுக்கு சரிவராது; அதை முதல் நினைவில் வைத்துக்கொள்!” கடிந்து கொண்டவர் மனமோ, ‘காதலித்து விட்டாளே! யாரோ? எப்படிப்பட்டவனோ? முதல் இந்த வயதில் இவளுக்கு கொழுப்புத் தானே!’ என்ற, ஏக்கத்திலும் கோபத்திலும் தடுமாறியது!
தாயும் தன் பங்கிற்கு திட்டுவதைப் பார்த்ததும் பொறுமையை அவிழ்த்து தூரமாக விரட்டி விட்டாள் மஞ்சு.
‘‘இங்க பாருங்க! நீங்களே ஒரு கடிதத்தைப் பார்த்து நான் லவ் பண்ணுவதாக முடிவு செய்தால், நான் ஒன்றும் செய்ய முடியாது. முதல் உங்க பிள்ளையில் உங்களுக்கே நம்பிக்கையில்லை!” தாயிடம் சீறினாள்.
“ஒருவார்த்தை கேட்காமல் அடிப்பீங்களா? உங்களையும் உங்க அப்பா இப்படி அடித்து வளர்த்திருந்தால் அந்த வேதனை தெரிந்திருக்கும். கொஞ்சம் இருங்க வருகிறேன்!’’ தந்தையிடம் சீறியவள், விருட்டென்று கேட்டை நோக்கிச் சென்றாள்.
அவள் என்ன செய்யப் போகிறாள் என ஊகித்த சிவா, ‘‘மஞ்சு..மஞ்சு…நில்லு நில்லு; எங்கே போகிறாய்?’’ அவள் பின்னால் ஓடி வந்து அவளைப் பிடித்து நிறுத்தியவன், தங்கையை கூர்மையாகப் பார்த்தான்.
‘‘அவன் லெட்டர் தருவது இது தான் முதல் தடவையா?’’ ஆராயும் குரலில் தொடரவும் செய்தான்.
அப்படிக் கேட்ட தமயனையும் முறைத்தன அவள் விழிகள்!
மனமோ, ‘புத்தகத்தில் இருந்த ஒரு லெட்டரை வைத்து, என்னை இப்படிச் சந்தேகப்படுகிறார்களே!’ மிகவும் நொந்து போனது!
‘‘கையை விடுங்கண்ணா! கொஞ்சம் பொறுங்க. அந்த மாங்கா மடையனோட கதைத்துவிட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்கிறேன்!’’ தமையன் பிடியிலிருந்த கரத்தை விடுவிக்க முயல, அங்கே வந்த நரேன்,
‘‘ஹலோ மேடம்…மாங்கா மடையனோ, தேங்கா மடையனோ அவனிடம் ஒரு கேள்வியும் நீர் கேட்கவே வேண்டாம்; அதை நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீர் இப்ப பேசாமல் போய்…. தண்ணியா ஊற்றிக் கொண்டு நின்றீர்? அப்போ, அதைச் செய்து முடியும்!’’ என இலகுவாகச் சொன்னாலும், அதில் கண்டிப்பும் இருக்கவே, அவள் விழிகளின் முறைப்பில் அவனும் சிக்கிக் கொண்டான்.
முறைப்புடன் நிறுத்தினால் அவள் மஞ்சு அல்லவே!
‘‘இங்க பாருங்க, எனக்காக யாரும் போய்ப் பேசத் தேவையில்லை; நானே என் வேலையைப் பார்ப்பேன்!’’ எகிறினாள்.
அதைக் கேட்டவாறே விரைந்து வந்த அவளின் தந்தை, ‘‘ முதல் வாயை மூடிட்டு உள்ள போ மஞ்சு! இல்லையென்றால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. யார் எவர் என்று பார்க்காமல் வாய் காட்டுகிறாய் என்ன?’’ மீண்டும் கர்ஜிக்க, அவரையும் மற்றவர்களையும் முறைத்தவாறே, புறுபுறுத்தபடி பின்பக்கம் சென்று மறைந்தாள் அவள்.
‘‘அக்கா…லைட்டைப் போட்டுக் கொண்டிருந்து என்னக்கா செய்கிறாய்! எத்தனை மணி? படுக்கா. முதல் லைட்டை அணை…’’ என்ற, தங்கையின் குரலில் திடுக்கிட்டு நினைவலைகளில் இருந்து மீண்டவள், ‘‘படுடி படு. இதோ நான் லைட்டை ஓஃப் பண்ணுறேன்!’’
சல்வார்களையும் சொக்லேட் பாக்ஸ்சையும் திரும்பவும் அலுமாரியில் வைத்துவிட்டு, படுக்கையில் வந்து சரிந்தவளின் இதழ்களில், இப்போது ஓர் அழகிய புன்னகை குடிவந்திருந்தது!

