அழகிய சவால் நீ 17 – 2

“மாம் எங்க?” மகள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது தடுமாறிப் போனார், தகப்பன். ஒலிவியா முகம் சுருங்கிப் போயிற்று.

 

“உன் அம்மாவுக்கு ஃபீவர் ஒலிவியா. கோவிட் இல்லை என்றாலும் ஏன் வருவான் என்று தான் வரவில்லை.” என்று சொன்னாள், துர்க்கா.

 

‘பொய்’ ஒலிவியா மனத்தில் கத்திவிட்டாள். வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாது உடைப்பெடுத்த விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

 

அடுத்த சில நிமிடங்களில், குடும்பத்தாரும் கேண்ரியில் நிற்க போட்டிக்கான படப்பிடிப்பு ஆரம்பமானது.

 

“இந்தச் சுற்றில் உங்களுக்கு ஒரு ட்விஸ்ட் உண்டு!” என்ற கிறிஸ்டினா, “முதல் சுற்றில் நீங்கள் பெற்ற புள்ளிகள் இந்தச் சுற்றுக்கு உங்களுக்குப் பெற்றுத் தரப்போகும் நன்மை என்ன என்பதைப் பார்க்க எங்களோடு பான்ரிக்கு வாங்களேன்.” போட்டியாளர்களை அழைத்துக்கொண்டு நடந்தார்கள்.

 

அங்கு, நீளவாக்கில் இருந்த மேசையில் எதுவோ மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னால் சென்று நின்று கொண்ட நடுவர்கள், மூவரையும் ஆழ்ந்து பார்த்தபடி கதைக்க ஆரம்பித்தார்கள்.

 

“இதில் மூன்று வகையான லெக் பீசஸ் வைத்திருக்கிறோம். இதைப் பிரதானமாக வைத்தே அடுத்த அறுபது நிமிடங்களில் நீங்கள் சமையல் செய்ய வேண்டும். முதல் சுற்றில் நீங்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் படி, இதில், எதை உங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிவு செய்யலாம்.” என்று அந்தத் துணியை விலக்கினால், லேம்ப் லெக்ஸ், சிக்கின் லெக்ஸ் மற்றும் ஃபிரொங் லெக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

 

அதிக புள்ளிகள் எடுத்த ஃபிராங் முதலில் தெரிவு செய்யலாம் என்றார்கள். அடுத்து ஜோஷ். இப்படி, செஃப் வேர்த் சொல்ல, முகம் இறுகக் கேட்டுக்கொண்டிருந்த ஒலிவியாவுக்குத் தன் மீதே கோபம் வந்தது. அந்தத் தவளையின் கால்களை வைத்தே தான் சமைக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியும் விட்டது.

 

அவள் நினைப்புப் பொய்யாகவில்லை.

 

“இதுவரை எத்தனை முறை தவளைக் கால்கள் வைத்துச் சமையல் செய்துள்ளாய் ஒலிவியா?” கிறிஸ்டினா கேட்டார்.

 

“ஒரு முறையும் இல்லை.” என்றவள், மனத்தின் குழப்பதைக் காட்டாதிருக்க பெரிதும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.

 

“எத்தனை முறை சுவை பார்த்திருக்கிறாய்?” மீண்டும் கிறிஸ்டினா தான்.

 

“ஒரு முறையும் இல்லை.”

 

“அதனால் என்ன? இம்முறை நீ பரிமாறப் போகும் உணவைச் சுவைக்க ஆவலோடு காத்திருக்கிறோம், நம்பிக்கையோடும்.” என்றார், ஆரோன்.

 

அப்படியே தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தவர்கள் அடுத்த ஒரு மணித்தியாலம் தேவையில்லாது அங்கிங்கு அசையவில்லை. மனத்தையும் அலைய விடவில்லை.

 

அதன் பலன், சிக்கன் லெக் பொரியல் சற்று அதிகமாகப் பொரித்திருந்ததும் சேர, ஒலிவியாவின் புள்ளிகள் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடம் வந்திருந்தன.

 

நாளை காலை இறுதிப்போட்டியில் சந்திப்போம் என்று, படப்பிடிப்பு முடிந்ததும் தான் தாமதம் குடும்பத்தினரும் சக போட்டியாளருமாக அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

 

சிறிது நேரம் விட்டு, நடுவர்கள் மூவரும் வந்து சேர கலகலப்பு அதிகரித்தது.

 

“இப்படி ஒரு சந்தர்ப்பம் இனிக் கிடைக்குமா என்ன? வா ஒலிவியா, வேர்த்துக்கு முறையாக அறிமுகம் செய்து வை. உன்னை விடவும் நன்றாகச் சமைப்பேன் என்று உன் வாயால் சொல்லவும் வேண்டும், வா! நீ மட்டும் சைட் அடித்தால் சரியா? சைட் தானே? வேற முன்னேற்றம் இல்லையே!” குசுகுசுத்தாள், துர்க்கா.

 

“நான் இருக்கிற விசருக்கு அடிதான் வாங்குவாய். நாளைக்கு எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற பதற்றம் வேற. உண்மையாவே அம்மாவுக்குக் காய்ச்சலா?” எதிலோ தொடங்கி, தாய் வரவில்லையே என்றதில் முடித்தாள், ஒலிவியா.

 

“நான் உன்னை விட நன்றாகச் சமைப்பேன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்ன?” முறைத்த துர்க்கா, தோழியிடமிருந்து பதில் முறைப்பு வரவும், “ஓகே ஓகே!” அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டவள், “இதில் எல்லாம் யாரும் பொய் சொல்லுவார்களா? முதல் எதற்கு? இல்லையோ ஆன்ட்டி தான் முதல் ஆளாக வந்திருப்பார்.” சமாதானம் செய்தாள்.

 

“நாளையைப் பற்றியெல்லாம் யோசிக்காதே ஒலிவியா. நீ ஒரு கலக்குக் கலக்குவாய் இருந்து பார். நான் வேற என்னத்துக்கு வந்தனான்? டவுட் என்றால் என்னைப் பார்… மிச்சம் இந்த துர்க்கா பார்த்துக் கொள்வாள்.” அவள் சொன்ன விதத்தில் ஒலிவியா முகத்தில் முறுவல் கீற்று உதித்திட்டு.

 

“இப்ப நீ அறிமுகம் செய்து வைக்க மாட்டியோ, சரி விடு!” இவள் தடுக்க நினைக்க முதல் வேர்த் அருகில் சென்று நின்றாள், துர்க்கா.

 

“ஹல்லோ துர்க்கா?” விழிகள் சுருங்கிய சிரிப்போடு அவன் கேட்டுவிட்டனா? துர்க்கா ஒரு துள்ளுத் துள்ளி நின்றாள்.

 

“ஏய் ஒலிவியா! பார்த்தியா நாங்களும் செலிபிரிட்டி தான்!” என்று சொல்ல, வேர்த் வாய்விட்டே சிரித்து விட்டான்.

 

அவள் காதருகில் சென்றவன், “இன்ஸ்ட்டா பட்ட பாடு… ஸ்டில் படுற பாடு எல்லாம் உன் நண்பியிடம் சொல்லிவிடவில்லையே!” குசுகுசுத்தான்.

 

“ச்சே ச்சே… முதல் அவளே கேட்கவில்லை. கேட்டால் எப்படிச் சொல்லாமல் இருப்பது என்ற யோசனையோடு தான் வந்தனாங்கள். அவள், இன்றைய போட்டிகளில் முதலிடம் கிடைக்கவில்லை என்ற கவலையில் எல்லாவற்றையும் மறந்து போய்ட்டாள் போலும்.” என்றவள், “என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. ஒரு ஹங்!” என்றிருந்தாள்.

 

விழிகள் சுருங்க வெகு பாவமாக அவள் கேட்ட விதத்தில் சிரித்துக்கொண்டே, “வை நொட்? கம்!” என்று ஹங் பண்ணியவன், அவள் தோள் வளைவால் ஒலிவியாவைப் பார்த்துக் கண்ணடித்தான்.

 

அதை ஒலிவியா தந்தையும் கண்டுவிட்டார். மகளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார், அவர். அதனிடையில் ஆரோன் டேல், கிறிஸ்டினா இவர்களை நோக்கி வர, வேர்த் துர்க்காவோடு கதைத்துக்கொண்டே இவர்களை நோக்கி வந்தான்.

 

ஆரோன் டேல், ஒலிவியாவின் தங்கை தம்பியோடு அவர்கள் படிப்பு ஹொபி என்றெல்லாம் அன்போடு கதைத்தவர் தந்தையோடும் கதைத்தார்.

 

“ஒலிவியா அம்மாவை மிகவுமே எதிர்பார்த்தாள் போலும்.” என்றதும் அவர் சுகயீனத்தால் வரவில்லை என்றார், டெனிஸ்.

 

துர்க்காவோ, தன்னை அறிமுகம் செய்து வைக்கும் படி இப்போது வேர்த்திடமே கேட்டுவிட்டாள்.

 

நட்போடு சிரித்துக்கொண்டே அறிமுகம் செய்து வைத்தான், அவன்.

 

“நம் ஒலிவியாவின் பெஸ்ட்டி!” என்று அவன் சொன்னபோது, சிறுபிள்ளை கூட அவர்களுக்கும் ஒலிவியாவுக்கும் இடையிலான பழக்கத்தைப் புரிந்து கொள்ளும். அது போதாதென்று அடிக்கடி அவன் வீசும் பார்வை வேறு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகையில், இருவருக்கும் ஒரு உறவு உருவாகிவிட்டதோ என்ற எண்ணம், ஒலிவியாவின் தகப்பன் மனதுள் வந்திருந்தது. அதுவே, வேர்த்தை உன்னிப்பாக அளவிடவும் வைத்தது.

 

“உன் வீட்டுச் சமையல் பற்றி ஒலிவியா சொல்லியிருக்கிறாள். நண்டுக்கறி சுவை நாவில் அப்பிடியே நிற்கிறது! உன் அம்மாவையும்…என்ன பெயர்…அம்ம்… இந்திராணி…ஐம் ஐ கரெக்ட் ஒலிவியா?” அவள் தலையாட்டலோடு தொடர்ந்தார், ஆரோன்.

 

“அழைத்து வந்திருக்கலாமே” என்று அவர் சொல்ல, சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள், துர்க்கா. அதைச் சொல்லிவிட்டு அவரிடமும் ஹங் , அப்படியே கிறிஸ்டினாவையும் கட்டிப் பிடித்தாள்.

 

அடுத்த சில நிமிடங்கள் அங்கு துர்க்காவின் குடும்ப வரலாறே கதைபட்டது. சகோதரன் சகோதரியை இருபுறமும் அணைத்துக்கொண்டு சிறு முறுவலோடு அமைதியாகவே நின்றாள், ஒலிவியா.

 

இறுதிச்சுற்றில் உள்ள மூவரையும் அழைத்துப் போக வாகனம் தயாராக வந்து நின்றது.

 

அவளருகில் சென்ற ஆரோன் ஆழ்ந்து பார்த்தார்.

 

“போய் நல்லா ரெஸ்ட் எடு ஒலிவியா. தூங்கு! இந்தப் போட்டியில் முதல் நாளில் இருந்து இலண்டன் போகும் வரையில் இருந்த ஒலிவியா தான் நாளைக்கு இங்கு வர வேண்டும்!”

 

அதட்டல் போல் சொன்னவர் பார்வையில் கனிவும் பாசமும். அவள் தலையைப் பாசமாக வருடியவாறு, “நிச்சயம் நாளைக்கு நன்றாகச் செய்வாய், உன்னை நாங்கள் நம்பும் அளவுக்கு நீயும் நம்ப வேண்டும் மை டியர்!” என்றிருந்தார்.

 

கண்கள் கலங்கினாலும் வாய் திறக்கவில்லை, அவள். சிறு தலையாட்டலோடு எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்லும் ஒலிவியா, அவள் குடும்பத்தினருக்கே புதியவளாக இருந்தாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!