அத்தியாயம் 8
“Good food is the foundation of genuine happiness.” – Auguste Escoffier
அடுத்த வாரப் படப்பிடிப்பு, இறுதி ஏழு போட்டியாளர் தெரிவிற்கானது. அதில், முதல் சவால் அவ்வார இம்முயூனிட்டிக்கானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்று, பொழுது சாய்ந்து கொண்டிருக்கும் போதே ஹோட்டலில் இருந்து புறப்பட்டிருந்தார்கள். முதல் நாளும் இன்று முழுவதும் ஃபிரீயாக இருந்ததில், வலு உற்சாகமாகவே ‘ஹோம் குக்கிங்’ வளாகத்தினுள் உள்ளிட்ட போட்டியாளர்கள் எண்மருமே, அசைவற்று நின்று விட்டார்கள்.
ஏதோ ஒரு கானகத்தில் உள்ளிடும் உணர்வைத் தந்தது, அந்தச் சூழல். அவ்வளாகத்தின் முன்புறமெங்கும், உயர்ந்து நின்ற இரும்புத் தூண்களில் தீப்பந்தங்கள் எரிந்த வண்ணமிருந்தன. அவற்றிடையே, இவர்கள் எட்டுப் பேருக்கும் பார்பிகியூ கிச்சன் ஸ்டேஷன்கள் தயாராக இருந்தன. பார்த்ததுமே, இன்றைய போட்டி அங்குதான் என்று விளங்கிற்று!
அவ்வளாக இடப்புறம் மட்டும் இருளில் மூழ்கிக் கிடந்தது. அலங்கார விளக்கொளியில் மேலும் பிரமாண்டமாகத் தோற்றமளித்த ‘ஹோம் குக்கிங்’ கட்டிட முன் வாயிலுக்குக் கீழாக இறங்கி நின்றிருந்தார்கள், நடுவர்கள்.
கை தட்டி ஆரவாரம் செய்து, போட்டியாளர்களை நடப்புக்கு அழைத்து வந்தார், செஃப் ஆரோன் டேல். அந்த இரவுக்கும் அந்தச் சூழலுக்கும் அவர் குரல் மேலும் மேலும் மெருகு சேர்த்திட்டு!
“இன்றைய தீம் நெருப்பு என்று, நான் சொல்லாமலே உங்களுக்கு விளங்கி இருக்குமே!” என்றதும் சில போட்டியாளர்கள் முகங்களில் பதற்றம். பார்பிகியூ, சரியான பதத்தில் நெருப்பில் வாட்டுவது, சுடுவது எல்லோருக்குமே பரீட்சயம் இல்லாததாச்சே! அனுபவம் என்பது மிகவும் முக்கியமானதும் கூட. மனங்களில் தடுமாறினாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவுக்கே வந்தாக வேண்டும். எண்மரும் ஒரு சீராகக் குதூகலமாகக் கூவினார்கள்.
அடுத்த அரை மணி நேரம் அவர்கள் அந்த கிச்சன் ஸ்டேஷன்களை ஆராய, படப்பிடிப்பும் நின்றிருந்தது.
தோமஸ் வேர்த்துக்கு ஒலிவியாவைப் பார்த்தால் சிரிப்பாக இருந்தது. அவள் இன்ஸ்ட்டா படும் பாட்டை, அதில், தானும் இழுப்படுவதைச் சொன்னால் என்னவாம் என்ற குறுகுறுப்பு வேறு. வந்த முதல் நாளிலிருந்து அவள், அவனோடு அத்தனை பரபரப்பாக இருந்தது ஏனென்று இப்போதுதானே முழுதாய் விளங்கி இருக்கு!
போட்டி நடுவர், போட்டியாளர் ஒருவரில் நட்பு பாராட்டுவதோ தமக்கு மிகப்பிடித்தவராக நடப்பதோ தவறில்லை. ஆனால், சில விடயங்கள் வெளியில் பார்க்கப்படும் கோணம் சற்றே வேறானாலும் அந்த நிகழ்ச்சி தானே பாதிப்புறும்? அதுவும், ஒலிவியா இயல்பிலேயே மிகவும் துறுதுறுப்பானவள். அது, இந்த சீசனுக்கே ஒரு பூஸ்ட்! அவள் சிறு சிறு அசைவுமே நிகழ்ச்சியில் மட்டுமல்லாது சமூகத்தாலும் மிக விருப்போடு பார்க்கப்படுகிறது. இதை, ஒரு சில எபிசோட் ஒளிபரப்பாகியதில் வைத்ததே கண்டுகொண்ட நிகழ்ச்சிக் குழு, அவள் மீது தனிக்கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டிருந்தது. அப்படியிருக்கையில், அதில் ஒரு நடுவர் இணைவது தேவையற்றது!
நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இது பற்றிப் பட்டும் படாது ஆரோனிடம் கதைத்திருந்தார். ஒலிவியாவின் இன்ஸ்ட்டா படும் பாட்டை ஆரோன் டேலும் தானே பார்க்கிறார்.
இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தளங்களில், முகமறியா அரைகுறைகளால் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை, நேர்மறையோ எதிர்மறையோ எங்களைத் தாக்கப் போவதில்லை என்று இருப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஒன்று என்றால் போதும், இல்லாதது பொல்லாததுகளைப் பரப்பி விடுவார்கள். உடல் உழைப்பைப் போடாது, கொஞ்சமும் நோகாது, மற்றவர்கள் பற்றிய பொய், புறணி சொல்லியே தம் சீவனத்தை ஓட்டும் கேவலமான கூட்டம் உருவாகியுள்ளதே! பிறப்பா இறப்பா, மகிழ்வா துக்கமா, பொழுதுபோக்கா களியாட்டமா எதுவென்றாலும் எவர் பற்றிய கவலையுமின்றி, திரித்துச் சோடித்து வேறு வண்ணம் கொடுத்துப் பரப்புவதே அவர்கள் பிரதான வேலை.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கண்டபடி திரித்துக் கதைப்பதைக் கைவந்த கலையாகக் கொண்டிருப்பதே வாழ்வின் ஆதாரம் என்னும் கீழ்த்தரமானவர்கள் இருக்கையில், ஹோம் குக்கிங் போன்றதொரு தனக்கென்று ஒரு தரம் பேணும் நிகழ்வில் நம்பிக்கையோடு கலந்துகொள்ள வந்தவர்களை, தேவையற்ற எதிர்மறையில் இருந்து காப்பது, தம் கடமை என்று நிகழ்ச்சிக்குழு நினைப்பதில் தவறேதும் இல்லை என்றே ஆரோன் டேலும் எண்ணினார்.
ஒலிவியாவை விடவும் சில வயதுகள் இளமையில் இரு மகள்கள் அவருக்கும் இருக்கிறார்களே! இது பற்றி ‘வேர்த்’திடம் கதைக்கையில் ஒரு தகப்பன் நிலையெடுத்திருந்தார், ஆரோன்.
வேர்த், தானுமே மனத்தில் இதையெல்லாம் எண்ணினானே. இருந்தாலும் இனொருவர் வாயால் அந்தக் கதையெடுக்க பெரும் எரிச்சல் கொண்டான். அதை ஆரோனிடம் காட்ட முடியுமா? வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
“நல்லவேளை அன்று இருவருமாகப் பாடியதை டெலிகாஸ்ட் செய்யவில்லை.” நிகழ்ச்சிக்குழுவுக்கு மானசீகமாகப் பெரும் நன்றி தெரிவித்தான். அதையேதான் ஆரோனும் கிறிஸ்டினாவும் அவனிடம் கூறிக் கடித்தார்கள்.
“எது என்றாலும் நிகழ்ச்சி முடியவிட்டு வைத்துக்கொள் மேன்!” என்றுமிருந்தார், ஆரோன்.
“அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை” தாமதியாது சொல்லிவிட்டவன் மனமோ, வாய் வார்த்தைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று சத்தியமே செய்திட்டு.
இருந்தபோதும், இனி அவள் சம்பந்தமாகக் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அன்றைய படபிடிப்புக்கு வந்திருந்தான், தோமஸ் வேர்த்.
ஆனால், எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முடியவில்லையே! இயல்பாக நடப்பது போல் நகர்ந்தவன் அவளை நெருங்கினான். சுற்றிச் சுழன்ற விழிகள் இன்னமும் கமராக்கள் வேலையைத் தொடங்கவில்லை என்பதையும் கணக்கெடுத்துக் கொண்டன.
“துர்க்கா என்றால் யார்?” கேட்டே விட்டான்.
பட்டென்று திடுக்கிடலோடு முகம் சுருங்கப் பார்த்தாள், ஒலிவியா.
‘அவளை ஏன் கேட்கிறார்? ஐயோ எருமை என்னவாவது சுரண்டல் வேலை செய்திட்டாளோ!’’ நண்பியை அறிந்தவளாச்சே. தவிப்போடு, எச்சில் விழுங்கினாள், ஒலிவியா. பதிலுக்காகப் பார்த்து நிற்கிறானே! அதுவே, ஒருவாறு நிலைப்படுதிக்கொண்டு சாதாரணமாகவே நிற்க முயன்றாள்.
“தெரியும் தானே?” அவன் குரலில் சீண்டல். விழிகளிலும் தான்.
“ஆமாம், என்னுடைய பெஸ்டி!”
“ஓ!”
“ஏன் கேக்கிறீங்க? அவளும் போட்டிக்கு வந்திருப்பாள், வருத்தம் வந்து ஏப்ரன் சேலஞ்சுக்கு வர முடியாமல் போயிட்டுது!” கவலையாகச் சொன்னாள்.
“நல்ல காலம்!” என்றபடி நகர்ந்தவனிடம் என்னத்துக்கு என்று கேட்க முடியவில்லை, படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது.
அதே கையோடு, “எங்களோடு, உங்களை வழிநடத்த, உங்கள் சமையல் திறனை மதிப்பிட, இன்று ஒருவர் இணைந்து கொள்ள இருக்கிறார்!” என்று சொல்லி, அவுஸ்திரேலியாவின் பிரபல பார்பிகியூ ரெஸ்டாரண்ட் சமையல் வல்லுநர் செஃப் டாவிட் வலு ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டார்.
போட்டி விதிகள் கூறப்பட்டன. “போட்டி தொடங்க முதல் உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ்!” விழிகள் சுருங்க, கொடுப்புக்குள் சிரிப்போடு சொன்னான், வேர்த்.
எல்லோர் பார்வையும் அவர்களில். “இன்று, நீங்கள் மிக முக்கிய நபர்களுக்காக அல்லது நபருக்காகச் சமையல் செய்யப் போகிறீர்கள்!” பூடகமாகவே தொடர்ந்தான். அதேவேளை, அந்த வளாகத்தில் இருளாக இருந்த பகுதிகளில் தீப்பந்தங்கள் எரிந்தன.
போடப்பட்டிருந்த டென்ட் இருக்கைகளை நிறைத்தபடி மலர்வோடு அமர்ந்திருந்தவர்கள்…
முதலில் எதிர்பாராத திகைப்பு! எல்லாமே சில கணங்கள் மட்டுமே! எண்மரில் யார் முதலில் ஓடினார்கள்? பிரித்தறிய முடியவில்லை. இத்தனை நாட்களின் பின்னரான தம் குடும்ப உறவுகளின் சந்திப்பு…
கமராக்கள் சேர்ந்தோடின. கணங்களையும் தவறவிடாது அவர்கள் உணர்வுகளைத் தமக்குள் அடக்கிக்கொள்ளத் தொடங்கியிருந்தன.
பாய்ந்தோடி, இரு கைகளையும் விரித்தபடி நின்ற தந்தையைக் கட்டிக்கொண்டாள், ஒலிவியா. சட்டென்று இதை நம்பவும் முடியவில்லை; இப்படி வீட்டில் இருந்து வரும் நிகழ்வு இருக்குமென்று தெரியும் தான். இருந்தாலும் இன்று, அந்த வகையிலான எதிர்பார்ப்போடு வரவில்லையே!
மகள் தலையைப் பரிவாக வருடியபடி அவள் நலம் விசாரித்தார், டெனிஸ்.
“அம்மா வரவில்லையா?” மனச் சுணக்கத்தோடு கேட்டபடி அவரோடு அளவளாவியவளை, சற்றுமே சொல் கேளாத வேர்த் பார்வை சுற்றிசுழன்று தன்னுள் பிடித்து வைக்க முயன்றது.
வேர்த் மட்டும் இல்லை, ஆரோன் பார்வையும் ஒலிவியாவைச் சுற்றியே! “இது எல்லாம் டெலிகாஸ்ட் செய்திராதீங்க பிலிப்” அவளருகில் நின்ற எடிட்டரிடம் சொல்லிவிட்டு, ஆமடேல் கிராமத்தையே நலன் விசாரித்தபடி நின்றாள், அவள்.
அடுத்த அரைமணி நேரம், உறவுகளோடு கலந்துரையாடுவதில் கரைந்து போனது. எல்லோர் மத்தியிலும் ஓடித் திரிந்த மியாவின் பிள்ளைகள் மூவரும் அனைவருக்குமே செல்லங்கள் ஆகியிருந்தார்கள்.
ஒருவாறு, “முதலில் வேலையைப் பார்ப்போமே!” ஆரம்பித்து வைத்தார், ஆரோன் டேல்.
எட்டுப் பேரும் விதம் விதமாக இறைச்சி வகைகள், மீன் என்று செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
முடிவில், “உண்மையாகவே உங்கள் எட்டுப் பேரினதுமே அருமையாக இருந்தது.” என்ற செஃப் டாவிட், “மிகச் சிறு வித்தியாசத்தில் இமியூனிட்டி பெறுவது…” என்று நிறுத்தி எண்மரையும் பார்த்துவிட்டு, “தந்தூரி சிக்கன், ரொட்டி.” விரிந்த முறுவலோடு அறிவித்தார்.
கரகோசை ஒலிக்க ஆரம்பித்த பின்னும் ஒலிவியா நம்பவில்லை. அப்படியே நின்றிருந்தாள். இன்று, மியா மிகவும் அருமையாக மீன் டிஷ் செய்திருந்தாள். அவளுக்குத்தான் கிடைக்கும் என்று மற்ற ஏழு பேரும் முடிவே எடுத்திருந்தார்கள்.
“ஒலிவியா நீதான் வின்!” அருகில் நின்ற மியா தட்டவும் தான், “தாங்க்யூ செஃப்!” என்றவள், திரும்பி தந்தையைப் பார்த்தாள். இரு கரங்களையும் தூக்கி தம்ப்ஸ் அப் காட்டினார், டெனிஸ்.
“இன்னொரு விடயம் சொல்ல வேண்டும்!” செஃப் டாவிட் கவனத்தைத் தன் புறமிழுத்தார்.
“இங்கு வந்ததுமே இவர்களிடம் சொல்லி விட்டேன். உன்னை என் ரெஸ்டாரண்ட் மிக மிக ஆவலோடு வரவேற்கிறது.” என்றாரா, அந்த வளாகமே கூக்குரலும் கரகோசமும் நிறைந்திட்டு.
ஒலிவியா கண்ணீரோடு சமைந்து நின்றாள்.
“அன்று, சிவப்பு அணியாக எலிமினேஷன் ரவுண்ட் வந்த போது, முதல் ரவுண்ட் மிஸ்டரி பொக்ஸ் சேலஞ், மறக்கவில்லையே!” தொடர்ந்தார் டாவிட்.
“ஓ கோட்! அதை யாராலுமே மறக்க முடியாது.” என்றார், ஆரோன்.
“அதன் சுவை இன்னமும் என் நாக்கில் இருக்கிறது.” இடையிட்டார், கிறிஸ்டினா.
“நினைத்த போதெல்லாம் அந்தக் கிராப் கறியும் கோகனட் ரொட்டியும் சாப்பிட வேண்டும்!” வான் நோக்கிக் கைவிரித்து வேண்டினான், தோமஸ் வேர்த்.
“இப்படி, பெரிய ஆசை இல்லை என்றாலும் ஒரு தடவையேனும் நீ எனக்குச் சமைத்துத் தர வேண்டும் ஒலிவியா.” என்றார் டாவிட் .
“சூர் செஃப்! தாங்க்ஸ் செஃப்!” என்றதற்கு மேல் வார்த்தைகள் வராது நின்றாள், ஒலிவியா.
அன்று, மிஸ்டரி பொக்சில் உயிரோடு இருந்த ‘Dungeness Crab’ வைக்கப்பட்டிருந்தது.
நானே கொன்று சமைக்க வேண்டுமா? முடியவே முடியாது என்று அழவே ஆரம்பித்திருந்தாள், இவள். சிறுமிக்கு எடுத்துச் சொல்வது போல் எடுத்துச் சொல்லி, அணைத்து ஆறுதல்படுத்திச் சமைக்க வைத்தது, ஆரோன் தான்.
ஒலிவியாவின் தந்தை மனதுள் அந்தக் காட்சி ஓடியது. விழிகள் கலங்க மகளையே பார்த்திருந்தார், அவர்.
“நான் ஒன்று இந்த இடத்தில் சொல்ல வேண்டும். உயிரோடு இருந்த ஒன்றை அன்றுதான் முதன் முதலாகக் கொன்றேன். அந்த நேரம் நான் பட்ட பாடு…” திடுமென்று ஆரம்பித்திருந்தாள், ஒலிவியா.
“இருந்தும் அதைச் செய்ய வைத்தது, செஃப் ஆரோன் டேல் தந்த ஊக்கம் மட்டுமல்ல…” என்றபடி திரும்பி, தகப்பனைப் பார்த்தாள்.
“அன்று, அந்த நண்டுக்கறி அவ்வளவு ருசியாக வரக் காரணம் என் டாட்! அவர், சிறு வயதில் இருந்தே ஒன்று சொல்வார். ‘உனக்குப் பிடிக்காத, நீ விரும்பாத ஒன்றைச் செய்தே ஆக வேண்டும் என்று ஒரு கட்டாயம் வந்தால், அப்படி விருப்பமே இல்லாமல் செய்யப்போகும் விசயம், நீ மிகவும் விருப்பத்தோடு செய்யும் செயலை விடவும் பல மடங்கு நன்றாக வர வேண்டும். அதுதான் விருப்பம் இல்லாத ஒன்றைத் துணிந்து செய்த உனக்கு நீ செய்யும் மரியாதை’ என்பார்.” மீண்டும் தந்தையிடம் திரும்பினாள்.
“லவ் யு டாட்! அன்றைக்கு நான் வெற்றி பெற்றது உங்களாலும் தான்.” என்றவள் விரல்கள் இதய வடிவில் தந்தையை நோக்கி நீண்டிருந்தன.
கண்கள் நிறைய நின்றவரோ, தன் நெஞ்சில் தட்டிச் சிரிக்க முயன்றார்.
சுற்றமே விழிக்கசிவோடு அவர்களைப் பார்த்து நின்றது.
“உங்கள் மகள் ஒரு சிறந்த செஃப்! சமையல் உலகில் மிகவுமே பேசப்படுபவளாக இருப்பாள்!” அவள் தந்தையிடம் சொன்னார், செஃப் ஆரோன் டேல். டெனிஸ் முறுவலோடு மகளைப் பார்த்தார்.
“என் மகளுக்கு இதுதான் பிடிக்கும் என்றால், ஒரு தகப்பனாக, என் துணை என்றுமே அவளுக்கு இருக்கும்.” பெருமையாகச் சொல்லவும் செய்தார்.
அன்று, அந்த நிகழ்வில் ஒரு இளவரசியாக மகள் திகழ்ந்ததைப் பார்த்துவிட்டு மனநிறைவோடு விடைபெற்றார் டெனிஸ்.
இத்தனை மகிழ்வையும் பிரட்டிப் போட்டது அவ்வாரம் மியாவின் வெளியேற்றம்.
சிலநாட்கள் பழக்கம்தான், உறவு போல் இருந்தவள் பிரிவு ஒலிவியாவுக்கு மிகுந்த தனிமை உணர்வைக் கொடுத்தது. அதுமட்டுமின்றி, “எனக்கும் சேர்த்து நீ விளையாட வேண்டும்.” என்று, கண்ணீரோடு மியா சொல்லிச் சென்றது, போட்டியில் மேலும் மேலும் கவனம் எடுக்கவும் வைத்திருந்தது.

