ஆட்டநாயகன் 45.2

அது எங்கும் பொருத்தப்பட்ட சிசிடிவி ஃபுட்டேஜோ, நிலையான இடத்திலிருந்து எடுக்கப்பட்டதோ இல்லை. அவன் வருவது, பைக்கை நிறுத்துவது, நடந்து நேராகச் சென்று சம்மந்தரைப் பார்ப்பது, அப்படியே மக்களுக்குள் மறைந்து போவது, பிறகு அவர்களைச் சுற்றிக்கொண்டு வந்து மறுபடியும் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்படுவது என்று யாரோ ஒருவர் அவன் பின்னாலேயே சென்று அத்தனையையும் காமராவினுள் அடங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

அவனுக்கே தெரியாமல் திட்டமிடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்தாலும் சம்மந்தரின் உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தவே வந்து போயிருக்கிறான் என்று ஐயமறச் சொல்லிற்று.

அவன்தான் கொலைகாரன் என்று உறுதிப்படுத்த முடியாது என்றாலும் கொலைகாரனுக்கும் அவனுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று சொல்லும் ஆதாரம் அது. அதை உடைக்கவே முடியாது. இங்கே கொலை செய்தவன் முறையான ஆதாரங்களோடு மாட்ட வேண்டும்.

கணவனைக் கொண்டு காண்டீபனுக்கு அழைத்து விசாரித்தாள். “சிவநாதர்தான் இதைச் செய்ய வச்சார் எண்டுறதுக்கு கட்டாயம் எங்களுக்கு ஆதாரம் வேணும் அண்ணா. இல்லாட்டி உங்களுக்கு ஆபத்து.” என்று சொன்னவள் குரலில் தொனித்த கவலையைக் கண்டு சிரித்தான் காண்டீபன்.

என்னவோ அவனால் இன்னுமே அவளைக் குற்றவியல் சட்டத்தரணியாகப் பார்க்க முடிவதில்லை. எப்போது அவளைக் குறித்து யோசித்தாலும் அவனிடம் எல்லாவற்றுக்கும் மல்லுக்கட்டிக்கொண்டு சிணுங்கிச் சீரும் சின்ன பெண்ணே பசுமையாய் நினைவில் வந்து நின்றாள்.

“அண்ணா!”

“எல்லாம் என்னட்ட இருக்கடா.” என்றான் அவளுக்கு இதமாய்.

“என்ன அண்ணா சொல்லுறீங்க?” இருந்த இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து வினவினாள் ஆதினி.

“அவன் எனக்கு அப்பாவைப் பற்றி அனுப்பின டீடெயில்ஸ். எனக்கு கோல் பண்ணிச் சொன்னது, கடைசியா அங்க போய் பாத்துக்கொண்டு வா வாசு எண்டு சொன்னது எல்லாம் வச்சிருக்கிறன்.”

“ஐயோ அண்ணா, இது போதுமே. எல்லாத்தையும் எனக்கு அனுப்பி விடுங்க. இப்பவே.” என்றவள் பேச்சை மீறாது அவற்றை அனுப்பி வைத்தவனுக்கு அது போதாது.

அவனளவில் சிறை என்பது அந்தக் கிழவனுக்கான பாதுகாப்பு. அதை அவன் கொடுப்பதா? “இதையெல்லாம் இப்பவே கோர்ட்ல குடுக்க வேண்டாம் ஆதினி. ஒரு கிழமை டைம் தா.” என்று சொன்னான் அவன்.

“அண்ணா?” என்றவளுக்குப் பதில் சொல்லாது அழைப்பைத் துண்டித்தான்.

“அண்ணா என்னவோ செய்யப்போறார். எனக்குப் பயமா இருக்கு.” கலக்கத்தோடு பக்கத்தில் நின்ற கணவனிடம் சொன்னாள். அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளைத் தன் கையணைப்புக்குள் கொண்டு வந்தான் எல்லாளன்.

நொடியில் அவள் மண்டைக்குள் இருந்த அத்தனை பிரச்சனைகளும் மாயமாகிப்போயின. கணவனின் கைவளைவு, அது தரும் கதகதப்பு, அது அவளுள் பாய்ந்து கடத்திய வெம்மை, எல்லாம் சேர்ந்து அவள் உள்ளத்தோடு உடலையும் சேர்த்து பஞ்சுப்பொதில் போல் மாற்ற, இத்தனை மாயன்களைத் தனக்குள் நிகழ்த்தும் கணவன் முகம் பார்த்தாள்.

அவள் நெற்றியில் இதமாய் முத்தமிட்டு, “நீ ஓகேயா?” என்று விசாரித்தான்.

“எனக்கு என்ன?” என்றபடி அவன் மார்பில் சாய்ந்துகொண்டவளுக்கு அவனுக்குத்தான் ஓய்வு என்பதே இல்லை என்று தெரியும். மெல்ல கணவனின் காயத்தை வருடிக்கொடுத்தாள். நல்லபடியாக ஆறிக்கொண்டு வருகிறதுதான். என்றாலும் ஓடிக்கொண்டேயிருக்கிறான்.

மனம் கசிய, “இந்தப் போலீஸ் தன்னையும் கவனிக்கிறேல்ல, சிலுக்கையும் கவனிக்கிறேல்ல.” என்றாள் சலுகையோடு.

அவனிடத்தில் சன்னமான முறுவல். தன் வருத்தத்தைக் காட்டப் பிடிக்காமல் இப்படிக் கதைக்கிறாள் என்று தெரியாதா அவனுக்கு. அவள் கன்னத்தில் அழுத்தமாகத் தன் உதடுகளை பதித்துவிட்டு, “எல்லாம் முடியட்டும். அவனும் எங்களை மாதிரி நிம்மதியாகட்டும். குறையே இல்லாம ஒருத்தரை ஒருத்தர் கவனிப்பம் சரியா?” என்று கேட்டான் அவன்.

சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு எம்பி அவன் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு விலகினாள் அவள்.

இந்த இடைப்பட்ட நாள்களில் ஒவ்வொரு அடியாக முன்னேறி முன்னேறி அந்த லொறி வந்துபோன தடத்தைக் கதிரவன் கண்டுபிடித்திருந்தானே தவிர்த்து அதன் உரிமையாளனையும் அவன் எங்கிருந்து வந்தான் என்பதையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஆனால், அடுத்த சில நாள்கள் யாழ்ப்பாணம் பரபரப்புற்றுப்போயிற்று. காண்டீபன் காட்டிக் கொடுக்க கொடுக்கப் போதைப்பொருள்கள் பரிமாற்றம் நடக்கும் இடங்களை எல்லாம் கதிரவன் சுற்றிவளைத்துப் பிடிக்க ஆரம்பித்தான். சிவநாதரின் ஆள்கள் கொத்துக் கொத்தாகக் கைதாகினர். அது மட்டுமல்லாது போதைப்பொருள் கொண்டுவரும் கப்பல் கடலில் தரித்து நிற்கும் இடத்தையும் காண்டீபன் காட்டிக்கொடுத்துவிட சிவநாதரால் அசைய முடியாது போயிற்று.

ஆத்திரம் ஆவேசம் அத்தனையும் அவர் நிதானத்தைப் பறித்தன. நேராகப் போய் அவர்கள் எல்லோர் தலைகளையும் சீவிவிட்டு வந்தால் என்ன என்கிற அளவுக்கு வெறியேறிப்போய் நின்றார்.

அந்தளவில் அவ்வப்போது அவருக்கு வீடியோ அனுப்பப்பட்டது. வேந்தன் நிதானத்திலேயே இல்லை. முழு போதையில் இருந்தான். அவனைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. அவ்வளவில் மோசமாக இருந்தான்.

முதல் வீடியோ வந்தபோதே சிறைக்காவல் அதிகாரிகளோடு பேசினார். அவர்கள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னார்கள். இல்லை, நடக்கிறது என்று நிரூபிப்பதற்கு வழியற்று நின்றார். அவரால் அந்த வீடியோ கிளிப்புகளை அவர்களிடம் காட்ட முடியாது. தப்பித்தவறி வெளியில் கசிந்தால் என்னாகும்?

பேரனை வேறு கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாளனையோ காண்டீபனையோ தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்கையில் பைத்தியம் பிடிக்காத குறையாகக் கத்திக்கொண்டிருந்தார்.

இதற்குள் மிதிலா, அதிரன், மாதவன், அவன் அன்னை, குழந்தை என்று எல்லோரையும் அழைத்து வந்து தங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டான் எல்லாளன். கேதகியையும் கொழும்பு செல்ல விடவில்லை.

அவர்கள் வீட்டுக்குப் பாதுகாப்பை இன்னுமே பலப்படுத்தினான். இதையெல்லாம் அறிந்த காண்டீபன் டைகரை அங்கே அனுப்பிவைத்தான்.

அவனைக் கண்டுவிட்டு கேதகி ஓட, அவளை விடவும் வேகமாய் வந்து அவள் மேல் பாய்ந்தது டைகர். அவளை விடவே மாட்டேன் என்று அவளோடு ஒட்டி, உரசி, முகர்ந்து என்று அது காட்டிய பரிதவிப்பிலும் அன்பிலும் பார்த்திருந்த எல்லோரும் மலைத்துப்போயினர்.

கேதகிக்குத் தொண்டை அடைத்துப்போயிற்று. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அவளை இத்தனை ஆசையாகவும் ஆவலாகவும் தேடும் ஒரு ஜீவனை இன்றுதான் காண்கிறாள். அன்னை அவள் மீது உயிராக இருப்பார்தான். என்ன இவளோடு நேரம் செலவழிக்க அவருக்கு நேரம் அமைந்ததில்லை. இவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து அவருக்கு ஓய்வு கொடுக்க நினைத்த காலத்தில் அவர் இல்லாது போனார். தன்னைச் சமாளித்துக்கொண்டு அதை வருடிக்கொடுத்தாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த தீபனாவுக்கு முதலில் டைகரை பிடிக்கவேயில்லை. அதுவும் கிட்டத்தட்ட அவள் உயரத்தில் இருந்துகொண்டு எல்லோர் கவனத்தையும் தன் புறம் திருப்பிக் கொண்டதைக் கண்டு முறைத்தாள்.

டைகருக்கும் முதலில் அவளைப் பிடிக்கவில்லை. அதுவும் கேதகியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை போ போ என்று விரட்டியதில் முழுவதுமாகவே வெறுத்தான். அவளை மட்டுமில்லை அங்கிருந்த சின்னவர்கள் அத்தனை பேரோடும் பழகுவதற்கு டைகர் மறுத்துவிட்டான். அவனுக்கு இப்படி கசகசவென்று ஆள்கள் நிறைந்திருந்தால் அவ்வளவாகப் பிடிக்காது.

ஆனால் என்ன சின்னவர்கள் அவனையே சுற்றிவந்து விளையாட்டுக் காட்டுவதும், அவனை என்னவோ ஆச்சரியப் பொருள் போன்று வேடிக்கை பார்ப்பதும் அவனுள் மெல்லிய பெருமையைப் பரப்பிவிட்டது. கொஞ்ச நேரம் பெருமையாக முகத்தைத் தூக்கிக்கொண்டு திரிந்தான். ஆனாலும் அவர்களின் விளையாட்டும் கும்மாளமும் போக போக அவனுக்குள்ளும் ஆர்வத்தைப் பரப்பிற்று.

அவர்கள் பந்து எல்லாம் வைத்து விளையாடவும் போனால் போகிறது என்று அவர்களோடு சமாதானமாகிக்கொண்டான். அதுவும் குறிப்பாக இப்போது அவனுக்குத் தீபனாவை மிகவும் பிடித்துப்போயிற்று.

அடுத்த நாளில் இருந்து சின்னவர்கள் அனைவரும் அவன் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தனர். எங்கு இருந்தாலும் அவர்கள் வாசல் படியை தாண்டிவிட்டால் போதும் உடனேயே வந்துவிடுவான். அவர்கள் கேட் வாசலை தொட முயன்றால் போதும். கோபம் கொண்டு அவன் போடுகிற சத்தத்தில் வீட்டில் இருக்கிறவர்கள் வெளியில் வந்துவிடுவார்கள் என்றால் வெளியே போக முயன்ற சின்னவர்கள் வீட்டுக்குள் வந்துவிடுவார்கள்.

இரண்டு நாள்களில் டைகர் அந்த வீட்டின் முக்கிய நபராகிப்போனான். இளந்திரையனோடு காலையில் நடைப்பயிற்சி செய்வது, எல்லாளனைக் கைக்குள் போட்டுக்கொண்டது, சின்னவர்களோடு விளையாடுவது, பெரியவர்களையும் அவ்வப்போது சத்தம் போட்டுத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று இப்போது இருக்க நிற்க நேரமில்லாமல் அலைந்துகொண்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!