ஆழியின் மெளனம் ஏனோ 20 – 1

மௌனம் – 20

ஆழினியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற நித்யமயூரி அவளை முறைத்துப் பார்த்தாள்.

ஆழினியோ தன் தோழியை பார்க்காமல் அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

“என்ன பாருடி ஆழி!” என்று நித்யமயூரி கூற‌.

ஆழினியோ அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க, ஆழி?” என்று தன்னைப் பார்க்குமாறு திருப்பிய நித்யமயூரி கோபமாக வினவினாள்.

“உன்னை நினைக்கல!” என்று பட்டென்று பதிலளித்தாள் ஆழினி.

“அதுதான் தெரியுமே! என் அண்ணனைத் தானே நினைச்சுட்டு இருக்க!” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் நித்யமயூரி.

அவளை ஆழ்ந்து பார்த்த ஆழினி, “என் நிலைமை உனக்குச் சிரிப்பா இருக்குல்ல?” என்று கேட்டாள்.

“அடிச்சிடுவேன்! போனால் போகுதுன்னு விட்டா ரொம்பத்தான் பண்ணிட்டு இருக்க!” என்று எகிறினாள் நித்யமயூரி.

“தெரியும்! உனக்கு யார் மேல கோபம் இருந்தாலும், என்கிட்ட தானே வந்து காட்டுவ? அன்னைக்கு எனக்கு ஆறுதல் தேவையா இருந்தப்போ, என்னை ஈஸியா விட்டுட்டுப் போனவதானே நீ!” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆழினி.

“இங்க பாரு, ஆழினி! என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். நான் அதை கோபத்துல சொன்னேன்னு உனக்கும் தெரியும். உனக்கு என் மேல கோபப் படக் கூடத் தெரியாதுன்னும் தெரியும்.

என் மூஞ்சியைப் பார்த்தாலே உன் கோபம் போயிடும்னு எனக்குத் தெரியும். அதனால்தானே நீ என்னைப் பார்க்க மாட்டேங்கிற!” என்றாள் நித்யமயூரி.

ஆழினி எந்த பதிலும் சொல்லாமல் மௌனத்தை தொடர.

“சரி ஆழி! இனி மேல் என்னைக்கும் நீ என் கூட பேச வேண்டாம். நான் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல. இந்த ஊருக்கே நான் வரல. திரும்ப நான் வெளிநாட்டுக்கே போயிடுறேன்!” என்று கூறிய மயூரியின் கண்கள் கலங்கின.

அடுத்த நொடியே வேகமாக திரும்பிய ஆழினி, அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள். இத்தனை வருடங்களாகத் தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த வலிகளையெல்லாம் அவளது தோளில் சாய்ந்து கண்ணீராகக் கரைத்தாள்.

“என் வாழ்க்கையில அம்மா, அப்பா போனதுக்குப் பிறகு எனக்குன்னு இருந்த உறவு நீயும், மதுராவும்தான்.

மதுரா கூடப் படிப்புக்காக வெளியே போனதும், கொஞ்சம் கொஞ்சமா அவளோட வட்டம் பெருசாகிடுச்சு. ஆனா நீ மட்டும் என்னை விட்டு நகராம, நிழல் போலவே கூடவே இருந்த. என்னைப் பார்த்துக்கிட்ட!

ஆனா, அதுவும் பாதியிலேயே போயிடும்னு நான் நினைக்கவே இல்ல மய்யூ. நான் ரொம்பத் தனிமையில தவிச்சேன் தெரியுமா?” என்று கேவிக் கேவி அழுதாள் ஆழினி.

அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்ட நித்யமயூரியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

“சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா மட்டும் போதாதுன்னு,புரியுது ஆழினி. நான் செஞ்சது பெரிய தப்புதான். உன்மேல எனக்கு உரிமை இருக்கிறதாலதான் கோபப்பட்டேன். ஆனா, நீ அதை இவ்வளவு பெருசா எடுத்துக்குவேன்னு நினைக்கவே இல்ல.

உன்னைத் ஃபோன்ல காண்டாக்ட் பண்ண எவ்வளவோ முயற்சி செய்தேன். நீதான் அதுக்கு வாய்ப்பே கொடுக்கல. உன் கிட்ட பேச முடியாமல் போகவும் நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா? இந்தியாவுக்கு வர்றதுக்குக்கூட எனக்கு மனசு வரல. என்னோட கனவுகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டுத்தான் வரணும்னு நினைச்சேன். அதனாலதான் இவ்வளவு காலம் தள்ளிப்போச்சு.

அதுவும் இல்லாமல் மது ஃபோன் பண்ணி நீ டைவர்ஸ் கேட்குறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப ஷாக். அண்ணா உன்னை ஒருபோதும் விட்டுட மாட்டாங்கன்னு தெரியும். ஆனாலும் உனக்கு ஏதோ பிரச்சனைனு புரிஞ்சது. அதான் உடனே இந்தியாவுக்கு கிளம்பி வந்துட்டேன்.” என்று நித்யமயூரி கூற.

நித்யமயூரி அவளது அண்ணனின் பேச்சை எடுத்ததும் விலகி நின்றாள் ஆழினி.

“என்னாச்சு ஆழி? அண்ணன் மேல இன்னும் நீ கோபமா தான் இருக்கியா? அண்ணா அக்கா பத்தின உண்மையை சொல்லலையா?” என்று குழப்பத்துடன் வினவ.

“ அண்ணியை பத்தி எல்லாம் சொன்னாங்க.அதை நம்புற மாதிரி இல்ல. அதான் நான் டைவர்ஸ் வேணும்ங்குறதுல உறுதியாக இருக்கேன்.” என்று இறுக்கத்துடன் கூறினாள் ஆழினி.

“என் ஆழி… இப்படி இருக்க! எங்க அண்ணன் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லையா? எங்க அண்ணனை உனக்கு பிடிக்கும் தானே? அப்போ, அவரோட குணம் உனக்குத் தெரியாதா? அவர் பொய் சொல்வாரா? எங்க அண்ணன் உண்மையைத் தான் உன்கிட்ட சொன்னாரு. அதைக்கூட உணராமல் இப்படி கோபத்தைத் தூக்கிக்கிட்டு நிக்கிறியே!” என்று ஆதங்கமாக வினவினாள் நித்திய மயூரி.

“எனக்கு அவரைப் பத்தித் தெரியும். அவர் உண்மையைத்தான் சொல்றார்னு எனக்கும் புரியுது. ஆனால்…” என்று இழுத்தாள் ஆழினி.

“அப்புறம் என்னடி? அண்ணன் சொல்றது உண்மைன்னு தெரிஞ்சும் ஏண்டி அவரைப் பாடாய்ப் படுத்துற?”

“அவர் என்னைப் படுத்துனதுக்கெல்லாம் நான் கொஞ்சம்கூடப் படுத்தல. அப்படியே பதிலுக்குப் பதில் செய்யணும்னு நினைக்கிறவளும் நான் கிடையாது. நடந்தது ஏதோ ஒரு தப்பு. ஆனா, அதனால இப்போ பாதிக்கப்பட்டது யாரு? தன்ஷிகா தானே. அவ மனசுலையும் இங்கே உள்ளவங்க ஆசையை வளர்த்துட்டாங்க. இப்போ அவளோட நிலைமை? இல்ல… குழந்தையோட அவளை யாரு ஏத்துப்பாங்க?

அதுக்காகத்தான் நான் கோபமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இங்கிருந்து கிளம்பிடலாம்னு பார்த்தேன். ஆனா, செழியன் எனக்கு எப்படியாவது புரிய வைக்கணும்னு தவிக்கிறப்போ மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும், அந்தக் குழந்தை,அப்பா, அம்மான்னு ஒரு குடும்பத்தோட இருக்கணும்னு நினைக்கிறேன்.”

“லூசு! தியாகி வேலை எல்லாம் பார்க்காத. இது உனக்கு மட்டும் சம்பந்தப்பட்ட விசயம் கிடையாது. எங்க அண்ணனோட வாழ்க்கையும் கூட!

“உன்னை விட்டுட்டு அவரால இருக்க முடியாது. ஒருமுறை உன்னை விட்டதுக்கே இவ்வளவு கஷ்டப்பட்டுட்டாரு. இனி அவர் என்னைக்கும் உன்னை விட மாட்டார். அதனால்தான் சொல்றேன், தியாகி வேலை எல்லாம் பார்க்காத!

தனுவுக்கு எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும்னு அண்ணாவுக்குத் தெரியும். உன்னை கோபப்படுத்துனா அண்ணா கிட்ட நீ நெருங்குவேனு தான் தனு இப்படியெல்லாம் பண்றா. அது எனக்கே புரியுது. நீயும் கொஞ்சம் புத்திசாலியா இருந்தா உனக்கும் புரிஞ்சிருக்கும்.”

“ மய்யூ! நீ உன் மாமா மகளுக்குச் சப்போர்ட் பண்றியா?” என்று கலக்கமாக வினவினாள் ஆழினி.

“அடியே எரும. அண்ணின்னு கூடப் பார்க்க மாட்டேன். உன்னை விட்டுட்டு அவளுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேனா? எனக்கு அவளும் முக்கியம். நீயும் முக்கியம். அதெல்லாம் விட எங்க அண்ணன் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.

நீ ஒழுங்கா அண்ணா கிட்ட பேசு. மனசுவிட்டுப் பேசினா எல்லாம் சரியாகிவிடும்!” என்று ஆழினியின் மனதை மாற்ற முயன்றாள் நித்ய மயூரி.

“சரியாகிவிடுமோ?” என்ற ஏக்கத்துடன் தன் தோழியைப் பார்த்தாள் ஆழினி.

error: Alert: Content selection is disabled!!