ஆழியே மெளனம் ஏனோ 15 – 1

மௌனம் -15

வியன் செழியன் சிறுவயதிலிருந்தே ஆழினியைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருப்பான்.

அதற்கு காரணம் அவனது பிறந்தநாள் அன்று ஆஸ்ரமத்திற்கு சென்ற போது, அவனது அம்மாவும், அப்பாவும் மதருடன் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருந்தான்.

அதுமட்டுமல்லாமல் மதர் காண்பித்த சிறுமியை கூர்ந்து கவனித்தான்.

நித்தியமயூரி விளையாட செல்ல. அவளுக்கு துணைக்குச் சென்றவனது பார்வையில் ஆழினி அழுத்தமாகப் பதிந்தாள்.

அதன்பிறகு வீட்டிற்கு வந்ததும், அவனது பாட்டி கூறிய வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ‘அந்தப் பெண்ணுடன் நித்யமயூரியை அதிகம் பழக விடக்கூடாது.’என்ற எண்ணம் வேரூன்றியது.

ஆனால் விதியானது நித்யமயூரியையும், ஆழினியையும் ஒரே வகுப்பில் சந்திக்க வைத்தது. நித்யமயூரியின் நெருங்கிய தோழியானாள் ஆழினி.

அது வியன்செழியனுக்குப் பிடிக்கவே இல்லை.

“மய்யூ! முன்ன பின்ன தெரியாத பொண்ணோட எதுக்கு பிரண்ட்ஷிப் வச்சிக்கிற. அந்தப் பொண்ண பத்தி உனக்கு என்னத் தெரியும். அளவோடு பழகு.”என்று வியன்செழியன் கூற.

“அண்ணா! பேசினா தானே ஃபிரண்ட் ஆக முடியும். ஆழினி என்னோட க்ளாஸ்மெட். புதுசா எங்க ஸ்கூல்ல ஜாயின் பண்ணியிருக்கா. எல்லாரும் இப்படி நினைச்சா அவ பாவம் இல்லையா? நமக்கு தான் அவளை முன்னமே தெரியும்ல. அதான் அவளோட பேசுறேன்” என்றாள் நித்யமயூரி.

அவளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

அவன் தடுக்க, தடுக்க இன்னும் அதிகமாக ஆழினியுடன் நெருங்கிப் பழகினாள்.

அதன் விளைவாக, ஆழினியைப் பார்க்கும் போதெல்லாம் அவளை முறைத்துப் பார்ப்பது வியன் செழியனின் வழக்கமாகிவிட்டது.

ஆழினியோ நித்யமயூரியின் மூலமாக செழியனைப் பற்றி நிறைய கேட்டுத் தெரிந்துக் கொண்டவளுக்கு அவன் மேல் ஒரு சிறு ஆர்வம் வந்தது.

ஆனால் அவன் எப்போதும் கோபமாகவே அவளை நோக்கிப் பார்ப்பதைக் கண்டதும், அந்த வயதிலேயே நல்ல பக்குவம் கொண்டிருந்த அவள், அவனிடமிருந்து மெதுவாக ஒதுங்க ஆரம்பித்தாள்.

அப்படியே ஆண்டுகள் நகர்ந்தன…

அவர்கள் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்காக ஒரு கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது.

கல்விச் சுற்றுலா என்றாலே மாணவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. வகுப்பறையே அன்று களைகட்டியிருந்தது. யார் யாருடன் அமர வேண்டும், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும், எந்த இடங்களுக்குச் செல்லப் போகிறார்கள் என்று ஒவ்வொருவரும் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

நித்ய மயூரி வழக்கம்போல் ஆழினியைக் கைப்பிடித்தபடி, “இந்த தடவை நீயும் வரணும் ஆழி.” என்றவள் மதுராவிடம் திரும்பி போன தடவை மாதிரி முன்னால உட்கார வேண்டாம் மது. பின்னாடி உட்கார்ந்துக்கலாம். அப்போ தான் ஜாலியா பேசிட்டு வரலாம். “ என்று உற்சாகமாகக் கூற,

“ஆமாம் மய்யூ.” என்றாள் மதுரா.

நித்யமயூரியும், மதுராவும் டூருக்குச் செல்வதைப் பற்றி திட்டம் போட்டுக் கொண்டிருக்க, ஆழினியோ அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த மதுரா,
“என்னடி நானும், மய்யூவும் மட்டும் டூர் போறதைப் பத்தி பேசிட்டு இருக்கோம். நீ ஒன்னுமே சொல்லாமல் அமைதியா இருக்க. நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்தாலே எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு. ” என்று கூறினாள்.

அப்போதுதான் மயூரியும் ஆழினியைப் பார்த்தாள்.

“ நான் வரலடி,” என்றாள் ஆழினி.

“ஏன் இப்படி பண்ற ஆழி? போன வருஷம் என்ன சொன்ன. அடுத்த தடவை கட்டாயம் வர்றேன்னு தானே சொன்ன.” என்று மயூரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

“கொடைக்கானலுக்குப் போறது எனக்கு அவ்வளவா ஆர்வமில்ல. இந்த மாதிரி மலைப்பிரதேசத்துலதானே நான் இருக்கேன். சின்ன வயசுல இருந்தே கடல், கடற்கரைன்னு இப்படிப்பட்ட இடங்களுக்குத்தான் போகணும்னு ஆசை. அதனாலதான் இந்த டூருக்கு வரல.”

“எங்களுக்காக முதல்ல இதுக்கு வா. அடுத்த தடவை உனக்குப் பிடிச்ச இடத்துக்குப் போகலாம்,” என்று மயூரி விடாமல் வற்புறுத்தினாள்.

ஆழினி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“புரிஞ்சுக்கோ மயூ… நான் மதர்கிட்ட போய் டூருக்குப்போவதற்காகன்னு பணம் கேட்க முடியாது,” என்று உண்மையைப் போட்டு உடைத்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அனைத்தையும் சற்றுத் தொலைவில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தான் செழியன்.

“பணம் தானே? நான் எங்க வீட்டுல வாங்கித் தரேன்,” என்று நித்யமயூரி கூற.

“வேண்டாம்,” என்று உடனே மறுத்தாள் ஆழினி.

அவள் மறுத்தது செழியனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பணத்திற்காக தன் தங்கையிடம் அடி போடுகிறாள் என்று ஏளமாக எண்ணியவனுக்கு அவளது மறுப்பு ஆச்சரியமே.

“நான் உன் ஃப்ரெண்ட் தானே ஆழி? என்கிட்ட வாங்கிக்க. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு யோசிக்கிற?”

“இந்த டூர் அவசியம் இல்லை மய்யூ. எனக்கு உண்மையிலேயே தேவைன்னா நான் உன்கிட்ட கேட்பேன்.”

“அதுக்கு இப்பவே வாங்கிக்கிட்டா என்ன?”

“எனக்கு படிப்புதான் முக்கியம். அதுக்காக ஏதாவது தேவைப்பட்டா உங்க ரெண்டு பேர்கிட்ட தானே நான் கேட்கப் போறேன்? வேற யார்கிட்ட கேட்கப் போறேன்? ஆனால் இது அத்தியாவசியமான விஷயம் இல்லையே… இதை விட்டுட்டு என்னால இருக்க முடியும். ஆனால் படிப்பை விட்டுட்டு என்னால இருக்க முடியாது.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், மீண்டும் சொன்னாள்.

“எப்போ எனக்கு படிப்புக்காக உண்மையிலேயே உதவி தேவைப்படுதோ, அப்போ கட்டாயம் உங்ககிட்ட கேட்கிறேன்.”

ஆழினியின் அந்தப் பதிலைக் கேட்ட நித்யமயூரி அமைதியாகி விட்டாள்.

அவளைப் பற்றி இதுவரை செழியனின் மனதில் இருந்த எண்ணம் அப்படியே மாறியது.

முதன்முறையாக… அவள் மீது அவனுக்குள் ஒரு மரியாதை பிறந்தது.

அவளைப் பார்த்தபடியே சில நொடிகள் நின்றவன், அங்கிருந்து நகர்ந்தான்.

நேராக வீட்டிற்குச் சென்றவன் தன் தந்தையிடம்,

“அப்பா… எங்க ஸ்கூல்ல டூர் போறாங்கன்னு தெரியும் தானே?” என்று கேட்டான்.

“தெரியுமே. உன் தங்கச்சி கூட பிடிவாதமா கிளம்புறா. நீயும் தானே போற. அதான் அவளுக்கும் அனுமதி கொடுத்திருக்கோம். ஜாக்கிரதையா அவளைப் பார்த்துக்கணும், சரியா?” என்றார்.

“அதை நான் பார்த்துக்கிறேன். அப்பா… நம்ம ஒரு பொண்ணோட படிப்புக்கும் ஸ்பான்சர் பண்றோம்ல… அந்தப் பொண்ணும் எங்க ஸ்கூல்லதானே படிக்கிறா?”

“ஆமாம். ஏன் கேக்குற?”

“அந்த பொண்ணுக்கும் டூருக்கு நாம ஸ்பான்சர் பண்ணுவோமா?”

அவனுடைய தந்தை சற்றே யோசித்தார்.

“அவங்களுக்கு ஏதாவது தேவைன்னா கேட்பாங்க. இதுவரைக்கும் அந்தப் பொண்ணு எதுவும் கேட்டதில்லையே…”

“ஓ!” என்ற செழியனோ அமைதியாகிவிட்டான்.

அவனது முகத்தில் ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவரது தந்தை,

“சரி, நான் மதர்கிட்ட சொல்லி பணம் அனுப்பிறேன்,” என்றார் இனியன்.

அன்றே மதரிடம் பேசிவிட்டு,
“உங்க ஸ்கூல்ல டூர் போறாங்களாமே? அந்தப் பொண்ணும் போகட்டும். எதுவும் கேட்கலைன்னாலும் பரவாயில்லை. அவளையும் போகச் சொல்லுங்க. டூர் செலவுக்கான பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்,” என்று கூறினார்.

அடுத்த நாள் ஆழினிக்குத் டூருக்கான பணம் வந்திருப்பதாகத் தெரிய வந்ததும், அவளால் அதை நம்பவே முடியவில்லை.

தன் தோழிகளிடம் தானும் வருவதாக கூற. மதுராவும், மயூரியும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

அவர்களின் சந்தோஷத்தைப் பார்த்த ஆழினியின் முகத்திலும் ஒரு புன்னகை மலர்ந்தது.

அதற்குப் பிறகு தினம் பள்ளியில் பாடத்தை கவனிக்கிறார்களோ, இல்லையோ டூர் போவதை பற்றி திட்டம் போடுவது தான் அவர்களது வேலை.

மதுராவும்,மய்யூவும் டூருக்கு செல்வதைப் பற்றி திட்டமிட. இவளோ தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக அவர்கள் டூர் செல்லும் நாளும் வந்தது.

********

பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மாணவிகள் அனைவரும் அவசரமாக ஓடிச் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் மயூரி, மதுரா, ஆழினி மூவரும் மெதுவாக நடந்து வந்தனர்.

பேருந்துக்குள் ஏறியதும், ஜன்னல் சீட்டைப் பார்த்தவுடன் மயூரியின் கண்கள் ஆர்வத்தில் மின்னின.

“எனக்கு ஜன்னல் சீட் வேண்டும்!” என்று அடம்பிடித்தவள், அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

“நீயே உட்காரு, பரவாயில்லை…” என்று ஆழினி சிரித்தபடி விட்டுக்கொடுத்தாள்.

அதையெல்லாம் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தான் வியன் செழியன்.

அந்தச் சுற்றுலாவில் தான் ஆழினியைப் பற்றி முழுதாக அறிந்துக் கொண்டான்

எப்போதும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தாள்.

மயூரி, மதுரா செய்யும் கலாட்டாக்களைப் பார்த்துப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

இப்பொழுது வியன்செழியன் ஆழினியைப் பார்த்த பார்வையில் ரசனை இருந்தது.

ஆழினியின் மீதான கோபம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.

அதே நேரத்தில், இதையெல்லாம் அறியாத ஆழினி, செழியனைக் கண்டாலே அவனை விட்டு ஒதுங்கிச் சென்றாள்.

அவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்ற எண்ணம் அவளது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அதனால் அந்தச் சுற்றுலாவிலும் அவன் இருக்கும் பக்கமே செல்லாமல், முடிந்தவரை ஒதுங்கியே இருந்தாள்.

ஆனால், செழியனின் மனம் ஏற்கனவே மாறிவிட்டதை அவள் அறிந்திருக்கவில்லை.

சுற்றுலாவிலிருந்து வந்த பிறகு பொது தேர்வு என்று அதில் கவனம் செலுத்தினான் செழியன்

error: Alert: Content selection is disabled!!