“அப்ப ஒரு இடமும் போகாது. நிதானமாத் தேடுங்கோ. சில நேரம் கண்ணுக்கு முன்னால கிடக்கும், ஆனாலும் தெரியாது.”
“இன்னும் எங்க எண்டு தேடுறது?” அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது.
முதலில் ஒன்று எழுபது இருந்தது. நேற்று முப்பது கொண்டுவந்து வைத்தான். முதல் இருந்த பணத்தில் ஏதும் காணாமல் போயிற்றா? அல்லது, அன்னை சொன்னது போன்று நேற்றைய முப்பதை எங்கும் கைதவறி வைத்துவிட்டானா? அலமாரிக்குள்தான் வைத்தோம் என்று நன்றாக நினைவில் இருந்தாலுமே ஒரு சந்தேகம் இப்போது வந்தது. அறையையே தலைகீழாகக் கவிழ்த்துக் கொட்டிவிட்டான். ஆனாலும் பணத்தைக் காணவில்லை. எங்கே போனது? தேடி தேடி வியர்த்துக் கொட்டியது.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு வந்த கானவி மெதுவாக அவர்களின் அறையை எட்டிப் பார்த்தாள். அவர்களின் அலமாரிக்குள் கிடந்த உடைகள் எல்லாம் கட்டிலில் இறைந்து கிடந்தன. அறையே தலை கீழாகக் காட்சி தந்தது. சிவரூபனும் சேர்ந்து அலமாரிக்கு மேலே, அலமாரிக்குப் பின்னால், மேசை இழுப்பறைகள் என்று தேடிக்கொண்டிருந்தான். செந்தாளனின் புத்தக அலமாரிக்குள் இருந்துகூட அனைத்துப் புத்தகங்களும் வெளியே வந்திருந்தன. அப்போதுதான் நடந்துகொண்டிருக்கும் சம்பவத்தின் தீவிரம் புரிபட்டது. அவளுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“இது ஆரோ எடுத்திருக்கினம் அம்மா. இல்லாம இப்பிடிக் காணாமப் போகாது.” இவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணம் வீட்டில் இல்லை என்கிற முடிவுக்கு உறுதியாக வந்திருந்தான் சிவரூபன்.
“அப்பிடி ஆரப்பு…” தன் பாட்டுக்கு யோசித்த புவனாம்பிகை, “நேற்று உன்ர பிரெண்ட்ஸ் வந்தவே எல்லா தம்பி. அண்ணா மேசையில எங்கயும் வச்சு, அவே ஆரும் எடுத்திச்சினமோ?” என்று கேட்டு முடிக்க முதலே, “அம்மா!” என்று அதட்டியிருந்தான் அவன்.
“என்ன கதைக்கிறீங்க? அவங்கள் ஹோலை தாண்டி வாறதே இல்ல. அதுக்கு முதல் அவங்களுக்குக் களவெடுக்கிற பழக்கம் எல்லாம் இல்ல!” என்றான் கோபத்தோடு.
அவனுக்கு நண்பர்கள் என்று நிறையப்பேர் இல்லை. இருக்கும் அந்த நால்வரும் சிறு பிராயத்தில் இருந்தே பழகுகிறவர்கள். அப்போதில் இருந்தே இங்கு வந்து போகிறவர்களும். அவர்களை அப்படிச் சொன்னது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.
“எனக்கும் தெரியுமப்பு. ஆனா, காசக் காணேல்லை எண்டால் நாலா பக்கமும் யோசிக்கவும் வேணும்தானே.” என்றவருக்கு நேற்று மனோகரன் வீட்டு ஆள்களும் வந்துபோன நினைவு வரவும் ஒரு கணம் உள்ளம் பதறிப் போயிற்று. அவர்கள் யாருமோ? கடவுளே!
இதற்குமேலும் வாயை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது என்று கானவிக்கே தெரிந்து போயிற்று. கைகால்கள் நடுங்க செந்தாளனின் முன் சென்று நின்றாள்.
கட்டிலில் கிடந்த உடைகளை ஒவ்வொன்றாக உதறிக்கொண்டிருந்தான் அவன்.
“நா…நான்தான் எடுத்தனான்.” எச்சில் கூட்டி விழுங்கியபடி சொன்னாள். அவளுக்குக் குரல் எழும்பவே இல்லை. அதில், அவள் சொன்னது அவன் காதுக்குப் போய்ச் சேரவில்லை. “என்ன? கதைக்கிறதைச் சத்தமாக் கதை.” என்று இருந்த சினத்தில் அவளிடம் எரிந்து விழுந்தான்.
“அ…அந்தக் காச நான்தான் எடுத்தனான்.” பயத்தில் அவளுக்கு உதடுகள் உலர்ந்து போயின. நெஞ்சு டமார் டமார் என்று அடித்துக்கொண்டது.
“என்ன?” என்றான் கொதித்துப்போய். அவ்வளவு நேரமாக அவனைப்போட்டு ஆட்டிப்படைத்த பயம், பதற்றமெல்லாம் ஆத்திரமாக அவள் புறம் திரும்பிற்று. “அறிவு கெட்டவளே! உன்ர கண்ணுக்கு முன்னாலதானே இந்த அறையையே பிரட்டி பிரட்டித் தேடிக்கொண்டிருந்தனான். ஒரு வார்த்த சொன்னியா? என்னத்துக்கு மறச்சனி? உன்ன நான் கேட்டனான் எல்லா?” என்றவனின் குரல் ஆத்திரத்தில் ஓங்கி ஒலித்தது.
பெருத்த அவமானத்தில் அவள் உடல் சுருண்டு போயிற்று. “சொறி!” என்றாள் கண்களில் திரண்டுவிட்ட கண்ணீரோடு.
“முதல் என்னத்துக்கு எடுத்தனி? ஏன் கேக்காம எடுத்தனி? இப்பிடித்தான் வீட்டில இருக்கிற காசச் சொல்லாமக் கொள்ளாம எடுப்பியா?” என்றதும் அதிர்ந்து கணவனைப் பார்த்தாள்.
சிவரூபனையும் வைத்துக்கொண்டு என்ன பேசுகிறான்?
“ப்ளீஸ்…” கண்களுக்குள் திரண்டிருந்த கண்ணீர் உருண்டு விழக் கெஞ்சினாள்.
அவள் நிலையை உணரும் நிலையில் அவன் இல்லை. ஒரு வார்த்தை சொல்லியிருக்க இத்தனை நேரமாக அவன் தவித்த தவிப்புக்கு அவசியம் இல்லாமல் போயிருக்குமே! வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர உள்ளுக்குள் மிகவும் பயந்து போயிருந்தான்.
“ஏன் எடுத்தனி? அதைச் சொல்லு!”
“ப்ளீஸ்!” அழுதாள் கானவி. இந்த விசாரணையைத் தனியாக வைத்துக்கொள்ளக் கூடாதா என்று அவள் விழிகள் அவனிடம் இறைஞ்சின.
புவனாம்பிகைக்கும் அவளில் மிகுந்த கோபமே. மருமகன் வீட்டினர் வரைக்கும் சந்தேகப்பட்டுவிட்டாரே. தப்பித்தவறி அதையும் வாய் விட்டு அவர் சொல்லி, அது மருமகனின் காதுக்குப் போயிருந்தால், அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கும்? இது எல்லாவற்றுக்கும் காரணம் அவள் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டது.
ஆனாலும் மகன் மருமகளுக்குள் சண்டை வருவதை விரும்பாமல், “தம்பி, விடுங்கோப்பு. அதான் காசு வெளில எங்கயும் போகேல்ல எண்டு தெரிஞ்சிட்டுதெல்லோ.” என்று இடையிட்டுச் சொன்னார்.
அவன் அசையவில்லை. “பேசாம இருங்கம்மா நீங்க. நீ சொல்லு!” என்றான் அவளை விடாமல்.
வேறு வழியற்று, “கிஃப்ட் வாங்க.” என்று முணுமுணுத்தாள். நொடியில் அவன் முகத்தில் உண்டான மாற்றத்தைக் கண்டு பயந்து, “அது… அது எங்கட இருநூறாவது கலியாண நாளுக்கு.” என்றாள் அவசரமாக.
சிவரூபனுக்குச் சினம் உச்சிக்கு ஏறிற்று. அங்கேயே நின்றால் தமையனின் முன்னாலேயே அவளை ஏதும் சொல்லி விடுவோமோ என்று பயந்து, கையில் இருந்த பொருளைச் சுழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அவமானத்தில் குறுகிப்போனாள் கானவி. நெஞ்சைப் பிளந்துகொண்டு வெடிக்கும் அழுகையை உதட்டைக் கடித்து அடக்க முயன்றாள்.
புவனாம்பிகைக்கு அவள் நிலை நொடியில் புரிந்து போயிற்று. அதற்குமேல் அந்தப் பிரச்சனையை வளர விட விரும்பாமல், “சரியப்பு விடுங்கோ. திரும்ப திரும்ப அதையே கதைக்க வேண்டாம். இருக்கிற காசைத் தம்பிட்ட குடுத்து அனுப்புங்கோ. மிச்சத்தப் பிறகு பாக்கலாம். இப்ப வாங்கோ.” என்று அவனைக் கையோடு பிடித்து அறையை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.
“என்னத்தையம்மா விடுறது? இவளின்ர கண்டறியாத கொண்டாட்டத்துக்கு முப்பதுனாயிரத்தக் கொண்டுபோய் நாசமாக்குவாளா? இப்ப கொஞ்ச நாளைக்கு முதல்தான் மேக்கப் எண்டு ஒரு தொகையை அநியாயமாக்கினாள். எப்ப பாத்தாலும் வரவை மீறின செலவு. என்ன பழக்கம் இது. வெறுத்துப் போகுது எனக்கு!”
வெறுத்த குரலில் அன்னையிடம் குமுறியவனின் பேச்சு அவளை ஆழமாகக் காயப்படுத்த, “நான் நாளைக்கு அப்பாட்ட வாங்கித் தாறன்.” என்றாள் கானவி கண்ணீர் குரலில்.
அவ்வளவுதான். அவனுக்கு வந்ததே சினம். விருட்டென்று அன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு வந்து, “இந்தளவுக்கு ரோசம் இருக்கிறவள் என்ன செய்றதா இருந்தாலும் சொந்தக் காசில செய்ய வேணும். மற்றவேன்ர காசுல இல்ல!” என்றான் பட்டென்று.
துடித்து நிமிர்ந்தாள் கானவி. புவனாம்பிகையும் பதறிப் போனார். “தம்பி, என்ன கதை இது?” என்று அதட்டினார்.
அவரின் அதட்டல் அவனைச் சேரவில்லை. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது போன்று இருந்தது அப்பாவிடம் வாங்கித் தருகிறேன் என்று அவள் சொன்னது. அவன் என்ன வக்கில்லாமலா இருக்கிறான், அவள் அப்பாவிடம் வாங்கித் தந்து அவனுக்கு நிறைய?
“வெளில இறங்கி வேர்வை சிந்தி ஒரு ரூபா உழைச்சுப் பார். அப்ப தெரியும் காசின்ர அருமை. அதுசரி, ஓசில வாற காச உடம்பு நோகாம செலவழிச்சுப் பழகினவள்தானே நீ? இதில ரோசம் வேற வருது உனக்கு? எங்கட வீட்டில ஆராவது சும்மா இருந்து பாத்திருக்கிறியா? அம்மா கூட இந்த வயசிலையும் கோழி வளக்கிறா, பால் கறந்து விக்கிறா, நேரம் இருக்கேக்க தோட்டத்துக்கு வந்து உதவி செய்றா. ஆனா நீ? படிக்கவும் இல்ல. வேலையும் இல்ல. குந்தி இருந்து சாப்பிடுறதும் இல்லாம ஓராயிரம் பிரச்சினை உன்னால!” என்றதும் அவளால் அசையவே முடியாமல் போயிற்று. இதயத்தின் துடிப்பே நின்றுவிட்டது போலொரு உணர்வு. கண்ணீர் கூட நின்றுவிட அவனையே வெறித்தாள்.

