இடைவெளி வலிக்குதே 24 – 2

அப்போதும் அங்கேயேதான் இருந்தான் அவன். இதுவரையில் இப்படி அவன் இருந்ததில்லை. எதையோ தனக்குள் வைத்து உழல்கிறான் என்று விளங்கிற்று. என்ன என்று கேட்போமா என்று நினைத்தாள். அப்படிக் கேட்டு, ஆறுதல் சொல்லும் அளவுக்கு அவள் எல்லாம் அவனுக்கு ஒரு ஆளா என்ன? இன்னுமே அவன் சொன்னதுபோல் படிப்பற்ற, வேலையற்ற, உழைப்பற்ற, அவனுக்குப் பாரமான அதே மனைவி. அவளை வேண்டாம் என்று சொல்ல நொடி நேரம் கூட எடுக்க முடியாத மனைவி. மனத்தினுள் எழுந்த கசப்பை விழுங்கிக்கொண்டு குழந்தையின் கேசம் கோதிவிட்டாள்.

அவன் பசியாறி முடிந்ததும் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தாள். அதுவரையிலும் கூட அங்கேயே இருந்தவனை அப்படியே விட அவளுக்கு மனம் வரமாட்டேன் என்றது. அதில் மகனைக் கொண்டுபோய் மீண்டும் அவனிடம் கொடுத்தாள்.

கைகள் அதுபாட்டுக்கு மகனை வாங்கிக்கொண்டாலும் அவளையேதான் பார்த்திருந்தான்.

எது உந்தியது என்று தெரியாது, “தம்பின்ர உடுப்புகள் கொஞ்சம் தோய்க்கக் கிடக்கு.” என்றாள் கானவி.

“மெஷினுக்க போட்டா என்ன?”

“நாலு குட்டி உடுப்புக்கு என்னத்துக்கு மெஷின்?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.

நிறைய நாள்களுக்குப் பிறகு, கோபதாபங்கள் எதுவுமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். போகிறவளையே பார்த்தான் அவன். அவன்தான் விலகி நிற்கிறான் என்று பார்த்தால் அவளும் நெருங்கி வரவில்லை. அது அவள் தன் தாய் வீட்டில் இருக்கும் வரையில் அவனைப் பெரிதாகப் பாதித்ததில்லை. ஆனால், பக்கத்திலிருந்துகொண்டே அவள் தானும் மகனுமாக ஒதுங்கி இருப்பது நாளாக நாளாக அவனைப் பாதித்தது.

உடைகளை அவள் தோய்த்துக் காயப்போட்டுவிட்டு வந்து பார்க்க, செந்தாளன் மகனோடு விறாந்தைக்கு வந்திருந்தான். இன்னும் மனோகரனும் சிந்துஜாவும் வந்திருக்கவில்லை. புவனாம்பிகை இரவுச் சமையலுக்கு ஆயத்தமாக, உதவ வந்தாள் கானவி.

“புட்டு அவிச்சு நல்லெண்ணையில முட்டை போட்டுப் பிரட்டுவம் எண்டு பாக்கிறனம்மா. இந்தச் சின்ன வெங்காயங்களை உரிச்சுத் தாறீங்களோ?” என்று அவளுக்கும் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு புட்டை நல்ல சின்னதாகக் கொத்தினார்.

“கத்தரிக்காயும் பொரிப்பமா மாமி? புட்டுக்கு நல்லாருக்கும்.”

“ஓமோம், மாமாவை வரேக்க பிடுங்கிக்கொண்டு வரச் சொன்னனான்.” என்றவர், “மேக்கப்ப தொழிலாச் செய்யலாமோம்மா?” என்று விசாரித்தார். விறாந்தையில் இருக்கும் மகன் காதில் தம் பேச்சு விழ வேண்டும் என்று நினைத்தே அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

“இப்ப அதுதான் பெரிய தொழிலே மாமி. இப்ப இப்ப எல்லாருக்கும் எப்பவும் தாங்க வடிவா இருக்கோணும் எண்டுறது விருப்பம். ஒரு காலம் அதுக்கு நிறையக் காசுச் செலவு எண்ட மாதிரி இருந்தது. அதவிட வீட்டில கேட்டா தராயினம். ஆனா இப்ப அப்பிடி இல்ல எல்லா? இப்ப கூடுதலா எல்லா பொம்பிளைகளும் வேலைக்குப் போகினம். போறது மட்டுமில்லாம நல்ல நல்ல பொஷிஷன்ல எல்லாம் இருக்கினம். அப்ப அவேக்கு தாங்க இன்னும் பளிச்செண்டு தெரியோணும், பாக்க நல்லா இருக்கோணும் எண்டு விருப்பம் இருக்கு. அதுக்கு நாங்க வேணும்.”

உண்மைதான். இப்போதெல்லாம் சிந்துஜா வாரா வாரம் கானவியிடம் முகத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிடுவாள். கை கால்களுக்கெல்லாம் கூட என்னென்னவோ செய்வார்கள். “என்னம்மா இது? பிள்ளையிட்ட போய்க் காலைக் குடுத்துப்போட்டு இருக்கிறீங்க?” என்று முதன் முதலில் பார்த்துவிட்டு இவரே பதறியிருக்கிறார். அவள் மட்டுமில்லை, அயலட்டையில் இருப்பவர்களுமே அதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதை அவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

“அதோட கலியாணவீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் எண்டு விசேச நாள்களைப் பெருசாக் கொண்டாடுறதும் இப்ப சாதாரணம் மாதிரி ஆயிற்றுது எல்லா. எல்லாருக்கும் வசதி வாய்ப்புகளும் கூட எண்டேக்க இதத் தேடி வாற ஆக்களும் கூட மாமி. வடிவா படிச்சு, முறையா பார்லர் போட்டு, ட்ரெண்டியா எல்லாம் செய்தா சுப்பரா போகும்.” உற்சாகமாய்ச் சொன்னாள் அவள். அவளுக்குப் பிடித்த துறை பற்றிய பேச்சு என்றதும் அந்த உற்சாகம் தானாய் வந்திருந்தது.

“உங்களுக்கும் கடை போடுற ஐடியா இருக்காம்மா?” அங்கே விறாந்தையில் அமர்ந்திருந்த மகனிடம் பார்வை ஒருமுறை சென்று வர மெதுவாக வினவினார்.

அவ்வளவு நேரமாகச் சரளமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள் பதில் சொல்லத் தயங்கினாள். அவர் விடவில்லை. “கைக்குழந்தையை வச்சிருந்தும் விடாம இவ்வளவு ஈடுபாட்டோட படிச்சுப்போட்டு சும்மா இருக்கிறது எண்டால் விசர் எல்லாம்மா? அண்டைக்கு அந்த அவரே உங்களைப் பாராட்டினவர் எல்லா. மேல என்ன செய்றது எண்டு யோசிக்கேல்லையா நீங்க?” விடாமல் துருவினார் அவர்.

“பார்லர் போடுறதுதான் எனக்கும் விருப்பம். ஆனா இப்ப தம்பியோட அது சரி வராதுதானே மாமி. அதுக்கு முதல் எல்லாத்தையும் வடிவாப் பழகோணும். நிகத்துக்கு(நகம்) மட்டுமே ஊறுப்பட்ட வகை இருக்கு மாமி படிக்க. கேக் செய்து குடுக்கலாம். அப்பிடியே தையல். எல்லாம் நான் மட்டுமே பழகிச் செய்றது எண்டுறதும் சரிவராது. இப்ப நான் மேக்கப்பை கவனிச்சா, தையலுக்கு என்னை மாதிரியே ஈடுபாட்டோட இருக்கிற ஒரு ஆளை என்னோட சேர்க்கலாம். அப்பிடியே கேக் செய்றதுக்கும் ஒரு ஆள். அப்பிடி முறையா பிளான் பண்ணி, ஒழுங்கா செய்து, நல்ல சேவிஸ் குடுத்தா இந்தக் காலத்தில சிம்பிளா உழைக்கலாம் மாமி. இப்பவே போட்டோஸ் எடுத்து பேஸ்புக், இன்ஸ்டா எல்லாம் மெல்ல மெல்ல போடத் தொடங்கீட்டன். தம்பியும் வளர எனக்கும் எல்லாம் சரியா வரும் எண்டு நம்புறன்.”

“ஓ!” என்றவருக்கு உண்மையில் இதெல்லாம் புது விடயம்தான். அவள் சொல்லும் உலகம் அவர் அறியாதது.

அதற்குள் அவளின் கைப்பேசியை எடுத்துவந்து முகப்புத்தகத்தில் ஒரு பக்கத்தை எடுத்துக் காட்டினாள். “இங்க பாருங்க மாமி, ‘நிலாமகள்’ எண்டு ஒரு பேஜ் ஆரம்பிச்சு, நான் செய்ற எல்லாத்தையும் போடுறன். பெரிய ரீச் இல்லைதான். ஆனா உடனே எல்லாம் நடக்காதுதானே. எனக்கும் டைம் இருக்குத்தானே.” என்றவள் தனக்குப் பிடித்த விசயம் குறித்த பேச்சு என்பதாலா, யார் என்ன சொன்னாலும் இந்தப் பாதையில் என் பயணம் நிற்காது என்கிற உறுதி மனத்தில் வந்துவிட்டதாலா என்னவோ கணவன் விறாந்தையில் இருப்பதையும், அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருப்பதையும் மறந்து போனாள்.

புவனாம்பிகை எதிர்பார்த்தது போன்று செந்தாளன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். அவன் கைகள் அதுபாட்டுக்கு முகப்புத்தகத்தில் நிலாமகளைத் தேடிச் எடுத்தது.

அங்கே, அவள் போட்டிருந்த புகைப்படங்களை ஊன்றிக் கவனித்தான். முன்னரும் அழகாகச் செய்வாள்தான். இப்போது மிகுந்த நேர்த்தியும், முறையாகக் கற்ற ஒருவரின் இலாவகமும் வரத் தொடங்கியிருந்தது. அதிகப்படி என்றும் இல்லாமல், பெரிதாக ஒன்றும் இல்லையே என்று சொல்லவும் முடியாமல் தொழில்முறை நுணுக்கங்கள் தென்பட்டன.

அவற்றைப் பார்க்க பார்க்க அவள் தன் உலகத்தை நேர்த்தியாகச் செதுக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய வளர்ச்சியும் மாற்றமும்தான். ஆனால், இதில் அவன் பங்கு எதுவும் இல்லை என்கிற உண்மை அவனை உறுத்தியது.

அவளாகக் கேட்ட நாள்களில் கூட அலட்சியப்படுத்தி இருக்கிறான். இன்று அவளே தனக்கான பாதையை உருவாக்க ஆரம்பித்திருந்தாள். அவன் வேடிக்கை பார்க்கிறவனாகிப் போனான்.

error: Alert: Content selection is disabled!!