அத்தியாயம் 26
அன்று மாலை வீடு வந்த சிவரூபனின் முகம் இறுக்கமாக இருந்தது. அதைவிட நந்தினி அவனோடு வரவில்லை. அதுவே அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்று காட்டிக்கொடுத்தது. புவனாம்பிகை என்ன என்று விசாரித்தார்.
முதலில் ஒன்றுமில்லை என்று முறுக்கியவன், “என்னடா? ஏதும் சண்டையா?” என்று செந்தாளன் அதட்டிய பிறகே ஆம் என்றான்.
என்ன சண்டை, ஏன் சண்டை என்றெல்லாம் கேட்காமல், “அதுக்கு ஏன் அவாவை விட்டுட்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டான் செந்தாளன்.
“வரச்சொல்லித்தான் சொன்னனான் அண்ணா. இல்லை எண்டுபோட்டுப் போறவளுக்குப் பின்னால கெஞ்சிக்கொண்டு போகச் சொல்லுறீங்களா? போன மாதிரியே வரட்டும். நான் போய்க் கூப்பிட மாட்டன்!” என்றான் இன்னும் மனைவி மீதிருந்த கோபம் தீராமல்.
“என்ன தம்பி இது? ஆளாளுக்கு இப்பிடித்தான் சண்டை பிடிச்சுக்கொண்டு திரிவீங்களா?” அண்ணனைப் போலவே தம்பியும் இருக்கிறானே என்கிற ஆற்றாமையுடன் கேட்டார் புவனாம்பிகை.
செந்தாளனாலும் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் போய்விட, “மச்சான், நான் இதச் சொல்லலாமா தெரியேல்ல. ஆனா சொல்லோணும் மாதிரி இருக்கு.” என்றாள் கானவி தயங்கி.
அப்படி அவள் தயங்கியது சிவரூபனுக்கு ஒரு மாதிரி ஆகிற்று. அதற்குத் தன் நடத்தைகளும் காரணம் என்று விளங்க, “அண்ணி, அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. நீங்க சொல்லுங்க.” என்றான் வேகமாக.
“அது… ஆர்ல சரியோ பிழையோ முதல் போய்ச் சமாதானம் ஆகுங்க. பிறகு நிதானமா எடுத்துச் சொல்லுங்க. கட்டாயம் கேப்பா. என்னதான் உங்களோட கோவிச்சுக்கொண்டு போனாலும் அவா அங்க சந்தோசமா இருக்க மாட்டா. தன்னைத் தேடி நீங்க வருவீங்களா எண்டு வாசலை வாசலைத்தான் பாத்துக்கொண்டு இருப்பா. அவவின்ர வீட்டு ஆக்களும் வெளில காட்டிக்கொள்ளாட்டியும் கவனிப்பினம். நீங்க போகாட்டி மகளில மருமகன் பாசம் இல்லையோ எண்டு கவலைப்படுவினம். அதையெல்லாம் ஏன் அவேக்குக் குடுக்க? காலத்துக்கும் கதைக்காமையே இருக்கப் போறீங்களா, இல்ல, இந்தச் சண்டையைத் தொடரப் போறீங்களா? இல்லை எல்லா? எப்பவோ சமாதானம் ஆகுவீங்கதானே? அத இப்பவே செய்திட்டா எல்லாருக்கும் சந்தோசம். அவாக்கும் நீங்களாத் தேடிப்போனாச் சந்தோசமா இருக்கும். அடுத்த முறை இப்பிடிப் போறதுக்கு யோசிப்பா. இதெல்லாம் வாழ்க்கைல கடைசி வரைக்கும் மறக்காத நினைவுகள். இழந்திடாதீங்க. ப்ளீஸ், நீங்களே போய்க் கூட்டிக்கொண்டு வாங்க.” விழியோரம் மெலிதாகக் கசிய, கரகரத்த குரலில் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் நுழைந்துவிட, அண்ணன் தம்பி இருவருமே அசைய மறந்து போயினர்.
சிவரூபன் சமாளித்துக்கொண்டு தமையனைப் பார்த்தான். அவன் இன்னும் அப்படியே அமர்ந்திருக்கவும், “நான் போயிட்டு வாறன் அம்மா.” என்றுவிட்டு எழுந்து புறப்பட்டான்.
முற்றிலுமாக நிலைகுலைந்திருந்தான் செந்தாளன். அவன் போயிருக்க வேண்டுமோ, அழைத்திருக்க வேண்டுமோ? முறுக்கிக்கொண்டு நிண்டிருக்கக் கூடாதோ? அன்று அழைத்து ‘என்னிடம் கேட்க, சொல்ல ஒன்றுமே இல்லையா’ என்று கேட்டாளே. இங்கே வீட்டுக்கு வந்த அன்றும் அப்படித்தானே கேட்டாள்.
புவனாம்பிகைக்கும் மருமகளின் மனதும் அதிலிருக்கும் காயமும் புரிந்தாற்போல் இருந்தது. மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனார்.
கனத்த மனத்துடன் எழுந்து அவனும் அறைக்குள் வந்தான். அவள் மகன் விளையாடியவற்றை எடுத்து ஒதுக்கிக்கொண்டிருந்தாள். பார்வை அவளிலேயே இருந்தாலும் சிந்தனைகள் அன்றைய நாள்களில் சுழன்றடிக்க, “என்னை எதிர்பாத்தியா?” என்றான் தன்னை மீறி.
அழ உதட்டோரத்தில் கசந்த முறுவல் ஒன்று வந்துவிட்டுப் போனது.
“சொல்லு கானவி!”
“அது முதல் தரம்தான். ரெண்டாம் தரம் திரும்பியும் பாக்க மாட்டீங்க எண்டு தெரியும். அதால எதிர்பாக்கேல்ல.” என்றவளைத் திகைப்புடன் பார்த்தான்.
அவள் தன் வேலைகளைத் தொடரப்போக, “முதல் தரம் போகாத எண்டு இஞ்ச வச்சு உன்னட்டக் கெஞ்சினான். மன்னிப்பும் கேட்டனான். கேக்காமப் போனது நீ!” என்றதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“நானும்தான் உங்களிட்ட மன்னிப்புப் கேட்டனான், அழுதனான். மன்னிச்சீங்களா? அதுவும் மச்சானுக்கு முன்னால வச்சு என்ன எல்லாம் கதைச்சீங்க? இப்ப வரைக்கும் இந்த வீட்டில சாப்பிடுறது எனக்குக் குத்துது. இண்டு வரைக்கும் உங்கட காசைத் தொட்டதை நினைச்சா ஏண்டி எடுத்தாய், ஏண்டி எடுத்தாய் எண்டு கேட்டு என்ர மனமும் கையும் கூசுது. அதெல்லாம் நீங்க மன்னிப்புக் கேட்டதும் ஆறுற காயம் இல்ல.” என்றதும் வாயடைத்துப்போய்ப் பார்த்தான் அவன்.
“அதுவரைக்கும் எங்கட வீட்ட போய் நிக்க நான் ஆசைப்பட்டதே இல்ல. ஆனா அண்டைக்கு இங்க இருக்கவோ, உங்க ஆர் முகத்தையும் பாக்கவோ விருப்பம் இருக்கேல்ல. இங்க இருந்து ஓடோணும் மாதிரித்தான் இருந்தது. ஆனாலும், அங்க போய் ரெண்டு நாள் கூட என்னால நிம்மதியா இருக்க முடியேல்ல. இங்க வரோணும் மாதிரி இருந்தது. அந்த நேரம்தான்…” என்றவள் அதற்குமேல் பேச முடியாமல் எழுந்து போக முயல, வேகமாய் வந்து அவளைத் தடுத்தான் அவன்.
“அது உன்ர அப்பா தென்னந்தோப்பைத் தாறன், மகளோட சந்தோசமா இருக்கட்டுமாம் எண்டு சொன்ன கோவத்துல…” என்றவனை நிமிர்ந்து நேராகப் பார்த்து, “அந்தக் கோவத்துலதான் உங்கட பிள்ளையை வயித்தில சுமந்துகொண்டு இருந்தவளிட்ட காசுக்குப் புருசனா வாழுறதுக்கு வேற எவனையாவது பாக்கச் சொல்லு எண்டு சொன்னீங்க போல.” என்று கேட்டுவிட்டு அவனைத் தாண்டிக்கொண்டு போனாள் அவள்.
அந்த வார்த்தைகளை அன்றைக்கு அவன்தான் சொன்னான். ஆனால் இன்றைக்கு அவள் வாயிலிருந்து கேட்கையில் நாரசாரமாக ஒலித்தது.
பழைய நினைவுகள் கிளறுப்பட்டதாலோ என்னவோ திரும்பவும் தனக்குள் ஒடுங்கிக்கொண்டாள் கானவி.
அதைக் கவனித்த புவனாம்பிகைக்குத் திரும்பவும் என்ன என்று கவலையாயிற்று. கேட்டால் இருவரும் சொல்லப் போகிறவர்களும் இல்லை என்பதில் இப்போதெல்லாம் மகன் வீட்டுக்கு வந்ததும் தோட்டத்துக்கு நழுவுவதை வழக்கமாக்கிக் கொண்டார். என்ன என்றாலும் ஒருவர் மற்றவரோடு கதைத்தால் மட்டுமே நடக்கும் என்கிற சூழ்நிலையை அவர்களுக்கு மத்தியில் உருவாக்கினார்.
அன்றும் அவன் குளித்து, உடை மாற்றித் தேநீருடன் விறாந்தையில் அமர்ந்துவிட, “அப்பாவைப் பாத்துக்கொண்டு வாறனப்பு.” என்றுவிட்டுத் தோட்டத்துக்குப் புறப்பட்டார்.
அவனுக்கும் அவளிடம் பேச வேண்டி இருந்ததில், “கானவி!” என்று குரல் கொடுத்தான்.
அறைக்குள் இருந்த கானவிக்கு அசைவுகள் அத்தனையும் ஒருகணம் நின்று போயிற்று. எப்படி உணர்வது என்று தெரியாத திகைப்பு. கடைசியாக அவள் பெயரைச் சொல்லி எப்போது கூப்பிட்டான் என்று அவளுக்கு நினைவே இல்லை. இன்றைக்கு என்ன புதிதாக? தேவைக்குக் கதைப்பார்கள்தான். ஆனால் இப்படிப் பெயர் சொல்லி இயல்பாய் அழைப்பது?
அவள் சத்தமில்லாமல் இருக்கவும், “கானவி, உன்னைக் கூப்பிட்டது கேக்கேல்லையா?” என்று மீண்டும் குரல் கொடுத்தான்.
ஏன் வந்து சொல்ல மாட்டானாமா? மனம் புறுபுறுத்தாலும் எழுந்து வந்து அவன் கண்ணில் படுவது போன்று நின்றாள்.
திரும்பி அவளைப் பார்த்தான். அவள் அவன் பார்வையை எதிர்கொள்வதைத் தவிர்த்தபடி நின்றிருந்தாள். சில கணங்களுக்கு அவள் முகத்திலேயே பார்வையை நிலைக்க விட்டவன், “இஞ்ச வந்து இரு. உன்னோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்றான்.
“இல்ல இப்பிடியே சொல்லுங்கோ. தம்பி அறைக்க இருக்கிறான்.”
“நிலத்திலதானே இருக்கிறான். எங்களைத் தேடினா தவண்டு(தவழ்ந்து) வருவான். நீ வந்து இரு.”
என்னவோ அவர்களுக்குள் ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல் வெகு இயல்பாக முகம் பார்த்துக் கதைக்கிறானே என்று மனம் பொருமினாலும் வந்து அவன் எதிரில் அமர்ந்தாள்.
இப்போதும் சில கணங்களுக்கு அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டுவிட்டு, “இனியும் நாங்க இங்கயே இருக்கிறது சரியா வராது கானவி. எங்களுக்குத் தம்பி வந்திட்டான். சிவாக்கு மனுசி எண்டு ஒருத்தி வந்திட்டா. அதால எங்கட காணிக்கை ஒரு வீடு கட்டுவம் எண்டு பாக்கிறன்.” என்றுவிட்டு அவள் ஏதும் சொல்வாளா என்று பார்த்தான்.
அப்போதும் அது உன் பிரச்சனை, அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது போன்று அமர்ந்திருந்தாள் அவள்.
ஒரு பெரிய மூச்சுடன், “உனக்கு ஏதாவது பிளான் இருந்தா சொல்லு, அப்பிடியே கட்டலாம்.” என்றதும், “இல்ல. அப்பிடி ஒண்டும் இல்ல.” என்றாள் உடனேயே.
அவள் பதில் சொன்ன வேகம் கண்டு அவனுக்குள் மெல்லிய கோபம் மூண்டுவிடப் பார்த்தாலும் அடக்கி, “இவ்வளவு நாளும் இல்ல, சரி. இனி யோசி. எப்பிடிக் கட்டினா எங்களுக்கு வசதியா இருக்கும் எண்டு பாத்துச் சொல்லு.” என்றான் பொறுமையாகவே.
“இல்ல… அது நீங்களே உங்களுக்குப் பிடிச்ச மாதிரிக் கட்டுங்க.” என்றவளிடம் இப்போது அவன் ஒன்றும் சொல்லவில்லை. விழியசையாது அவளையே பார்த்தான்.
அவனது விடாத அந்தப் பார்வை அவன் முன்னே இயல்பாக இருக்க விடாமல் செய்ய, “அவ்வளவுதான் எண்டால் எனக்கு வேல இருக்கு.” என்றபடி எழுந்தாள்.
“நான் இன்னும் கதைச்சு முடிக்கேல்ல” என்றான் சற்றே வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து. அவள் மீண்டும் அமர்ந்தாள். “மூண்டு அறை, ஒரு விறாந்தை, பாத்ரூம், குசினி எண்டுதான் முதல் நினைச்சன். ஆனா இப்ப உன்ர மேக்கப்புக்கு ஒரு நீட்டு ஹோல் மாதிரி வீட்டோட சேர்த்துக் கட்டுவமா எண்டு யோசிக்கிறன்.” என்றதும், “இல்ல, எனக்கு வேண்டாம். எனக்காக நீங்க உங்கட காச வீணாச் சிலவளிக்க வேண்டாம்.” என்றாள் வேகமாக.
இருந்த பொறுமை எல்லாம் பறக்க, “உனக்குச் சிலவழிக்காம வேற ஆ…” என்று ஆரம்பித்தவன் அதற்குள் மகன் அழும் சத்தம் கேட்டுப் பேச்சை நிறுத்தி, “தம்பியப் போய்க் கவனி!” என்று முடித்தான்.
அவள் எழுந்து சென்றுவிட ஒரு பெரிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறியது. எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரியாது நின்றான். அவளைச் சென்று அழைத்து வருகையில் அவனுக்குத்தான் மூக்கு முட்டக் கோபம் இருந்தது. வந்த பிறகும் அவள் முகமே பாராமல் விலகித்தான் நின்றான்.

