இடைவெளி வலிக்குதே 8 – 2

நம்ப முடியாமல் கண்களை அகல விரித்தாள் கானவி.

“வாத்திக்கு இதெல்லாம் பிடிக்காதே. எப்பிடி விட்டார்?”

மனோகரனின் முகத்தில் சிரிப்பு. “காதலிக்க முதல் தெரிய வந்திருந்தா விட்டிருக்க மாட்டார்தான். காதலிச்ச பிறகு தெரிய வந்தா?” என்றான் அவளைப் பார்த்து.

“உண்மையாவா?” என்று அப்போதும் வாயைப் பிளந்தாள்.

அதற்குள் இருவரும் வீட்டுக்குள் வந்திருந்தனர். புவனாம்பிகை வரவேற்று உபசரிக்க, தானும் சேர்ந்துகொண்டாள். இருவருக்கும் பலகாரம் கொண்டுவந்து கொடுத்தாள். நந்தினியோடும் நல்லமாதிரிப் பேசினாள். இளகி, மலர்ந்து, சிரிப்புடன் இருந்த சிவரூபன் புதிதாய்த் தெரிந்தான். இடைவெளி விட்டு என்றாலும் ஒரே சோபாவில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

அவள் பார்வை அவர்களிடமேதான் ஓடிற்று. அவளும் செந்தாளனும் கணவன் மனைவி. ஆனாலும் கூட அவள் கணவன் இப்படிச் செய்யவே மாட்டான். இவளாகப் போய் அவனருகில் அமர்ந்தாலும் மற்றவர் அறியாமல் எழுந்துவிடுவான். அப்படியானவனின் தம்பி சோபாவில் காதலியோடு ஒன்றாக அமர்ந்திருக்கிறான்.

இதற்குள் செந்தாளனும் வேலை முடிந்து வந்தான். அவன் பைக்கின் சத்தம் கேட்டதுமே தண்ணீர் அருந்தச் செல்வதுபோல் எழுந்து உள்ளே போனான் சிவரூபன்.

“வாங்கம்மா!” என்று அந்தப் பெண் நந்தினியைச் செந்தாளன் வரவேற்றுப் பேசிக்கொண்டிருக்க, உள்ளிருந்து வந்த சிவரூபன் இப்போது ஒற்றைச் சோபாவில் அமர்ந்துகொண்டான். பார்த்த கானவியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கணவனைப் பார்த்துக் கண்ணால் நகைத்தாள்.

காரணம் புரியாதபோதும் அவன் உதட்டிலும் மென்முறுவல் அரும்பப் பார்த்தது. மற்றவர் அறியாமல் அவளைக் கண்ணால் அதட்டிவிட்டு நந்தினியோடு உரையாடினான்.

“இந்த விசயம் தெரிஞ்சதும் உங்கட அண்ணா என்ன சொன்னவர்? பேசேல்லையா?” கணவனையும் கணவனின் தம்பியையும் சீண்ட எண்ணி விளையாட்டாகக் கேட்டாள் கானவி.

சிவரூபனால் அதை விளையாட்டாக எடுக்க முடியவில்லை. திட்டும் அளவுக்கு அவன் என்ன தவறு செய்தானாம்? என்னவோ தன்னை நந்தினியின் முன் இறக்கிக் காட்டுவதற்காகவே அவள் அப்படிக் கேட்டது போன்று தோன்றிவிட, “எங்கள் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தாலும் நாங்க எங்கட கோல்ல(Goal) சரியாத்தான் அண்ணி இருக்கிறம். பொறுப்பில்லாம ஊர் சுத்த இல்லைதானே. அவாவும் படிச்சு, கொழும்பில எலக்சன் டிப்பார்ட்மெண்ட்ல வேல செய்றா. அதால அண்ணாவும் ஒண்டும் சொல்லேல்ல.” என்றான் இயல்பாகச் சொல்வது போன்ற குரலில்.

ஒருகணம் அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று. இருந்த சந்தோச மனநிலையில் உண்டான விளையாட்டுப் பேச்சு அது. அதற்குப்போய்… முகத்திலிருந்த சிரிப்பு மறையாமல் சிவரூபனை ஒருகணம் பார்த்தவள் அதன்பிறகு வாயே திறக்கவில்லை.

“நீங்க என்ன செய்றீங்க?” இவர்கள் இருவருக்குள்ளும் நடந்த பனிப்போரை அறியாத நந்தினி, இயல்பாய்க் கானவியை விசாரித்தாள்.

அந்த நிமிடத்தில் சும்மா இருக்கிறோமே என்று ஒருகணம் குன்றினாள் கானவி. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “வீட்டுலதான் இருக்கிறன்.” என்றாள் சிரித்த முகமாக.

“ஆனா அண்ணி மேக்கப் நல்லா போடுவா. அது எண்டால் உலகத்தையே மறந்திடுவா.” என்றான் சிவரூபன் அவர்களின் பேச்சினுள் புகுந்து.

“உண்மையாவா? நல்லா போடுவீங்களா?” என்று முகம் மலர விசாரித்தாள் நந்தினி.

“அருமையா போடுவா. எனக்கெல்லாம் புருவம் ஷேப் பண்ணி விடுறது, பேஷியல் செய்து விடுறது, ஒபீஸ்ல ஏதும் விசேசம் எண்டால் அதுக்கேற்ற மாதிரி அளவான மேக்கப் போட்டு விடுறது எண்டு உண்மையாவே நல்லாருக்கும்.” என்று சொன்னாள் சிந்துஜா.

மெல்லிய கூச்சச் சிரிப்புடன், “மச்சாள் சொல்லுற அளவுக்கு நல்லாப் போடுவனா தெரியாது. ஆனா, எனக்குப் பிடிச்ச மாதிரிப் போடுவன். அங்க எங்கட ஊர்லயும் தெரிஞ்ச ஆக்களின்ர எல்லா விசேசங்களுக்கும் நானேதான் மேக்கப் போட்டு விடுறனான். சில கோர்ஸுகளுக்கும் போயிருக்கிறன்.” என்றாள் கானவி.

“ஓ! பழகி இருக்கிறது நல்லம்தானே. ஃபோட்டோ இருந்தா காட்டுங்களன்.” ஆர்வத்துடன் வினவினாள் நந்தினி.

கானாவியும் தன் ஃபோனை எடுத்து வந்து, நந்தினியின் அருகில் அமர்ந்து அவளுக்குக் காட்டினாள். பார்த்தவள் உண்மையிலேயே வியந்து போனாள்.

“என்ன நீங்க சும்மா போடுவன் எண்டு சொன்னீங்க. இவ்வளவு வடிவாப் போட்டிருக்கிறீங்க. பேசாம எனக்கும் நீங்களே போட்டுவிடலாம்.” என்றதும், “பிறகு ஏற்கனவே சொன்ன மேக்கப் அக்காக்கு என்ன சொல்லுறது?” என்று வேகமாக இடையிட்டான் சிவரூபன்.

இது எப்போது சொன்னோம் என்கிற கேள்வியோடு நந்தினி திரும்பிச் சிவரூபனைப் பார்க்க, அவன் அவசரமாகக் கண்ணைக் காட்டினான். அதன்பிறகு நந்தினி அமைதியாகிவிட்டாள். அவன் கண் காட்டியதைக் கவனித்துவிட்ட கானவியும், “மச்சான் சொல்லுறதுதான் சரி. இது உங்கட கலியாணம் எல்லா. அதுக்கெண்டே ப்ரொபெஷனலா போடுறவையப் பிடிக்கிறதுதான் நல்லம். நீங்க இங்க வந்தபிறகு வீட்டு விசேசங்களுக்கு நான் போட்டு விடுறன்.” என்று சமாளித்தாள்.

ஆனால், உள்ளுக்குள் காயப்பட்டுப்போனாள். இன்னும் சில புகைப்படங்களைக் காட்டிவிட்டு, கைப்பேசியை வைக்கப் போவது போன்று அறைக்குள் புகுந்து, தன்னைச் சமாளித்துக்கொண்டாள்.

அவன் புகைத்ததைக் கணவனிடம் சொன்னதிலிருந்தே அவனிடம் ஒருவிதக் கோபம் இருப்பதைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், அது இப்படி எல்லோர் முன்னும் குத்திக் காட்டும் அளவுக்கு வெறுப்பாய் வளர்ந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

மற்றவர்கள் சிவரூபனின் பேச்சில் பெரிய வித்தியாசத்தைக் கவனிக்காத போதிலும் செந்தாளன் கவனித்திருந்தான். மனைவியை மறைமுகமாக மட்டம் தட்டியவனின் செய்கையில் கோபமும் உண்டாகியிருந்தது.

நந்தினியை அவன் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தபிறகு அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசினான்.

“அவள்தான் எனக்குச் சொன்னவள் எண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கு எண்டு நினைக்கிறன். அவள் மூட்டிவிடுற எண்ணத்தில என்னட்டச் சொல்லேல்ல. கவலையாத்தான் சொன்னவள். அதைவிட உன்னட்டக் கேக்க வேணாம் எண்டும் சொன்னவள். நான்தான் இது கேக்காம இருக்கிற விசயம் இல்ல எண்டு கேட்டனான். அப்பவும் அப்பிடி ஒரு பழக்கம் இல்லை அண்ணா எண்டு நீ சொல்லியிருந்தா உன்னைத்தான் நம்பி இருப்பன். அமைதியா இருந்து உண்மை எது எண்டு சொன்னது நீ. அதை மனதில வச்சு அவளை நந்தினிக்கு முன்னால இறக்கிக் கதைக்காத. நாளைக்கு நந்தினியும் இந்த வீட்டுக்கு வந்த பிறகு, நாங்க எல்லாரும் இதேமாதிரி சண்டை சச்சரவு இல்லாம ஒற்றுமையா இருக்கோணும். அதுக்கு அவே ரெண்டு பேருக்கிடையிலையும் நல்ல உறவு வேணும். அத விளங்கி நட. அதவிட அவள் என்ர மனுசி. உனக்கு அண்ணி. அத மறந்திடாத. குத்திக்காட்டுறது, மறைமுகமாத் தாக்கிறது எல்லாம் இனி நடக்கக் கூடாது!” என்று கண்டித்தான்.

ஆனாலும் அவனுக்கு மனம் ஆறவில்லை. அவள் படிக்காமல் இருப்பது அவனுக்கும் குறை என்பதில், “பிரைவேட்டா ஏதும் படிக்கிறியா?” என்று கானவியிடம் திரும்பவும் கேட்டுப் பார்த்தான்.

“எனக்கும் படிப்புக்கும் எட்டாப் பொருத்தம் எண்டு உங்களுக்கு எத்தின தரம் சொல்லுறது?” என்று பொங்கி எழுந்தாள் அவள்.

“இனியும் உன்ன அப்பிடியே விடேலாது கானவி. நீ ஏதாவது படிச்சே ஆகோணும். சும்மா இப்பிடியே இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்கப் போறாய்?”

“அதெல்லாம் படிக்கேலாது! உங்களை எனக்குப் பாத்ததுமே அவ்வளவு பிடிச்சிருந்தது. ஆனாலும் ஒரு செக்கன் நான் யோசிச்சதுக்குக் காரணமே வாத்தியா இருக்கிறீங்களே எண்டுதான். நான் யோசிச்சது சரி எண்டுற மாதிரி, படிப்பைப் பற்றித் திரும்ப திரும்பக் கதைச்சீங்க எண்டா எனக்குக் கெட்ட கோபம் வரும் சொல்லிப்போட்டன்!” என்று எச்சரித்தாள் அவள்.

அவள் படிப்பைச் சொன்னதை விடவும் அவனைப் பற்றிச் சொன்னது அவனுக்குள் குளுகுளு என்றிருந்தது. அதைக் காட்டாமல் அவளை இழுத்துத் தன்னிடம் கொண்டுவந்து, “அதென்ன கோவத்துல கெட்ட கோவம், நல்ல கோவம்?” என்று வினவினான்.

“அது அப்பிடித்தான். நல்ல கோவம் எண்டா ஒண்டும் செய்யாது. கெட்ட கோவம் இப்பிடிக் கடிச்சு வைக்கும்!” என்றவள் அவன் கையைப் பற்றிப் பற்கள் பதியக் கடித்தும் விட, ”அம்மா!” என்று அலறினான். பற்தடம் பிறை வடிவில் மேலும் கீழும் அப்படியே பதிந்திருந்தது. கையைத் தேய்த்துவிட்டபடி அவளை முறைத்தான்.

“என்ன முறைப்பு? படிக்கச் சொல்லிச் சொன்னா இதவிடவும் மோசமாக் கடிப்பன்.”

“எவ்வளவு தைரியம் உனக்கு? கடிச்சதும் இல்லாம வெருட்டிறியா?” அவன் என்ன செய்யப் போகிறான் என்று கணித்து விலகி ஓடுவதற்குள் எட்டிப் பிடித்து, இழுத்துத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் அவள் கன்னத்தைத் தானும் கடித்தான்.

மாறி மாறிக் கடிக்கிறோம் என்று ஆரம்பித்த விளையாட்டு கடைசியில் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டில் சென்று முடிந்தது.

களைத்துப்போய் அவன் கைகளுக்குள்ளேயே சுருண்டு கிடந்தவளைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்தது. எதில் ஆரம்பித்து எங்கே கொண்டுவந்து முடித்திருக்கிறார்கள்? கலைந்திருந்த கேசம் ஒதுக்கி, அவள் நெற்றியில் முத்தமிட்டவனின் நெஞ்சில் அவள் மீதான நேசம் அளவற்றுச் சுரந்தது.

சிவரூபன் குத்திக்காட்டியது வலித்தும் அதைத் தன்னிடம் மருந்துக்கும் காட்டிவிடாமல் இருக்கும் அவளை இன்னுமின்னும் பிடித்தது. வாழ்க்கை மிக அழகாய் இருப்பதாய்த் தோன்றிற்று.

“உனக்கு ஏதும் பிடிச்சிருந்தா அதையாவது செய்.” என்றான் இளகிய குரலில்.

“எனக்கு மேக்கப் பிடிக்கும்.”

அவளை நன்றாக முறைத்தான் அவன்.

“என்ன முறைக்கிறீங்க? என்ன பிடிக்கும் எண்டு கேட்டது நீங்க. சொன்னா முறைப்பீங்களா? அது இன்னும் சில கோர்சஸ் செய்தா நான் தொழிலாவே செய்யலாம்.”

“ஏதாவது பிரயோசனமானதாச் சொல்லோணும். உனக்கு விருப்பமானதைச் சொல்லுறேல்ல!” என்று அதட்டினான் அவன்.

“ஏன் பிரயோசனம் இல்ல? இப்ப அதெல்லாம் எவ்வளவு நல்ல உழைப்புத் தெரியுமா? பியூட்டி பார்லர் கடையே போடலாம்.”

“நீ ஒண்டுமே செய்ய வேணாம். வீட்டிலேயே இரு!” என்று முடித்துக்கொண்டான் அவன்.

சும்மாவே வீடு முழுக்க அவளின் மேக்கப் பொருள்கள்தான். சிந்துஜா, புவனாம்பிகை, அயலட்டையில் இருக்கும் பெண்கள் என்று யார் முகத்தையும் விட்டு வைப்பதில்லை. இதில் அதைப் பழக என்று வெளிக்கிட்டால்?

error: Alert: Content selection is disabled!!