உன்னில் என்னை தொலைத்தேனடி 8 – 2

அதிகப்படியான அவளின் உற்சாகம், விடை பெறுகையில் கண்களால் உதயனுக்குக் கொடுத்த சமிக்சை எல்லாவற்றையும் கவனித்த சீராளனின் புருவங்கள் சுருங்கின.

 

அவன் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. அடுத்தநாள் அதிகாலையில் ஃபிளைட் என்பதால், அன்று காலையிலேயே அவன் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தனர்.

 

சீராளன் பயணத்துக்குத் தயாரானபோது, பெட்டி அடுக்கவோ தேவையானவற்றை எடுத்துக்கொடுக்கவோ செய்யாமல், கட்டிலில் கிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் ஷர்மினி.

 

இத்தனை நாட்களாய் அணிந்திருந்த முகமூடியை இன்றும் அணிய முடியவில்லை. இன்றோடு அவனது அருகாமை அவளுக்கில்லை. அவன் கரத்தோடு கரம் கோர்க்க முடியாது. சிரிக்கும் கண்களை ரசிக்க முடியாது. அவன் ஊட்டிவிடும் உணவினை வாங்கமுடியாது. என்னவோ இந்த உலகத்துக்கே ராணி போன்று தாங்கிய அந்த நேசத்தை அனுபவிக்க முடியாது.

 

நினைக்க நினைக்க அழுகை பெருகியது.

 

பெட்டியை மூடிவிட்டு நிமிர்ந்து, அழுகையில் குலுங்கும் மனைவியைப் பார்த்தான் சீராளன். அவனுக்கும் மனதில் பாரம்தான். ஆனால், தவிர்க்க முடியாத பிரிவாயிற்றே! வந்து அவளருகில் அமர்ந்தான்.

 

“ஷர்மி!” மெல்ல முதுகை வருடிக் கொடுத்தான்.

 

கணவனின் தொடுகை அவள் அழுகையை அதிகரித்தது.

 

“என்னம்மா இது? ஒரு மூண்டு மாதம் தானே.”

 

“நான் இல்லாம நீ வாழப்போற கடைசி மூண்டு மாதம். பிறகு நீ ஆசைப்பட்டாலும் நான் சாகிற வரைக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் உனக்குக் கிடைக்காது. தரமாட்டன். அதால என்னைச் சந்தோசமா அனுப்பி வைக்கிறத விட்டுட்டு இதென்ன…” என்று அவன் கேலி பேசவும், ‘சாகிற வரைக்கும்’ என்ற சொல் அவளைப் பலமாகத் தாக்கிவிட, விருட்டென்று எழுந்து, சராமாரியாக அடிக்கத் துவங்கினாள்.

 

“எந்த நேரத்தில என்ன கதைக்கிறது எண்டு தெரியாதா உங்களுக்கு? ஃபிளைட்ல போகப்போறீங்க இப்ப போய்…” என்றவளைச் சிரித்துக்கொண்டே அணைத்துக்கொண்டான் அவன்.

 

இந்தப் பாசம்தானே சற்றுநேரத்தில் அவளை விட்டுவிட்டுத் தூரம் போகப்போகிறது. மீண்டும் கண்ணீர் உகுத்தவளின் முதுகை ஆறுதலாய் வருடிக்கொடுத்தான். காதோரமாய் ஆறுதல் வார்த்தைகள் அவன் பேசப் பேச, மெள்ள மெள்ளக் குறைந்தது அவள் அழுகை.

 

நேரமாவது உணர்ந்து அவள் எழுந்துகொள்ள, “என்னடியப்பா இது?” என்றான் அவன் திடீரென்று.

 

அவளின் கண்ணீரிலும் கண் மையிலும் அவன் சட்டை நனைத்திருந்தது.

 

அப்போதுதான் அவளும் அதைக் கவனித்தாள். சிரிப்புவர, அப்படியே அவன் டீ- ஷர்ட்டை இழுத்து மூக்கையும் நன்றாகத் துடைத்துக்கொண்டாள்.

 

“சீச்சீ! குப்பச்சி!” என்றபடி சட்டையை அவன் கழட்டிய வேகம் கண்டு கலவென்று சிரித்தாள் ஷர்மி.

 

கண்களை நனைத்திருந்த கண்ணீரோடு, பிரிவுத் துயரை மறந்து சிரித்த மனைவியிடம், “இந்தச் சிரிப்போடையே என்னை அனுப்பிவை.” என்றுவிட்டு, வேறு ஒரு டி- ஷேர்ட்டினை அணிந்துகொண்டான் அவன்.

 

பெட்டியை எடுத்துக்கொண்டவனின் முன்னே தயக்கத்தோடு வந்து நின்றாள் ஷர்மினி.

 

“நான் அம்மா வீட்டை போய் இருக்கவா?”

 

“ஏன், இங்க பிடிக்கேல்லையா?”

 

தவிர்க்க முடியாமல் கணவனின் கேள்வியில் தொனித்த கவலையில், “ஐயோ இல்ல.” என்றாள் வேகமாக.

 

“வாற கிழமையே நானும் கொழும்பு போயிடுவன் தானே. அம்மா தனிச்சே போவா. இந்தக் கொஞ்ச நாளாவது அவவுக்கு உதவியா இருக்கிறேனே. அவவுக்கும் சந்தோசமா இருக்கும் எனக்கும் நிம்மதியா இருக்கும்.”

 

அவள் சொல்வதும் சரிதான். நடக்கக்கூட முடியாமல் அவர் படும் கஷ்டங்களைப் பார்த்திருக்கிறான். எனவே சம்மதித்தான்.

 

“ஆனா, இதுதான் உன்ர வீடு. அத மறந்திடாத. என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு, இந்த வீட்டு மருமகளா நீ நடக்கவேணும். அபி உன்ர பிரெண்ட்தான். என்றாலும் அவளுக்கு நீ அண்ணி!” என்றான் அவன்.

 

பொறுப்பாய் இரு என்கிறான் கணவன். சரி என்று கேட்டுக்கொண்டாள்.

 

வீட்டிலிருந்து புறப்படுமுன் தாயிடமும், “அடுத்தக் கிழமை கொழும்புக்கு அவளும் போய்டுவாள் தானேம்மா. அதுவரைக்கும் அவளின்ர அம்மா வீட்டை இருக்கட்டும்.” என்று அவன் சொன்னதும் அவருக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.

 

திருமணமானதில் இருந்து வீட்டில் நிற்கவே இல்லை. மகனையும் விடவில்லை. இப்போதும் தாய் வீட்டுக்குப் போனால் ஊர் என்ன சொல்லும்?

 

“போகட்டும் தம்பி. ஆனா, என்னட்ட அவளே கேட்டிருக்கலாமே? அவள் கேட்டு, நான் மாட்டன் எண்டு சொல்லப்போறேன் எண்டா உன்னட்டச் சொல்லிக் கேக்கிறாள்?” என்று கேட்டார் தேவகி.

 

இப்படி ஒரு கோணத்தில் அவள் சிந்திக்கவே இல்லையே. அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் ஷர்மினி.

 

“அவள் கேக்கேல்லை அம்மா. நானாத்தான் சொல்லுறன். மாமியும் பாவம் தானே. இவள் அங்க இருந்தா அவவுக்கு உதவி எல்லா.” என்று சமாளித்தான் அவன்.

 

மகன் அவளைக் காப்பாற்றுவது போல் சொல்லவும் இன்னும் சினமேறியது அவருக்கு.

 

“சரியப்பு. ஆனா, காலம் முழுக்கப் பொம்பிளைப் பிள்ளை அம்மாவோட இருக்கேலாதே. உள்ளூருக்க கட்டினாலும் மனுசன் இருக்கிற வீட்டுல இருந்தாத்தான் வாழலாம். அப்பப்ப போய்ப்பாக்கிறது வேற கதை. எனக்கு உடம்புக்கு ஏலாமப்போனா அபியைக் கட்டிக்குடுத்த பிறகும் இங்கயே வச்சிருக்கேலுமா சொல்லு?” கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுச் சம்மதித்தார் அவர்.

 

ஒருமாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. அவர் சொன்னது சரிதான். அவளே கேட்டிருக்கலாம் தான். இங்கேயே இருந்துகொண்டு அவ்வப்போது போய்ப் பார்த்துக்கொள்ளலாம்தான். ஆனால், இந்த ஒரு வாரமாகப் பார்க்கிறாள் தானே.

 

மருமகள் என்கிற உறவோடு அவள் வந்திருக்கிறாள் என்கிற முறையில் அவரின் கதை பேச்சுக்கள் இருக்குமே தவிர, புதிதாகக் குடும்பத்துக்குள் இணைந்தவளை அந்தவீட்டுப் பெண்ணாக உணரவைக்கும் அரவணைப்பு இருக்காது.

 

அவளும் இனி அந்த வீட்டில் ஒருத்தி என்பதைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அந்தளவுதான். அதைத் தாண்டிய ஒரு பாசம், அரவணைப்பு, தட்டிக்கொடுத்து அவளை அந்த வீட்டோடு உணர்வு பூர்வமாய் இணைக்கும் பாங்கு அவரிடம் இல்லவே இல்லை. அவள் நெருங்கினாலும் இப்படித்தான் என்று சொல்லத் தெரியாத வகையில் தூர நிறுத்திவிடுவார்.

 

கோபத்தையும் வெறுப்பையும் காட்டவில்லை, அவ்வளவுதான். அது கொடுத்த தயக்கத்தில், ஒருவிதப் பயத்தில் தான் கணவன் மூலம் கேட்பித்தாள். அது, இப்படித் திரும்பும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கணவனைப் பார்த்தாள். அவளின் கரத்தைப் பற்றிய அவனது கரம் ஆறுதலாய் அழுத்திக் கொடுத்தது.

 

 

 

error: Alert: Content selection is disabled!!