உயிரைத் திருடும் அழகியே – 10

அத்தியாயம் 10

 

 

காட்சி பதினேழு

 

அன்று, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

 

ரதனுக்கான முறை வந்தபோது, “லைஃப்ல எதையாவது சாதிக்கணும் என்கிற வெறியே இருக்கு எனக்குள்ள. சின்ன வயசுல நடக்க மாட்டேனாம். ‘என்ன புள்ளடி பெத்து வச்சிருக்க?’ என்று கேட்டுட்டு அப்பா இன்னொருத்தியைக் கூட்டிட்டு போய்ட்டாராம். அப்ப எங்கேயெல்லாமோ அலஞ்சு, புருஷனே இல்ல தாலி மட்டும் எதுக்குன்னு அதை வித்து வைத்தியம் பாத்து, பத்து வயசுல தான் நடந்தேனாம். இன்னைக்கும் அம்மா சொல்லுவாங்க, ‘என் ராசன் நடந்ததைப் பாக்கக் கோடி கண் வேணும்னு.’ என்மேல அம்மாக்கு உசுரு. ஆனாலும் பக்கத்து வீட்டுல விட்டுட்டு கூலி வேலைக்கு போவாங்க. அப்போல்லாம், அம்மாவுக்காக,அன்புக்காக எத்தனையோ நாள் ஏங்கி இருக்கேன். அதச் சொன்னதுக்கு ஒருநாள் இரவு முழுக்க என்னை மடில போட்டுட்டு அம்மா அழுதாங்க. அதப் பாத்ததுல இருந்து என்னோட ஏக்கம் எதையும் அம்மாட்ட மட்டும் சொல்லவே மாட்டேன். சொல்லாம வச்சிருந்த அந்த ஏக்கம் தான் எனக்குள்ள ஒரு வைராக்கியத்தை கொடுத்தது. அந்த வைராக்கியத்தோட வேலைக்குப் போய் அந்தச் சம்பாத்தியத்துல டான்ஸ், சிலம்பம்னு எல்லாம் கத்துக்கிட்டேன். நடக்கமாட்டேன்னு விட்டுட்டு போனீங்களாப்பா, இப்ப பாருங்க உங்க பையனோட கால் ரெண்டும் நிலத்துல நிக்காது. அப்படினு காட்டணும். டான்ஸ்னா எனக்கு உயிர். நடக்கமாட்டேன் என்கிறதுக்காக அம்மாவையும் என்னையும் தனியா விட்டுட்டு போன அப்பாவுக்கு அந்த டான்ஸ் மூலமே வாழ்ந்து காட்டணும். அம்மாவை நல்லா வச்சிருக்கணும். லைஃப்ல முன்னுக்கு வரணும். அதுக்கு இந்த ஷோவை நான் ஹன்ரட் பெர்சன்ட் பயன்படுத்திக்குவேன்.” என்று முடித்தான் அவன்.

 

கேட்ட எல்லோர் விழிகளும் பனித்துப் போயிருந்தது.

 

“கண்டிப்பாடா! நீ ஆசைப்பட்டது எல்லாம் இனி நடக்கும் பாரேன். இது ஒரு மேஜிக் ஹவுஸ்!” என்றார் வைதேகி.

 

“கண்டிப்பாமா!” அவனும் நம்பிக்கையாகச் சொன்னான்.

 

பிருந்தாவின் முறை வந்தபோது, “எனக்கு எல்லாமே என்ர அப்பாதான். அவருக்குப் பிடிக்காத எதையுமே இதுவரை நான் செய்தது இல்ல. இதுதான் முதல் முறை. நான் இங்க வாறது அவருக்கு விருப்பமே இல்ல. ஆனாலும், என்ர ஆசையைத் தடுக்கக் கூடாது எண்டுறதுக்காக, எனக்காக… என்ர விருப்பத்துக்காக, நான் ஆசைப்படுறேன் எண்டுறதுக்காக மட்டும் போய்ட்டுவா எண்டு அனுப்பி வச்சவர். லவ் யு பா! என்னை நம்பி அனுப்பினதுக்காக, நான் உங்கட மகள் எண்டு நீங்க பெருமையாச் சொல்லுற அளவுக்கு கட்டாயம் நான் நடந்து காட்டுவன் அப்பா. லவ் யூ சோ சோ சோ மச் பா!” என்றவளுக்கு, தந்தையின் நினைவில் கண்கள் கலங்கிப் போயிற்று.

 

அதை உணர்ந்து பேச்சை மாற்றினார் வைதேகி.

 

“டார்லிங்! உன்னோட லைஃப்ல லவ் இல்லாம இருக்காதே. அதைப்பத்திக் கொஞ்சம் எங்களுக்குச் சொல்லுடா!” என்றார்.

 

அவர் எண்ணியது போலவே கண்ணீருடன் சிரித்தாள் பிருந்தா.

 

“இல்ல. என் லைஃப்ல இதுவரை லவ்வே இல்ல. நிறைய பிரப்போஸ் வந்திருக்கு. ஆனா எதையுமே அக்செப்ட் பண்ணேல்ல. இனியும் பண்ணமாட்டேன்.” என்று பெருமையாகப் புன்னகைத்தாள் அவள்.

 

“எங்கட ஊர் ஒரு பின்தங்கின கிராமம். அங்க பதினெட்டு வயதான உடனே கல்யாணம், தேயிலை தோட்டத்திலேயோ தொழிற்சாலையிலேயோ வேலை எண்டு இப்படித்தான் லைஃப் போகும். ஆனா, என்ர அப்பா எனக்கு விருப்பமானதை செய்யிற சுதந்திரம் தந்தவர். வேலைக்குப் போறதுக்கு ஓகே சொன்னவர். உனக்கு எப்ப விருப்பமோ அப்பத்தான் கல்யாணம். அதுவரை உனக்குப் பிடிச்சதை செய். சொந்தக்கால்ல நிக்கப் பழகு எண்டு சொல்லி இருக்கிறார். நாடு தாண்டி தனியா என்னை இங்க வரைக்கும் அனுப்பி இருக்கிறது அதுக்குச் சாட்சி. எங்கட ஊர்ல இதெல்லாம் நினைச்சே பாக்க முடியாத உயரம். ஆனாலும் என்ர அப்பா என்னை நம்பி அனுப்பி இருக்கிறார். அந்த அப்பாவுக்காக நான் யாரையுமே காதலிக்க மாட்டன். அவருக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய மாட்டன். அவர் காட்டுற ஒருத்தனை கட்டி, அவர் விரும்புற மாதிரி அமைதியான வாழ்க்கைய அவருக்குப் பக்கத்திலேயே இருந்து அவரையும் பாத்துக்கொண்டு வாழவேணும் எண்டுறதுதான் என்ர லட்சியமே. சோ… என்ர வாழ்க்கைல காதல் இல்லை.” என்று, தன் கனவுகளைச் சொன்னாள் அவள்.

 

உணர்ச்சிவசப்பட்டு எழுந்துவந்து அவளை அணைத்துக்கொண்டார் ராகவன்.

 

“உன்னோட அப்பா ரொம்பவே கொடுத்து வச்சவர்மா. அருமையான புள்ளைய பெத்து வளத்திருக்கார். அவர் இல்லையேன்னு கவலைப்படாத. அவருக்குப் பதிலா இந்த அப்பா இருக்கேன்! சரியா?” என்று அவர் சொன்னபோது, “தேங்க்ஸ் பா!” என்றபடி அவரை அணைத்துக்கொண்டாள் பிருந்தா.

 

அஜய் எழுந்து வந்தான்.

 

“என்னை ஒரு மாடலா மட்டுமே உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா நான் அநாதை என்கிறது பலருக்குத் தெரியாது. என்னை சுமந்தவங்களுக்கு நான் ரொம்பக் கனமா இருந்திருக்கேன் போல. தெருவோரமா இறக்கி வச்சிட்டாங்களாம். நாய் கவ்விட்டுப் போனப்போ யாரோ கண்டு ஹோம்ல சேர்த்து இருக்காங்க.” என்றபோது அங்கிருந்தவர்கள் எல்லோரினதும் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்து ஓடியது.

 

அவன் மட்டும் சிரித்தான். “ப்ளீஸ் யாரும் அழாதீங்க. உங்களை அழ வைக்கிறதுக்காக இத சொல்லல. பிறப்பு நம்ம கைல இல்ல. ஆனா, நம்ம வாழ்க்கையை நாம எப்படி வாழுறோம் என்கிறது நம்ம கைல மட்டும் தான் இருக்கு. என் சோகத்தை துயரத்தை யாருக்குமே காட்ட பிடிக்காது எனக்கு. அதனாலேயே கிண்டல் கேலி என்று என்னை நானே மாத்திக்கிட்டேன். நம்ம சோகம் மத்தவங்களை அழ வைக்கும். ஆனா சிரிப்பு சிரிக்க வைக்கும். சோ என்னால முடிஞ்சா வரைக்கும் எல்லாரையும் சிரிக்க வைக்கணும். ஒவ்வொரு நிமிசத்தையும் ஜாலியா களிக்கணும். சோ… நான் வாழ்க்கையை வாழுறேன். நீங்களும் வாழுங்க!” என்றுவிட்டு வந்தவனை எல்லோருமே நெகிழ்வோடு அனைத்துக்கொண்டனர்.

 

அதுவரை வெறுப்போடு மட்டுமே பார்த்தவனைக் கண்ணீரோடு நோக்கினாள் பிருந்தா. அம்மா அப்பாவை விட்டுவிட்டு வந்து இரண்டு வாரங்கள் இருக்குமா. அதற்குள்ளேயே மடி சாயத் துணை தேடி மனம் அலைபாயத் தொடங்கிவிட்டது. அவனோ, பிறந்ததில் இருந்து அவர்களை அறியவே இல்லையாம்.

 

கன்னங்களை கண்ணீர் நனைக்க, “சாரிடா!” என்றாள் அவனிடம்.

 

“ஹேய் எதுக்கு சாரி. நீ எப்பவும் போல இருடா! அதுதான் நல்லாருக்கு. நாம ரெண்டுபேரும் எப்பவுமே லவ்வர்ஸ் தான்.” என்று கண்ணடித்தான் அவன்.

 

சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.

 

“நீ திருந்தவே மாட்டியாடா!” என்றுவிட்டு நகர்ந்தாள் பிருந்தா.

 

இருந்தாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. பாவப்பட்ட ஒருவனைத் தண்டித்துவிட்டோமோ என்று. தடுமாறும் ஒவ்வொரு பொழுதுகளிலும் அவள் சரணடைவது அந்தக் குரலிடம் தானே.

 

“மனதுக்கு கஷ்டமா இருக்கு. அவனைப் பற்றித் தெரியாம நிறையத் திட்டிப்போட்டன். கடவுளே… இந்தக் கொஞ்ச நாள் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கிறதே பெரிய கொடுமையா இருக்கு. அவன் எதுவுமே இல்லாம அனாதையா நிக்கிறான். இனி என்ன செய்ய?”

 

அவள் புலம்பியதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டது அக்குரல்.

 

“ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான தனியன். அவன் இந்த உலகுக்கு வர மட்டும்தான் அடுத்தவர் உதவி தேவை. பிறகு அவனாத்தான் வாழனும். அதுதான் இயற்கை. ஆனா, பலகீனம் நிறைந்த மனிதன்தான் உறவுகளையும் அவர்கள் மீதான பாசங்களையும் வளர்த்துக்கொள்ளுறான். ஒரு கட்டத்தில் அவங்க இல்லாம வாழமுடியாது என்றும் நினைக்கிறான். ஆனா, தனியாவே வளர்ந்த ஒருத்தனுக்கு அது பெருசாத் தெரியாது. அதே நேரம், நீங்க தெரிஞ்சு எதுவும் செய்யலையே. அறிமுகம் இல்லாத ரெண்டு மனுசர் சந்திக்கிறபோது, சில முரண்பாடுகள் வரும்தான். ஆனா, ஒருவரை மற்றவர் புரிந்துகொண்ட பிறகு உருவாகிற நட்புக்கு பலம் அதிகம். இப்பப் புரிந்துகொண்டு இருப்பீங்க. அதனால சந்தோசம் தான் படணும். அதனால கவலைப்படாம போங்க.” என்று தைரியம் ஊட்டியது அந்தக்குரல்.

 

நாட்கள் நகர்ந்தன. ஒவ்வொரு வாரமும், மக்கள் செலுத்தும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குப் பெற்றவர்கள் அந்தப் போட்டியிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தனர்.

 

காட்சி பதினெட்டு

 

அன்று, அவர்களுக்கான அடுத்த டாஸ்க் அறிவிக்கப்பட்டது!

 

முழங்கால் அளவான உயரமான நீண்ட மேடை போன்று ஒன்று வீட்டின் முன் துண்டில் அமைக்கப்பட்டிருந்தது. அதிலே ஒருவருக்கு ஒரு குற்றி என்ற அடிப்படையில் அசைக்கமுடியாத குற்றிகள் பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் குற்றிக்குப் பின்னால் இரண்டு கால்கள் மட்டுமே வைக்கக்கூடிய சதுரமான, அசையக்கூடிய பலகை ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. குற்றியிலிருந்து அளவான ஒரு கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது.

 

கயிற்றைப் பற்றிக்கொண்டு பின்பக்கமாகச் சரிந்து சதுரப் பலகையில் ஒவ்வொருவரும் நிற்கவேண்டும். கீழே விழாமல் இருக்கக் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்திருக்க வேண்டும். கயிறும் கையும் தொய்யக்கூடாது. ஒரு கட்டத்தில் கைகள் நடுங்கத் தொடங்கும்; தசைகள் பிடிக்கத் தொடங்கும். சமநிலையற்ற சரிந்த நிலை நீண்ட நேரத்துக்கு நிற்க விடாது. அதையெல்லாம் தாண்டி அதிகநேரம் யார் நிற்கிறாரோ அவரே வெற்றியாளர்.

 

ஒவ்வொருவராக கை நடுங்கி, தடுமாறிக் கயிறை விட்டு விழத்தொடங்கினர். பிருந்தா அவளே எதிர்பாராத வகையில் நீண்டநேரம் தாக்குப்பிடித்து நின்றாள். அவளும் ரதனும் மட்டுமே என்ற நிலையில், “கமான் பிருந்தா! விட்டுடாத!” என்றும், “சூப்பர் மச்சி! பிடிச்சுக்கோ, உன்னால முடியும்!” என்று ரதனுக்கும் உற்சாகம் கொடுத்தபடி நின்றனர் மற்றவர்கள்.

 

ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் பிருந்தா விட்டுவிட ரதன் வெற்றிபெற்றான். இருந்தபோதிலும், அவளின் மனவலிமையைதான் வீட்டினர் அதிகமாகப் பாராட்டினர்.

 

“சின்னப்புள்ள மாதிரி ஆடிட்டும் பாடிட்டும் இருக்கான்னு பாத்தா, செமயா டாஸ்க் பண்ணுறா!” என்று கட்டிக்கொண்டார் வைதேகி.

 

“தேங்க்ஸ் மேம்!” அவளுக்கே அவளை எண்ணி ஆச்சரியம் தான். அவள் எத்தனை வலிமையானவள் என்று ஒவ்வொரு டாஸ்க்கும் அவளுக்கு அவளையே இனம் காட்டிக்கொண்டிருந்தது.

 

 

காட்சி பத்தொன்பது

 

முழங்காலுக்குச் சற்று மேலே நிற்கும் பிங்க் வண்ணத்திலான கவுன் ஒன்று அணிந்திருந்தாள் பிருந்தா. உச்சியில் போனிடெயிலும் போட்டு, ஹீல் வைத்த ஷூஸ் அணிந்துகொண்டிருந்தாள். பார்பி டால் தோற்றுவிடும், அத்தனை அழகு.

 

“ஹேய் பியூட்டி! அஜய் இன்னைக்கு மயக்கம் போடப் போறான் பாரு!” இவளைப் பார்த்ததும் சொன்னாள் சாந்தினி.

 

“போங்கக்கா. அவனுக்கும் வேற வேலை இல்ல. உங்களுக்கும் இல்ல.” என்றுவிட்டு அவள் திரும்ப,

 

‘பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ

சூரியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்

மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்

மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்

அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்

 

என்று பாடத்தொடங்கி இருந்தான் அஜய்.

 

“அடங்கவே மாட்டியாடா நீ?” அவனை முறைக்க முடியாமல் பொங்கிச் சிரித்தாள்.

 

“எதுக்கு அடங்கணும். அழகைக் கண்டா ரசிக்கணும். சீரியஸா மச்சி, இந்த ட்ரெஸ்ல தேவதை மாதிரி இருக்க. அப்படியே பாத்திட்டு இருக்கணும் போல…” என்றவனை முறைத்துவிட்டுப் போனாலும் அன்று முழுவதும் இரகசியச் சிரிப்பில் மலர்ந்திருந்தது அவள் இதழ்கள்.

 

அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கொண்டாள். ‘அவ்வளவு அழகாவா இருக்கிறோம்’ அவன் கண்கள் அப்படித்தான் சொன்னன. தேவதையாகத்தான் கொண்டாடின.

 

‘உண்மையாவா?’ மனதில் சந்தோசம் பொங்கித் தளும்பியது. அதன்பிறகு அப்படி இப்படி நடக்கையில் அவன் தன்னைப் பார்க்கிறானா என்று இரகசியமாக அவள் விழிகளும் தேடத் தொடங்கியது.

 

ஒருவனால் தான் இரசிக்கப்படுகிறோம் என்பது எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது? வெளியில் முறைத்தாலும் உள்ளுக்குள் இரசிப்பாள். பிருந்தாவும் தன்னை அவன் இரசிப்பதை இரசித்தாள்.

 

அடுத்துவந்த நாட்களில் அவனின் இரசனைக்குரியவைகளை, அவன் பாராட்டியவைகளைக் குறித்துக்கொண்டு அதற்குஏற்றாற்போல் உடைகளையும் அலங்காரங்களையும் செய்துகொள்ளத் தொடங்கியிருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!