அத்தியாயம் 20
மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிப்போயிருந்தன. திரைப்படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், அன்று இறுதிக்காட்சி எடுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது. இறுதிக்காட்சி ஜேகேக்கும் அனன்யாவுக்கும் மட்டுமே இருந்தது.
தன் குடும்பம் படாத பாடுகளை எல்லாம் பட்டு ஒன்று சேர்ந்ததற்குச் சீதையம்மன் கோவிலுக்குச் செல்ல சுபாகரி ஆசைப்பட, அவளுக்கு நேரமில்லை என்பதால் அவர்கள் நால்வரையும் ஷியாமுடன் பிடித்து அனுப்பிவைத்தாள் அனன்யா!
ஜேகேக்கும் அனன்யாவுக்கும் இறுதிக் காட்சியை விளக்கத் தொடங்கினார் விக்ரமன்.
பிருந்தா சினி உலகுக்கு வருவதும், அவளின் தொடர் வெற்றிகளும் அவளை நட்சத்திர நாயகியாக உயர்த்தி விடுகிறது. திடீரென்று ஒருநாள் தொடர்பே இல்லாமல் இருந்த அஜய் ‘சூசைட் அட்டெம்’ செய்துவிட்டான் என்று கேள்விப்பட்டு ஓடுகிறாள் பிருந்தா.
“அவனோ, ‘என்னை மன்னிச்சுடு பிருந்தா. உண்மையா நேசிச்ச உன் மனசை நோகடிச்ச பாவம் என்னைச் சும்மா விடல. உன்னப் பிரிஞ்சு இருந்தப்போதான், உன்னை நான் எவ்ளோ லவ் பண்ணினேன்னு புரிஞ்சது. புரிஞ்சு என்ன பயன்? மறுபடியும் எப்படி உன் முன்னால வந்து நிப்பேன் சொல்லு? என் மனசே என்னைக் கொல்லுது பிருந்தா. கொஞ்சம் கொஞ்சமா சாகிறதுக்கு ஒரேடியாப் போய் சேர்ந்திடலாம்னு தான் இப்படி பண்ணினேன். ஆனாப் பாரு, கடவுளுக்குக் கூட நாம பிரியிறது பிடிக்கல போல. அதான் என்னைத் தப்ப வச்சிருக்கார். இனி நீ எதுக்கும் கவலைப்படாத பிருந்தா. உனக்கு யாருமில்லன்னு நினைச்சிடாத. நான் இருக்கேன். என் தேவதைய எந்தக் குறையும் இல்லாமப் பாதுகாக்க நான் இருக்கேன். நீ உன் ஆசைப்படி காலத்துக்கும் சினிமாவில நடி. நான் தடுக்கவே மாட்டேன். உனக்குக் காவலா, பாதுகாப்பா உன்னோட வெற்றிக்குப் பின்னால எப்பவும் இருப்பேன்.’ அப்படின்னு சொல்லுவான்.
கேட்டிருந்த அனன்யாவுக்குச் சிரிப்பு வந்தது. ஜேகேயை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
“அவனுக்கு அவ்ளோ நம்பிக்கை. இத்தனை நாளாத் தொடர்பு இல்லாம இருந்தும் அவனுக்கு ஒன்னு என்றதும் ஓடி வந்துட்டாளே என்கிற தைரியம். ஆனா, இப்போ இருக்கிற பிருந்தா மனுசங்களை படிச்சவ. வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டவ. அவ, அமைதியாவே ஒரு புன்னகையோட இருப்பா. அது கொடுக்கிற துணிச்சல்ல, ‘எப்போ கல்யாணத்த வச்சிக்கலாம் பிருந்தா’ ன்னு அஜய் கேப்பான்.
“‘கல்யாணத்தைப் பத்தி என்னைக்காவது நாம பேசி இருக்கோமா அஜய்?’ அப்படின்னு நிதானமா அவ கேக்கிற கேள்வில அவன் அதிர்ந்து போவான்.
“அப்போ நாம பழகினது?”
“பழகினது பழக்கமாவே இருந்திட்டுப் போகட்டும் அஜய்” என்று சொல்லிடுவா.
“பிருந்தா?” அவன் அதிர்ச்சியோடு பாப்பான்.
அவளோட முகத்துல இருக்கிற அமைதி குறையவே குறையாது! நிதானமா தெளிவா சொல்லுவா.
“இருபத்திரெண்டு வயசு வரைக்கும் நான் ஒரு கூண்டுக்கிளி அஜய். என்னோட உலகமே அந்த அழகான வீடுதான். பாதுகாப்பா சந்தோசமா நிம்மதியா இருந்தேன். அந்தக் கூட்டுக்க இருந்து பாக்குறப்போ தூரத்துல வானத்தில தெரியுற நட்சத்திரமெல்லாம் அவ்வளவு அழகா இருக்கும். நாமளும் ஒரு நட்சத்திரமா இருந்தா எப்படி இருக்கும் என்று ஒரு மிகப்பெரிய கற்பனை இருந்தது. ஒருநாள் என்னோட கனவை நனவாக்கிட்டு வரேன்னு சொல்லிட்டுத்தான் இங்க வந்தேன். என் கனவை மட்டுமே பாத்திட்டு வந்த நான், ரோட்டுல கிடந்த கிடங்கைப் பாக்காம விட்டுட்டேன். விழுந்துட்டேன். ரொம்ப அடி; உயிர் போற அளவுக்கு. செத்துடலாம் போல இருந்திச்சு. யாரையெல்லாம் நம்பினேனோ அவங்க யாருமே உதவிக்கு வரவேயில்லை.
“அப்பத்தான் புரிஞ்சது. கூடுன்னு நினைச்ச அந்த வீடு எவ்வளவு பாதுகாப்புன்னு. ஆனா என்ன இந்தக் கிளிக்கு மறுபடியும் அந்தக் கூண்டில இடமில்லாம போச்சு. காரணம் என்ன தெரியுமா? அது அவ கட்டிக்கிட்ட கூண்டு இல்ல. அம்மா அப்பாவோடது. கூடில்லாம வாழவும் தெரியாம, இந்த வானத்தில பறக்கவும் தெரியாம இருந்தப்போதான் ஒன்னு புரிஞ்சது.
கிளிகளுக்கு எப்பவுமே கூண்டுதான் பாதுகாப்புன்னு. ஆனா அந்தக் கூட்டை அந்தக் கிளியே அமைச்சிக்கணும். அவளுக்கு அவ மட்டும் தான் நிரந்தரம். அவ மட்டும் தான் பாதுகாப்பு. அம்மா, அப்பா, அண்ணா, காதலன், கணவன் இதெல்லாம் பாதுகாப்புன்னு அவளா நினைச்சு நம்பிக்கிறது. உண்மையான பாதுகாப்பு அவ மட்டும் தான். அப்படியிருக்கிறப்போ கூண்டையும் அவளால மட்டும் தான் போட முடியும். அப்படித்தான் நானும் எனக்குன்னு ஒரு கூண்டை அமைச்சுக்கிட்டேன் அஜய்.
ஆமா, இப்போவும் நான் ஒரு கூண்டுக்கிளிதான். அந்தக் கூண்டு நானே அமைச்சது. தன்மானத்தாலும் சுயமரியாதையாலும் நிமிர்வாலும் தெளிவாலும் அமைச்சிருக்கேன். அதற்குக் கம்பிகளும் இல்லை பூட்டும் இல்லை. ஆனா, எனக்குத் தெரியும் என் எல்லையைத் தாண்டி யாரெல்லாம் வரலாம்னு. வானத்தைக் கூரையாகக் கொண்டு பூமியில் காலூன்றி எல்லையே இல்லாமல் பறக்கப்போறேன். அன்பு, பாசம், காதல் எதுவும் என்னைச் சிறைப்பிடிக்காது. என் கனவுகளை நோக்கி நான் பறக்கத் தொடங்கிட்டேன். இந்தக் கூண்டுக்கிளி இனி எங்கேயுமே தாங்காது அஜய்.” என்றுவிட்டு கம்பீரமாகப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தாள் பிருந்தா.
அவளின் பாதை எல்லையே இல்லாமல் வளர்ந்துகொண்டே போயிற்று! அவளும் எல்லைகள் இல்லா இலக்குகளை எல்லாம் எட்டிப்பிடித்தபடி போய்க்கொண்டே இருப்பாள்!
காட்சிகள் அத்தனையும் விக்ரமன் எதிர்பார்த்ததுபோன்று வலு தத்ரூபமாக காமராவுக்குள் அடங்கியதும்,
“கூண்டுக்கிளி” முற்றியது.
சுற்றியிருந்தவர்களின் பலத்த கரகோசத்தில் மிகவுமே நிறைவாக உணர்ந்தாள் அனன்யா. ஒரு நடிகைக்கான மிகச் சிறந்த பரிசு இந்தக் கை தட்டல்கள் மட்டும் தானே! பணம் பொருள் எல்லாமே இரண்டாம் பட்சமே!
அனன்யாவால் நம்பவே முடியவில்லை. தன் வாழ்வில் நடந்த திருப்பமே படமாக எடுக்கப்பட்டிருப்பதும், அதில் அவளே அவளாக மாறி நடித்ததும், அம்மா அப்பா அவளைத்தேடி வந்துவிட்டதும் என்று எல்லாமே ஒரு கனவு போலிருந்தது.
இவற்றையெல்லாம் சந்திக்கமுதல் எத்தனை பயந்தாள்? எவ்வளவு துடித்தாள்? இந்தப் படத்தில் நடிக்கத்தான் வேண்டுமா என்றல்லவா நினைத்தாள். ஆனால் இன்றோ நடித்து முடித்ததை எண்ணிப் பெருமையாகவே உணர்ந்தாள்!
இதற்கெல்லாம் சவீதாவும் தானே காரணம். உடனேயே அவளுக்கு ஃபோனைப்போட்டு, “அக்கா ரொம்ப தேங்க்ஸ்கா!” என்றாள், குரல் தழுதழுக்க.
“அட லூசே!” என்றாள் அவள். “எனக்கு நன்றி சொல்றதை விட்டுட்டு நீ உன்னை நினைச்சுத்தான் பெருமை பட்டுக்கணும் அனு. இது ஒன்னும் அத்தனை சுலபமான காரியமில்லை. சந்தோசமான பக்கங்களை நினைச்சுப் பாக்கிறது எப்பவுமே சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும். அதுவே, தோத்துப்போன நாட்களை நினைக்கக்கூட மனசு விரும்பாது. ஆனா நீ இன்னுமொருமுறை வாழ்ந்திட்டு வந்த பாத்தியா, அது ஒன்னும் அத்தனை சுலபமில்லை. இதுதான் பொண்ணுங்க அனு. அவங்க மனசளவுல ரொம்பவே பலமானவங்க. திடமானவங்க. வீட்டுக்கையே அடங்கி இருந்தாலும் தேவைன்னு வந்தா வெளில வந்து குடும்பத்தைக் கொண்டு ஓடுவாங்க. ஆனா என்ன, சுத்தி இருக்கிறவங்க பாசம் காதல்னு எதையோ ஒன்னைப் போட்டு அவங்களை முடக்கிப் போட்டுடுவாங்க. அதெல்லாம் இருக்க வேண்டியதுதான். ஆனா அளவோட!” என்றவள், ” அம்மா அப்பா என்ன சொல்லுறாங்க?” என்று விசாரித்தாள்.
“நாளைக்கு அவங்களோட யாழ்ப்பாணம் போறேன்கா. அங்க போய்த்தான் இனி என்னன்னு யோசிக்கணும்.” மெல்லத் தயங்கிச் சொன்னாள், இவள்.
சவீதாவுக்குப் புரிந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போகப்போகிறாள். மாற்றங்கள் எதுவும் வரலாம்.
“எதையும் இப்பவே யோசிக்காத. முதல்ல சந்தோசமாப் போ. கொஞ்ச நாள் அங்கேயே இரு. பிறகு யோசி. எப்படி இருந்தாலும் சைன் பண்ணின புராஜெக்ட் எல்லாம் முடிக்கணும் தானே.” என்றவள், வைத்துவிட மனதுக்கு மிகவுமே இதமாக உணர்ந்தாள் அனன்யா.
சவீதா சொன்னதுபோலவே சோகம், துன்பம், துயரம் என்று எண்ணிக்கொண்டு நமக்குள் நாமே உழன்றுகொண்டு இருக்கும்போதுதான் எதுவுமே பெரிதாகத் தெரியும் போலும். அதற்குள் புகுந்து கடந்துவிடுவோம் என்று துணிந்தால் அனைத்தும் சாத்தியமே!
இதோ, அவள் வாழ்வின் இருண்ட பகுதியை இன்னுமொருமுறை வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறாளே! நெஞ்சு இலவம் பஞ்சுபோல் இலகுவாகப் பறந்துகொண்டிருந்தது.
ஆடிப்பாடி மகிழ வேண்டும் போலிருக்க, விமலும் ஜேகேயும் கண்ணில் பட்டனர்.
உடனேயே அவளுக்குள் இருந்த குறும்பி துள்ளிக்கொண்டு எழுந்து நின்றாள். அவர்கள் அருகால் செல்வதுபோல் சென்றுகொண்டு, “என்ன மன்னிச்சுடு அனன்யா. உனக்குச் செய்த பாவம் என்ன சும்மா விடல அனன்யா. என்னைக் கட்டிக்கோ அனன்யா. காலத்துக்கும் நாயா உன்காலையே சுத்தி வருவேன் அனன்யா.” என்றாள் சத்தமாக.

