“நாம காதலிச்சோம் அனு. உயிருக்கு உயிராக் காதலிச்சோம். காலமும் நேரமும் நம்மைப் பிரிச்சிவச்சிடிச்சு. அப்ப மட்டுமில்ல இப்பவும்தான். இல்லனா நான் இருக்கிறப்போ, எனக்குப் பதிலா விக்ரமன் சார் எதுக்கு இவரை நடிக்க வைக்கணும் சொல்லு? அவருக்கு அப்ப இருந்தே நாம சேருறதுல விருப்பமில்லை. நான் நடிச்சிருக்க, உன் மனசுல நான் எவ்வளவு ஆழமா இருக்கேன்னு உனக்கே நிரூபிச்சு இருப்பேன்!” என்றான் அவளைக் காதலாக நோக்கி.
நொடி கூட அந்த முகத்தைப் பார்க்க முடியவில்லை. வெறுப்பை முகத்தில் காட்டிவிடாமலிருக்க முகத்தை திருப்பிக்கொண்டாள் அனன்யா.
“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. நம்ம காதலை என்னால உனக்கு நிரூபிக்க முடியும். உன்னோட வெல்விஷரைக் கொஞ்சம் கண்ணை மூடிக்கச் சொல்லு!” என்றுவிட்டு, சின்னச் சிரிப்புடன் அவளை நெருங்கினான் அவன்.
இல்லையில்லை நெருங்க நினைத்தான். அதற்குள், “இல்லாத காதலை எப்படி நிரூபிப்ப?” என்றபடி, அவனுக்கும் அவளுக்குமிடையில் வந்து நின்றிருந்தான் ஜேகே!
ஒருகணம் அர்ஜூனே திகைத்துப்போனான்.
“அது காதலாடா? சொல்லு அது காதலா? முதல்ல அவ எங்க உன்னக் காதலிச்சா?” ஜேகேயின் கேள்வியில் அனன்யாவே அதிர்ந்துபோனாள்.
அவள் காதலித்தாள் தான். அவனைத் தன் எதிர்காலம் என்று நம்பினாள் தான். இவனுக்கு அதெல்லாம் தெரியாதே. அவன் முன்னால் தரமிறங்கிக்கொண்டு போகிறோம் என்கிற நினைவில் குன்றிப்போனாள் அவள்.
எவ்வளவு கேவலம்! வாழ்க்கையில் ஒருமுறை தவறியது; எத்தனை முறை கூனிக்குறுகிவிட்டாள். என்றும் இது தீராதா?
“இல்லையான்னு அவளையே கேளுங்க, சொல்லுவா! நடந்த விசயம் எதுவும் தெரியாம நீங்க நடுவுக்க வராதீங்க ஜேகே.!” என்றவன்,
“இதுக்குத்தான் அனு தனியா பேசணும்ன்னு சொன்னேன்.” என்றான்அவளிடம்.
‘தெரிஞ்சுதான்டா அவரைக் கூட்டிட்டு வந்தேன்.’ அந்தநேரம் அவளுக்கு மூளை நல்லபடியாக வேலை செய்ததை எண்ணி ஆறுதலைடைந்தாள் அனன்யா.
இல்லாவிட்டால் இதையெல்லாம் அவளால் தாங்கவே முடியாது. இதற்கெல்லாம் அவளும் காரணமாக இருந்துவிட்டு முழுமையாக அவனை எடுத்தெறிந்து பேசியிருக்கவும் முடிந்திராது. அதையே அவன் தனக்குச் சாதகமாக்கப் பார்த்திருப்பான்.
“இன்னும் என்ன பேசப்போற? அதுதான் அவளே சொல்லிட்டாளே உன்னைப் பிடிக்கல, கல்யாணம் கட்டுர ஐடியா இல்லன்னு. இன்னும் என்ன தெரியணும் உனக்கு?”
“தெரிஞ்சுக்க இருக்கு ஜேகே. நிறைய இருக்கு. எனக்காக அப்பாவுக்குச் சமமா நினைச்ச விக்ரமன் சாரையே தூக்கி எறிஞ்சவ அவ. அவ மனசுல காதலும் இருக்கு. நானும் இருக்கேன்.” என்றான் அவன்.
கடவுளே.. இவனுக்கு என் நெஞ்சைப் பிளந்து காட்ட முடிந்தால்? இப்ப நீ இல்லடா என்று சொல்ல முடிந்தால். எப்படி உணர்த்துவது என்று தெரியாமல் தவித்தாள் அனன்யா.
ஆனால், ஜேகேக்கு அவளைப்போல தடுமாற்றம் இல்லைபோல. அழுத்தம் திருத்தமாகப் பேசினான்.
“முட்டாள்! அது காதல் இல்லடா. ஈர்ப்பு. நம்மை ஒருத்தன் விடாம ரசிக்கிறான் என்கிற சந்தோசத்துல வந்த மயக்கம். காதலிக்கிறதுக்கு ஏத்த வயசுல ஒரு ஆணும் பொண்ணும் ஒரே வீட்டுல இருந்தா அவங்கவங்க கண்ணுக்கு மத்தவங்க பேரழகாத் தான் தெரிவாங்க. அதைக் காதல் மாதிரி அவளை உணரவச்சு உனக்குச் சாதகமா மாத்திக்கிட்டது நீ!
“நமக்குப் பிடிச்ச கிரிக்கெட் பிளேயரை, நமக்குப் பிடிச்ச ஹீரோவ ரசிப்போம். அவரோட நடிப்புல சின்ன சைகைல மயங்குவோம். அவரை எப்பப் பாத்தாலும் நம்ம மனசு துள்ளிக் குதிக்கும். அதுக்குப் பெயர் காதலாடா? அதேமாதிரி அப்போ அவ கண்ணுக்கு நீ அழகனா தெரிஞ்ச. ஹீரோவா தெரிஞ்ச. உன்னோட பாட்டு சிரிப்பு எல்லாம் அவளுக்குப் பிடிச்சிருந்தது. உன்ன ரசிச்சா. நீயும் அவதான் எல்லாமே என்கிற மாதிரி நல்லா நடிச்ச. அதைக் காதல்னு அவளும் நம்பிட்டா. இன்னைவரைக்கும் ‘தெரியாம உன்ன காதலிச்சுட்டோமேன்னு’ தவிச்சிட்டு இருக்க அவளுக்கே புரியலை, ‘அவ உன்னக் காதலிக்கவே இல்லைன்னு’. அந்தளவுல இருந்திருக்கு உன்னோட யுக்தி. அதையே இப்பவும் செய்ய பாக்கிறியா நீ?” அவன் முகத்தருகே நெருங்கி, கோபம் தெறிக்கும் விழிகளோடு ஜேகே அழுத்தம் திருத்தமாகக் கேட்டபோது மெல்லிய நடுக்கம் அர்ஜூனுக்குள் ஓடியது!
அனன்யா சிந்திக்கவும் முடியாதவளாய் சிலைபோல் நின்றிருந்தாள்.
நடுவில் வந்து அனைத்தையும் கெடுக்கப் பார்க்கிறானே. விடக்கூடாது! ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது! முடிவு எடுத்த அர்ஜுன் நிமிர்ந்தான்.
“அதனாலதான் இன்னைவரைக்கும் என்ன மறக்க முடியாம இருக்காளா?” என்றான் நக்கலாக.
அதுதானே? முகம் கன்ற அனன்யாவின் கன்னங்களை நனைத்தது கண்ணீர்.
“நீ முட்டாளே தான்டா!” என்றான் ஜேகே ஏளனமாக. “அவகிட்ட கேட்டுப்பாரு, ஏதாவது உன்னப்பத்தி அவ நினைப்புல இருக்கான்னு. இன்னைவரைக்கும் அவ நினைப்புல இருக்கிறது, ஏமாந்து போய்ட்டோமே, நீ ஏமாத்துற அளவுக்கு முட்டாளா இருந்திட்டோமே, உன்னைப்போய் காதலிச்சுட்டோமே என்கிறதுதான். அம்மா அப்பா நம்பி அனுப்பினாங்களே… தப்புப் பண்ணிட்டமே என்கிற குற்ற உணர்ச்சிதான். வாழ்க்கைல முதல் முறையாப் பெருசாத் தோத்திருக்கா. அந்தத் தோல்விதான் உன்னை மறக்க விடல. அவ்வளவுதான்! புரிஞ்சுதா?”
என்னவோ அவளின் நெஞ்சுக்குள் புகுந்து பார்த்தவன் போன்று சொல்லிக்கொண்டிருந்த ஜேகேயை அதிர்ந்த விழிகளில் கண்ணீர் வழியப் பார்த்துக்கொண்டே இருந்தாள் அனன்யா.
அவன் சொல்லச் சொல்லத்தான், ‘ஐயோ அதேதான்… அதுவேதான்.’ என்று ஆர்ப்பரித்தது மனது! எவ்வளவு துல்லியமாகக் கணித்திருக்கிறான். இதை அவள் உணரவே இல்லையே!
“உண்மையா காதலிச்சா காதலிச்சவன் துரோகமே செய்தாலும் அவனைத் தூக்கிப்போடாது மனசு. அவனோட நினைப்புல வாழும். அவகிட்ட இப்ப கேளுடா, உன் நினைப்புல வாழுறாளா இல்ல தப்புப் பண்ணிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சில வாழுறாளா என்று.”
அர்ஜுனின் விழிகள் அவமானக் கன்றலுடன் அவளை நோக்கின.
“சத்தியமா நீ என் நினைப்பிலேயே இல்ல அர்ஜுன்.” தெளிவாகச் சொன்னாள் அனன்யா.
“நல்லா கேட்டுக்கிட்ட தானே? இதுதான் கடைசி உன்ன நான் அவ பின்னாடி பாக்கறது. இனிமேலும் வந்த… யாருமே அடையாளம் தெரியாத அளவுல தெருத் தெருவா அலைவ. அலைய வைப்பேன். புரிஞ்சுதா?” என்று அவனிடம் உறுமிவிட்டு, அவள் புறமாகத் திரும்பி,”நீ வா!” என்றுவிட்டு தன் வேக நடையில் சென்றவனை, கண்களில் கண்ணீர் மல்கப் பார்த்தவள் ஓடிவந்து அவன் கையைப் பற்றினாள்.
அப்படியே நின்றுவிட்டான் ஜேகே. அவனிடமும் ஒரு அதிர்வு! தன் கையையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான். அதையெல்லாம் உணரமுடியாத பரவச நிலையில் இருந்தாள் அவள்.
கண்களில் கண்ணீர் பொங்கிப் பொங்கி வழிந்தது.
“ஜேகே… உங்களுக்கு… அது எப்படி… நான்… என்ன நினைக்கறேன்னு… என் மனசு…” வார்த்தைகளே இல்லை. சந்தோசம் சந்தோசம் சந்தோசம்…! அவள் விடுதலையாகிவிட்டாள். அவளைக்கொன்ற குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலையாகிவிட்டாள்! அவளையே சுட்டுப்பொசுக்கிய நினைவுகளில் இருந்து விடுதலையாகிவிட்டாள்!
“கடவுளே.. ஜேகே.. எனக்கு!” வார்த்தைகளற்றுத் தடுமாறித் தவித்தவளுக்கு கண்ணீர் தாரை தாரையாகப் பொங்கி வழிந்தது. உதடுகள் அழுகையிலும் சிரிப்பிலும் துடித்துக்கொண்டிருந்தன.
வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டு, “இப்ப எதுக்குக் கண்ணீரைக் கொட்டுற?” என்று சிடுசிடுத்தான் ஜேகே.
“அது கொட்டட்டும். எனக்கு இன்னுமின்னும் அழவேணும் போல இருக்கு ஜேகே. இண்டைக்கு மாதிரி சந்தோசமா நிம்மதியா நான் பீல் பண்ணினதே இல்ல. நிஜமாவே நான் அவனைக் காதலிக்கல பாத்தீங்களா? கடவுளே! நான் அவனக் காதலிக்கல… காதலிக்கல… காதலிக்கல. அப்பல்லாம் நான் ரொம்பவே கெட்டிக்காரின்னு ஒரு நினைப்பு இருந்தது. அப்படியான நான் இவனைப்போய் நம்பினேனே… காதலிச்சேனேன்னு நினைச்சு நினச்சுச் செத்துட்டு இருந்தேன். என் மனசுக்கு என்னையே பிடிக்காது ஜேகே. நீயெல்லாம் என்ன பெண்? என்று என் மனச்சாட்சியே கேக்கும். அம்மா அப்பா மூஞ்சில எப்படி முழிப்பன்னு கேக்கும். அதனாலதான் இத்தனை வருசத்துல நானா அவங்க முன்னாடி போய் நிக்கல. ஆனா இன்னைக்கு… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஜேகே!” என்றவள், “என்னைப் புதுசா எனக்கே தந்திருக்கீங்க ஜேகே. ரொம்பத் தேங்க்ஸ். என்னைக்கும் மறக்கமாட்டேன்..” என்றவள், உணர்வு மிகுதியில் பற்றியிருந்த அவனது புறங்கையில் தன் இதழ்களைப் பதித்துவிட்டு துள்ளிக்கொண்டு ஓடிப்போனாள்.
அப்படியே உறைந்து நின்றான் ஜேகே! புறங்கையில் பட்ட இதழ்கள் விரிந்து மலர்ந்து அவன் இதயம் வரை சிலிர்க்கச் செய்தது. மெல்லக் கரமுயர்த்தி அவளின் இதழ்களின் ஈரத்தின் மேல் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்!

