தவிப்பும், பதற்றமும், பரிவும் போட்டிபோட அமர்ந்திருந்தவனை கண்டதும் தான் தாமதம், தாவித் திரும்பி அவன் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டவள், அப்படியே அவன் வயிற்றோடு இறுக்கிக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள்.
‘‘வசீ…வந்திட்டீங்களா? ஐயோ என்னை விட்டுட்டுப் போகாதீங்க…போகாதீங்க!’’
அவளின் தீனமான அழுகையில் செய்வதறியாது அதிர்ந்து திகைத்துவிட்டான் வசி.
சின்னஞ் சிறுவயதில் உறவுகளை விட்டு விலக்கப்பட்டிருந்தாள் இவள்.
உயிராக நினைத்த தமையனை இழந்து, இளைய சகோதரங்களை, பெற்றவர்களைப் பிரிந்து இங்கு வந்தவள், அதன் பின்னரும் தனிப்பட்ட கவனிப்பின்றியே தான் வளர்ந்தாள்.
தனக்கே தனக்கான பாசத்துக்காக ஏங்கி அது கிடைக்காது என்பதை அறிந்து கொண்டதும், அதற்காக ஏங்குவதைத் தவிர்த்தும் பழகியிருந்தாள்.
பெற்றவர்களும், தன்னைத் தனக்காக விசாரிக்காமல், தன்னிடமிருந்து பணத்தையே எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டாலும், ஒருபோதும் முகம் சுழிக்கவில்லை, இவள்.
அவர்களின் நிலையறிந்து, தன்னால் இயன்றளவு உதவிகளைச் செய்து வந்தவளின் வாழ்வில், முதல் முதலாக, ‘உனக்கே உனக்காக நான் இருக்கிறன்!’ என்ற நம்பிக்கையை உணர வைத்தவனே வசிதான்.
அது எப்படி என்று சொல்ல முடியாத வகையில் உறவு, நட்பு என்பதையும் தாண்டி, அவள் மனதில் ஜம்மென்று அமர்ந்து விட்டான் இவன்.
சிலமாதங்களாக அதை உணர்ந்திருந்தவளோ, ‘இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது! நமக்கு நம்மட குடும்பம், அவேட முன்னேற்றம் மட்டும் தான் நினைவில் இருக்க வேணும்.’ என்று முடிவெடுத்துத் தன்னுள் எழுந்த ஆசையைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டவள், அவன், தன் மனத்தை வென்று விட்டான் என்பதையே மறக்க முயன்றும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
இப்போதோ, அவளுக்கு வேறெதுவும் நினைவில் வரவில்லை!
தனக்கே தனக்கானவன், தன் தவிப்பை உணர்ந்து தவிப்பவன், தனக்காக எதையும் செய்யக் கூடியவன், தன்னருகில் இருக்கிறான் என்ற இதத்தில் அவன் மடிசாய்ந்து குமுறித் தீர்த்தாள்.
“ஒன்றும் இல்ல நிதி, இங்க பார்…நிதி…” அழுபவளை ஆறுதலாக வருடியபடி அழைத்தவனுக்கு, அவளுக்கு நல்ல காய்ச்சல் என்பதும் புரிய ஆத்திரமே வந்தது.
இவன் மேலே வர, பின் தொடர்ந்து வந்த ரஞ்சனும் ரதீஷும் நிதியின் செய்கையில் அதிர்வின் உச்சத்தில் அகப்பட்டு நெரிபட்டுப் போனார்கள்.
‘அப்ப… நான் நினைச்சது சரிதான்; என்றாலும் இந்த வசி அண்ணா செய்தது சரியா?
வீட்டுக்கு மூத்தவராக இருந்தும்…ரஞ்சன் அண்ணா தன்ர விருப்பத்தைச் சொன்ன பிறகும் இப்பிடிச் செய்தது எந்த விதத்தில நியாயம்?’ மனதில் வாதிடத் தொடங்கினான் ரதீஷ்.
நிதியின் செய்கையையும், நிதிக்காகத் தன் தமையனின் துடிப்பையும் பார்த்த ரஞ்சனின் இதயமோ, ஒருகணம், தன் துடிப்பை மறந்து முக்கி முனகி இயக்கத்தைத் தொடர்ந்தது.
அப்படியே அதிர்ந்து, கதவருகில் உள்ள சுவரில் சாய்ந்து நின்று கொண்டான் அவன்.
அவனால் இதைக் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. கண்முன் உண்மை வெட்ட வெளிச்சமாய்த் தெரியும் போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
இப்படி, தத்தம் மன உளைச்சலில் நின்றவர்களைக் கோபப்பார்வையுடன் நோக்கினான் வசி.
‘‘என்னடா நடந்தது? முதல் அவளுக்கு பரசிட்டமோல் இருந்தாத் தா!’’ என்றதும், ஏற்கனவே கொடுக்க முயன்று சோர்ந்திருந்த ரஞ்சன் இயந்திரமாக எடுத்துக்கொடுக்க, அவளைக் குடிக்க வைத்தவன், மெல்ல எழுப்பித் தன் மீதே சாய்த்துக் கொண்டான்.
இதைக் கண்கொண்டு பார்க்க முடியாத ரஞ்சனோ, விசுக்கென்று வெளியேறி மேலே சென்றவன் தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.
வசி மீதான கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாலும், நிதி மீதான அக்கறையும் பாசமும் ரதீஷை கீழே நடத்திச்சென்று, அவளுக்கென்று வைத்திருந்த பாலை எடுத்துவர வைத்தது.
‘‘இவள்…இரவும் சாப்பிடேல்ல; இதைக் குடிக்கச் சொல்லுங்க!” இறுகிய குரலில் சொன்னான்.
“எழும்பி முகம் கழுவினால் பாண் டோஸ்ட் பண்ணிக்கொண்டு வாறன் சாப்பிடலாம். வெறும் வயித்தில குளிசையைக் குடிச்சிருக்கிறாள்.’’ மேசையில் பாலை வைத்தவன், தவறியும் தமையன் முகம் பார்க்கவில்லை. வசியின் பதிலுக்குக் காத்திராமல் விருட்டென்று கீழே சென்றுவிட்டான்.
ரதீஷின் செய்கையில் அப்பட்டமாக அவன் கோபத்தை உணர்ந்துகொண்டான் வசி.
அதன் காரணமும் புரியவே மனம் பாரமானாலும், எக்காரணத்துக்காகவும் யாருக்காகவும் அது தன் தம்பிக்காக என்றாலும் நிதியை விட்டுக்கொடுக்க முடியாதென்றும் உணர்ந்தே இருந்தான் அவன்.
தான் செய்த விடயத்தில், இனி எந்த எதிர்ப்பையும் முறைப்பையையும் எதிர்கொள்ளவே வேண்டும் என்பதால், அமைதியாகி, தன் நெஞ்சில் சாய்ந்து விம்மிக் கொண்டிருந்தவளைக் கனிவாகப் பார்த்தான்.
‘‘நிதி…வெறும் வயிற்றில குளிசையைப் போட்டு இருக்கிறீர்; இந்தப் பாலைக் குடியும்.’’ என்றதும், மெல்ல அவனை விட்டு விலகினாள் அவள்.
‘‘இல்ல…வேணாம்…கொஞ்சத்தில…முகம் கழுவின பிறகு குடிக்கிறன்.’’ திரும்பவும் தலையணையில் தலை சாய்த்தாள்.
அப்போதுதான் அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான் வசி.
விரல் தடங்களுடன் வீங்கிச் சிவந்திருந்த கன்னங்கள் இரண்டும் அவனைத் துணுக்கிட வைத்தது.
‘‘நிதி…இதென்ன அடையாளம்? யார் உம்மை அடிச்சது?’’ கடுமையாகக் கேட்டவன், மௌனமாக நோக்கியவளைக் கண்டிப்போடு பார்த்தான்.
அந்நேரத்து நிகழ்வு தந்த வலியை அவனுக்கு காட்டாமல் மறைக்க வெகுவாய் முயன்று தடுமாறினாள் அவள்.
‘சொல்லும் நிதி யாரு? சித்தியா?’’ குரல் இறுகக் கேட்டவனை, ‘‘விடுங்க வசி. அதைப்பற்றி இப்ப ஒண்ணும் கதைக்க வேணாம். யார் அடிச்சிருந்தாலும் இந்த வீட்டில இருக்கிறவேக்கு…என்னை என்ன செய்யவும் உரிமை இருக்கு.’’ என்றவளை, சலிப்போடு முறைத்தான் அவன்.
‘‘இப்பி யே விட்டுவிட்டுத் தான் இந்த நிலைமையில வந்து நிற்குது நிதி. சித்தி தான் அடிச்சிருப்பார். நான் இதைச் சும்மா விடமாட்டன்..’’ என்று கோபப்பட்டவனின் கரத்தைக் கெஞ்சல் பார்வையுடன் பற்றிக் கொண்டாள்.
‘‘வேணாம் வசி. நீங்க எதுவுமே கதைக்க வேணாம். மாமி உங்களில எவ்வளவு அன்பு வச்சிருக்கிறார். முதல் அதை நினைத்துச் சரி அமைதியாக இருங்கவன் .” கெஞ்சினாள்.
“எனக்காகக் கதைக்கிறன் என்று தேவையில்லாமல் பிரச்சனையைப் பெரிசாக்காதீங்க. மாமியும் பாவம்தான்…ஒருவகையில மாமிட கோபமும் நியாயம்தான்.
என்ர பாரத்தைச் சுமக்க வேணும் என்று இவையளுக்கு என்ன தலையெழுத்தா? மாமி என்னில எவ்வளவு கோவப்பட்டாலும் என்னால வெறுப்பாப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு இவே எனக்குச் செய்திருக்கீனம்.’’ எனக் கண்ணீர் விட்டவளை அதிசயமாகப் பார்த்தவனுக்கு,
‘இவ்வளவு பாசம் வச்சிருக்கிறாளே! சித்தி ஏன் புரிஞ்சி கொள்ளுறார் இல்லை?’ என, ஆயாசமாக இருந்தது.
அவள் முகத்தில் சிதறிக்கிடந்த கேசத்தை மென்மையாக ஒதுக்கி, கண்ணீரைத் துடைத்து விட்டவன், கன்னக் கன்றல்களைப் பார்க்கையில் உள்ளுக்குள் ஆத்திரம் குமிழியிட மிகவும் முயன்றே தன்னை அடக்கிக் கொண்டான்.
‘‘சரிம்மா, நான் இப்போதைக்கு ஒன்றும் கதைக்கேல்ல. ஆனால்…’’ என்று தொடங்கி அப்படியே முடிக்காமல் விட்டவன்,
‘‘முதல் நீர் மெல்ல எழும்பிப் போய் முகம் கழுவிட்டு வாரும். வந்து பாலைக் குடிச்சிட்டுப் படும்.’’
அவளை வற்புறுத்தி எழுப்பி அனுப்பியவன், அவள் குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்தவும்,
‘‘உள்ளுக்குப் பூட்ட ( தாழ் போட) வேணாம் நிதி, கெதியா வாரும்.’’ என்றுவிட்டு, திரும்பவும் அவள் அறைக்குள் சென்று தலையைக் கைகளில் ஏந்தியவாறு அமர்ந்திருந்தவனுக்கு, புவனியின் மீது அடங்காத ஆத்திரம் எழுந்த அதேவேளை, அதை மேவி, ரஞ்சனின் அதிர்ந்த தோற்றமே நினைவிலாடியது.
‘இப்ப எப்பிடி ரஞ்சனைச் சமாதானப்படுத்திறது?’ என்ற கேள்வி கண்முன்னே தோன்றி நர்த்தனம் ஆடியது.
தன் தம்பி காதலிப்பதாகச் சொல்லியும், ‘அவள் எனக்கே எனக்கானவள்’ என நிதியைக் காதலித்து, இன்று அவள் காதலை உறுதிப்படுத்திக் கொண்டவன், அந்த மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாமல், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்தான்.

