உயிரைத் திருடும் அழகியே 4 – 2

“அண்ணாவும் நொண்ணாவும்! சேர்னு சொல்லு!” அவன் சொல்லி முடிக்க முதலே கோபத்தில் முகம் சிவக்கச் சீறினாள், அனன்யா.

 

ஒருகணம் அதிர்ந்தான் ஷியாம். இத்தனை கடுமை இவளுக்குள் எப்போது புகுந்தது?

 

அதை அவளும் உணர்ந்து முகம் கன்றிப்போனாள். ‘இப்பத் தானே அக்கா மண்டைல உறைக்கற மாதிரிச் சொன்னா. அதுக்குள்ளே.. ப்ச்!’ வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு “சாரிடா. அவர் உனக்கு அண்ணாதானே.” என்றுவிட்டு நடந்தவளைப் பிடித்து நிறுத்திவிட்டு முகத்தையே கூர்ந்து பார்த்தான் ஷியாம்.

 

“இதெல்லாம் எப்பல இருந்து?”

 

“எதெல்லாம்?”

 

“அதுதான் இந்த சாரி சொல்லுறது, நாகரீகமா பேசறது எல்லாம்?”

 

பக்கென்று சிரிப்பு வந்துவிட, “அடச்சீ! வாடா!” என்று மண்டையில் குட்டிவிட்டு அவனை இழுத்துக்கொண்டு நடந்தாள் அனன்யா.

 

விக்ரமனின் காட்டேஜ் வாசலில் அவனை இழுத்து நிறுத்தி, “சிலநேரம் அந்த ஹீரோ லூசன் இருந்தாலும் இருப்பான். அவனுக்கு நீ ஹலோ ஹாய் சொல்லவே கூடாது! சொன்னயோ மண்டையப் பிளப்பன்!” என்று பழைய அனன்யாவாக மாறி மிரட்டிவிட்டே, கதவைத் தட்டிவிட்டு அவனோடு உள்ளே நுழைந்தாள் அவள்.

 

அவள் எதிர்பார்த்தது போல அவனும் அங்கேதான் இருந்தான். இவர்களைக் கண்டுவிட்டு, “ஹேய் ஷியாம்! வாவா!” என்று விக்ரமன் எழுந்துவர, அவர் நெருங்குவதற்குள், “அவன் இருக்கிற பக்கமே திரும்பாத! எளியவன், என்னை டிஸ்போஸ் பண்ணச் சொன்னான்.” என்று காதுக்குள் கிசுகிசுத்தாள் அவள்.

 

அவள் அப்படிச் சொன்னதாலேயே, ‘யார் அவன்?’ என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவன் பார்வை அவனிடம் திரும்பிவிட, “வெல்கம் ஷியாம்! பயணம் எல்லாம் நல்லா இருந்ததா?” என்று விசாரித்தான் அவன்.

 

‘அட நாதாரிப்பயலே!’ கடுப்பாகிப்போய் பார்வையாலேயே அவனை எரித்தாள் அனன்யா. ‘உன்னோட நடிக்கப்போறவள் நான். என்னை மதிக்கத் துப்பில்லை. என் நண்பனுக்கு மட்டும் வெல்கம்மாம்! இனி அவனுக்கு பேட்கம் தான்!’

 

அவளின் பார்வையை எதிர்கொண்டால் தானே அவள் எரிப்பதை அவன் உணர! ஆவிகளை மனிதர்கள் உணர்வதில்லையாமே! சட்டென்று இப்படித் தோன்றிவிட்டது அவளுக்கு.

 

‘அப்போ நான் என்ன பேயா!’ தோன்றிய கணமே தன் தலையில் தானே குட்டிக்கொண்டாள். சட்டென்று எல்லோர் பார்வையும் அவளிடம் குவிய, அதுவும் இரும்புக்கேடர் போன்று எப்போதும் இறுக்கமாகவே காட்சி தரும் அவனது காவலனே கண்களில் சிரிப்புடன் அவளைப் பார்த்தபோதும் அவன் பார்க்கவில்லை. அவளும் எதுவும் நடவாததுபோல் மிதப்பாக ஒரு பார்வையை வீசிவிட்டு நல்லபிள்ளையாக நின்றுகொண்டாள்.

 

“ஹீரோவா நடிச்ச உங்க படம் பாத்தேன் ஷியாம். அசத்தி இருக்கீங்க!” என்று, ஷியாமுடன் வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்திருந்தான் அவன்.

 

ஆச்சரியத்தில் விழிகள் விரிய அவனைப் பார்த்தான் ஷியாம். அனன்யாவின் வார்த்தைகள் வழியே வடித்த உருவகத்துக்கும், யார் என்றே அறியாத தன்னைப் பாராட்டும் இவனுக்கும் பொருத்தமேயில்லையே!

 

“தேங்க் யூ! தேங்க் யூ சோ மச்! யுவர் குட் நேம் பிளீஸ்?” என்றபடி கைநீட்டியவனின் கரத்தைப் பற்றி, “அயம் ஜேகே! ஜெயகாந்தன்!” என்றபடி, குலுக்கினான் அவன்.

 

‘அட லூசுப்பயலே! இதத்தானேடா அன்னைக்கு நானும் கேட்டேன். என்னவோ உன் வீட்டுச் சொத்தை கேட்ட மாதிரி அந்தத் துள்ளுத் துள்ளின!’

 

அவளுக்கு ஏனோ அவனிருக்குமிடத்தில் தானும் இருக்க முடியும் போலில்லை.

 

முதல் கோணல் முற்றிலும் கோணல் தானே!

 

அவர்கள் இருவருக்குமான அறிமுகமே அபஸ்வரமாய் ஒழித்துவிட்டதாலோ என்னவோ அந்தக்குரல், அவன், அவனது பேச்சு எல்லாமே அவளை அமைதியாக இருக்கவிடாமல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. என்னவோ ஒரு அலைப்புறுதல். ஆழ்மனம் எங்கோ ஓடிவிடத் துடித்தது.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், முடியாமல், “அலட்டி நேரத்தை ஒட்டாம வா நாம இந்த ஊரைச் சுத்துவோம்!” என்று ஷியாமின் கையைப் பிடித்து இழுத்தபடி எழுந்துவிட்டாள்.

 

“இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கதான இருக்கப்போற. ஊர எப்பவும் பாக்கலாம். இப்ப இருந்து நம்மகூட பேசு!” என்றார், விக்ரமன். அவருக்கு அவளைத் தன்னருகிலேயே வைத்திருக்க வேண்டும் போலிருந்தது. அவள்தான், கைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாத பட்டாம்பூச்சியாயிற்றே!

 

“இன்னும் கொஞ்ச நாளைக்கு நீங்களும் இங்கதான இருக்கப்போறீங்க. சோ.. எப்ப வேணா பேசிக்கலாம் இல்லையா!” உதட்டினில் வழிந்த ஏளனச் சிரிப்புடன் அவர் சொன்னதையே திருப்பிப் படித்தாள், அனன்யா.

 

“தமிழ்நாடே கொண்டாடும் நடிகைக்கு நாகரீகம் தெரியாது போல!” உதட்டோரம் வளையச் சொல்லிக்கொண்டு எழுந்து, “விட்டா ஆள் நிலத்தில விழுந்துகிடந்து அழும் போல! அதனால இப்பப் போயிட்டு வாங்க ஷியாம். நாம பிறகு பேசிக்கலாம்.” என்று, அவள் திருப்பிக்கொடுக்கச் சந்தர்ப்பமே கொடுக்காமல் சொல்லிவிட்டு ஜேகே முதலாவது ஆளாக விடைபெற்றுச் சென்றிருந்தான்.

 

ஊமையாய் மனம் அடிவாங்க அப்படியே நின்றுவிட்டாள் அனன்யா.

 

அன்று அவன் குறைந்தபட்சமாக கையையாவது தந்துவிட்டிருக்க, இன்று அவர்களோடு அவளும் கலந்துகொண்டிருப்பாள். அவனே ஆரம்பித்து வைத்துவிட்டு, என்னவோ அவளுக்கு நாகரீகமே தெரியாது என்பதுபோல் உருவகப்படுத்திவிட்டுப் போகிறானே!

 

இயல்பில் மென்மையான மனம் கொண்டவளுக்கு அவனை இன்னுமே பிடிக்காமல் போயிற்று!

 

காட்டேஜ் திரும்புகையில் இவளைப் பார்ப்பதும் வீதியைப் பார்ப்பதுமாக வந்துகொண்டிருந்தான் ஷியாம்.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் நின்றுவிட்டாள்.

 

“எதுக்குடா என் முகத்தையே பாத்துட்டு வற? இப்ப என்ன தெரியணும் உனக்கு?”

 

“ஒண்ணுமில்ல வா!”

 

“சொல்லு ஷியாம்!”

 

எப்படிக் கேட்பது என்று அவன் தடுமாறுவது தெரிந்தது. எதற்கு இந்தத் தடுமாற்றம் என்று அவள் ஊகிக்க முனைகையிலேயே, “நீ விட்டிருந்தா விக்ரமன் அண்ணாகிட்டயே கேட்டிருப்பேன். ஆனா..” என்று தோள்களைக் குலுக்கிவிட்டு, “அர்ஜுன் பத்தித் தெரியணும். அவன் எப்படி இருக்கான். யாராவது கான்டாக்ட்ல இருக்கீங்களா? ஃபோன் நம்பர் தெரியுமா?” என்று, இவற்றைத்தான் கேட்க நினைத்தேன் என்று கைகளை விரித்து உணர்த்தினான் ஷியாம்.

 

“ஓ!” என்றவள், நடக்கத் தொடங்கியிருந்தாள், வேகமாக.

 

சற்றுத் தயங்கி, “சாரி!” என்றான் ஷியாம்.

 

“எதுக்கு?” நின்று புருவம் சுருக்கிக் கேட்டாள், அனன்யா.

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஷியாம் நிற்க, “உன் ஃபிரென்ட் பத்தி நீ கேக்குற. அதுக்கு எதுக்கு சாரி ஷியாம்? நான் கான்டாக்ட்ல இல்ல. சோ எந்த விசயமும் தெரியாது. சவீதாக்கா கண்டிப்பா கான்டாக்ட்ல தான் இருப்பாங்க. அவங்கக் கிட்ட கேளு, கிடைக்கும்.” என்றாள், நேர்பார்வையில்.

 

அவள் முகத்தையே கூர்ந்தான் அவன். உன் நண்பன் என்று மட்டுமே சொல்கிறாள். முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவும் இல்லை. மறந்துவிட்டாளா மறைக்கிறாளா? எதையும் அறிய முடியவில்லை. “நான் அவன்கிட்ட பேசலாமா? உனக்கு ஓகேயா?” மெல்லக் கேட்டான்.

 

“நீ என்ன லூசா? உன் ஃபிரென்ட்கிட்ட நீ பேசுறதுக்கு எதுக்குடா என் பர்மிசன்?” என்றுவிட்டு நடந்தவளைப் பிடித்து நிறுத்தினான் ஷியாம்

 

“என்கிட்ட எதையும் மறைக்கப் பாக்காத சிட்டு. சொல்லு, நீ எல்லாத்தையும் மறந்திட்டியா?”

 

அப்போதும் அவள் விழிகளில் எந்தச் சலனமும் இல்லை.

“மறக்கலடா! நிஜமாவே மறக்கவும் மாட்டேன். அதுக்காக பழசை நினைச்சுத் தவிச்சிட்டு இருக்கேன்னு நீ நினைச்சா எனக்குச் சிரிப்புத்தான் வரும். படிச்ச பாடத்தை மறக்கச் சொல்லுறியா? மறந்தா மறுபடியும் அதே தப்புப் பண்ண சான்ஸ் இருக்கு. மறக்காம இருக்கறதுக்கு இதுமட்டும் தான் ரீசன்.” நீ நம்பினால் நம்பு இல்லாவிட்டால் போ என்பதுபோல அவள் நடக்கத்தொடங்கிவிட, அவளின் அந்தத் தெளிவு அவனுக்கும் சந்தோசம்.

 

“அயாம் வெரி மச் பிரவுட் ஆப் யூ!” என்றான் அவன் சந்தோசமாகவே.

 

அதேபோல உடனேயே சவீதாவுக்கு அழைத்து அர்ஜுனின் நம்பரையும் வாங்கிக்கொண்டான்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!