அத்தியாயம் 6
காட்டேஜ் வந்ததும் ஷியாமிடம் எதுவும் சொல்லாமல், அவன் தன்னோடு வந்ததையே உணராமல் சென்று மறைந்தவளை நின்று பார்த்துவிட்டுத் தன்னுடயதுக்குள் நுழைந்துகொண்டான் ஷியாம்.
எதையும் காரணமில்லாமல் செய்கிறவர் அல்ல விக்ரமன். ஆயினும் இனி எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கிப் போகிறவளை எதற்காக வலைவீசிப் பிடித்திருக்கிறார்? அவளை அவள் போக்கில் விடலாமே என்பதுதான் அவனுக்கும். சிந்தனைகளினூடு குளிக்கச் சென்றான்.
அங்கே தன்னறையில் சில்லென்று தாக்கிய தண்ணீரின் அடியில் நின்றவள் தேகம் இறந்தகாலத்தின் மரணவலியில் நடுங்கிக்கொண்டிருந்தது. அதுவும் விக்ரமனின் கேள்விக்குப்பிறகு அர்ஜுனைப்பற்றி ஷியாம் விசாரித்தபிறகு காயம் இன்னுமே கீறப்பட்டிருந்தது.
வெற்றி பெற்ற, மின்னும் தாரகையாக மட்டுமே பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவள் தோற்றுப்போனவள்! வாழ்க்கையில் பலமாகத் தோற்றுப்போனவள்! அதெல்லாம் அவள் மட்டுமே அறிந்தவை.
ஓடி ஓடி முடியாமல் இனி ஓடுவதற்கு இடமில்லை என்கிற விளிம்பு நிலையில், என்னதான் வருகிறது என்று பார்த்துவிடுவோம் என்கிற இமாலயத் துணிச்சல் ஒன்று வரும். அந்தத் தைரியம் தான் அவளிடம் இருப்பது! அப்படி இனி எது வந்தாலும் என்னால் எதிர்கொள்ள இயலும் என்று நம்பிக்கொண்டு இருந்தவளுக்கு இந்தப் பலகீனம் பெரும் தோல்விதான்.
தாய் மடி தேடும் சேயைப்போன்று அவளின் ஆழ்மனது எதையோ தேடி அலைந்தது. சனக்கூட்டத்தின் மத்தியில் இறுக்கமாய்ப் பற்றியிருந்த விரல் விடுபட்டுத் தொலைந்துபோனால் குழந்தைக்கு எப்படியிருக்கும். அப்படி இருந்தாள். கண்ணை விட்டு மறைந்துபோன அந்த விரல் எங்கே? மனம் கலங்கிப்போகும் ஒவ்வொரு முறையும் ஆறுதல் தந்த அந்த விரல் எங்கே? அவளின் தேவை எது? அவளுக்கே தெரியவில்லை. ஏதோ ஒன்று! அவளை அமைதிப்படுத்தும் ஏதோ ஒன்று எங்கேயோ நின்றுகொண்டு அவளோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது!
உள்ளமும் உடலும் முற்றிலும் தளர்ந்து போயிருக்க, குளித்துவிட்டு வெளியே வந்தவளைக் காண்பதற்காகக் காத்திருந்தாள் ஒரு பெண். கேள்வியாக அவள் பார்க்க, “உங்க காலுக்கு ஆயில் கொண்டு வந்திருக்கேன் மேம்!” என்றாள் அவள்.
ஷியாம் அனுப்பியிருக்கிறான்! நண்பனின் புரிந்துணர்வில் தன் துயரங்களைக் கூட அந்தக்கணம் மறந்து மிகவுமே இதமாக உணர்ந்தாள் அனன்யா. ஆயிலுக்காக அவள் கை நீட்ட, “நோ மேம்! நீங்க இந்த சேர்ல இருங்க, நான் மசாஜ் செய்து விடுறன்.” என்று அவள் சொன்னபோதுதான், மசாஜுக்கான அத்தனை ஆயத்தங்களோடும் பெடிக்குர் செட்டும் அங்கிருப்பதைக் கண்டாள்.
சுகமாத்தான் இருக்கும்! ஷியாமுக்கு மனதில் நன்றி சொல்லியபடி அமர்ந்துகொள்ள, அப்பெண் ஆரம்பித்தாள்.
பாத மசாஜ் செய்யும் பாத்திரத்துக்குள் வெந்நீர் நிறைந்திருக்க அவளின் பாதங்களைத் தூக்கி அதற்குள் வைத்துவிட்டு மெசினை ஆன் செய்துவிட அது நீருக்குள் மெல்லிய அதிர்வலைகளைக் கிளப்பிப் பாதங்களைச் சுகமாக வருடி நனைக்கத் தொடங்கியது. மெல்லிய பிரஷ் ஒன்றை வைத்து அப்பெண் என்னவோ மாயாஜாலங்களை கால்களில் நிகழ்த்த, கற்பாறையின் மீது வெற்றுக்காலுடன் ஓடிய வலிக்குச் சொர்க்க சுகமாக இருக்க அப்படியே மெல்லச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டவள் தன்னை மறந்து அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.
புருவ மத்தியில் ஆரம்பித்து நெற்றியோராம் வரை யாரோ மெல்ல மெல்லப் பிடித்துவிட்ட இதத்தில் மெல்ல விழிகளைத் திறந்தபோதுதான் தான் நன்றாக உறங்கிப் போயிருந்ததையே உணர்ந்தாள் அனன்யா.
சட்டென்று நிமிர்ந்து, “சாரி! என்னை அறியாமையே தூங்கிட்டேன். அண்ட் தேங்க் யு சோ மச்!” என்றவளுக்கு, என்னவோ புதிதாகப் பிறப்பெடுத்ததுபோன்று உடலுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது. மனமும் முகம் பார்க்கும் கண்ணாடியாகத் தெளிந்திருந்தது!
“உங்க தூக்கம்தான் என் வேலைக்கான பரிசே! இப்ப, கிறீன் டீ குடிங்க மேம்!” என்று மேசையைக் காட்டி இதமாகப் புன்னகைத்துவிட்டு விடைபெற்றாள் அவள்.
“பேமெண்ட்?”
“சேர் பே பண்ணிட்டார்.” என்றுவிட்டுப் போய்விட்டாள் அவள்.
இதமான சூட்டில் இருந்த தேநீரைப் பருகியவள் நேரத்தைப் பார்த்துவிட்டுத் தயாரானாள். எதையும் சமாளிக்கலாம் என்கிற தைரியம் மீண்டிருந்தது. இரண்டு பெரிய சிவப்பு ரோஜாக்கள் கையாக இருக்க முழங்காலைத் தொட்டு நிற்கும் சிவப்பில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கவுன் ஒன்றை அணிந்து, முடியை அப்படியே உயரத் தூக்கி உச்சியில் கொண்டையாக்கி இருபக்கக் காதோரம் மட்டும் கொஞ்ச முடிகளை இழுத்துத் தோளை தொடவிட்டுக்கொண்டாள்.
ஷியாமுக்கு அழைப்போம் என்று ஃபோனைக் கையில் எடுத்தபடி வாசலுக்கு வந்தவள் அவனையே கண்டதும் முகம் மலர, “வாட் ஏ சப்ரைஸ்!” என்றான் அவன், அவளையே சுவாரஸ்யமாகப் பார்த்தபடி.
“என்னடா சப்ரைஸ்?” தானும் தன்னையே ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டுக் கேட்டாள் அனன்யா. ‘எப்பவும் மாதிரித்தானே வெளிக்கிட்டு இருக்கிறன்.’ அவள் விழிகளில் குழப்பம்.
“அழகா இருக்க. அதுதான்.” என்று சிரித்தான் அவன்.
“அப்ப இதுக்குமுதல் நான் அழகா இல்லையாடா? ராஸ்கல்!” அவள் அவனைத் துரத்தத் தொடங்க,
அவன்,“அழகா இருக்கிற பொண்ணுங்க அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்கிற பொண்ணுங்க உனக்கு அல்வா குடுத்திட்டு போவாங்க”
என்று பாடியபடி ஓட்டம் பிடித்தான்.
“கையில கிடைச்ச அல்வா சட்டிக்கையே போட்டு உன்ன அல்வா கிண்டுவன்!” என்று சிரித்தபடி ஓடியவளை முந்திக்கொண்டு சென்றது ஒரு கார். அந்தக் காருக்குள் ஜேகே இருந்தான். ஜேகேயின் பார்வை அவள் மேல் இருந்தது.
ஷியாமையும் தாண்டிய கணத்தில் குறுக்கே வழிமறித்துச் சடார் என்று பிரேக்கிட்டு நின்றது அவனுடைய கார்!
யார் என்று ஷியாம் பார்க்க, டிரைவர் சீட்டில் இருந்து இறங்கினான் ஜேகே. மற்றப் பக்கத்தில் இருந்து இறங்கிவந்து அவனருகில் நின்றுகொண்டான் அவனுடைய துவாரபாலகன்.
“இதென்ன சின்னப்பிள்ளைத்தனம்? ஏற்கனவே சின்ன ரோட்டு. வாகனங்கள் போய்வரும்னு தெரியும். இதுல பொறுப்பில்லாம ஓடிப்பிடிச்சு விளையாடுறீங்க ரெண்டுபேரும். பாதுகாப்பு இல்லைன்னு தெரியாதா?” அடிக்குரலில் சீறினான் அவன்.
அப்போதும் அவள் புறம் திரும்பவேயில்லை. ‘அவ்வளவு அலட்சியமாடா உனக்கு?’ ஒருமுறை புருவங்கள் இரண்டையும் ஏற்றி இறக்கி, அவனருகே நின்ற துவாரபாலகனைப் பார்த்துவிட்டு, “பன்னிதான் மச்சி பயந்துபோய் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிளா எதையும் எதிர்கொள்ளும்! நீ வாடா!” என்றுவிட்டுத் திரும்பியவள், துவாரபாலகனின் கண்கள் சிரிப்பில் பளிச்சிட்டதைக் கண்டுவிட்டாள்.
அவளுக்கும் சினமடங்கிச் சிரிப்பு வந்தது. சட்டென்று அவனைப் பார்த்துக் கண் அடித்தாள். அதிர்ந்து விழிகளை விரித்தவனை குறும்புச் சிரிப்புடன் உள்வாங்கியபடி ஷியாமை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.
“உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம்? அவர் சொன்னது நம்ம நல்லதுக்குத்தான்.”
“என்ன நல்லது? உனக்கு உன்னைப்பாக்கத் தெரியாதா? இல்ல எனக்கு என்னை பாக்கத் தெரியாதா? இல்ல இவ்வளவு நாளும் என்னையும் உன்னையும் அவர்தான் பாத்துத் தந்தாரா? சும்மா அந்தாளைப் பற்றிக் கதைக்காம பேசாம வாடா!” என்றுவிட்டு அவள் அவனைத் தாண்டிக்கொண்டு முன்னே நடக்க, “வரவர உனக்கு நல்லாவே கோபம் வருது!” என்று சிரித்தான் அவன்.
“அதாவது என்கிட்ட வருதே!” என்று அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தாள் அவள்.
அப்படியே நின்றான் ஷியாம். “பழசு எதையும் மறக்கலதான நீ?”
அவளும் நின்று அவனைப் பார்த்தாள். “ஏற்கனவே இதுக்குப் பதில் சொல்லிட்டேன், இப்ப வா!” என்றவள் விறுவிறு என்று நடக்க, அவளுக்கு ஈடு கொடுத்தான் ஷியாம்.
அவர்கள் விக்ரமனின் காட்டேஜுக்குச் சென்றபோது, ஜேகேயின் காரும் அங்கிருந்து அவன் வந்துவிட்டான் என்று அறிவித்தது. கடுப்போடு அதைக் கடந்து வீட்டுக்குள் சென்றாள்.
உள்ளே, மரத்திலான நீள்வட்ட மேசையில் உணவுவகைகள் அழகுற அடுக்கப்பட்டிருந்தது. நட்ட நடுவில் மெழுகுதிரி மெல்லிய ஒளியைச் சுகந்தத்தோடு பரப்பிக்கொண்டிருக்க, விக்ரமன் அமர்ந்திருந்தார். அவரின் இருபக்கமும் அவரது உதவி இயக்குனர்கள். ஒரு உதவி இயக்குனருக்குப் பக்கத்தில் துவாரபாலகனும் அவனருகே ஜேகேயும் அமர்ந்திருந்தனர்.
ஷியாம் முன்னே சென்று எல்லோருக்கும் கைகொடுக்க, அவனும் கொடுப்பது தெரிந்தது. ‘என்கிட்ட மட்டும் தான் உன் திமிர காட்டுவியா? இந்தமுறை இவனுக்கு நான் கை குடுக்கிறது இல்ல.’ என்று முடிவுகட்டிக்கொண்டு, “குட் ஈவ்னிங் கைஸ்!” என்றபடி அமரப்போக, அதற்குள் மற்ற இயக்குனரின் அருகில் ஷியாம் அமர்ந்ததில், ஷியாமுக்கும் அவனுக்கும் நடுவில்தான் அவள் அமரவேண்டியதாயிற்று!
அமர்ந்துவிட்டாள் தான். ஆனால், கைகால்களில் ஒரு நடுக்கம். என்னவோ எருமைமாட்டுக்குப் பக்கத்தில் கோழிக்குஞ்சை நிறுத்திவிட்டது போலிருந்தது. தெரியாமல் கை பட்டுவிடுமோ, காலை அசைக்கையில் கால் பட்டுவிடுமோ என்று அவள் இயல்பாகவே இல்லை. அவன், பப்பரப்பா என்று கைகால் எல்லாவற்றையும் பரப்பிக்கொண்டு பக்கத்தில் படுத்திருந்தான். ‘கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா இருடா!’ என்று பற்களைக் கடித்தவளுக்கு, ஷியாம் மீதும் கடுப்பு உண்டாயிற்று!
‘எருமையன்! இதுல அவன் இருந்திருக்கலாம் தானே!’ அருகில் இருப்பவனை எக்காரணத்தைக்கொண்டும் திரும்பிப் பார்த்துவிடக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு தலையை நிமிர்த்தினால், தன் விழிகளுக்குள் அவளை அப்படியே உள்வாங்கியபடி அமர்ந்திருந்தார் விக்ரமன்.
‘என்ன கொடுமடா இது! எந்தப்பக்கமும் திரும்ப முடியாம!’ இனம் புரியாத ஒரு சலிப்பு அவளை ஆட்கொண்டது. அவரோ, அவள் எப்போது பார்ப்பாள் என்று காத்திருந்தார் போலும், “இப்ப ஓகேயா?” என்று கனிவோடு விசாரித்தார்.
‘இல்லைன்னு சொன்னா என்ன செய்யப்போறீங்க?’ என்று விழி உயர்த்திப் பார்த்தவள், “நான் எப்பவும் ஓகே தான்!” என்றாள் நிமிர்ந்து அமர்ந்தபடி!
கோபத்துக்குப் பதிலாக அவள் பதிலை இரசித்துப் புன்னகைத்தார் விக்ரமன்.
“ஓகே கைஸ்! சூப் இருக்கு! இந்தக் கிளைமேட்டுக்கு அருமையா இருக்கும்!” பேச்சை ஆரம்பிக்கும் முகமாக மற்றவர்களை நோக்கி மாம்பழ வடிவில் இருந்த குட்டிக்குட்டி சூப் கிண்ணங்களை நகர்த்தினார் விக்ரமன்.
தன்னதைத் தானே எடுத்தவளின் ஃபோன் வைப்ரேட் செய்யவும், அவசரமாக யார் என்று பார்க்கையில் அவளின் கை அருகிலிருந்தவனை உரசிச்சென்றது. உடனேயே எழுந்து, “எக்ஸ்கியூஸ் மி!” என்றபடி கையில் ஃபோனுடன் அங்கிருந்து நடந்தான் அவன். கூடவே அவனுடைய துவாரபாலகனும்.
அப்படியே முகம் கன்றிச் சிவந்து போயிற்று அவளுக்கு! முக்கியமான ஃபோன் வந்ததால் எழுந்து போகிறான் என்பதுபோல் மற்றவர்களுக்கு இருந்தாலும், உண்மையான காரணம் அவளுக்குத் தெரியுமே! அவமானமாக உணர்ந்தாள் அனன்யா. அவள் மீது எதற்கு இத்தனை வெறுப்பு அவனுக்கு? பிறகும் எதற்கு அவளுடன் நடிக்க வந்தான்? நடிப்பில் கையைப் பிடிப்பதில் தொடங்கி கட்டியணைத்து ஏன் முத்தமிடுவது கூட வரலாமே. அப்போது என்ன செய்வானாம்? எல்லோர் முன்னும் அவமானப்படுத்துவானோ?
மனம் குமுறினாலும், மற்றவர்களிடம் தன் முகபாவத்தைக் காட்டாதிருக்க பெருமளவில் சிரமப்பட்டாள் அனன்யா. “சாரி கைஸ்!” என்றபடி திரும்பி வந்தவன் இப்போது உதவி இயக்குனரின் அருகில் அமர்ந்துகொள்ள, அவளருகில் பாதுகாவலன் அமர்ந்துகொண்டான்.
தீண்டவே தகாதவள் போன்று எதற்கு இந்த ஒதுக்கல்? அவள் விழிகள் அவனையே வெறித்தன. அவள் பார்க்கிறாள் என்று உணராமல் இருக்க முடியாது. இருந்தும் இவள் புறம் திரும்பாமல் அவன் இருந்த விதம் அவளுக்குள் நிமிர்வைக் கொண்டு வந்தது.
அவள் வெறுக்கும் நபர்களின் பட்டியலில் முதலிடத்தை நோக்கி மிகவேகமாக அவன் ஓடுவதாகப் பட்டது! அதுதான் நல்லது!
அதற்குமேல் அதைப்பற்றி அவள் சிந்திக்கவில்லை. இதுதான் நான். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? சந்தோசம். எல்லோருக்கும் எல்லோரும் பிடித்தவர்களாக இருப்பதில்லையே! அவனை வெறுப்புடன் நோக்கிவிட்டு முகம் திருப்பிக்கொண்டவள் நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள்.
உணவோடு உணவாக கதையை அங்கிருந்த எல்லோருக்குள்ளும் புகுத்தினார் விக்ரமன். ஒவ்வொரு காட்சிகளையும் விவரிக்கையில் அவர் விழிகள் அவளிடமே அதிகநேரத்தைச் செலவளித்தது. உணர்ந்தும் உள்வாங்க மறுத்து மெதுவாக உணவை எடுத்துக்கொண்டிருந்தாள் அனன்யா.

