அத்தியாயம் 3
அவன் தன்னை இயல்பாய்ப் பார்ப்பான் என்பதே அவள் எதிர்பாராதது. இதில இயல்பாக உரையாடினால், அதுவும் நன்றி சொன்னால்? வானத்தில் பறக்காத குறையாக அவள் உள்ளம் துள்ளியது.
இதைச் செய்யாமல் இத்தனை வருடங்களாக மனத்துக்குள் வைத்துப் புழுங்கி இருக்கிறோமே என்று நொந்தாள். இன்னுமின்னும் அவனருகில் இருக்கவும் அவனோடு பேச்சு வளர்க்கவும் ஆசை உண்டானது.
இத்தனை நாள்களாக ஒதுங்கியே இருந்ததில் அதை அவளால் செய்ய முடியவில்லை. ஆனாலும் ஒரு சிறகு முளைக்கும் உணர்வு. அதன் பிறகான நாள்களில் அவள் எதிரில் வந்தால் முகம் பார்த்தான், சில நேரங்களில் சிறு புன்னகையைக் கூடச் சிந்தினான்.
அதற்கே அபிராமி ஒருவித போதையேறிய உணர்வுடனேயே சுற்றினாள். கடந்துகொண்டிருப்பது ஒரு துக்க வீடு என்பதைக் கூட அடிக்கடி நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.
எல்லாவற்றையும் விட அவனிடம் தெரியும் நிமிர்வும், முன் போன்று அவள் பெரிய இடம் என்று கருதி ஒதுங்கிப் போகாமல் நடப்பதும் இன்னுமின்னும் கவர்ந்தன.
அன்று எட்டுச் செலவு. மாதவனும் வந்திருப்பதைக் கண்டு திகைத்தாள். இவனை இதுவரையில் அவள் பார்க்கவில்லையே. சயந்தன் தேடிப்போய்க் கதைப்பதைக் கண்டு அவனுக்குத் தெரிந்தவன் என்று புரிந்தது.
அன்றும் எல்லோரையும் பார்த்து பார்த்துக் கவனித்த உதயன் எப்போதும் போன்று தன்னைக் கவனிக்க மறந்தான். ஆரூரனோடு இருந்தாலும் அவனைக் கவனிப்பதைத் தவிர்த்து அபிராமிக்கு வேறு வேலை இல்லையே.
ஒரு சிறுவனை அழைத்து, ‘நான் தந்தேனாம் என்று சொல்லிக் கொடு’ என்று சொல்லி, குளிர்பானத்தை அவனிடம் கொடுத்து விட்டுவிட்டு மறைந்து நின்றுகொண்டாள்.
அவனும் அவள் பெயரைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அவன் பார்வை சுழன்று அவளைத் தேடியதைக் கண்டு மகிழ்ந்தாள்.
திடீரென்று பார்த்தால் அவள் முன்னால் நின்றான் அவன். திகைப்பும் தடுமாற்றமுமாக அவள் பார்க்க, “என்ன கவனிப்பெல்லாம் பலமா இருக்கு?” என்றான் அவன்.
“என்ர ஃப்ரெண்டுன்ர ஃப்ரெண்ட் எண்டுதான்.” அவன் அப்படி நேராகக் கேட்பான் என்று எதிர்பாராமல் தடுமாறினாலும் சமாளித்தாள்.
“அப்ப நாங்களும் ஃப்ரெண்ட்ஸ் ஆகுவமா?” அருந்திமுடித்த குளிர்பானப் போத்தலை அவளிடம் நீட்டியபடி வினவியவனின் கண்களில் நகைப்பிருந்தது.
அவளுக்கும் மெலிதாய்ச் சிரிப்பு வந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “அப்பிடியெல்லாம் முன்னபின்ன தெரியாத ஆக்களோட ஃப்ரெண்ட் ஆகேலாது.” என்று சிலுப்பிவிட்டு அவள் போக, அவன் உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்துபோனது.
அதன் பிறகு இருவர் பார்வையும் மற்றவரில் அவ்வப்போது மோதியது. அப்படி மோதும் ஒவ்வொரு பொழுதிலும் இருவர் விழிகளிலும் சிரிப்பு.
எதற்கோ மகளை விழிகளால் தேடிக்கொண்டு திரும்பிய தேவகி, அவள் சிரிப்புடன் எங்கோ பார்ப்பதைக் கவனித்தார். இதென்ன துக்க வீட்டில் இப்படி ஒரு மலர்ந்த சிரிப்பு என்று எண்ணியபடி தானும் அவள் பார்வையைத் தொடர்ந்தவர் அதிர்ந்துபோனார். அங்கே உதயனும் அவளிடம் கண்ணால் நகைத்துக்கொண்டிருந்தான்.
மறுபடியுமா என்று அவர் உள்ளம் அதிர்ந்துபோனது. அன்றாவது அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. மகள் அவனைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள் என்று கண்டுதான் ஷர்மினி மீது அபாண்டமாகப் பழியைப் போட்டு, ஒரு சண்டையை உருவாக்கி, அவனை அவர்கள் வீட்டுப் பக்கம் வராதபடிக்குச் செய்தார். ஆனால் இன்று, அவனும் அவளோடு கண்களால் கதைக்கிறானே.
அவன் வேறு முன்னரை விடவும் வாட்ட சாட்டமாகவும் பெண்களின் மனத்தைக் கவரும் நாயகனாகவும் இருந்தான். அவரின் அடிவயிறு கலங்கிற்று. திரும்பி மகள் எங்கே என்று பார்த்தார். ஷர்மியின் மகனோடு அமர்ந்திருந்தவள் பார்வை அப்போதும் அவனைத்தான் தொடர்ந்துகொண்டிருந்தது.
அதன் பிறகு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மகள் ஒரு திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள் இல்லையே என்று ஏங்கிப் போயிருக்கும் இந்த நாள்களிலும் உதயனை அவள் கட்டுவதிலோ, இலங்கையில் அவள் வாழ்வதிலோ அவருக்கு உடன்பாடில்லை.
மகனருகில் அவள் போய்விட்டால் என்றால் அவர்களின் காலத்துக்குப் பிறகும் மகன் அவளுக்குத் துணையாக இருப்பான். அதைவிட மகன் வெளிநாட்டில் மிக நல்ல வாழ்க்கையை வாழ, இங்கே அவள் மாத வருமானத்தில் கணக்குப் பார்த்து வாழும் வாழ்க்கையை அவர் விரும்பவில்லை.
இனியும் உதயன் இருக்கும் இடத்தில் அபிராமியை வைத்திருப்பதில் உடன்பாடில்லை. முன்னர் போலவே இந்த முறையும் முளையிலேயே இதைக் கிள்ள ஆசைப்பட்டார்.
ஷர்மினி எப்போது சுவிசுக்குத் திரும்புகிறாள் என்று யாரோ கேட்டதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர், உதயன் அந்தப் பக்கத்தால் போவதைக் கவனித்துவிட்டு, “மகளுக்கும் மகன் வெளிநாட்டிலதான் பாக்கிறான். கிட்டத்தட்ட முற்றான மாதிரித்தான். இந்த வருசம் எப்பிடியும் அவாவும் போயிடுவா. அப்பிடியே எங்களையும் அங்கேயே கூப்பிடப் போறானாம்.” என்றார் சற்றுச் சத்தமாகவே.
இது எப்போது என்று அதிர்ந்த அபிராமி வேகமாக உதயனைத்தான் பார்த்தாள். அவனுக்கு அவர் சொன்னதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. கூடவே, அவரின் எண்ணவோட்டத்தையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. இதுவரையில் அவன் அப்படி ஒரு கோணத்தில் அபிராமியைப் பார்த்ததில்லை.
அப்படி இருக்க இந்தப் பெண்மணி ஏன் குத்தி முறிகிறார் என்றுதான் தோன்றிற்று. திரும்பி வருகையில் அபிராமி இருக்கும் பக்கமாக வந்து, “அப்பிடியே இங்க இருக்கிற சொத்துப்பத்து, வீடு வாசலையும் தூக்கிப் பார்சல் போட்டுவிட்டா அதுவும் அங்க வந்திடும். நாங்களாவது நிம்மதியா இருப்பம்.” என்று முணுமுணுத்தபடி கடந்தான்.
அபிராமியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆனாலும் அவனை முறைத்தாள்.
“என்னவோ அவவின்ர மகள் பெரிய அழகு சுந்தரி எண்டு நினைப்பு. சும்மா தந்தாலும் வேண்டாமாம் எண்டு சொல்லிவிடும்.” அடுத்த முறை அவள் அருகால் போகையில் அவன் சொல்லிவிட்டுப் போகவும் அனிச்சையாய் அவள் முகம் வாடிப்போயிற்று.
ஒரு சாதாரணக் கேலிப்பேச்சு, அதைப் பெரிதாக எடுக்காதே என்று அறிவு எடுத்துரைத்தபோதிலும் அதிலிருந்து அவளால் வெளிவர முடியவில்லை. அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் எழுந்து சென்றாள்.
உதயனும் அதை வேண்டுமென்று சொல்லவில்லை. தேவகி அம்மாவின் பேச்சை இலகுவாய் எடுத்துக்கொண்டிருந்தாலும் மெலிதாகச் சீண்டப்பட்டிருந்தான்.
முன்னர் ஷர்மினி மீது அவர் அபாண்டமாகப் பழி போட்டு, ஆழமாய் அவளைக் காயப்படுத்தி, சீராளன் ஷர்மினி இருவருக்குமிடையில் பிரச்னையை உருவாக்கக் காரணமே அவன்தான் என்று அப்போதே அவனுக்குத் தெரியும்.
அப்படி இருக்க இன்னுமே மாறாமல், அதே வேலையை இப்போதும் பார்க்கிறார் என்கிற மெல்லிய எரிச்சலில்தான் அப்படிச் சொல்லியிருந்தான்.
அபிராமியின் முகம் சட்டென்று சுருங்கியதையும் கவனித்தான். எனக்கென்ன, உன் அம்மாவின் பேச்சுக்குப் பதில்தான் சொன்னேன் என்று கடக்க முடியவில்லை. கடந்த இரண்டு மூன்று நாள்களாக மெல்லிய சிரிப்பும் சீண்டலுமாக இனிமை சேர்த்த பெண்ணின் முகம் வாடியது உறுத்த, மெல்லத் திரும்பிப் பார்த்தான்.
அவள் இருந்த இடத்தில் இப்போது இல்லை. அவன் சொன்னதில் காயப்பட்டுப் போனாளோ?
அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. மற்றவர்களுக்கு உறுத்தாமல், முக்கியமாகத் தேவகி அம்மாவின் கண்ணில் படாமல் அவளைத் தேடினான்.
வீட்டின் பின்னால் சயந்தனின் மகள் இதழினியையும் ஆரூரனையும் விளையாட விட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். முகம் வாடியிருந்தது. பிள்ளைகளில் பார்வை இருந்தாலும் அவள் இங்கில்லை என்று சுளித்திருந்த புருவங்கள் சொல்லின.
இவனைக் கண்டுவிட்டு, “மாமா!” என்று ஓடி வந்து தாவி ஏறினாள் இதழினி. அவளை வாரித் தூக்கிக்கொண்டு அபிராமியைப் பார்த்தான். சின்னவள் சத்தத்தில் திரும்பிப் பார்த்த அபிராமியும் எதையும் காட்டிக்கொள்ளாமல் என்ன என்பதுபோல் பார்த்தாள்.
அவனுக்குள் மெல்லிய கோபம் மூண்டது. அவள் அவனிடம் கோபம் காட்டியிருக்கலாம். இல்லை முகம் திருப்பியிருக்கலாம். ஏன் அப்படிச் சொன்னாய் என்று கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்கிற மாதிரியான பாவனை எதற்கு?
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு இதழினியோடு திரும்பி நடந்தான்.
அது அபிராமியைப் பாதித்தது. அதில், “என்ன… ஏதும் வேணுமா?” என்றாள் சட்டென்று.
“சின்னதா ஒரு சிரிப்பு வேணும். தருவீரா?” என்றான் நின்று திரும்பி.
அவள் உதட்டைப் பற்றியபடி முகம் திருப்பினாள்.
“சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னதை எல்லாம் இப்பிடித்தான் சீரியஸா எடுக்கிறதா?”
விளையாட்டுப் பேச்சுத்தான். அதையெல்லாம் ஒரு விடயமாக எடுக்கத் தேவையும் இல்லைதான். என்ன, அவள் மனத்தில் அவனால் உண்டான மிகப்பெரிய காயம் ஒன்று ஏற்கனவே இருந்ததில் இப்போதும் மனத்தளவில் சுருண்டுபோனாள்.
இதையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்? ஆனால், இப்படி அவளைக் கவனித்து, அவன் தேடி வந்து கோபம் கொள்வது இதம் சேர்த்ததில், “அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” என்று முணுமுணுத்தாள்.
“இத நான் நம்போணும்?” என்றான் அவன் உடனேயே. “சும்மா சும்மா என்னவோ அவவின்ர மகளுக்குப் பின்னாலேயே அலையிற மாதிரிக் கதைக்கக் கூடாதுதானே? முதல் நான் எப்பயாவது அப்பிடி நடந்திருக்கிறனா? சும்மா இருக்கிறவனைப் பாத்து அப்பிடிச் சொன்னா எரிச்சல் வராதா?” இப்போதும் அந்தக் கோபம் குரலில் தெறிக்க வினவினான்.
“அதுக்கு நான் என்ன செய்தனான்?” என்றவளுக்கு என்ன முயன்றும் முடியாமல் குரல் அடைத்துக்கொண்டது.
அவளையே பார்த்தான் உதயன். வெளிப்பார்வைக்குத் திடமானவளாகவும் திமிரானவளாகவும் தெரிந்த ஒருத்தியின் உள்ளம் இந்தளவில் மென்மையானதா? அவனால் நம்ப முடியவில்லை. ஆனாலும் அவள் வருந்துவது பிடிக்காமல், “அதான் சும்மா சொன்னனான் எண்டு சொல்லுறன்தானே.” என்றான் சமாதானமாக.
“அப்ப சும்மா வந்தா என்னை ஏற்பீங்களா?” தன்னை மீறிக் கேட்டுவிட்டு, கேட்டதை எண்ணி அதிர்வுடன் அவள் பார்க்க, அவன் நிலையும் அதேதான். பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்.
“அது… அது…” என்றவளுக்குச் சும்மா சொன்னேன் என்று சொல்ல வரவில்லை. அவன் வேறு மறுப்பாக ஏதும் உரைத்துவிடுவானோ என்கிற பயத்தில் உள்ளே ஓடிப்போனாள்.
அங்கே சின்னவர்களுடனேயே அமர்ந்துவிட்டான் உதயன். நிச்சயமாக அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ஒருமாதிரி பிடிக்காத ஏதோ ஒன்று நடந்த உணர்வு.
இந்த நான்கைந்து நாள்களாகத்தான் அவர்களுக்குள் ஒரு சுமூகமான உறவே உண்டாகியிருக்கிறது. அதற்குள் அவள் மனத்தில் அவன் இடம் பிடித்தானா? நிச்சயமாக இருக்காது. அப்படியானால் அதற்கும் முதலா என்று ஓடியதும் மனம் அதிர்ந்தது.
அப்படியானால் எப்போது? ஷர்மிக்குச் சீராளனோடு திருமணமான காலத்திலா? நிச்சயமாக அப்படி ஏதோவாகத்தான் இருக்க வேண்டும்.
அதனால்தான் தேவகி அம்மா அப்படி நடந்தாரோ, இன்றும் அவராகத்தானே தேவை இல்லாமல் கதைத்தார். அதனால்தான் அவனை மனத்தில் வைத்துக்கொண்டு திருமணமே வேண்டாம் என்று இத்தனை வருடங்களாக இருந்தாளோ என்றெல்லாம் யோசித்தவனுக்கு வியர்க்கும் போலிருந்தது.
பின்னே ஒரு பெண் தன்னை நினைத்துக்கொண்டு வருடக்கணக்கில் காத்திருந்திருக்கிறாள் என்றால் எப்படி? என்னவோ உடல் எல்லாம் சிலிர்க்கும் உணர்வு அவனுக்கு.
அப்படித்தான் என்றால் அவள் ஏன் அதை அவனிடமோ ஷர்மினியிடமோ தெரியப்படுத்தவில்லை? தயாபரி அம்மா இறக்கும் வரையில் கூட அவளாக அவன் கண்களில் பட்டது கூட இல்லையே.
அப்படித்தான் என்று நினைக்கவும் முடியாமல், அப்படி இருக்காது என்று சொல்லவும் முடியாது அல்லாடினான்.
அவன் நிம்மதியே பறிபோனது. இந்தப் பெண் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறாள் என்று இருந்தது. சயந்தன் தேடிக்கொண்டு வரவும் எழுந்துபோனான்.
அபிராமிக்கு உடலும் உள்ளமும் படபடத்துப்போனது. அதையும் தாண்டிக்கொண்டு ஒரு ஆசுவாசம். உள்ளத்தைச் சொல்லிவிட்டாளே. அவளாகவே யோசித்து, அவனிடம் சொல்ல வேண்டும் என்று தயாராகி எல்லாம் என்றைக்குமே அவளால் சொல்ல முடியாது.
ஒரு பயம் உள்ளே ஆட்டினாலும் நடந்தது நல்லதற்கே என்று எண்ணினாள். என்ன சொல்லுவான், ஏதும் மனம் நோவதுபோல் சொல்லிவிடுவானோ என்று தோன்றினாலும் ஒரு ஆனந்தம். அவன் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்று அறிய ஆவல் கொண்டாள்.
ஆனாலும் அதன் பிறகு அவன் முன்னே அவள் வரவில்லை.
தேவகி அம்மாவால் அங்கே இயல்பாக இருக்க முடியவில்லை. மகளை எப்படி இங்கிருந்து அனுப்பலாம் என்று மண்டையை உடைத்தவர் வேகமாக யோசித்து, விறுவிறு என்று கணவருக்கு உணவைக் கட்டினார். அவர் அன்று உடல் முடியவில்லை என்று முறைக்காக வந்துவிட்டுப் போனது அவருக்கு நல்ல வாய்ப்பாகிப் போனது.
“அபி!” என்று அவளை அழைத்து, “அப்பா பசியோட இருக்கப்போறார் பிள்ளை. நேரம் செண்டு அவர் சாப்பிடுறதும் நல்லமில்லை. கொண்டுபோய்க் குடுத்துப்போட்டு நீ வீட்டையே நில்லு. நாளைக்கு வேலை எல்லா.” என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தார்.

