எண்ணமெல்லாம் நீ 8 – 1

அத்தியாயம் 8

 

 

அபிக்குச் சுவாசிப்பதே சிரமம் போன்று நெஞ்சை அடைத்தது. அழ வேண்டும் போலிருந்தாலும் அழுகை வரவில்லை. எவ்வளவு பெரிய அடி!

 

அவளை அவனுக்குப் பிடித்திருந்தும் அதைச் சொல்ல விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறான் என்றால் அவளை எந்த இடத்தில் வைத்திருந்திருக்கிறான். இப்போது நினைக்கையிலும் முகம் கன்றிச் சிவந்தது.

 

அன்றைக்கு வேறு நிறைய யோசிக்க வேண்டும் என்று சொன்னானே. அவன் யோசிக்க நினைத்தது, அல்லது யோசித்துக்கொண்டு இருந்தது இதற்குத்தானா?

 

இப்படி ஒரு அவமானத்தை அபிராமி தன் வாழ்நாளில் எதிர்கொண்டதே இல்லை. அந்தளவில் அவள் எதில் சரியில்லாதவளாம்? குணத்திலா, தரத்திலா, பழக்கவழக்கத்திலா?

 

பணம், பகட்டைப் பாராமல் மனிதர்களின் குணத்தை வைத்துப் பழக வேண்டும் என்று ஒரு காலத்தில் அவளுக்குத் தெரியாமல் இருந்தது உண்மைதான்.

 

அந்தக் காலத்திலுமே தன்னை விடக் குறைந்தவர்கள் என்று எண்ணியவர்களைத் தவிர்த்திருக்கிறாளே தவிர்த்து, ஏளனமாகவோ, அவர்கள் மனம் புண்படும்படியாகவோ நடந்ததோ, பேசியதோ இல்லை. அப்படித்தான் என்றால் அமிர்தா, ஷர்மினியோடு எல்லாம் எப்படி நட்பாகப் பழகியிருப்பாள்? அப்படி இருக்க… மேலே யோசிக்கக் கூடப் பிடிக்கவில்லை.

 

எவனோ ஒருவன் எதையோ சொன்னான் என்றால் அதைத் தூக்கிப் பிடித்து உன்னை நீயே வருத்துவாயா, விட்டுத்தள்ளு என்று அறிவு எடுத்துரைத்த போதும் முடியவில்லை. அவன் எவனோ ஒருவன் இல்லையே! அவள் உள்ளத்தைத் தொட்டவனாயிற்றே!

 

அவள் மீது அசிங்கமாகப் பார்வையைப் படர விடும் மாதவனைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு இயல்பாக வாழ்ந்தவளால் உதயனின் வார்த்தைகளை அப்படிக் கடக்க முடியவேயில்லை. அவளின் தன்மானம் மொத்தமாய் அடிவாங்கிற்று.

 

 

*****

 

அமிர்தாவுக்கு ஏனோ எல்லோருமாகச் சேர்ந்து அபியை மட்டும் தனியாக விட்டுவிட்டு வந்தது உறுத்தியது. மாதவன் எப்படியானவன் என்று தெரியாது. ஆனால், அபி சற்றே தராதரம் பார்ப்பாளே தவிர்த்து, இப்படி நடக்கிறவள் அல்லள் என்று தெரியும். அதுவும் இப்படியான ஒரு விடயத்தைப் பெரிதாக்குகிறவளே இல்லை என்பதில் அவளைத் தேடிக்கொண்டு போனாள்.

 

அங்கே அபி இல்லை. வீட்டின் பின் பக்கம், முன் பக்கம் எங்கும் காணவில்லை. அவளை ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. மாதவன் அப்போதுதான் உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டுக்கொண்டிருந்தான். உதயனும் ஷர்மினியும் அவனைக் கவனிப்பதில் இருந்தனர். அவர்களுக்கு நடந்த பிசகைச் சமாளிக்கும் அளவுக்கு மாதவனைக் கவனிக்கவேண்டிய கட்டாயம்.

 

அவன் புறப்பட்டதும் ஓடி வந்து, “ஷர்மி, அபி எங்க? அவளை இஞ்ச எங்கயும் காணேல்ல.” என்றாள் அவசரமாக.

 

சட்டென்று அவர்கள் இருவர் முகத்திலும் ஒரு பதற்றம்.

 

“அப்பிடி எங்க போகப் போறாள்? மாமி இஞ்சதானே நிக்கிறா.” என்றபடி சத்தமில்லாமல் தேவகி அம்மா உறங்கும் அறையை எட்டிப் பார்த்தாள் ஷர்மினி. அங்கு அவள் இல்லை.

 

இதற்குள் வேகமாக வீட்டைச் சுற்றிக்கொண்டு வந்த உதயன் தன் வீட்டிலும் பார்த்துவிட்டு வந்தான்.

 

“ஃபோன் பண்ணினாலும் ரிங் போகுது, எடுக்கிறாள் இல்ல.” என்று சொன்னாள் ஷர்மினி.

 

அந்த நொடியிலிருந்து அந்த வீட்டின் தேடுபொருளானாள் அபி.

 

“நம்பரைத் தா. நான் எடுத்துப் பாக்கிறன்.” ஷர்மி என்று தெரிந்து எடுக்காமல் இருக்கிறாளோ என்றெண்ணி தன்னுடையதில் இருந்து அழைத்தான். அப்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

 

எல்லோருக்குமே நடுங்கியது. தேவகி அம்மா எழுவதற்குள் அவளைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். இல்லையோ எல்லோரையும் உண்டு இல்லை என்றாக்கிவிடுவார்.

 

அதுவும் சீராளன் என்ன சொல்லுவான் என்றே தெரியாது. அதை நினைக்கவே ஷர்மிக்கு நடுங்கியது. அந்தப் பயத்தில், “என்னடி இவள் ஏன் இப்பிடிச் செய்றாள்?” என்றாள் அமிர்தாவிடம்.

 

“எனக்கு என்னவோ நீ அவள் என்ன சொல்லுறாள் எண்டு நிதானமாக் கேட்டிருக்கோணுமோ எண்டு இருக்கு ஷர்மி.”

 

ஒருவித அழுத்தத்துடன் அமிர்தா சொல்ல இன்னுமே பதற்றமானாள் ஷர்மினி.

 

“மாதவன் அண்ணாவை அண்ணாக்கு நல்லாத் தெரியும் அம்மு. நல்ல மனுசன். எதேற்சையா நடந்த ஒண்ட பெருசாக்கிறாள் எண்டுதானே…” என்றவளை இடைமறித்து, “அப்ப அபி இப்பிடி நடக்கிறவள் எண்டு சொல்லுறியோ?” என்று பட்டென்று கேட்டாள் அமிர்தா.

 

அதுதானே என்று வேறு அவள் உள்ளம் அடித்துக்கொண்டது. “செத்தவீட்டுக்கு வந்தது போதாது எண்டு அந்தியேட்டிக்கும் எங்களை மதிச்சு வந்த மனுசனிட்ட இப்பிடி நடக்கிறாளே எண்டுற பதட்டத்தில் வேற யோசிக்கேல்ல அம்மு நான். அதைவிட மாமி எழும்ப முதல் சமாளிக்க நினைச்சன்.” என்றவளுக்குத் தவறிழைத்துவிட்டோமோ என்கிற பயம் இப்போது பெரிதாகப் பிடித்துக்கொண்டது.

 

இங்கே தனியாக வந்த உதயனும் திரும்ப திரும்ப அவளுக்கு அழைத்துக்கொண்டிருந்தான். அவள் ஏற்பதாக இல்லை. அவனைக் கோபமும் தவிப்பும் சரி சமமாய்த் தாக்கின. நன்றாக இருட்டிவிட்ட இந்த நேரத்தில் அவளை எங்கு என்று தேடுவான்.

 

அந்த அழுத்தத்தை அதற்குமேல் தாங்க முடியாமல், “அபி, தயவுசெய்து ஏதாவது நாடகமாடி காலத்துக்கும் ஏனடா இவளைத் திரும்பிப் பாத்தன் எண்டு நினைக்க வச்சிடாதயும். உம்மட விளையாட்டுக்கெல்லாம் நான் ஆள் இல்ல. தயவு செய்து எங்க இருந்தாலும் ஆபத்தில்லாம இருக்கிறன் எண்டு எனக்குக் கூடச் சொல்ல வேண்டாம். ஷர்மிக்குச் சொன்னாலே போதும். திரும்பவும் அவளின்ர வாழ்க்கையோட விளையாடாதேயும். இனி நீர் இருக்கிற திசைக்கே நான் வரேல்ல.” என்று எழுதி, ஒரு கும்பிடும் எமோஜியும் போட்டு அனுப்பி வைத்தான்.

 

 

*****

 

காயப்பட்டுப்போன மனத்தையோ, அதனால் கசங்கிப்போன முகத்தையோ அங்கிருக்கும் யாருக்கும் காட்டப் பிடிக்காமல் அந்த இரவு நேரத்திலேயே தன்னை மறந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் அபிராமி.

 

தனியே ஓட்டோவில் வந்து இறங்கிய மகளைக் கண்டு மாணிக்கவாசகம் பதறிப்போனார்.

 

 

“எங்க பிள்ளை அம்மா? ஏன் நீங்க இந்த நேரத்தில தனியா வந்தனீங்க?”

 

“ஐயோ அப்பா பயப்பிடாதீங்க. அம்மா களைல அங்க நல்ல நித்திரை. எனக்கு அவசரம் அப்பா. அங்க எங்க பாத்தாலும் ஆக்கள். அதான் இஞ்ச வந்திட்டன்.” என்று சொல்லிவிட்டு அவள் குளியலறைக்குள் புகுந்துவிடவும் அவர் சற்றே ஆசுவாசமானார்.

 

அவள் அப்படித்தான், ஆட்கள் நிற்கையில் கழிவறைக்குச் செல்வதற்குச் சங்கடப்படும் ஒருத்திதான். அதற்காக அங்கிருந்து இங்கே இந்த நேரத்தில் தனியாக ஓட்டோவில் வந்திருக்கிறாளே என்று எண்ணிக்கொண்டார்.

 

குளியலறைக்குள் நுழைந்ததும் சவரைத் திறந்துவிட்டு அதனடியில் நிண்டுகொண்டவளின் விழிகளும் திறந்துகொண்டன.

 

கடந்தது ஒரு மாதம்தான். ஆனால், இந்த ஒரு மாதத்தில் எத்தனை உணர்வுகளின் போராட்டம்! அவனைக் கண்டு, காதலுற்று, இத்தனை வருடங்களாக அவள் உள்ளம் அவனிடம்தான் சிக்குப்பட்டு நின்றிருக்கிறது என்று தெளிந்து, தன் கட்டுப்பாட்டை மீறி மனத்தை உரைத்து, அவன் பதிலுக்காய்த் தவியாகத் தவித்து, மறுக்க மாட்டான், நிச்சயம் சம்மதிப்பான் என்று தெளிந்த நாளிலேயே அவள் காதல் மடிந்துபோயிற்று.

 

உதட்டோரம் கசந்த புன்னகை. இதற்கு அவன் அந்த நம்பிக்கையைத் தராமலேயே இருந்திருக்கலாம். முளையிலேயே கிள்ளுவதுபோல் அவள் ஆசையை ஆரம்பத்திலேயே அடித்து மூடியிருக்கலாம்.

 

ஆசை காட்டி மோசம் செய்துவிட்டானே! உள்ளம் உயிர்வலியில் துடித்தது.

 

எவ்வளவு நேரம் நின்றாளோ. “பிள்ளை, என்னம்மா செய்றாய் இவ்வளவு நேரமா?” என்ற தந்தையின் குரலில் எண்ணங்கள் கலைந்து, “இந்தா வாறன் அப்பா.” என்று குரல் கொடுத்துவிட்டு நீரில் இருந்து வெளியே வந்தாள்.

 

உடைமாற்றி, தலை துவட்டியபடி வந்த மகளிடம், “இந்த நேரத்தில தலைக்கு ஊத்திறதா பிள்ளை? அம்மா பாத்தா கத்தப் போறா.” என்றபடி சூடாகப் பாலை நீட்டினார் மாணிக்கவாசகம்.

 

அதற்கு ஒன்றும் சொல்லாமல் பாலை வாங்கிப் பருகியபடி கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். ஷர்மி, உதயன், அமிர்தா மூவரிடமிருந்தும் விடாத அழைப்புகள் வந்திருந்தன. ஓட்டோவில் வரும்போது யாரோடும் பேசும் மனநிலை இல்லாமல் இருந்ததில் சத்தத்தை நிறுத்தி வைத்திருந்தாள். அதில், இந்த அழைப்பெல்லாம் தந்தையின் காதை எட்டவில்லை என்று புரிந்தது.

 

இனி அவனை ஒதுக்கி வை என்று மனம் என்னதான் இடித்துரைத்தாலும் அதைக் கேளாமல் அவன் அனுப்பிய குறுந்தகவலைத்தான் அவள் விரல்கள் முதலில் கிளிக்கின.

 

‘ஏனடா இவளைத் திரும்பிப் பார்த்தேன்’ என்று நினைக்க வைக்க வேண்டாமாம், அவன் தோழியின் வாழ்வில் விளையாட வேண்டாமாம். அவள் கண்களின் ஓரம் கோடாகக் கண்ணீர். அதற்கு மாறாக உதட்டோரத்தில் சிறு புன்னகை.

 

பரவாயில்லை, அவள் நாடகக்காரி, அவன் நண்பியின் வாழ்வில் விளையாடுகிறவள், ஆணவம் மிகுந்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறாள்.

 

ஆழ்ந்த மூச்சை ஒருமுறை இழுத்து விட்டுவிட்டு, ஷர்மிக்கு அழைத்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!