எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 17

அத்தியாயம் 17

பிரிந்தது பிணைந்திட தானே… விலகியது மேலும் விரும்பிட தானே…

காத்திருந்தது கைகோர்த்துக்கொள்ள தானே… இன்று அந்த நன்னாள். ஊரும் உறவும் அறிய, ஊனும் உயிருமாக இணையப் போகும் திருநாள்.

அந்த பெரிய திருமண மண்டபம் முழுவதும் உற்றார் உறவினர்களால் நிரம்பி வழிந்தது. மொத்த மண்டபத்தையும் தங்க நிறம் மற்றும் வெள்ளைப் பூக்களால் அலங்கரித்து இருந்தனர்.

மண்டபத்தின் இருபுறமும் பெரிய குத்துவிளக்குகள் வைக்கப்பட்டு, தங்க நிற மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. மண்டபத்தின் நடுவில் மேலிருந்து தொங்கும் தங்க நிற சாண்டிலியர் மேலிருந்து தங்கமழை பொழிவதைப் போன்று பிரமிக்கும் தோற்றத்தை கொடுக்க, ஆங்காங்கே தங்கமலர்ச்சரங்களும் மின்னல் வெட்டுவதை போல் ஜொலித்தது.

மண்டப மேடை தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய வளைவு தூண்களும், இருபுறமும் குத்துவிளக்கும், வெள்ளை மலர்களும் கொண்டு அலங்கரித்து, நடுவில் மணமக்கள் அமரும் இடத்தில் தங்க நிறத்தில் மணை அமைத்து, பின்னுக்கு ஸ்ரீதர் காயத்ரி என்று இருவரின் பெயர் மெருன் நிறத்தில் பதிக்கப்பட்டு இருந்தது.

மண்டபத்தினுள் நுழையும் போதே அரண்மனைக்குள் நுழையும் உணர்வை கொடுத்தது அனைவருக்கும்.

எல்லா வேலைப்பாடுகளையும் கோளாக்கலமாக செய்த ஸ்ரீதரை, கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.

காரணம் மணப்பெண் அலங்காரத்திற்கு பியூட்டிஷியன் புக் செய்து விட்டேன், மூகூர்த்ததிற்கு முன் வருவார் என ஸ்ரீதர் சொல்லியிருக்க, இன்னும் இரண்டு மணி நேரத்தில் முகூர்த்தம். ஆனால் எந்த பியூட்டிஷியனும் வந்தபாடில்லை.

கேட்டால் மந்தகாச புன்னகையுடன், அவளை பார்த்தபடி, மணமகள் அறையில் நின்றிருந்தான் ஸ்ரீதர் “மாமா சிரிக்காதீங்க.. பியூட்டிஷியன் இல்லாம எப்படி?.. நானே என்ன மேக் ஓவர் பண்ணிக்கிட்டா கண்றாவியா இருக்கும்…” என்று காயத்ரி சிணுங்க,

“பியூட்டிஷியன் வரலனு யார் சொன்னா?…” என்று கொடுப்புக்குள் நாக்கை சுழற்சி கேட்டவன் வெளியேற,

‘என்ன சொல்லுது இந்த மாமா…’ என்று புரியாமல் காயத்ரி விழிக்க

சிறிது நேரத்தில் கையில் அழகுக்கலை நிபுணர்கள் வைத்திருக்கும் அழகு கலை சாதன பையுடன் ஸ்ரீதர் உள்ளே நுழைய, காயத்ரி அமுதினி உட்பட மற்ற பெண்களும் ஸ்ரீதரை ஆச்சரியமா பார்க்க,

அந்த பையை கட்டிலில் திறந்து வைத்தவன் “என்ன ரெடியா?…” என்று காயத்ரியிடம் கேட்க

“மாமா நீங்களா மேக் ஓவர் பண்ணி விடப் போறீங்க?…” என்று விழிகள் விரித்து ஆச்சரியமாக கேட்க

“ம்ம்! ஆமா…” என்று புன்னகையுடன் ஸ்ரீதர் சொல்ல

“எப்படி?…” என்றாள் திகைப்பு மாறாமல்,

அவள் புறம் அவள் முகம் பார்த்து குனிந்தவன் “உனக்காக எது வேணும்னாலும் கத்துப்பேன்.. இதுவும் கத்துக்கிட்டேன்.. இனி என் சிங்காரிய நானே முழுசா அலங்காரம் பண்ணி விடுவேன்.. ஒரு ப்ரொபஷனல் பியூட்டிசியன் போல…” என்று சொல்ல

அவன் வார்த்தைகளில் கொட்டி கிடந்த காதலும், அவளுக்காக அவன் கற்றுக் கொண்ட கலையும், பெண்ணவளை உறைந்து போக வைத்தது. எப்படி இத்தனை காதல்!, அவன் நினைவுகளில் என்னை தவிர வேறு எதுவும் இருக்காதா என்ற வியப்பு அவளை திக்கு முக்காட வைத்தது.

அவளின் கையளவு இதயம் அவனது கடலளவு காதலை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது. “மாமா!…” என்றவளுக்கு வார்த்தைகள் வருவேனா என்க, கண்ணீர் தான் முந்தியடித்துக் கொண்டு வந்தது.

“ஹேய் என்ன இது…” என்று அவள் நீர்முத்துக்களை கன்னம் இறங்கும் முன் டிஷ்யூவினால் துடைத்து விட்டவன், “இன்னைக்கு நீ தேவதையா ஜொலிக்க வேண்டிய நாள்.. அழுது முகத்த கெடுத்துக்காத…” என்றவன் அவளுக்கான அலங்காரத்தை செய்ய ஆரம்பித்தான்.

பெண்கள் அனைவரும் அவனை ஆவென ஆச்சரியமாக வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அத்தனை அழகாக, இயல்பாக, ஒரு கைதேர்ந்த நிபுணனாக, தன் தங்கத் தாரகையை ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மணி நேரத்தில், காயத்ரியை தங்கப்பதுமையாக மெருகேற்றி, தன் வேலையை முடித்திருக்க, காயத்ரி உட்பட அறையில் இருந்த பெண்கள் அனைவருக்கும், ஸ்ரீதரின் கைவண்ணத்தை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

காயத்ரி கண்ணாடியில் தன்னையே பார்த்திருக்க, அமுதினியும் மற்ற பெண்களும் கைதட்டி “அண்ணா சூப்பர்! அசத்திட்டீங்க…” என்று பாராட்ட

ஐங்கரன் ஸ்ரீதரை தேடி வந்தவன் “டேய் நேரமாச்சு வா!.. ஐயர் உன்ன அழைச்சிட்டு வரச் சொன்னாரு.. வந்து தாலிய மட்டும் கட்டிட்டு என்னாலும் பண்ணு…” என்று கூப்பிட

“முடிஞ்சுதுடா…” என்றவன் காயத்ரியை எழுப்பி நிற்க வைத்து, தலை முதல் கால் வரை திருப்தியாக பார்த்தவன், கன்னம் வழித்து திருஷ்டி முறித்து, கறுப்பு மையை எடுத்து அவள் காதுக்கு பின் வைத்து விட்டு, “எப்படி இருக்குடி சிங்காரி?.. நீ எதுவுமே சொல்லவே இல்லையே…” என்று கேட்க

“இப்ப சொன்னா அழுதுடுவேன்.. தனியா சொல்றேன்…” என்று காயத்ரி சொல்ல

பெண்கள் கூட்டம் “ஓஹோ!…” என்று கூச்சலிட

வெட்கமாக பிடரியை கோதிக்கொண்ட ஸ்ரீதர், அவ்விடம் விட்டு நகர்ந்து, ஐங்கரனுடன் மேடைக்கு வந்தான்.

தங்க நிற பட்டு வேஷ்டி சட்டையில், அவன் நடந்து வரும் நடையே அத்தனை தோரணையாக, அழகாக இருந்தது. மணமேடைக்கு வந்தவன் பொதுவாக கைகூப்பி வணங்கி விட்டு அமர்ந்து கொள்ள, ஐயர் சடங்கை மந்திரங்கள் ஓதி ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ!…” என்று குரல் கொடுக்க,

மணமகள் அறையிலிருந்து, அடர் சிவப்பு, மஞ்சள் கலந்த தங்க நிற பட்டுப்புடவை, நுணுக்கமான தங்க ஜரி வேலைப்பாடுகளோடு, பெண்ணவள் மேனியின் வளைவு நெளிவுகளை விரசமில்லாமல் அழகாக எடுத்துக்காட்ட, தங்க நிறத்தில் புடவையுடன் பொருந்தும் வகையில் ஜரி வேலைப்பாடுகளுடன் கூடிய பாரம்பரிய, அரக்கை ஜாக்கெட்டும், தங்கத்தில் நெற்றியில் அழகிய நெற்றிச்சுட்டி, காதுகளில் பெரிய ஜிமிக்கி, கழுத்தில் அடுக்கான தங்க மாலைகள், அதாவது முத்து மணிகள் பதித்த ஹாரத்தில் தொடங்கிய, நான்கு அடுக்காக வயிறு வரை நீண்ட மாலைகள், கைகளில் வளையல்கள் அணிந்து,

நடுவகுடு எடுத்து, தலை முடியை பின்னி, மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து, முகத்திற்கு முழுமையான மென்மையான மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அஞ்சனம் திருடி அந்த இரு விழிகளுக்கு மத்தியில், அவளவன் சிகப்பு சாந்தினால் வரைந்து விட்ட, நெற்றியின் நடுவில் மெதுவாக தொட்டு ஒரு நீண்ட வளைவு வரைந்து, அந்த வளைவு மேலே சென்று கூர்மையான இலை முனையாக மலர, இருபுறமும் சிறு சுருள்களாக பிரிந்து கொடி போல் படர்ந்து இருக்க, அதன் கீழ் சிறிய வட்டம் என அழகிய பொட்டு.

எல்லாவற்றுக்கும் மேல், காதலித்தவனை கரம் பிடிக்க போகும் உள்ளத்தின் மகிழ்ச்சியை இதழ்களில் தேக்கி, மெல்லிய புன்னகையுடன், அரச குமாரியாக, அடி மேல் அடி வைத்து வந்து, நாயகனின் அருகில் அமர்ந்து கொண்டாள் நங்கை.

நம்பியும் நாயகியை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளும் அண்ணலை திரும்பிப் பார்க்க, ஒருவரின் விழிகளுக்குள் மற்றவர் தொலைந்து போகும் அளவிற்கு காதல் இருவரின் விழிகளிலும் பெருகி வழிந்தது.

இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்க்க கண்கள் இரண்டு போதவில்லை அங்கு கூடி இருந்தவர்கள் உட்பட, கமலம் பத்மினிக்கு.

காதல் கிளிகள் ஒருவரில் ஒருவர் லயித்திருக்க, ஐயர் தான் இருவரின் கையிலும் பூக்களை கொடுத்து, “கும்பத்துக்கு போட்டு வணங்கிக்கோங்க…” என்று சொல்லி மாய வலையை அறுத்து விட்டார்.

அதன் பின் இருவரும் சிரத்தையாக சடங்கினை செய்ய, இருவரும் காத்திருந்த தருணமாக, மஞ்சள் கயிற்றில் கோர்த்த தங்கத் தாலி, அங்குள்ள அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு, திருமகனின் கைகளுக்கு வந்தது.

தாலியை தொட்டு கைகளில் தூக்கி கணம், ஆண் மகன் உடலில் ஒரு சிலிர்ப்பு. பெண்ணவள் மணி கழுத்து அந்நொடியே குறுகுறுத்தது.

ஐயர் “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!…” என்று சொல்லி “மாங்கல்யம் தந்துநானேன

மம ஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி சுபகே

த்வம் ஜீவ சரதாம் சதம்…” என்று மந்திரம் ஓத,

மேளச்சத்தமும் நாதஸ்வர ஒலியும் வானை முட்ட, அன்பு நெஞ்சங்கள் அனைவரும் மஞ்சள் அரிசியும், பூக்களும் அட்சதை தூவி ஆசீர்வாதம் வழங்க, பெற்றவர்கள் ஆனந்த கண்ணீர் கொண்டு ஆசி வழங்க, அக்கினி சாட்சியாக, அவர்கள் காதலின் ஆட்சிக்கான மகுடமாக, மங்கையவளின் மணி கழுத்தில் மாங்கல்யம் சூட்டி, மூன்று முடிச்சு போட்டு, தன் மனைவியாக உயிர் எழுதிக் கொண்டான் மன்னவன்.

காயத்ரியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை முடிந்த அந்நொடி இருவரின் ஜீவனும் சிலிர்த்து அடங்கியது. அவன் விழிகளில் காதலின் கர்வத்துடன் ஆனந்தம்…

அவள் விழிகளில் காதலின் கண்ணீருடன் ஆனந்தம்…

ஐயர் திலகம் வைத்து விடச் சொல்ல, தன் இரு விரல்களிலும் செந்தூரத்தை எடுத்தவனுக்கு, தன்னவள் மீதான நேசம் பிரபஞ்சம் அளவிற்கு விரிந்தது.

முதல் முதலில் அவள் பிறை நெற்றியில் பொட்டு வைத்தவன் அவன் தானே. அன்று அக்கா மகள், இன்று அவன் அவள். மெதுவாக கையை உயர்த்தி தன் மனைவியின் நெற்றி வகுட்டில் அழுத்தமாக குங்குமத்தை வைத்து விட்டான்.

இதழில் புன்னகையுடன், விழி மூடி அந்த தருணத்தை தன் உயிரில் பதித்துக் கொண்டாள் பாவையவள்.

அடுத்து இருவரையும் அக்கினியை சுற்றி வலம் வரச் சொல்லி, ஸ்ரீதரின் சால்வையையும், காயத்ரியின் சேலை முந்தானையையும் முடிச்சு போட்டு விட,

இருவரும் ஏழேழு ஜென்மத்தின் காதலின் சாட்சியாக, முப்பத்திமுக்கோடி தேவர்கள் சாட்சியாக, ஆதியும் அந்தமுமான இறைவனிடம், அக்கினியை வலம் வரும் ஒவ்வொரு அடிக்கும், தங்கள் பந்தத்தின் சத்தியத்தை வைத்தனர்.

அக்கினியை வலம் வந்து முடிய, அப்படியே காயத்ரியை அழைத்து வந்து, அம்மியில் அவள் பொற்பாதத்தை வைக்க சொல்லி, அவள் செம்பாதம் கல்லை தொடும் முன், தன் உள்ளங்கையில் தாங்கியவன், தாமரை மொட்டின் வடிவில் இருந்த வெள்ளி மெட்டியை, தாரகையின் விரலுக்கு நோகாமல் மெதுவாக அணிவித்துவிட்டான்.

அவள் பிறந்த போது முதலில் தொட்டுப்பார்த்த அந்த பஞ்சு பாதங்களைத்தான், இப்போதும் அதே லாவகத்தோடு தாங்கிப் பிடித்தான். இனியும் தாங்குவான்.

அதன்பின் கமலம் பத்மினியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். அதன் பின் எல்லாம் வேகம் தான், சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டு முடித்து, மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்தனர்.

வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி, வணங்கி, அதன் பின் பால் பழம் வழங்கப்பட்டு, இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டிவிட்டு, குடத்தினுள் மோதிரம் போட்டு எடுக்க வைத்து, என்று மகிழ்ச்சியும் குதூகலமுமாக எல்லா வகையான சாங்கியங்களும் நிறைவுக்கு வரவே மாலை ஐந்தானது.

கமலம் அமுதினியிடம் “அம்மாடி காயத்ரிய அவ அறைக்கு அழைச்சிட்டு போமா.. கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்…” என்று சொல்ல அவளும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு செல்ல,

“சரி நானும் என் அறைக்கு போறேன்…” என்ற ஸ்ரீதரை பிடித்து இழுத்த ஐங்கரன் “எங்க போற.. உன் அறையில தான் முதலிரவுக்கான ஏற்பாடு நடக்குது.. ஃபர்ஸ்ட் நைட் வேணும்னா பொத்திட்டு இங்கே இரு…” என்று சொல்ல

“டேய் முடியலடா.. நீங்க போட்டு படுத்துற பாட்டுல நைட்டுக்கு படுத்து தூங்க தான் போறேன்…” என்று உடல் அசதியில் கையை தூக்கி முறுக்கி ஸ்ரீதர் சொல்ல

“யாரு? நீ படுத்து தூங்குற ஆளு.. பத்து நாள் தூங்காம இருந்தாலும் அவள பாத்ததும் எங்க பாயலாம்னு தானே இருப்ப.. நடிக்காம படுத்துக்கணும்னா மொட்டமாடிக்கு போ…” என்று சொல்லிவிட்டு அடுத்த ஏற்பாடுகளை கவனிக்க சென்று விட்டான் ஐங்கரன்.

எழுந்து மொட்டை மாடிக்கு வந்த ஸ்ரீதருக்கு, சட்டுனு ஒரு யோசனை வர, உடனே ஐங்கரனுக்கு அழைத்து தன் திட்டத்தை கூறி, அதை செயல்படுத்த ஆரம்பித்தான்.

ஸ்ரீதர் எல்லாவற்றையும் செய்து முடிய, இரவோடு சேர்த்து நிலவும் வந்தது. ஐங்கரன் வந்து அழைத்து “டேய் ஸ்ரீ! எல்லாம் ரெடி.. அம்மாவோட ரூம்ல உன் ட்ரெஸ் இருக்கு.. குளிச்சிட்டு ரெடியாகி வா…” என்று சொல்ல

ஸ்ரீதரும் கமலத்தின் அறைக்கு சென்று, குளித்துவிட்டு, வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து, அழகனாக தயாரானவன் வெளியே வர,

காயத்ரியும் தன் அறையில் இருந்து, கிரீம் வெள்ளையில் தங்க நிற பார்டர் உள்ள பட்டுப்புடவைக்கு, பச்சை நிற ஜாக்கெட் அணிந்து, மெல்லிய தங்க நகைகளும், முடியை விரித்துவிட்டு, தலை நிறைய மல்லிகை பூச்சரமும் என்று, முதன்முறையாக தன் மாமன் உதவியின்றி, மெல்லிய இயல்பான ஒப்பனையுடன், புதிதாக அவளை ஒட்டிக்கொண்ட தாலி குங்குமத்தோடு நாணமும் சேர்ந்து கொள்ள, மணாளன் மனதை மயக்கும் மோகினியாக தயாராகி வந்தாள்.

இருவரும் ஒரு நொடி ஒருவரை ஒருவர் ஆசை தீர ரசித்துக்கொண்டனர். முதலில் இருவரையும் இரவு உணவு சாப்பிட சொல்ல,

முதலிரவை நினைத்து பெண்ணவளுக்கு கூச்சம், தவிப்பு, சற்று பயம், படபடப்பு என்று உணர்வுகள் குவிந்து உள்ளதோடு சேர்த்து உடலையும் வாட்ட, சாப்பாடு இறங்கவில்லை.

ஆடவனுக்கோ ஆசை, தாபம், ஏக்கம், எதிர்பார்ப்பு, உற்சாகம் என்று பல்வகை உணர்வுகள் ஆட்டிப்படைக்க, வயிற்றுப் பசி தெரியவில்லை.

இருவரும் பெயருக்கு உண்டு விட்டு எழுந்து கொள்ள, “ரெண்டு பேரும் கடவுள வணங்கிட்டு அறைக்கு போங்க…” என்ற கமலம் ஐங்கரன் அமுதினிக்கு கண்ணை காட்டிவிட்டு தள்ளி நிற்க,

புதுமண தம்பதிகள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று வணங்க வைத்து, முதலில் ஸ்ரீதரை அறைக்கு ஐங்கரன் அனுப்பி வைக்க,

அமுதினி நன்கு காய்ச்சிய பாலை செம்பில் ஊற்றி காயத்ரியிடம் கொடுத்தவள் “ஏதாவது டவுட் இருந்தா கேட்டுக்கடி.. அங்க போயிட்டு முழிக்காத…” என்று சொல்ல

வெட்கத்தில் முகம் சிவந்த காயத்ரி “அடியே!…” என்று சிணுங்க

“அடியே இங்க சிணுங்காத.. உன் சிணுங்கள், கொஞ்சல் எல்லாத்தையும் அறைக்கு போய் உன் மாமன் கிட்ட காட்டு…” என்று காயத்ரியை சீண்டி, ஒரு சில தாம்பத்திய பேச்சுக்களுடன், ஸ்ரீதரின் அறை வரை கொண்டு சென்று விட்டவர் “சரி உள்ள போ!…” என்று விட்டு செல்ல

காயத்ரியோ எம்பி குதிக்கும் இதயத்தை நீவி விட கூட முடியாமல், தடதடக்கும் மனதுடன் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர, அறை முழுவதும் மல்லிகை ரோஜாவின் சுகந்த வாசனை நிரம்பி இருந்தது.

அது அவள் நாசியினுள்ளும் ஏற, மெதுவாக விழிகளை உயர்த்தி, அறையைப் பார்த்தாள். அறை முழுவதும் அறைசுவரில் குட்டி குட்டி மஞ்சள் வண்ணம் மின்விளக்கு சரம் தொங்க விடப்பட்டு, அதன் இடையே மல்லிகை சரமும், ரோஜா பூச்சரமும் தொங்கவிடப்பட்டிருக்க,

கட்டிலில் வெள்ளை விரிப்பில் ரோஜா பூக்களால் இதய வடிவம் போடப்பட்டிருக்க, அதற்கு மேல் சுவற்றில் குட்டி குட்டி ரோஜா பூக்களால் ஸ்ரீ காயத்ரி என இதயத்தில் எழுதப்பட்டிருக்க, கட்டிலுக்கு மேலும் கொன்றை பூக்கள் தொங்குவதை போல் மல்லிகை பூச்சரத்தின் இறுதியில் ரோஜா பூ அழகாக தொங்கிக் கொண்டிருந்தது.

கட்டிலின் நாங்க மூலையிலும் கம்பி வைத்து, அதில் இளஞ்சிவப்பு வெள்ளை சேர்ந்த துணி தொங்கவிடப்பட்டிருக்க, கட்டிலை பார்க்க ஒரு ராஜா காலத்து பல்லாக்கு போல் இருந்தது. அந்த பல்லாக்கில் கந்தர்வனாக சாய்ந்து நின்றிருந்தான் ஸ்ரீதர்.

அவள் உள்ளே வந்ததிலிருந்து அவளைத்தான் விழியசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பெண்ணவள் விழிகள் அறையை சுற்றி அவளவனில் வந்து நிற்க, தானாக இமைக்குடை சாய்ந்தது.

வெட்கமா, நாணமா, தயக்கமா, பயமா எது என்று தெரியவில்லை. சற்று படபடப்பாகவே இருந்தது. இதே ஆறு வருடங்களுக்கு முன் என்றால் சற்று இலகுவாக இருந்திருப்பாள் போல, இந்த ஆறு வருட இடைவெளி அவள் மாமனிடம் சற்று தயக்கத்தை தந்திருந்தது.

ஸ்ரீதருக்கு அவளை பார்க்க பார்க்க சிரிப்பாகத்தான் இருந்தது. எத்தனை நாட்கள் மாமா என்று அந்த அறைக்குள் துள்ளி குதித்து ஓடி வந்திருப்பாள். இன்று தலையை குனிந்து கொண்டு, தயங்கி அடுத்த அடி எடுத்து வைக்காமல் நிற்பவளைப் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

அவளை பார்த்தபடியே அடி மேல் அடி வைத்து ஸ்ரீதர் முன்னேற, கையில் வைத்திருந்த பால் செம்மை இருக்க பற்றினால் பெண்ணவள். அவளை உதட்டுக்குள் மறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டே, அவளை கடந்து சென்று அறைக்கதவை தாள் போட்டவன் “ஓய் சிங்காரி! என்னடி இது? புதுசா தலைய குனிச்சிட்டு இருக்க?…” என்று கேட்க

“ஹா! அது.. ஒன்னும் இல்ல…” என்றவளுக்கு அவள் தயக்கமும் பயமும் அதிகப்படி என்று தோன்ற,

கட்டிலின் அருகே சென்று, அதன் அருகில் இருந்த மேஜையில் பால் செம்பை வைத்தவள் “டெக்கரேஷன் நல்லா இருக்குல்ல…” என்று முயன்று தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள கேட்க

மெதுவாக அவளை நெருங்கியவன், பின்னிருந்து அவள் இடையோடு கையைப் போட்டு அணைத்துக்கொள்ள,

உடல் அதிர்ந்து, சிலிர்த்த பெண்ணவளின் இதயம் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவளின் தவிப்பை குறும்பாக ரசித்துக்கொண்டே “டெக்கரேஷன் நல்லா இருந்து என்ன பண்ண.. எப்படியும் கொஞ்ச நேரத்துல கலையத்தானே போகுது…” என்று சொல்ல

‘ஐயோ இப்பவே ஆரம்பிச்சிட்டாரே…’ என்று காயத்ரியின் மனம் சிணுங்க

அவள் காது மடலில் அழுத்தி முத்தம் வைத்தவன் “என்னடி பதில காணோம்?…” என்று கேட்க

உரோம முடிகள் குத்திட்டு நிற்க, உடலை நெளித்தவள் “மா..மா!…” என்று முனக,

“அடியே போதும்டி!.. எனக்கே ஒரு மாதிரி இருக்கு.. நான் தானே.. உள்ள வந்ததும் மாமான்னு வந்து என் நெஞ்சுல விழுவனு பாத்தா.. இப்படி வெடவெடத்து நடுங்கற…” என்று ஸ்ரீதர் கேட்க

“தெரியல மாமா!.. என்னவோ போல இருக்கு…” என்றவளுக்கு இப்போது சற்று தயக்கம் தூரம் சென்றிருந்தது.

“சரி, ஆரம்பிக்கலாமா?.. லைட் ஆஃப் பண்ணவா?…” என்று அவளை சீண்டவே கேட்டான் கள்வன்.

காயத்ரி மெல்லிய குரலில் “இல்ல மாமா.. லைட்.. இருக்கட்டும்…” என்று சொல்ல

வியந்து விழிகளை விரித்த ஸ்ரீதர், பட்டென்று அவளை தன்புறம் திருப்பி “அடியே சும்மா ஒரு பேச்சுக்கு தான் லைட் ஆஃப் பண்ணவான்னு கேட்டேன்.. ஆனா நீ வேணான்னு சொல்லி எனக்கே ஷாக் குடுக்குற…” என்று கேட்க

“நான் உண்மையாத்தான் சொன்னேன்.. லைட் ஆஃப் பண்ணிட்டா நீ பாக்க வேண்டியத தெளிவா பாக்க முடியாம போயிடுமே…” என்று சொல்ல

ஸ்ரீதருக்கு புருவம் சுருங்கியது. இதுவரை நாணத்தில் தயங்கியவளுக்கும், இப்போது பேசும் பேச்சிற்கும் சம்பந்தம் இருக்கவில்லை.

அவளை கூர்ந்து பார்த்தவன், ஏதோ யூகித்தவனாக “என்னடி பண்ணி வச்ச?…” என்று சற்று காட்டமாக கேட்க

அவன் குரலில் இருந்த மாற்றத்தில், விழி மலர்த்தி அவன் முகம் பார்த்தவள், அவன் முகத்தில் இருந்த தீவிரத்தில், எச்சில் கூட்டி விழுங்கினாள்.

தான் செய்த செயலுக்கு மகிழ்வான் என்று தான், தன்னிடத்தில் இருந்து யோசித்தாள். இப்படி கோபப்படுவான் என்று அவனிடத்தில் இருந்து யோசிக்கவில்லை ஸ்ரீதரின் சின்ன குட்டி.

error: Alert: Content selection is disabled!!